சிபி (37)

"ரம்ஜான் வாழ்த்துக்கள் தம்பி." என்று ஃபோன் வந்தது, பெருநாளன்று.

யாரிடமிருந்து ஃபோன்?

மாநிலத் தலைவரிடமிருந்தா?

இல்லை.

மோத்திலாலிடமிருந்தா?

அதுவும் இல்லை.

சக்திலிங்கம்? சந்தான கிருஷ்ணன்?

தப்பு.

வேறே யாரிடமிருந்து?

அறிவரசனிடமிருந்து.

"இஃப்தார் பார்ட்டிக்கப்புறம் ஒங்கக் கூடப் பேசணும் பேசணும்னு டெய்லி நெனக்கிறேன் தம்பி, இன்னிக்கித் தான் வேள வந்திருக்கு"‘ என்று கனிவாய்ப் பேசினார்.

"நோம்பெல்லாம் முடிஞ்சதா தம்பி? மசூதிக்கிப் போய்ட்டு வந்தீங்களா? பிரியாணி ரெடியாயிருச்சா?"

"மசூதிக்குப் போய்ட்டு வந்தாச்சி சார். பிரியாணி ரெடியாய்ட்டிருக்கு. ஆனா நோம்பு இன்னும் முடியல."

"என்ன தம்பி சொல்றீங்க, இன்னிக்கிப் பண்டிகைன்னா நேத்து தானே கடேசி நோம்பு?"

"ரம்ஜான் நோம்பு நேத்தோட முடிஞ்சது சார். ஆனா, நாளைலயிருந்து ஒரு ஆறு நாளக்கி ஆப்ஷனல் நோம்பு இருக்கு. அந்த ஆறு நோம்பையும் கூட புடிக்கணும்னு எங்கத் தகப்பனார் பழக்கப் படுத்திட்டுப் போய்ட்டாரு. அதனால எனக்கு மட்டும் நோம்பு இன்னும் முடியல."

"ரொம்பப் பேணுதலோட இருக்கீங்க தம்பி. அதான் அல்லா ஒங்களுக்குப் பெரிய அளவுல கருணை காட்டியிருக்காரு. சினிமால ஒரு சாதனயப் பண்ணிட்டு சாந்தமாயிருக்கீங்க. பேப்பர்ல பாத்தேன். அப்பவே வாழ்த்து சொல்லியிருக்கணும். இஃப்தார் பார்ட்டி மும்முரத்ல இது தோணாமப் போச்சு. ஒங்களுக்கு வாழ்த்து சொல்றதுக்குக் கூட இப்பத்தான் வேள வந்துருக்கு. வாழ்த்துக்கள் தம்பி."

"நன்றி சார்."

"நாந்தான் நன்றி சொல்லணும் ஒங்களுக்கு. இஃப்தார் பார்ட்டில எனக்குப் பெரிய கௌரவத்தக் குடுத்தீங்க. அதுக்கு முன்னால, மதுக்கடை மறியல்லயும் மரியாத பண்ணீங்க எனக்கு."

"மாநிலத் தலைவர் சொன்ன மாதிரி செஞ்சேன், அவ்ளோ தான் சார். ஒங்க நன்றியெல்லாம் தலைவருக்குத்தான் போய்ச் சேரணும்."

"தலைவருக்கும் ஃபோன் பண்ணி ரம்ஜான் வாழ்த்து சொல்லணும். ஆமா தம்பி, அடுத்த போராட்டம் என்ன போராட்டம், எப்பப் போராட்டம்னு தலைவர் ஏதாவது சொன்னாரா?"

"அனேகமா அடுத்த மாசம் போராட்டம் இருக்கும். பெட்ரோல் விலை உயர்வ எதிர்த்து."

"அடுத்த மாசம் பெட்ரோல் வெல ஏறப் போகுதாமா?"

"ரெகுலரா மூணுமாசத்துக்கொருதரம் ஏறுது. கடைசியா வெல ஏறி ரெண்டு மாசம் ஆச்சி. அடுத்த மாசம் டியூ."

இந்தியாவில், மூன்று மாதங்களுக்கொருமுறை, பதிவாய்ப் பெட்ரோல் விலை ஏற்றப்படும். விலையேற்றத்தைக் கண்டித்து அறிக்கையொன்றை முதலமைச்சர், எல்லோரையும் முந்திக் கொண்டு வெளியிடுவார். முதலமைச்சர் அலுவலகத்தில் அறிக்கை தயார் நிலையில் இருக்கும் போல. தேதியை மட்டும் மாற்றி அறிக்கையை ரிலீஸ் செய்கிறார்களாயிருக்கும்.

மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பிடித்திருக்கிற தோழமைக் கட்சிகளெல்லாம் பெட்ரோல் விலை உயர்வை ஆட்சேபிக்கிற மாதிரிப் பாவலா பண்ணும்.

தமிழ்நாட்டிலிருக்கிற தோழமைக் கட்சியின் தலைவர், ஒரு படி மேலே போய், விலை உயர்வைத் திரும்பப் பெறவில்லையானால், மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் என்றொரு பூச்சாண்டி காட்டுவார். ஆனால் யாருமே அவரை ஸீரியஸ்ஸாய் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எல்லோருக்கும் தெரியும் ஒரே வாரத்தில் அவர் பல்டியடிப்பார் என்று.

ஆனால் அவர் ஒரு வாரத்தில் பல்டியடிக்க மாட்டார். அட்வான்ஸôகவே அடித்து அசத்துவார்.

இடது சாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தும். ஆறேழு நாட்களில் எல்லாம் அடங்கிப்போய் சகஜநிலை திரும்பி விடும்.

அப்புறம் ஒரு மூணுமாதம் கழித்துத் திரும்பவும் இதே கதை.

பத்து ரூபாய்க்குப் பதிமூனு லிட்டர் பெட்ரோல் போட்டுக் கொண்டு வாப்பாவுடைய காரில் (நம்ம சிநேகிதியோடு) வலம் வந்ததெல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கிறது இப்போது.

பெட்ரோல் விலையேற்ற விவகாரத்தில் மத்திய அரசு ரொம்ப சாதுர்யமாய் செயல்படும். மூன்று ரூபாய் ஏற்ற வேண்டும் என்று நினைப்பார்கள், ஏழு ரூபாய் ஏற்றுவார்கள்.

ஏழு ரூபாய் கூடுதலா! என்று காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் கொதித்துக் கிடக்கிறபோது, நான்கு ரூபாய் விலை குறைக்கப்படும் உடனே கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரைக்கும் குளிர்ந்து போகும்.

நிகர விலையேற்றம் மூன்று ரூபாய் என்பது தந்திரமாய் மறக்கடிக்கப்பட்டு விடும்.

ரெண்டு மாசங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ஏற்றப்பட்டபோது, பற்றாக்குறையும் ஒட்டிக் கொண்டே வந்து விட்டது. ராத்திரி பதினொரு மணிக்குப் பெட்ரோல் பங்க்குகளின்
முன்னால் வாகனங்களின் வரிசை.

பெட்ரோல் இருப்பு இல்லை என்று ஊழியர்கள் மறுக்க, “வீட்டுக்குப் போய்ச் சேரணும்யா, நூறு ரூவா தர்றேன்யா, ஒரேயொரு லிட்டர் போடுய்யா” என்று பரிதாபக் குரல்கள் எழுந்தன.

அத்தியாவசியத் தேவை என்று வருகிற போது அசுர விலையேற்றம் கூட அற்பமாகி விடுகிறது.

நூறு ரூபாய்க்கு ஒரு லிட்டர் என்று பெட்ரோல் விலை உயரக் கிளம்பி, மேக மண்டலத்தில் சஞ்சரிக்கப் போகிற காலம் வெகு தூரத்திலில்லை என்று உணருகிறபோது உதறலெடுக்கிறது.

பெட்ரோலோடு சேர்ந்து அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே போகத்தான் போகிறது என்கிற கவலை மனதை அரிக்கிற போது சில புராதன சங்கதிகள் மங்கலாய் நினைவுக்கு வருகின்றன.

மதுரையில் பத்து பைசாவுக்கு இக்பாலும் நானும் காமராஜ் இட்லி தின்றது, ஸ்டேட் ஐஸ்க்ரீம் பத்து பைசாவுக்கு வாங்கி சுவைத்தது, வேலூர் அம்பீஸ் கஃபேயில் லியாகத் அலியும் நானும் இருபது பைசாவுக்கு மசால் தோசை தின்றது, கொஞ்சம் பிற்பட்ட காலத்தில், தூத்துக்குடியில், ஸ்பிக் கேன்ட்டீனில் ஒரு ரூபாய் முப்பத்தஞ்சு பைசாவுக்கு அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டது…

அந்த அன்லிமிட்டட் மீல்ஸையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கக் கூடாது. அதுவும், நோன்பிருக்கிற பகல்களில் சாப்பாட்டைப் பற்றி நினைக்கவே கூடாது. ஆறு நோன்புகள் நிறைவடைந்த பிறகு ஞாபகமாய்த் திரும்பவும் ஃபோன் செய்தார் அறிவரசன்.

"எல்லா நோம்பும் வெற்றிகரமா முடிஞ்சதா தம்பி?"

"முடிஞ்சது சார்."

"இனிமே நீங்க பகல்ல சாப்புடலாம், தண்ணி குடிக்கலாம்."

"டாஸ்மாக் தண்ணியத் தவிர வேற எல்லாத் தண்ணியும் குடிக்கலாம்."

"டாஸ்மாக் தண்ணிதான் நம்ம எல்லாருக்குமே ஹராம் ஆச்சே தம்பி."

"ஆனா, நம்மக் கட்சில கூடக் குடிகாரங்க இருக்காங்களே சார்.”

"அந்தக் குடிகாரங்கள வச்சே நா ஒரு நிகழ்ச்சி நடத்தலாம்னு இருக்கேன் தம்பி. நம்மக் கட்சி ஆஃபீஸ்லயே."

"குடிகாரங்கள வச்சி நிகழ்ச்சியா? அதுவும் கட்சி ஆஃபீஸ்லயா?"

"ஆமா. என்ன நிகழ்ச்சின்னு இப்ப சொல்ல மாட்டேன். சஸ்பென்ஸ். தலைவர் அடுத்து மெட்ராஸ்க்கு எப்ப வர்றார்?"

"நீங்க நிகழ்ச்சி எப்பன்னு சொன்னீங்கன்னா தலைவர வரவழச்சிருவோம். ஆனா, சீக்கிரம் வைய்ங்க. சஸ்பென்ஸ் ரொம்ப நாள் தாங்காது."

மாநிலத் தலைவரை வரவேற்க எழும்பூரில் நாலாம் நம்பர் ப்ளாட்ஃபாமில் நான் காத்திருந்த போது, எனக்கு முந்தியே வந்து காத்திருந்தார் அறிவரசன்.

“ரொம்ப நாளக்யப்புறம் மாநிலத் தலைவர வரவேற்க வந்திருக்கேன் தம்பி, தலைவர   சங்கடப் படுத்திட்டு இப்ப நேருக்கு நேர் தலைவரப் பாக்கப் போறோமேன்னு கொஞ்சம் கூச்சமாத்தானிருக்கு" என்று நெளிந்தவரை நிமிர்த்தினேன் நான்.

"நீங்கக் கூச்சமேப் படவேண்டாம் சார். மாநிலத் தலைவர் ஒங்களத் தப்பாவே நெனக்யல. நீங்க தான் அவரத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டு, அவரோட நேர்மையையும் நாணயத்தையும் சந்தேகப் பட்டுட்டீங்க. நா இப்ப சொல்லப் போற விஷயம் ஒங்களுக்குத் தெரியுமான்னு தெரியல."

"எந்த விஷயம்?"

"பெருந்தலைவர் காமராஜர், சுகவீனமாறதுக்கு முன்னால ஸ்தாபனக் காங்கரஸ்க்கு நிதி திரட்டணும்னு மாவட்டத் தலைவர்களுக்கெல்லாம் உத்தரவு போட்டார்."

"அது தெரியும்."

"எல்லா மாவட்டத் தலைவர்களும் மும்முரமா நிதி திரட்டினாங்க. அப்புறம் கொஞ்ச நாள்லயே பெருந்தலைவர் படுத்த படுக்கையாகி, எமர்ஜன்ஸில, காந்தி ஜெயந்தியன்னிக்கிக் காலமாய்ட்டார்."

"அதுவும் தெரியும்."

"பெருந்தலைவர் காலமானப்புறம், கருப்பையா மூப்பனார் மாவட்டத் தலைவர்களுக்கெல்லாம் ஒரு வலை விரிச்சி, மாவட்டத் தலைவர்கள் திரட்டின நிதியையெல்லாம் அவங்க அவங்களே வச்சிக்கலாம், அதுக்குக் கணக்குக் கூடக் காட்டவேண்டியதில்ல, துண்ட ஒதறித் தோள்ல போட்டுக்கிட்டு எல்லாரும் இறுக்கிக் கட்ன வேட்டியோட இந்திராக் காங்கிரஸ்க்கு வந்துருங்கன்னு ஆச காட்னார். வசூல் பண்ண லட்சங்களையெல்லாம் வீட்ல பெட்டிக்குள்ள வச்சிப் பூட்டிட்டு, மாவட்டத் தலைவர்களெல்லாம் ஜாலியாக் கைய வீசீக்கிட்டுக் கௌம்பிட்டாங்க, இந்திராக் காங்கிரஸ்க்குக் கட்சி மார்றதுக்கு, மூணே மூணு மாவட்டத் தலைவர்களத் தவிர. கொள்கைப் பிடிப்புள்ள, கை சுத்தமான, நேர்மை நாணயமான அந்த மூணு மாவட்டத் தலைவர்கள்ள, அப்பக் கன்யாகுமரி மாவட்டத் தலைவராயிருந்த நம்ம மாநிலத் தலைவரும் ஒருத்தர். பைசா சுத்தமா, வசூல் பண்ண காசையும் கணக்கையும், அப்ப மாநிலத் தலைவராயிருந்த பா ராமச்சந்திரன்ட்ட ஒப்படச்சார் நம்மத் தலைவர்."

"இந்த சங்கதி எனக்குத் தெரியாது தம்பி. நம்மத் தலைவர் சொன்னரா?"

"அவர் வாயால இதையெல்லாம் வெளிய சொல்ல மாட்டார். நம்ம மாநிலப் பொருளாளர் ஹனீஃப் சொன்னார். அப்புறம் நம்ம ஸீனியர்கள்ட்ட கேட்டு நா கன்ஃபம் பண்ணிக்கிட்டேன். அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற தலைவர நீங்க சந்தேகப் பட்டுட்டீங்களே சார்."

"புத்தி கெட்டுப் போய்ட்டேன் தம்பி. பார்ட்டில நீங்க எனக்கு ஜூனியர். நீங்க புரிஞ்சு வச்சிக்கிற அளவு கூட நம்மத் தலைவரப் பத்தி நா புரிஞ்சிக்கலியேன்னு வெக்கமாத்தானிருக்கு."

"கெட்ட கனவா நெனச்சி எல்லாத்தையும் மறந்துருவோம் சார். இனி ஒத்துமையா செயல்பட்டு நம்மக் கட்சியையும், மாநிலத் தலைவரையும் மேன்மைப் படுத்துவோம். இதோ, ட்ரெய்ன் வந்துருச்சி."

தன்னை வரவேற்க அறிவரசன் வந்தது தலைவருக்கு ரொம்ப சந்தோஷம்.

ஹோட்டேல் அறையில் தலைவரை விட்டுவிட்டுத்தான் அறிவரசன் கிளம்பிப் போனார். பதினோரு மணிக்குக் கட்சி ஆஃபீஸில் நிகழ்ச்சி என்று சொல்லிவிட்டுப் போனார். என்ன நிகழ்ச்சி என்று தலைவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது.

பதினோரு மணிக்குக் கட்சி அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்த போது, அலுவலகக் கட்டடத்துக்கு முன்னால் பாதி சாலையை மறித்துப் பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தலுக்குக் கீழே ஏகப்பட்ட கட்சித் தொண்டர்கள். நம்ம மாவட்டத் தலைவரும் இருந்தார். மாவட்டத் தலைவரையும், அவருடைய தோஸ்த் பத்மநாபனையும் தவிர, அங்கேயிருந்த பெரும்பாலான முகங்கள் முன்னே பின்னே பார்த்திராதவை. நம்மக் கட்சியிலிருக்கிற குடிகாரர்களை வைத்தல்லவா நிகழ்ச்சி நடத்தப் போவதாய் அறிவரசன் சொல்லியிருந்தார்? அப்படியென்றால் இவர்களெல்லாம் குடிகாரர்கள்! இவர்களை வைத்து என்ன, கலை நிகழ்ச்சியா நடத்தப் போகிறார்! ஆளாளுக்குக் கைகளில் கோப்பைகளை ஏந்திக்கொண்டு, ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், பல எண்ணத்தில் நீந்துகிறேன்’ என்று பாடி ஆடித் தள்ளாடப் போகிறார்களா என்ன! சஸ்பென்ஸ் தாங்கவில்லை.


(தொடர்வேன்)

About The Author