ரெண்டு கோடி ப்ளஸ்!
இப்போது கையில், சுளையாய் ஒரு கோடி!
எதிர்பார்த்திருக்கவே இல்லை இதை. இந்த ஒரு கோடியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்? அண்ணா நகரில் ஒரு ப்ளாட் வாங்கலாமா?
வேண்டாம். கல்யாணத்துக்கு வசதியில்லாத எத்தனையோ ஏழைப் பெண்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம். மழைநாட்களில், மேற்கூரையில்லாமல் அவதிப்படுகிற நடைபாதை வாசிகளுக்கு ஒரு ஷெல்ட்டர் கட்ட முடியுமா என்று பார்க்கலாம். நன்றாய்ப் படிக்கிற ஏழை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ஏற்பாடு செய்யலாம். தையல் மிஷின்கள், இஸ்திரி வண்டிகள், இஸ்திரிப் பெட்டிகள் கொள்முதல் செய்து, சம்மந்தப்பட்டத் தொழிலாளிகளுக்கு வழங்கலாம்.
அதற்கு முன்னால், அடுத்த வாரம் மலரப் போகிற ரம்ஜான் மாதத்தில், நம்ம மாநிலத் தலைவர் தலைமையில் இஃப்தார் பார்ட்டியொன்று ஏற்பாடு செய்யலாம்.
ஒரு கோடியில் இலங்கைக்கு எத்தனை முறை பறக்கலாம்? ஆயிரம் முறை போய் வரலாம்.
வேண்டாம். ஒரேயொரு முறை போய் வருவோம். இந்த முறை கட்டாயம் யாழ்ப்பாணத்துக்கும், நுவரேலியாவுக்கும் போய் வர வேண்டும்.
போன முறை இலங்கைக்குப் போனபோது சென்னை விமான நிலயத்தில் சித்ரவதை செய்து விட்டார்கள்.
ஷூவைக் கழட்டு, பெல்ட்டைக் கழட்டு, வாட்ச்சைக் கழட்டு, சில்லறையைக் கொட்டு, ஸெல்ஃபோனைக் காட்டு.
இத்தனைக்கும் பிறகு, தடவல் வேறே. சினிமா த்யேட்டரில் தடவ வந்தால், தடவலுக்கு உடன்படாமல் வெளி நடப்பு செய்து விடலாம். விமான நிலையத்தில் முரண்டு பிடிக்க முடியுமோ?
போன முறை போன போது, நான் சாமான்யன். இப்போது, ஒரு கோடி சம்பாதித்த, இனியும் சம்பாதிக்கப் போகிற சாதனை எழுத்தாளன். அந்த சாதனையை மதித்து, தடவலிலிருந்து விலக்கு அளிப்பார்களா?
மாட்டவே மாட்டார்கள்.
இந்திய விமான நிலையங்களில், பாதுகாப்பு சோதனைக்கு உட்படாமல் ஜாலியாய்ப் போய் விமானத்திலேறிக்கொள்ள தகுதி பெற வேண்டுமானால், ஜனாதிபதியாகவோ, துணை ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ இருக்க வேண்டும்.
அல்லது, சக்தி வாய்ந்த மத்திய மந்திரியாய் இருக்க வேண்டும்.
(மக்களவைத் தேர்தலில், தான் போட்டியிட்ட தொகுதியில், தகிடுதத்தம் பண்ணி ஜெயித்த மத்திய மந்திரியாய்க் கூட இருக்கலாம்.)
அல்லது, குறைந்தபட்சம் சோனியா காந்திக்கு மருமகனாக இருக்க வேண்டும்.
*****
இஃப்தார் பார்ட்டி.
இஸ்லாமியர்களுக்குப் புனிதமான ரம்ஜான் மாதத்தில், பகல் முழுவதும் பட்டினி கிடந்து நோன்பிருக்கிற முஸ்லிம்களும், முஸ்லிமல்லாத பிற சமூக சகோதரர்களும் இணைந்து நிகழ்த்துகிற மத நல்லிணக்கப் புனித நிகழ்ச்சி.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறவர்களின் நோக்கத்தையோ, உள் நோக்கத்தையோ பொறுத்துப் புனிதத்துவம் முன்னே பின்னே இருந்தாலும், மத நல்லிணக்கம் என்கிற அம்சத்தில் மாற்றுக் கருத்தே கிடையாது.
தேர்தல் காலமும் ரம்ஜான் மாதமும் நெருக்கத்திலிருந்தால், இஃப்தார் பார்ட்டிகள் சுறுசுறுப்பாய் நடக்கும், ஆர்ப்பாட்டமாய் நடக்கும், நிறைய நிறைய நடக்கும். தேர்தல் இல்லாத, மந்தமான காலம் என்றால், ஸ்லோ மோஷனில் போகும்.
போன முறை நம்ம செலவில் கோலாகலமாய் இஃப்தார் பார்ட்டி கொடுத்த போது, தேர்தல் ஸீஸன் உச்சத்திலிருந்தது. நம்மக் கட்சி தி.மு.க. வுக்கு ஆதரவு.
தி.மு.க. தலைவரை வளைத்துப் போட வேண்டுமென்று நினைத்தது கைகூடவில்லை. முஸ்லிம் மந்திரி ரஹ்மான் கானைக் கை காட்டிவிட்டு அவர் எஸ்கேப் ஆகிவிட்டார்.
அப்படியும் நம்ம இஃப்தார் பார்ட்டி அட்டகாசமாய் நடந்தது. அரசியல் வட்டாரத்தில் பெரிதாய்ப் பேசப்பட்டது.
தி.மு.க., மற்றும் தோழமைக் கட்சிகளான தமிழ் மாநிலக் காங்கிரஸ், வலது இடது கம்யூனிஸ்ட் கட்சிகளின் மேல்மட்டப் பிரமுகர்கள், நம்மக் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், சென்னை நகரின் முஸ்லிம் முக்கியஸ்தர்கள், நம்ம உறவினர்கள் நண்பர்கள் என்று தாஜ் கோரமண்டலின் பால்ரூம் நிரம்பி வழிந்தது.
இன்றைக்கு இந்திராக் காங்கிரஸுக்குப் போய்விட்ட அன்றைய மாநிலத் தலைவர் கையால் பொன்னாடை போர்த்தப்பட்டதில் நம்ம வாப்பா புளகாங்கிதமடைந்து போனார்.
அறிவரசனும் தங்க தேவனும் பிரபலமடைந்திராத அந்த தசாப்தத்தில், முதன்மை மாநிலப் பொதுச் செயலாளர் ஸி கே போஸ் தான் மாநிலத் தலைவருக்கு வழிகாட்டி.
நமக்கு வழிகாட்டி தேவநேசன். சிறுபான்மையர்ப் பிரிவின் மாநிலப் பொதுச் செயலாளர்.
நிகழ்ச்சி நேர்த்தியாய் நடந்து முடிந்ததில் அன்றைய மாநிலத் தலைவருக்கு ஏராளமாய் சந்தோஷம். ஸி கே போஸுக்கு அதைவிட.
"ஜமாய்ச்சிட்டீங்க சிறுபான்மையர்ப் பிரிவுத் தலைவரே, இந்த மாதிரி ஃபைவ் ஸ்டார் ஹோட்டேல்ல ஒரு கட்சிக்காரனும் இஃப்தார் பார்ட்டி நடத்தியிருக்க மாட்டான். அவனவன் விரல் மேல மூக்கை வச்சிக்கிட்டுப் போறான். ஸி எம் வந்திருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும். பரவாயில்ல, இந்த மெஸேஜ் ஸி எம் காதுக்குப் போயிருக்கும். பாருங்க, நமக்குப் பத்து ஸீட் நிச்சயம்."
ராத்திரி, மெஸேஜ் போய்ச் சேர்ந்த நேரத்தில் முதலமைச்சர் உறங்கப் போய் விட்டதால், செய்தி அவருக்கு எட்டவில்லை. ஸீட் நமக்குக் கிட்டவில்லை.
அந்த இஃப்தார் பார்ட்டி நடந்து பதிமூணு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அடுத்த இஃப்தார் பார்ட்டிக்கு, ஆண்டவனே, இதோ இப்போது வேளை வந்து விட்டது.
******
இஃப்தார் விருந்தின் முக்கியமான அம்சம், நோம்புக் கஞ்சி.
பிரியாணி, இஸ்லாமிய சமையற் கலைஞர்களின் பிறப்புரிமையாய் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. நோம்புக் கஞ்சி கூட அப்படித்தான். வேறே எந்தக் குக்குக்கும் இந்தப் பக்குவம் வராது. அஞ்சு நட்சத்திரச் செஃப்ஃபுக்குக் கூட வராது.
ஆகையால் தான் போன முறை நம்ம இஃப்தார் பார்ட்டியில் சிற்றுண்டி வகையறாக்கள் எல்லாம் தாஜ் தயாரிப்பு என்றாலும், நோம்புக் கஞ்சி தயாரிக்க மட்டும் நம்ம மாஜி நண்பன் பஷீர் பணிக்கப்பட்டிருந்தான். பஷீர், சமையல் கலைஞன் இல்லையென்றாலும், கஞ்சி செய்வதில் கைதேர்ந்தவன். அது சரி, மாஜி நண்பன் என்றால், இப்போது நண்பனில்லையா?
நண்பனாயிருந்தால் தான் மாஜியாய் மாற முடியும்.
அப்போது நண்பன், இப்போது மாஜி. அவன் மாஜியாய் மாறிய வரலாற்றை விலாவாரியாய்ச் சொல்ல வேண்டுமானால், ஆறு அத்தியாயம் அதிகமாய்ப் போய்விடும். பதிப்பாளர் பரிதவித்துப் போவார்.
ஒரு பானைக் கஞ்சிக்கு ஒன்றிரண்டு பருக்கை பதம் பார்க்கலாம்.
கஞ்சி தயாரிப்பதில் வல்லவனாயிருப்பது போல, பஷீர், கப்ஸா விடுவதிலும் வல்லவன்.
நம்ம பால்யகாலத்து சிநேகிதன். பாதி நேரம், உண்மையையும் பொய்யையும் சம அளவில் கலந்து பேசுவான். மீதி நேரம், உண்மையைக் கலக்கவே கலக்காமல் பொய்யை மட்டுமே பேசுவான்.
கல்லூரிக் காலத்தில் நானும் அவனும் செஸ் ஆடுவோம். அவனை விட நான் நன்றாக ஆடுவேன்.
ஆட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறபோது, அடுத்த மூவில் என்னுடைய வெள்ளைக் குதிரையைக் கொண்டு செக்மேட் வைத்தால் அவனுடைய கருப்பு ராஜா க்லோஸ் என்கிற நிலையில், அவனுடைய மூவுக்காக நான் காத்திருப்பேன்.
நான் காத்திருப்பேன், காத்திருப்பேன், காத்துக் கொண்டேயிருப்பேன். அவன் யோசிப்பான், யோசிப்பான், யோசித்துக் கொண்டேயிருப்பான். வெற்றிக்கனி கையில் வந்து விழுவது தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறதே என்று நான் வெறுப்பிலிருக்கிறபோது, "நா மூவ் பண்ணிட்டேன், இப்ப ஒன்னோட மூவ்" என்பான் பஷீர்.
"இரு, என் குதிரையைக் கொண்டு ஒரு கிடுக்கிப் பிடி போடப் போகிறேன். உன் ராஜா மூச்சுத்திணறி சாகப் போகிறான்" என்று நான் குதிரையைக் கையிலெடுக்க முனைகிற போது, களத்திலிருந்து காணாமற் போயிருக்கும் குதிரை. என்னடா இது, விட்டலாச்சார்யா வேலையாயிருக்கிறதே என்று பார்த்தால், பஷீருடைய தொடைக்குக் கீழேயிருந்து எட்டிப் பார்க்கும் நம்ம வெள்ளைக் குதிரை.
பஷீருக்கும் எனக்கும் பொதுவான நண்பன் ஊட்டி சீனிவாசன். மவுன்ட் ரோடு மின்சார வாரியத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
"இந்த சம்பளம் கட்டுப்படியாகலடா" என்று புலம்புவான்.
"ஒங்க சொந்தக்காரங்க நெறய்ய பேர் சவூதில இருக்காங்களேடா, யார் மூலமாவது ஒரு விஸா கெடக்யுமான்னு பாரேன்" என்று சொல்லி வைத்திருந்தான்.
இந்த நேரம் பார்த்தா பஷீர் சவூதியிலிருந்து விடுமுறையில் வருவான்!
வந்தான்.
"டேய், ஒரு விஸா கொணாந்திருக்கேன்’ என்றான்.
"ஒனக்குத் தெரிஞ்சவங்க யாருக்காச்சும் விஸா தேவப்பட்டா சொல்லு."
"விஸாவச்சிர்க்கியா, கிரேட்! நம்ம ரெண்டு பேருக்கும் தெரிஞ்சவன் ஒருத்தன் கேட்டாண்டா."
"யார் அது?"
"நம்ம சீனிவாசன்."
"நல்லதாப் போச்சு. ஸண்டே அவன வரச் சொல்லு."
"வரச் சொல்றது எங்க, நாந்தான் அவனக் கூட்டிக்கிட்டு வரணும். ஒரு பதினோரு மணிக்கிக் கூட்டிட்டு வரட்டுமா? நீ எங்கயும் போயிர மாட்டியே?"
"ஒன்ன வரச் சொல்லிட்டு நா வெளிய போவேனாடா? நா வீட்லதான் இருப்பேன் சீனிவாசனக் கூட்டிக்கிட்டு வா."
மொபைல் ஃபோன் புழக்கத்தில் வந்திராத, கல் தோன்றி மண் தோன்றாக் காலம் அது. லேண்ட் லைன் ஃபோனுக்கு மனுச் செய்து விட்டு மூணு வருஷம் காத்திருக்க வேண்டும். நம்ம வீட்டிலோ, கடையிலோ ஃபோன் கிடையாது.
மேனேஜர் பொறுப்பில் கடையை விட்டுவிட்டு, லாம்பி ஸ்கூட்டரில் மவுன்ட் ரோடுக்குப் போய் சீனிவாசனிடம் சங்கதியைச் சொன்னபோது, சந்தோஷத்தில் அவன் திக்குமுக்காடிப் போனான்.
ஞாயிற்றுக்கிழமை நம்மக் கடைக்கு வந்தான். ரெண்டு பேரும் பஷீர் வீட்டுக்குப் போனோம்.
(தொடர்வேன்)
“