முழுமையாய் இப்போது எதிர்காலத்தில் கதை போய்க்கொண்டிருக்கிறது. ஃப்ளாஷ் பேக் எல்லாம் இனி இல்லை.
தேர்தல் களம் ஆவி பறக்க, அனலாய்க் கொதித்துக் கொண்டிருக்கிறது.
திராவிடக் கட்சிகளைத் துகிலுரித்துக் காட்டுவதோடு, இந்திராக் காங்கிரஸின் அரசியல் மோசடியையும் அம்பலப் படுத்துகிற முயற்சியில் நம்ம மாநிலத் தலைவரும் மற்றத் தலைவர்களும் ஈடு பட்டிருக்கிறார்கள். ஊர் ஊராய், தெருத் தெருவாய்க் கூட்டம் போட்டு மக்கள் மத்தியில் பேசி, மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்கு முழுசாய் மூன்று வருடங்களாய் அயராமல் பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நம்ம பங்குக்கு, வாரம் ஒரு கவிதை, வாரம் ஒரு போஸ்டர்.
நம்மப் போஸ்டர் கவிதைகளை மறுபிரசுரம் செய்து தமிழ் நாட்டுப் பத்திரிகைகளெல்லாம் இலவச விளம்பரங்கள் தந்து கொண்டிருக்கிறன்றன. மறை முகமாய் நம்மக் கட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் பண்ணிக் கொண்டிருக்கின்றன.
ஹிண்டுவும், இண்டியன் எக்ஸ்ப்ரஸ்ஸும், டைம்ஸ் ஆஃப் இண்டியாவும் நம்மக் கவிதைகளை ஆங்கிலத்தில் அழகாய் மொழி பெயர்த்து வாரா வாரம் பிரசுரிக்கின்றன. மூன்று மொழி பெயர்ப்புகளுமே வார்த்தைகளில் கொஞ்சம் வித்தியாசப் பட்டாலும், விசேஷமாயிருக்கின்றன, விஷயத்தை முன்வைக்கின்றன. Letters to Editor களில் நம்மக் கவிதைகளைப் பாராட்டி எழுதுவதை வாசகர்கள் வழக்கமாக்கிக் கொண்டு விடுகிறார்கள்.
நம்மக் கட்சியின் சார்பாக ஷெனாய் நகர் புல்லா அவென்யூவில் ஏற்பாடாகியிருக்கிற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில், மாநிலத் தலைவரோடு, நம்மக் கட்சியின் அகில இந்தியத் தலைவரும் சொற்பொழிவாற்றுகிறார். அவருடைய ஆங்கிலப் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்கிற அதிர்ஷ்டம் இந்த சிறுபான்மையர்ப் பிரிவுத் தலைவனுக்கு.
"இதே இடத்தில், பதினெட்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு மழைக்கால மாலைவேளையில் ஒரு பொதுக் கூட்டத்தில் நான் பேசினேன். மழைக்காக அப்போது நான் தலையில் முக்காடு போட்டிருந்தேன். ஆனால் இன்றைக்கு இந்தத் தமிழ் நாட்டில் இருக்கிற எழுச்சி மிக்க சூழ்நிலையில், நம்முடைய கட்சியினரைத் தவிர மற்ற அத்தனைக் கட்சியினரும் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு போகிற நிலமை நிலவுவதை நான் கண்கூடாய்க் காண்கிறேன். இந்த மாற்றத்தை நிகழ்த்துவதில், தாய்க்குலமும் இளைய தலைமுறையினரும் முக்கிய பங்கு வகிப்பதாய் உங்கள் மாநிலத் தலைவர் என்னிடம் சொன்னார். இந்த தேசத்தின் எதிர்காலம் தாய்க்குலத்தின் கையில் தான் இருக்கிறது என்று அன்றே சொன்னார் வி பி சிங். ஆனால் பெண்கள் இங்கே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதைக்கண்டு மனம் வருந்தினார் அவர். தேசிய நீரோட்டத்தில் இணைய, மாதருக்கு அழைப்பு விடுத்தார் அந்த மண்டல் நாயகர். இப்போது நானும் அழைப்பு விடுக்கிறேன். தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்தைத் தாய்க்குலமே, நீங்கள் தான் நிகழ்த்தப் போகிறீர்கள். ஓட்டுப் போடுவதோடு நம் வேலை முடிந்தது என்று இருந்துவிடாமல் இந்த அருமையான அரசியல் கட்சியின் இணைய வாருங்கள் என்று உங்களை நான் அழைக்கிறேன்.
போஃபோர்ஸ் ஊழலில் சிக்கித் திணறிக் கொண்டிருந்த இந்திராக் காங்கிரûஸப் பதவியிறக்கம் செய்து வி பி சிங் தலைமையில் நம்முடைய கட்சி மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றிய சாதனையை நிகழ்த்தியபோது, அந்த ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்தவர்கள் இளைஞர்கள் தான் என்பதையும் வி பி சிங் நன்றியோடு நினைவு கூர்ந்தார். ஆட்சியை மாற்றியதோடு நின்று விடாமல், சரித்திரத்தையே மாற்ற அவர் இளைஞர்களை அழைத்தார். மனி பவர் என்கிற பண பலத்தின் அசுரப்பிடியிலிருந்து இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்ற இளைஞர் படையால் தான் முடியும் என்று வி பி சிங் நம்பியதைப் போலவே நானும் நம்புகிறேன். இலவசங்களின் மாயையிலும், பணபலத்தின் அசுரப்பிடியிலும் தமிழ் நாடு இன்றைக்கு சிக்கிக் கிடக்கிறது. இந்த அவலத்திலிருந்து தமிழ் நாட்டை மீட்க இளைஞர்களால் தான் முடியும். தேர்தல் நெருங்குகிற போது பணபலம் பொருந்திய கட்சிகளெல்லாம் ஓட்டுக்குப் பணம் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்குகிற அசிங்கமான செயலில் ஈடுபடுவார்கள். பணம் கொடுக்க வருபவர்களைப் பிடித்துக் கொடுங்கள்.”
நம்ம அகில இந்தியத் தலைவரின் அறிவுரையை இளைஞர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள் ஆனால் கருப்புப் பணக் கட்சிகள் வழக்கம் போலப் பண பட்டுவாடாவை ஆரம்பிக்கின்றன. போன பொதுத் தேர்தலில், திருச்சியில், கோடிகளோடு பஸ்ùஸôன்றை மடக்கிய நேர்மையான, தைரியசாலியான பெண் டி ஆர் ஓவைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் பலர் துணிச்சலோடு செயல்பட்டு நூற்றுக்கணக்கான கோடிகளைப் பறிமுதல் செய்கிறார்கள்.
சுவரொட்டிக் கவிதைக்கு சப்ஜெக்ட் ரெடி. நம்முடைய அடுத்த சுவரொட்டிக் கவிதையும் ரெடி.
பாட்டுக்கு மெட்டு என்பது ஞாயம்
ஓட்டுக்குத் துட்டு என்பது பாவம்பாவப் பணத்தைக் கை நீட்டி வாங்குவது ஈனம்
காயம் பட்டுப் போகலையா தமிழா உன் தன்மானம்
பறிமுதல்களையும் மீறிப் பணம் கொடுக்க வந்த பாதகர்கள் மானபங்கம் செய்யப்படுகிற சுபகாரியங்கள் நடந்தேறுகின்றன.
அலை அடிக்க ஆரம்பித்து விட்டது.
அலை அடிக்கிறது.
சுழற்றிச் சுழற்றி அடிக்கிறது.
சூட்டோடு சூடாய், உற்சாகமாயொரு பத்திரிகையாளர் சந்திப்பு.
மாநிலத் தலைவர், மற்றும் சில தலைவர்களோடு, இந்தச் சிறுபான்மையர்ப் பிரிவுத் தலைவரும், மேடையில்.
நிருபர்களின் எடக்குக் கேள்விகளுக்கும் மடக்குக் கேள்விகளுக்கும் தடங்கலில்லாமல் பதிலளிக்கிறார் மாநிலத் தலைவர்.
"மூன்று வருஷங்களுக்கு முன்பு வரைக்கும் தமிழ் நாட்டில் உங்கள் கட்சி இருக்குமிடமே தெரியாமல் இருந்தது. இப்போது தான் நீங்கள் மக்கள் முன் தோன்ற ஆரம்பித்திருக்கிறீர்கள். அதற்குள் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுகிறீர்களே?"
"நாங்கள் அப்படி ஆசைப்படவே இல்லை, மக்கள்தான்
எங்களை ஆட்சியில் அமர்த்த ஆசைப்படுகிறார்கள். இப்போது
நாங்கள் வேண்டாமென்றாலும் மக்கள் எங்களை ஆட்சியில்
அமர்த்தாமல் விடவே மாட்டார்கள்."
"மதுவிலக்கை உங்களுடைய முக்கியக் கொள்கையாய் அறிவித்திருக்கிறீர்கள். மதுக்கடைகள் மூலம் வருகிற கோடிக் கணக்கான வருவாயை இழந்து விட்டு எப்படி ஆட்சி நடத்துவீர்கள்?"
"வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காகப் பணக்காரக் கட்சிகள் பதுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான கோடிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுந்தானே? அந்தக் கோடிகளை வைத்தே செலவுகளை சமாளித்து விடலாம். தவிரவும், எங்கள் ஆட்சியில் இலவசங்கள் கிடையாது. அந்தப் பணவிரயம் மிச்சம். உங்களுடைய பத்திரிகைகளுக்கெல்லாம் வீணான அரசு விளம்பரங்கள் கட். அதிலே பல கோடி மிச்சம். அரசு செயல்பாடுகளில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து, விழாக்களில் விரயங்களைத் தவிர்த்தாலே நிறைய மிஞ்சும். நிச்சயமாய், அரசாங்கத்தை அலுங்காமல் குலுங்காமல் நடத்திச் செல்ல முடியும்."
"உங்களுடைய கட்சியின் முன்னோடிகளாய் எந்தெந்தத் தலைவர்களைக் குறிப்பிடுவீர்கள்?"
"மஹாத்மா காந்தி, மொரார்ஜி தேசாய், வி பி சிங், பெருந்தலைவர் காமராஜர்."
"ஹாத்மா காந்தி தேசத் தந்தை. எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானவரில்லையா?"
"இல்லை. திராவிடக் கட்சிகளும், தலித் கட்சிகளும் மஹாத்மாவைக் கொண்டாடுவது கிடையாது. பி ஜே பிக்கோ காந்தி வாடையே ஆகாது. காந்தியை உரிமை கொண்டாடுவது இந்திராக் காங்கிரஸ் மட்டுமே. ஆனாலும் காந்தியைக் கொண்டாட அவர்களுக்கு உரிமையே கிடையாது என்பது தான் உண்மை. மஹாத்மாவின் மனங்கவர்ந்த கொள்கை மது விலக்கு. “திருட்டை விடவும், விபச்சாரத்தை விடவும் பெரிய குற்றம் குடிதான், அந்த ரெண்டு குற்றங்களைப் பெற்றெடுத்ததே குடி தானில்லையா’ என்பது மஹாத்மா சொன்னது. ஆனால் காங்கிரஸ் ஆள்கிற எந்த மாநிலத்தில் இன்று மது விலக்கு அமுலில் இருக்கிறது? மாறாக, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழ் நாட்டில் மதுக்கடைகளை மூடப் போகிறோம். ஆகையால் எங்களுக்குத் தான் அவர் மஹாத்மா. எங்களுக்குத்தான் அவர் புரட்சியாளர். வேறே யாருக்கும் அல்ல."
"காந்தியை மஹாத்மா என்கிறீர்கள் சரி. ஆனால் காந்தியைப் புரட்சியாளர் என்கிறீர்களே?"
"சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மாத்திரம் அதைப் போட்டுக் கொள்ள என்ன உரிமை இருக்கிறது?’ என்று நூறு வருடங்களுக்கு முன்பே பூணுலை மறுத்துப் புரட்சி செய்தவர் காந்தி. காந்தியைவிடப் பெரிய புரட்சியாளர் இந்தியாவில் யார்"
(தொடர்வேன்)
“