சிபி (38)

மாநிலத் தலைவர் மேடையில் வந்து அமர்ந்த பிறகு அறிவரசன் மைக்கைப் பிடித்தார். மாநிலத் தலைவரை வரவேற்று, நன்றி சொல்லி முடித்த பின்னால் விஷயத்துக்கு வந்தார்.

"நண்பர்களே, மரியாதைக்குரிய நம்முடைய மாநிலத் தலைவர் அவர்களைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு, காமராஜருடைய கார்பன் காப்பி, ஸெராக்ஸ் காப்பி என்று பலர் லேபில் ஒட்டிக்கொண்டு திரிந்தாலும், பெருந்தலைவரின் எல்லா நற்பண்புகளும் அமையப் பெற்ற அவருடைய உண்மையான வாரிசு நம்முடைய மாநிலத் தலைவர் அவர்கள் தான் என்று நாம் பெருமை கொள்கிறோம். குமரிமுனைக் காமராஜர் என்று இவரைக் குறித்துப் பெருமிதம் கொள்கிறோம். கடந்த சில வருடங்களில், மாநிலத் தலைவர் அவர்களின் மனம் நோகிற மாதிரி சில சந்தர்ப்பங்களில் நான் நடந்து கொண்டிருந்தாலும், என்னுடைய மனம் நோகிற மாதிரி அவர் நடந்து கொண்டதே இல்லை. எனக்கு உரிய மரியாதையைக் கொடுத்து, சில சமயம் என்னுடைய தகுதிக்கு மீறிய மரியாதையைக் கூடக் கொடுத்து என்னை கண்ணியப் படுத்தியவர் நம்முடைய மாநிலத் தலைவர். அவருடைய உயரிய பண்பு, எனக்குள்ளே ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் என்னைப் பெருமைப் படுத்தியதற்குப் பரிகாரமாய், நான் என்ன செய்யலாம் என்று யோசித்த போது, எனக்குள்ளே அவர் ஏற்படுத்திய மனமாற்றத்தைப் போல, இங்கே குழுமியிருக்கிற உங்களுக்குள் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். உங்கள் ஒவ்வொருவரோடும் கடந்த ஒரு மாத காலத்தில், நேரிலும் தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு பேசி, உங்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்துவதில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் எதற்காக இங்கே கூடியிருக்கிறீர்கள் என்று உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் மாநிலத் தலைவர் அவர்களுக்கு இந்த விநாடி வரைக்கும் தெரியாது. அதை அவருக்குத் தெரிவிக்க வேண்டிய தருணம் இதோ வந்துவிட்டது.

மாநிலத் தலைவர் அவர்களே, இத்தனை நாள் உங்களிடமிருந்து இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தை மறைத்து வைத்திருந்ததற்காக மன்னிப்புக் கோருகிறேன். தாங்கள் அறிவித்த மதுக்கடை மறியல் போராட்டத்தில், சென்னையில் என்னுடைய தலைமையில் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, என்னைப் பெருமைப் படுத்துகிற நிகழ்ச்சியாய் அமைந்தது. அப்போதே நான் நினைத்தேன், ஏதோ மறியல் செய்தோம் கைதானோம் வீட்டுக்குப் போய்ப் படுத்துத் தூங்கினோம் என்றில்லாமல் இந்த
மறியல் போராட்டத்தினால் ஒரு நல்ல விளைவு ஏற்பட வேண்டும், அந்த நல்ல விளைவை நான் நிகழ்த்த வேண்டும், அதற்கான முயற்சியை நான் மேற்கொள்ள வேண்டும் என்று. அந்த முயற்சியின் விளைவுதான் இந்த நிகழ்ச்சி.

மாநிலத் தலைவர் அவர்களே, மதுக்கடை மறியல் நாம் நடத்தினோம் என்றாலும், மதுப்பழக்கம் உள்ளவர்கள் நம் கட்சியிலேயே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான். ஆனால் உங்களுக்குத் தெரியாத விஷயம் என்னவென்றால், மதுப்பழக்கம் உள்ளவர்கள் நம்முடைய கட்சியில் நேற்று வரை இருந்தார்கள், இன்றைக்கு இல்லை என்பது. இதோ இங்கே குழுமியிருக்கிற இந்த நண்பர்கள் தான் அவர்கள்.

எழுபதுகளின் மத்தியில், உத்திரப் பிரதேசத்தில் ஒரு புரட்சி நடந்தது. ஐயா, உங்களுக்குத் தெரியாததில்லை. ஆனாலும் என்னுடைய நினைவிலிருந்து, இங்கே குழுமியிருக்கிற நண்பர்கள் தெரிந்து கொள்வதற்காகச் சொல்கிறேன். கொலை பாதகங்களுக்கு அஞ்சாத சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரர்கள் மனந்திருந்தி, இந்தியாவின் சோஷலிசத் தந்தை ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் முன்னே சரணடைந்தார்கள். தங்களுடைய துப்பாக்கிகளை அந்த மாஜி கொள்ளைக்காரர்கள் ஜே பி யின் காலடியில் சமர்ப்பித்து, மனிதர்களாய் மாறினார்கள். அதே போன்ற ஒரு நிகழ்ச்சி தான் இது, மாநிலத் தலைவர் அவர்களே. இங்கே இருக்கிற மாஜி மதுப்பிரியர்கள் ஒவ்வொருவரும் வந்து தங்கள் முன்னே சரணடையப் போகிறார்கள். அவர்களுடைய மதுப்புட்டிகளைத் தங்களுடைய பாதங்களில் சமர்ப்பித்து, மனிதர்களாய் மாறப்போகிறார்கள். அதற்கு முன்னே, அவர்கள் அனைவரும் எழுந்து நின்று, மதுவை இனிமேல் மனதாலும் தீண்டுவதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள். நான் மதுவை என்றுமே தொட்டதில்லை என்பதால், அந்த உறுதிமொழியை முன்மொழிகிற தகுதி எனக்குக் கிடையாது. ஆகையால், நேற்றுவரை அவர்களில் ஒருவராயிருந்த நம்முடை மாவட்டத் தலைவர் அவர்கள், மாநிலத் தலைவர் அவர்களின் அனுமதியோடு உறுதிமொழியை வாசிக்க, அவருக்குப்பின்னால், அனைத்து மாஜி மதுப்பிரியர்களும் அந்த உறுதிமொழியை உச்சரிப்பார்கள்."

மாவட்டத் தலைவர் உறுதிமொழியை முன்மொழிய, மற்றவர்கள் பின்மொழிந்தார்கள். பிறகு, அவரவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த பைகளிலிருந்தும் கால் சட்டைப் பாக்கெட்டுகளிலிருந்தும் பாட்டில்களை வெளியே எடுத்தார்கள். கலர்க்கலரான திரவங்கள் நிரம்பிய விதவிதமான பாட்டில்கள். ஒருவர் பின் ஒருவராய் எல்லோரும் வரிசையாய் வந்து மாநிலத் தலைவரின் பாதங்களில் பாட்டில்களை சமர்ப்பித்து, விழுந்து வணங்கினார்கள். விழுந்து வணங்குவது கூடாது என்று மாநிலத் தலைவர் தடுத்து விட்டதால் நின்றபடியே கரங்கூப்பிவிட்டுப் போனார்கள்.

அடுத்தக் கட்ட நடவடிக்கை, அந்த மதுப் புட்டிகளையெல்லாம் அழிப்பது. எப்படி அழிப்பது என்பதற்குப் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

"எல்லா பாட்டில்களயும் ரெண்டு மூணு கோணிகள்ள போட்டுக் கட்டி ஒரு வண்டில ஏத்தி, நேராக் கொண்டு போய் தலைமைச் செயலகத்து வாசல்ல எறக்கிப் போட்டு வந்துருவோம்."

"எறக்கிப் போடலாம், திரும்பி வர முடியாது. போலீஸ்காரன் புடிச்சிக்குவான்."

"சரக்கையெல்லாம் நம்ம மீனவரணித் தலைவர்ட்ட கோணியோட ஒப்படச்சிருவோம். அவர், கோணியத் தோணில கொண்டு போய்க் கடல்ல கொட்ட ஏற்பாடு பண்ணிருவார்."

"நீ ஒண்ணு பா. அப்புறம் மீனுக்கெல்லாம் போதை ஏறிக்கும் அத வாங்கித் திங்கிறவனுக்கும் போதை ஏறும்."

"இப்டி செய்வோம். அவங்க அவங்க பாட்டில அவங்க அவங்களே எடுத்துக்குங்க. போற வழில ஒரு குப்பத் தொட்டில எறிஞ்சிட்டுப் போயிருங்க."

"அதெல்லாம் சரி வராதுப்பா. இந்த எழவப் போற வழில குடிச்சிட்டுப் போகவும் முடியாது."

இந்த வாதப் பிரதிவாதங்களை அவதானித்துக் கொண்டிருந்த எனக்கு சுலபமான ஒரு தீர்வு உதித்தது.

"இப்டி செய்வோம் அறிவரசன் சார். எல்லா பாட்டில்களையும் தெறந்து நம்ம ஆஃபீஸ் முன்னால ரோட்ல கொட்டி நெருப்பு வச்சிக் கொளுத்துவோம். பொது மக்களெல்லாம் பாக்கட்டும். அதான் சரியாயிருக்கும்."

"சிறுபான்மையர்ப் பிரிவுத் தலைவரே, அது சரியா வராது" என்று ஆட்சேபித்தார் மாவட்டத் தலைவர்.

"நெருப்பு வச்சா, இந்தச் சரக்கு எரியாது."

"ஏன் எரியாது? ஆல்கஹால் அபாரமா எரியும்."

"ஆல்கஹால் அபாரமாத்தான் எரியும். ஆனா இது எரியாது. ஏன்னா இது ஆல்கஹால் இல்ல."

"என்ன ஆல்கஹால் இல்லங்கறீங்க? விஸ்க்கியோ, ரம்மோ, பியரோ எல்லாமே ஆல்கஹால் தானே?"

அதெல்லாம் ஆல்கஹால் தான். ஆனா, இது ஆல்கஹால் இல்ல” என்ற மாவட்டத் தலைவர், குரலைத் தணித்துக் கமுக்கமாய் என்னிடம் கிசுகிசுத்தார்.

"ஐயா, மாநிலத்தலைவருக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம். நாங்கள்ளாம் என்ன செஞ்சோம்னா, இனிமே எப்ப இந்த சரக்கையெல்லாம் தொட்டுப் பாக்கப் போறோம்னு கடைசிப் பெக்க நேத்து நைட்ல அடிச்சிட்டுக் காலி பாட்டில்ல கலர்த்தண்ணி அடச்சிக் கொணாந்துட்டோம்."
சஸ்பென்ஸில் தொடங்கிய சிறப்பு நிகழ்ச்சி, ஒரு சிரிப்பு நிகழ்ச்சியாய் நிறைவு பெற்றது.

மாநிலத் தலைவரிடம் யாரோ போட்டுக் கொடுக்க, அவரும் உடன் சேர்ந்து மனம் விட்டு சிரித்தார்.

சத்தங்காட்டாமல் ஒரு சாதனையை நிகழ்த்திவிட்டு சாந்தமாயிருக்கிற அறிவரசனை அடுத்த நாள் தொலைபேசியில் பாராட்டியபோது, "நானே ஒங்கட்டப் பேசணும்னு இருந்தேன் தம்பி, நீங்களே பேசிட்டீங்க" என்றார்.

"ரொம்ப நாளா ஒரு மேட்டர் ஒங்கட்டக் கேக்கணும் கேக்கணும்னு நெனச்சிட்டேயிருக்கேன். இப்பத்தான் வேள வந்திருக்கு."

"கேளுங்க சார்."

"ஒரு பெர்சனல் சமாச்சாரம் தம்பி."

"எதுன்னாலும் கேளுங்க."

"நீங்க தப்பா நெனச்சிக்கக் கூடாது."

"தப்பா நெனக்யவே மாட்டேன். சும்மாக் கேளுங்க."

"அது… வந்து…. அதாவது…."

"சொல்லுங்க சார்."

"தம்பி, நீங்க லவ் பண்ண அந்தத் திருச்சிப் பொண்ண அப்புறம் பாத்தீங்களா, இல்ல பாக்கவேயில்லியா தம்பி?"

(தொடர்வேன்)

About The Author