சிபி (43)

கவிதையொன்றை வடித்து, போஸ்டர்களில் அடித்துத் தமிழ்நாட்டு சுவர்களிலெல்லாம் ஒட்டியாச்சு.

நம்ம கட்சியின் பெயர், தேர்தல் சின்னம், மாநிலத் தலைவரின் பெயர், சந்தடி சாக்கில், சிறுபான்மை யர்ப் பிரிவுத் தலைவரின் பெயர் எல்லாத்தையும் போஸ்டரில் போட்டாச்சு.

செல்வச் செழிப்புள்ள கட்சிகளின் ஸெவன்ட்டி எம் எம் போஸ்டர்களுக்கு மத்தியில், சின்னஞ் சிறிய நம்ம சிங்கிள் பிட் போஸ்டர் தான் செம வரவேற்பைப் பெறுகிறது. போகிற வருகிற வாகனவாசி களெல்லாம் வேகந் தணிந்து போஸ்டரைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள், படித்து விட்டுப் போகிறார்கள். பாதசாரிகள் கும்பல் கும்பலாய் நின்று கவிதையை ரசித்து வாசித்து, ப்ளாட்ஃபாம் களை ட்ராஃபிக் ஜாமுக்குள்ளாக்குகிறார்கள். பஸ் நிறுத்தங்களில் நிற்கிறவர்கள், பஸ்ஸைப் பிடிக்கிறதை மறந்து, போஸ்டரைப் படித்துக் கொண்டு நிற்கிறார்கள். நம்மப் போஸ்டரைப் படம்பிடித்துப் பத்திரிகைகளெல்லாம் பிரசுரிக்கின்றன.

"தமிழனுக்கு முழிப்புத்தட்ட ஆரம்பிச்சிரிச்சி தம்பி" என்று மாநிலத் தலைவர் மகிழ்ச்சி கொள்கிறார். பாராட்டுகிற ஃபோன்கள், பல தலைவர்களிடமிருந்தும் வருகின்றன.

முதல் ஆளாய்ப் பாராட்டுத் தெரிவிக்கிற அறிவரசன், இப்போது உயிரோடு இல்லை.

மோத்திலால், சக்திலிங்கம், சந்தான கிருஷ்ணன், கோவை சண்முகம், மதுரை பீட்டர், திருச்சி டாக்டர் பொன் குமார், நீலகிரி விஸ்வநாதன், தங்க தேவன் உள்ளிட்ட நம்ம கட்சி நண்பர்களோடு, மாற்றுக்கட்சித் தோழன் ஒருவனும் தொலைபேசியில் பாராட்டுகிறான்.

"ஒன்னோட போஸ்டர்க் கவிதை பிரமாதம்டா."

"நன்றி தேவநேசா."

"எல்லாக் கட்சிக்காரனும் ஒங்கக் கட்சியப் பத்தித்தான் பேசிட்டிருக்கான்."

"ஓஹோ! ஸூப்பர்!"

"எங்கக் கட்சிலயும் ஒங்கக் கட்சியப் பத்தித்தான் பேசிக்கிறாங்க."

"சந்தோஷம்டா."

"அப்புறம்… ரொம்ப நாளா நா ஒரு விஷயம் ஒன்ட்டக் கேக்கணும்னு இருந்தேன்…"

"கேளுடா."

"அது… வந்து… நா அங்க வந்துரவா?"

"எங்க, எங்க ஆத்துக்கா?"

"ஒங்கக் கட்சிக்கி"

"ஒங்கக் கட்சியா? நம்மக் கட்சின்னு சொல்லுடா! யூ ஆர் மோஸ்ட் வெல்கம்."

"நா மட்டுமில்லடா, நம்மக் கட்சிலயிருந்து விலகிப்போன பலபேர் இப்பத் திரும்பி வரப் போறாங்க."

"ஓஹோ!"

நம்முடைய கட்சி என்ட்ரி கொடுத்த பிறகு தமிழக அரசியலில் ஒரு மாற்றம் விளைகிறது.

எந்தப் பெரிய கட்சியின் நிழலிலும் ஒதுங்கிக் கொள்ள வழியில்லாமற் போனதால், லெட்டர்ப் பேட் கட்சிகளெல்லாம் கூடித் தங்களுக்குள் கூட்டணியமைத்துக் கொள்கின்றன. அடுத்த படியாய், அடுத்த கூட்டணி அமைகிறது. அது, விஸிட்டிங் கார்டு கட்சிகளின் கூட்டணி.

மற்றபடி, முற்போக்கு, ஜனநாயக, ஜனநாயக முற்போக்கு அணிகளெல்லாம் கருவிலேயே சிதைகின்றன. பெரிய கட்சிகளுக்கிடையே கூட்டணிப் பேச்சு வார்த்தைகளெல்லாம் முறிகின்றன. அணிகள் சிதறுகின்றன.

அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டி!

அட்வான்ட்டேஜ் – நம்மக் கட்சி!

மாநிலத் தலைவர் எந்தத் தொகுதியில் மனுத்தாக்கல் செய்வது என்பதில் அவருக்கு அன்புத் தொல்லைகள் சில.

கோவையின் ஒரு தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்று மூன்று வருடங்களுக்கு முன்பே கோரிக்கை வைத்தவர் கோவை சண்முகம். அப்போது யாரும் அதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால், தேர்தலின் நெருக்கத்தில் வேறு சில வேண்டுகோள்கள்.

கன்யாகுமரி மாவட்டத்தில், மாநிலத் தலைவர் ஏற்கனவே நின்று வெற்றி பெற்ற பத்மநாப புரம் தொகுதியில் தான் திரும்பவும் நிற்க வேண்டும் என்கிறார். கன்யாகுமரி மாவட்டத் தலைவர் அருளானந்தம்.

வேலூர் மாவட்டத் தலைவர் சந்தானம் இன்னொரு ஆணித்தரமான வாதத்தை முன் வைக்கிறார்.

"1954 ஆம் வருஷம் பெருந்தலைவர் காமராஜர் எங்க வேலூர் மாவட்டத்து குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தல்ல நின்னு ஜெயிச்சிதான் தமிழ்நாட்டுக்கு முதல் மந்திரியானார். ராசியான தொகுதி குடியாத்தம். தமிழ்நாட்டுக்கு அடுத்த முதலமைச்சரா வரப்போற நம்ம மாநிலத் தலைவர், குடியாத்தம் தொகுதில நிக்கிறது தான் ஞாயம்."

என்னால் மட்டும் வாயை மூடிக் கொண்டு சும்மாயிருக்க முடியுமோ?

நானும் வாயைத் திறக்கிறேன்.

"முன்னாள் மத்திய சென்னை மாவட்டத்தலைவர் கோ எத்திராஜனோட தொகுதி புரசைவாக்கம். நம்ம மாநிலத் தலைவரப் போலவே, நேர்மை நாணயத்துக்கும், கை சுத்தத்துக்கும் எடுத்துக்காட்டு எத்திராஜன். தொகுதி மக்கள்ட்ட நல்ல பெயர் எடுத்தவர் எத்திராஜன். ஆனாலும் ஒரு கோடீஸ்வர தாதாவ எதுத்து அவரால ஜெயிக்க முடியாமப் போச்சு. அந்தக் களங்கத்த நம்ம மாநிலத் தலைவர் இப்பப் போக்கணும். மெட்ராஸ்ல, புரசைவாக்கம் தொகுதில தான் தலைவர் நிக்யணும்."

நாலாபக்கமும் தலைவர் இழுபட்டுக் கொண்டிருந்ததால், ஒரு முடிவுக்கு வர முடியாமல், இறுதி முடிவை நம்மக் கட்சியின் அகில இந்தியத் தலைவரிடம் விட்டு விடுவது, என்று ஏகமனதாய்த் தீர்மானிக்கப்படுகிறது.

முண்டியடித்துக் கொண்டு அரசியல் கட்சிகளெல்லாம் அவரவர் அமைக்கப் போகிற ஆட்சிகளை அறிவிக்கின்றன.

தி.மு.க. – அண்ணாவின் ஆட்சி.

அ.தி.மு.க. – எம்.ஜி.ஆர். ஆட்சி.

ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி -தோழர் ஜீவாவின் ஆட்சி.

தே.மு.தி.க. – பெரியார் ஆட்சி

விடுதலைச் சிறுத்தைகள் – அம்பேத்கார் ஆட்சி

மூன்று முஸ்லிம் கட்சிகளும் தனித்தனியாக – காயிதே மில்லத் ஆட்சி.

ம.தி.மு.க – பிரபாகரன் ஆட்சி.

சீமானின் நாம் தமிழர் கட்சி – போட்டி பிரபாகரன் ஆட்சி.

பா.ம.க – தேர்தல் முடிந்த பிறகு, முடிவுகள் தெரிந்த பிறகு முடிவு செய்யப்படும்.

இந்திராக் காங்கிரஸைக் காணவில்லையே என்று அவசரப்பட்டு யாரும் வருத்தப்பட்டு விடக் கூடாது. இந்திராக் காங்கிரஸ் கோஷ்டிகளின் ஆட்சி பற்றி விவரமாய் எழுதுவதற்குத் தனியாய் ஒரு பத்தி தேவைப்படுகிறது. ஆகையால் அது கடைசியில் வருகிறது.

கோஷ்டிகள் 1, 2, 5, 7, 8, 9, 11, 12, 15, 17, 20 – காமராஜ் ஆட்சி.

கோஷ்டிகள் 3, 4, 10, 16, 18 – இந்திரா ஆட்சி.

கோஷ்டிகள் 6, 14, 19 – ராஜீவ் ஆட்சி.

கோஷ்டி 13 – மூப்பனார் ஆட்சி.

எல்லாமே ஆவிகளின் ஆட்சிகள் தான்.

பாரதிய ஜனதாக் கட்சிக்கு மிகப் பெரிய சங்கடம். அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லாம் முழுசாய் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.

ஆனால், சங்கடத்தை சமாளித்து, உயிரோடிருக்கும் தலைவர்களையே மாட்டி விட்டு விடுவது என்று முடிவெடுக்கிறார்கள்.

ஆனால் திரும்பவும் ஒரு சிக்கல். நரேந்திர மோடி ஆட்சி என்று ஓர் அணியும், எடியூரப்பா ஆட்சி என்று வேறோர் அணியும் பிடிவாதம் பிடிக்க, ரெண்டு அணிகளுக்கும் பொதுவாய் ஒரு பெயர் தீர்மானமாகிறது:

பெல்லாரி ரெட்டி பிரதர்ஸ் ஆட்சி.

நம்ம கட்சிக்கு இந்த எந்த ஆட்சியிலுமே ஆட்சேபணையில்லை.

ஆனால் காமராஜரை இந்திரா காங்கிரஸ்காரர்கள் உரிமை கொண்டாடுவதுதான் உறுத்துகிறது.

இந்த இடத்தில் ஒரு ஃப்ளாஷ் பேக் அவசியமாகிறது.

மூன்று வருடங்களுக்கு முந்தி, மதுரை செயற்குழுக் கூட்டத்தையடுத்து, டாக்டர் பொன் குமாரோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன விஷயத்தை நினைவு கூர்ந்து பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

"எமர்ஜன்ஸி காலத்ல, மொரார்ஜி தேசாய், ஜெயப்ரகாஷ் நாராயண் எல்லாரும் முதல் சுற்றுல கைது செய்யப்பட்டாங்க. ‘விநாச காலே, விபரீத புத்தி’ன்னு மனசு வெதும்பி ஜெயிலுக்குப் போனார் ஜே பி. காமராஜர் அப்பவே சுகமில்லாமத் தானிருந்தார்ன்னாலும் ஸீரியஸா இல்ல. ஆச்சார்யா கிருபளானி கைது செய்யப்படாதது காமராஜருக்கு ஒரு ஆறுதலா இருந்தது. ஆனா, ரெண்டாவது ரவுண்ட்ல கிருபளானி கைது பண்ணப்பட்டப்ப காமராஜர் மனசொடிஞ்சிப் போய்ட்டார். இந்தப் பொம்பள என்ன இந்த ஆட்டம் போடுதுன்னு சோர்ந்து போய்ட்டார். அப்பப் படுத்தவர் தான், அப்பறம் எந்திரிக்க வேயில்ல. அப்ப நா ஒரு கல்லூரி மாணவன். பெருந்தலைவர் போன அன்னிக்கித் திருமலைப் பிள்ளை ரோடுல தலைவோரட வீட்டுக்கு வந்திருந்தேன். மழைல நனஞ்சிட்டே வந்தேன். சோன்னு மழ அன்னிக்கி.

பெருந்தலைவர் மேல இந்திரா காந்திக்கி மரியாதையே இருந்தது கெடையாது. ஆனா, அவருடைய இறுதிச் சடங்குக்குத் தலைல முக்காடு போட்டுக்கிட்டு அந்த அம்மா வந்து அட்டெண்டன்ஸ் மார்க் பண்ணிருச்சி. அப்பத்தானே இணைப்பு நாடகம் போடறதுக்கு வசதியாயிருக்கும்!

நாடகம்னவொடன ஒரு சினிமா ஞாபகத்துக்கு வருது. காமராஜ்னு ஒரு சினிமா வந்துச்சி. பெருந்தலைவரோட வாழ்க்கைய ரியலிஸ்ட்டிக்கா எடுத்திருந்தாங்க. அதுல ஒரு கட்டத்ல நிருபர்கள் இந்திரா காந்திட்ட, காமராஜரப்பத்தி ஒரு கேள்வி கேக்றாங்க, அந்தக் கேள்விக்கி இந்த அம்மா ஒரு எதிர்க் கேள்வி கேக்குது: Who is Kamaraj? நெஜமா நடந்த நிகழ்ச்சி இது.

இது தான் இந்திரா காந்தி. அந்த இந்திராவையும் அந்தம்மாவோட வாரிசுகளையும் வாழ்க போட்டுட்டிருக்கிற இந்தத் தமிழ் நாட்டு இந்திராக் காங்கிரஸ் கோஷ்டிகள் இங்கக் காமராஜ் ஆட்சி அமைக்கப் போறதா பினாத்திட்டிருக்கிறது எவ்ளவு பெரிய அரசியல் மோசடி!"

ஃப்ளாஷ் பேக் முடிந்து இப்போது திரும்பவும் எதிர்காலத்துக்குத் திரும்புவோம்.

(தொடர்வேன்)

About The Author