சிபி (36)

"டேய், டேய், நீயும் நானும் சேந்து ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடத்த வேண்டியிருக்கு. இஃப்தார் பார்ட்டி."

"இஃப்தார் பார்ட்டியா! அத ஒங்கக் கட்சியில்ல நடத்தும்?"

"நா நடத்தறேன். நீயும் நானும் சேந்து நடத்தறோம். போன தடவ நடத்தின மாதிரி."

"நாம ரெண்டு பேரும் அப்ப ஒரே கட்சில இருந்தோம்டா. இப்ப நா மாற்றுக் கட்சி."

"டேய், இஃப்தார் பார்ட்டிங்கறது மத நல்லிணக்க விருந்து. அது மாற்றுக் கட்சி நல்லிணக்க விருந்தாவும் இருக்கக் கூடாதா? நீ வர்ற தேவநேசா, நாம ரெண்டு பேரும் சேந்து செய்றோம்."

ரெண்டு பேர் என்றிருந்தது, தங்க தேவனோடு சேர்ந்து மூன்றாக, தங்க தேவ நேசனும் நானும் இணைந்து ஏற்பாடுகளை முடித்தோம்.

இஃப்தார் பார்ட்டி.

தாஜ் கோரமண்டல் ஹோட்டேலின் பால்ரூம் பத்தாமல் போகுமோ என்று பயங்கொள்கிற மாதிரிக் கூட்டம். விசேஷ அழைப்பாளர்களோடு மாநிலத் தலைவர், மேடையில். மோத்திலால், சக்திலிங்கம், சந்தான கிருஷ்ணன் பார்வையாளர்களாய் முன்வரிசையில் இருக்க, "ஐயா, நீங்க மூணு பேரும் மேடக்கிப் போகலாமே" என்று நான் அழைத்தபோது, மோத்திலால் மறுத்தார்.

"நாங்க இங்கயே இருக்கோம் தம்பி. தலைவர் ஒங்களக் கூப்புடறார் பாருங்க."

தலைவரிடம் போன போது, "அந்த மூணு பேரையும் மேடக்கிக் கூப்புடுங்க" என்றார் தலைவர்.

"கூப்ட்டேன் தலைவர், வேண்டாங்கறாங்க" என்றேன்.

"தம்பி, நா சொன்னது இந்த மூணு பேரையில்ல. அந்த மூணு பேரை."

"எந்த?"

"அறிவரசன், பீட்டர், கோவை சண்முகம்."

"தலைவர்?"

"சொன்னமாதிரி செய்யுங்க."

"மோத்திலால், சக்திலிங்கம், சந்தான கிருஷ்ணன் வருத்தப்பட மாட்டாங்களா தலைவர்?"

"நாலு பேரும் கலந்து பேசித்தான் முடிவு பண்ணியிருக்கோம்."

"ஓக்கே தலைவர்" என்று உற்சாகமாய் மைக்குக்குப் போனேன்.

தங்களுடைய பெயர்கள் ஒலிபெருக்கியில் உச்சரிக்கப்பட்டதும், மூவரணித் தலைவர்கள் ஆச்சர்யமடைந்து, பிறகு ஆனந்தமடைந்து அழகாய் வந்து மேடையிலமர்ந்தார்கள். எதிர்பார்த்திராத கவுரவம் கிட்டியதில் அவர்கள் ஜில்ல்ல்லென்று குளிர்ந்து போனது முகங்களில் தெரிந்தது.

பஷீருடைய நோம்புக் கஞ்சியைப் பருகி, மக்ரிப் தொழுகையை முடித்து, சிறு சிறு சொற்பொழிவுகளெல்லாம் முடிந்து, சிற்றுண்டி உண்டு கொண்டிருந்த போது, பீட்டரும் பொன் குமாரும் கை குலுக்கிக் கொண்டதையும் அருகருகே அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்ததையும் பார்க்க சந்தோஷமாயிருந்தது.

சவால்கள், சவடால்களெல்லாம் சமாதியடைந்து விட்டன.

"சிறுபான்மையர்ப் பிரிவுத் தலைவரே, எனக்கு நீங்க அழைப்பே அனுப்பல" என்று முறையிட்டார் கோவை சண்முகம்.

"அழைப்பில்லாமலேயே நா ஆஜராய்ட்டேன்."

"நீங்க தானே ஐயா சொன்னீங்க, எங்களுக்கெல்லாம் நீங்க கடிதம் அனுப்பக் கூடாதுன்னு."

"கடிதம் அனுப்பக் கூடாதுன்னு சொன்னேன். அழைப்பு அனுப்பக் கூடாதுன்னு சொல்லலியே."

"அட, அப்டியொரு விதிவிலக்கு இருக்கா இதுல!"

"விதியாவது, விலக்காவது! விதியெல்லாம் இப்ப விலகிப் போயிருச்சி தம்பி. ஏதோவொரு வேகத்ல வார்த்தைய விட்ருப்பேன். அதையெல்லாம் மனசுல வச்சிக்காதீங்க. எழுத்தாளர் நீங்க, அழகா எழுதுவீங்க. நீங்க என்ன எழுதினாலும் எனக்கு அனுப்புங்க. நாம எல்லோரும் ஒண்ணு. ஒண்ணா சேந்து வேல செஞ்சி நம்மக் கட்சிய மக்களுக்குக் கொண்டு போவோம்."

"அதாங்க ஐயா எல்லாருக்கும் சந்தோஷம்" என்று நான் கரங்குவித்து அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்த போது

பக்கவாட்டில் என் கை இழுபட்டது. திரும்பிப் பார்த்தால், அறிவரசன்.

"ஒங்கப் போஸ்டர் கவிதையப் பத்தித் தான் ஊரெல்லாம் பேசிக்கிறாங்க. கவிதை பிரமாதம் தம்பி" என்று சிரித்தார்.

"தம்பி இல்ல. சிபி" என்று அவரை நான் திருத்தினேன்.

"சிபி இல்ல. தம்பி" என்று அவர் என்னைத் திருத்தினார்.

"ஒங்கக் கவிதைய நம்மப் பத்திரிகைல போட்ருவோமா
தம்பி?"

"ஏற்கனவே பொன்குமாருக்குக் கவிதைய அனுப்பிச்சிட்டேன் சார்."

"அதனால என்ன? அவர் பத்திரிகைலயும் வரட்டும், நம்மப் பத்திரிகைலயும் வரட்டும். ரெண்டுமே நம்மக் கட்சிப் பத்திரிகைகள் தானே தம்பி, ரெண்டுமே தோழமைப் பத்திரிகைகள் தானே!"

ஆஹாஹா, தோழமை தொடங்கி விட்டதே என்று மனம் குதூகலித்தது. இது இப்படியே தொடர வேண்டுமே என்று இறைவனைப் பிரார்த்தித்தது.

"பொதுக்குழுக் கூட்டத்ல நீங்க சொன்ன கேந்தி – வாந்தி கவிதையக் கூட நா ரொம்ப ரசிச்சேன் தம்பி" என்று ஒரு டெய்ல்ப் பீஸ் போட்டு அறிவரசன் என்னை ஆனந்தப் படுத்தினார்.

இஃப்தார் பார்ட்டி இனிதே நடந்தாலும், பெரிய துயரமொன்று மனசில் கனத்துக் கிடந்தது. போன இஃப்தார் நிகழ்ச்சியில் பழைய மாநிலத்தலைவரைக் கொண்டு பொன்னாடை போர்த்தி வாப்பாவை கௌரவிக்க முடிந்தது. இப்போது மெகாத்தலைவர் ஒருவர் மாநிலத் தலைவராயிருக்கிறார். ஆனால் அவர் கையால் பொன்னாடை போர்த்திக் கொள்ளத் தந்தை இல்லை.

நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னால் தலைவரைக் காரில் கூட்டிக் கொண்டு போகிறபோது, “அவங்க அவங்கள வக்ய வேண்டிய எடத்ல வக்யணும்னு பொதுக்குழுவுல நீங்க பேசினீங்களே தம்பி, இன்னிக்கி வக்ய வேண்டிய எடத்ல வச்சாச்சில்ல?” என்று என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் தலைவர்.

"அந்த மூணு பேருக்கும் இன்னிக்கி எவ்ளவு சந்தோஷம் பாத்தீங்களா!"

"இப்டியப்டி சந்தோஷமா! தேசிய நீரோட்டத்துக்கு அவங்களக் கொண்டு வந்துட்டீங்களே தலைவர்!"

"இனி அந்த மூணு பேரால நமக்குப் பிரச்சனையில்ல. நமக்கு பலம் தான். நம்மோட சேந்து அவங்களும், அவங்களுக்குப் பின்னால இருந்தவங்களும் கட்சிக்காக உழைப்பாங்க. ஒரு வழியா நம்ம வீட்ட சரி பண்ணியாச்சி."

"வீட்ட சரி பண்ணியாச்சி தலைவர், இனி நம்ம ஸ்டேட்ட சரி பண்ணப் பாப்போம்."

"ஸ்டேட் தான் சீரழிஞ்சிக் கெடக்குதே தம்பி, கொலை, கொள்ளை, குடி, கற்பழிப்பு, நில அபகரிப்பு, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, விலைவாசி ஏற்றம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பவர் கட், வெட்டி விளம்பரங்கள், தேவையே இல்லாத ஹீரோ ஒர்ஷிப், ஹீரோயின் ஒர்ஷிப். மக்களோட வரிப்பணம் எப்டியெல்லாம் வீணடிக்கப்படுது! இவங்க செய்றதையெல்லாம் அவங்க வந்து மாத்தணும், அவங்க செய்றதையெல்லாம் இவங்க வந்து மாத்தணும்."

"இவங்க ரெண்டு பேரும் செய்றத நாம வந்து மாத்துவோம் தலைவர்."

"நாமன்னா?"

"நாமன்னா, நம்மக் கட்சி. கட்சித் தலைவரான நீங்க."

"நானா!"

"ஆமா தலைவர், நீங்க தான். நீங்களே தான். மார்கரெட் தாச்சரோட தாரக மந்திரம் ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் நா ஞாபகப்படுத்தறேன்.

‘If you want to change the party, lead it.
If you want to change the country, lead it.’

இதே தான் தலைவர் ஒங்களுக்கும்.

"If you want to change the state, lead it."

(தொடர்வேன்)

About The Author