"மது, நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு, உடலுக்கு கேடு என்று எச்சரிக்கை விடுத்துக் கொண்டே அரசாங்கம் சாராயம் விற்கிற வேடிக்கையை உலகத்தில் வேறு எங்குமே காண முடியாது. இதை வேடிக்கை என்று சொல்வதா, விபரீதம் என்று சொல்வதா! கோடிக்கணக்காய் வருமானம் வருகிறது என்பதற்காக மக்களைக் குடிக்க வைத்துக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது நம்ம அரசாங்கம். சிகப்பு விளக்குத் துறை என்று ஓர் இலாக்கா ஆரம்பித்து, அதற்கென்று ஓர் அமைச்சரை நியமித்து, விபச்சார விடுதிகளை அரசாங்கமே நடத்தினால் அமோகமாய் வியாபாரம் நடக்கும். இதை விட அதிகமான கோடிகள் அரசுக்குக் கிடைக்கும். நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு, உயிருக்கு கேடு என்று ஒப்புக்கு ஓர் எச்சரிக்கைப் பலகை வைத்துவிட்டு நிம்மதியாய்த் தொழில் செய்யலாம். செய்யுமா இந்த அரசு?
‘பெர்மிட் முறை’ என்று ஒன்று கொஞ்ச நாள் வைத்திருந்தார்கள். அதைக் கூடப் பழிவாங்கலுக்குத்தான் பயன்படுத்தினார்கள். முரசொலி அடியார் என்றும், நீரோட்டம் அடியார் என்றும் நமக்கு அறிமுகமாயிருந்த அப்துல்லாஹ் அடியார், பெர்மிட் இல்லாமல் காலி மதுப் புட்டிகள் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப் பட்டுக் கைது செய்யப்பட்டக் கூத்தெல்லாம் நடந்தது. இப்போது பெர்மிட் முறை இல்லை. யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். பெண்கள் குடிக்கிறார்கள். பள்ளிச் சிறுவர்கள் குடிக்கிறார்கள். ஆனால் அரசாங்கத்துக்கு இதைப்பற்றி அக்கறையே இல்லை. அவர்களுக்கு வேண்டியது பணம். இந்தப் பாவப் பணத்தைக் கொண்டு மக்களுக்கு இலவசங்களை வாரியிறைத்து, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
குமரி அனந்தன், நம்மோடு ஸ்தாபனக் காங்கிரஸிலும், பிறகு ஜனதாக் கட்சிலும் இருந்த போது மேடையில் ஒரு கதை சொல்லுவார். அப்பாவி அந்தணன் ஒருவன் ஒரு காட்டு வழியாய் நடந்து போய்க் கொண்டிருந்தானாம். அப்போது, பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சாத கொடியவனொருவன் அவனெதிரே வந்தானாம். கொடியனுடைய ஒரு கையில் அரிவாள், மற்ற கையில் ஒரு மதுக் கலயம். அவனோடு ஒரு பெண் இருந்தாளாம். பெண்ணின் இடுப்பில் ஒரு குழந்தை. கொடியவன் அந்தணனை வழிமறித்து, அவன் ஏதாவது ஒரு பாவத்தை செய்தாக வேண்டும் என்று கட்டளையிட்டானாம். இந்த அரிவாளைக் கொண்டு அந்தக் குழந்தையை வெட்டிக் கொல்ல வேண்டும், அல்லது அந்தப் பெண்ணைக் கற்பழிக்க வேண்டும், அல்லது கலயத்திலிருக்கிற மதுவைக் குடிக்க வேண்டும். இந்த மூன்று பாவச் செல்களில் ஒன்றைக்கூட செய்யவில்லையென்றால் அந்தணன் வெட்டிக் கொல்லப்படுவான். அந்தணன் யோசித்தான். ஒரு பெண்ணைக் கற்பழிப்பது பெரிய பாவச் செயல். சிசுக்கொலை அதைவிடப் பெரிய பாவம். இந்த ரெண்டையும் விடச் சிறிய பாவம் தான் குடிப்பது. அதையே செய்து விடுவோம் என்று அந்தணன், கலயத்திலிருந்த மது முழுவதையும் மடக் மடக்கென்று குடித்து முடித்தானாம். மது உள்ளே இறங்கியது, போதை தலைக்கு ஏறியது. உடம்பு தினவெடுத்தது. உணர்ச்சி வசப்பட்டு அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்திக் கற்பழிக்க முனைந்தான். பெண்ணின் இடுப்பிலிருந்த குழந்தை தரையில் விழுந்து வீறிட்டு அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை இவனுடைய காமத்துக்கு இடைஞ்சலாயிருந்ததால், எரிச்சலடைந்த அந்தணன், கொடியவனிடமிருந்து அரிவாளைப் பிடுங்கி ஒரு போடு போட்டான். குழந்தை இறந்தது. ஆக, சிறிய பாவம் என்று இவன் குடிக்கப் போக, அது மற்ற ரெண்டு பெரிய பாவங்களுக்கும் காரணமாய் அமைந்து போனது. பாவங்களின் மூலகாரணமே குடிதான். அந்தக் குடியை அரசாங்கமே முன்னின்று ஊக்குவிக்கிற முறைகேடு ஒழிய வேண்டும். அதற்குத்தான் இந்த மறியல் போராட்டம். குடியை எதிர்த்துப் போராடுகிற நம்மைக் கைது செய்வதற்குக் காவல்துறை காத்திருக்கிறது. தோழர்களே, என்ன வினோதம் பாருங்கள். இந்த நாட்டில், குடிக்கிறவனைக் கைது செய்ய மாட்டார்கள், குடிக்கிறவனைத் தடுக்கிறவனைக் கைது செய்வார்கள்! குடிகாரனுக்கு ஏ ஸி பார், குடிகாரனைத் திருத்தத் துடிக்கிறவனுக்குப் போலீஸ் கார்.”
"கார் இல்ல. வேன்."
"அட, ஒரு நயத்துக்காக சொன்னேன் தோழர், குறுக்க பேசாதீங்க ப்ளீஸ். தோழர்களே, இந்த அரசாங்கம் திருந்தவில்லையென்றால், இதற்கு ஒரேயொரு மாற்று தான் இருக்கிறது," என்று ஒரு கமா வைத்து விட்டு, தொடர்ந்து, "அந்த மாற்று என்னவென்றால், தமிழ் நாட்டில் நம்முடைய கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். நம்முடைய மாநிலத் தலைவர் முதலமைச்சராக வேண்டும்." என்று முற்றுப்புள்ளி வைத்து முடித்த போது தங்க தேவனும் தொண்டர்களும் ஆச்சர்யக் குறியாய்ப் பார்த்தார்கள். அறிவரசன் கேள்விக் குறியாய்ப் பார்த்தார்.
போலீஸ்காரர்கள் பொறுமையிழந்தார்கள். "வரிசையா எல்லாரும் வண்டில ஏறுங்க" என்று காவலர்கள் கட்டளையிட, சமர்த்தாய் எல்லோரும் ஏறிக்கொண்டோம். போலீஸ் ஸ்டேஷனுக்குப் பின்னாலிருக்கிற திறந்த வெளியில் எட்டுமணி நேரம் குடிவைக்கப்பட்டோம், குடியை எதிர்த்துக் குரல் கொடுத்த குற்றத்துக்காக. மத்தியானம் சாம்பார் சாதம், தயிர் சாதம், காவல்துறை உபசரிப்பு.
எட்டுமணி நேர ஷிஃட் முடிந்து வீட்டுக்குக் கிளம்புகிற மாதிரி சாயங்காலம் கிளம்பினோம். ஸ்டேஷனை விட்டு வெளியே வருகிற போது, பத்மநாபனும் மாவட்டத் தலைவரும் பேசிக் கொண்டது காதில் விழுந்தது.
"டயர்டாக்கீது தலீவா, வா கடக்கிப் போவலாம்."
"எந்தக் கடக்கிடா?"
"இன்னா, நீ எந்தக் கடக்கீன்னு புதுசாக் கேக்கற. சாயங்கால நேரம் எந்தக் கடக்கிப் போவாங்க? சரக்கு போடத்தான்."
"டேய் பேமானி, இவ்ளோ நேரம் மறியல் பண்ணோமே, நானும் நீயும் சேந்து தானே கத்தினோம், இம்மா நேரம் கத்திப்புட்டுத் திரும்பவும் சரக்குப் போடப் போவணுன்றியே."
"அந்த மறியல் பண்ண கடக்கித் தான் தலீவா திரும்பவும் போவணுன்றேன்."
"மறியல் தான் முடிஞ்சி போச்சேடா."
"மறியல் ஆரம்பிக்க முந்தியே அந்தக் கடைல அட்வான்சு குடுத்துட்டேன் தலீவா. நம்ப பிராண்ட் சரக்கு எடுத்து வச்சிருப்பான். வா போய் ஊத்திக்கலாம்."
"அட ஊத்த வாயா, கொஞ்சமாச்சும் அறிவு கிறிவு கீதா ஒனக்கு? மறியல் பண்ண கடைலயே போய் சரக்குப் போடணுன்றியே, நம்மக் கச்சிக்காரன் எவனாச்சும் பாத்தா என்ன நெனப்பான்? அந்த அட்வான்சு போனாப் போவுது, வா வேற கடக்கிப் போவலாம்."
******
மதுக்கடை மறியல் பற்றிய விவரங்களை மாநிலத் தலைவருக்குத் தெரிவிக்க ஸெல்ஃபோனைக் கையிலெடுத்த போது, இன் கமிங் கால் ஒன்று வந்தது. திரையில் பெயர் வரவில்லை. நம்பர் மட்டுந்தான்.
யார்?
"ஹலோ?"
"ஹலோ, எழுத்தாளருங்களா?"
"ஆமா, நா எழுத்தாளன் தான்."
"கவிஞர் கூட."
"கரெக்ட். கவிஞர் கம் எழுத்தாளர். யார் சார் பேசறீங்க?"
"நா ஒரு சினிமா டைரக்டர்ங்க, எம்ப் பேர் ரமேஷ். மூணு வருஷத்துக்கு முன்னால என்ன நீங்க மீட் பண்ணியிருக்கீங்க. ஞாபகம் வருதா?"
"ஞாபகம் வருது சார். டைரக்டர் தமிழ் செல்வனப் பாக்க வந்தப்ப ஒங்களப் பாத்திருக்கேன். தமிழ் செல்வன் சார்ட்ட நீங்க அஸிஸ்ட்டன்ட் டைரக்டராயிருந்தீங்க."
"இப்ப நா டைரக்டராயிருக்கேன்."
"வாழ்த்துக்கள் சார். தமிழ் செல்வன் சார் எப்டியிருக்கார்சார்?"
"நாந்தான் சார் இப்ப சார். அந்த ஆள் ஒரு துணை நடிகையக் கொல பண்ணிட்டு ஜெயிலுக்குப் போய்ட்டார்."
"அடடே!"
"பேப்பர்லல்லாம் வந்ததே, நீங்க பாக்கலியா?"
"அன்னிக்கி நா பேப்பர் வாங்கல சார்."
"அந்த ஆள விடுங்க. சொந்தமா நா இப்ப ஒரு படம் பண்ணப் போறேன். நீங்க தந்த ஒங்க சிறுகதைத் தொகுதியொண்ணு கண்ல பட்டுச்சி. அதுலயிருந்து தான் ஒங்க ஸெல் நம்பர எடுத்தேன். வடபழனில ஆஃபீஸ் போட்ருக்கேன். இப்ப நீங்க வர முடியுமா?"
"அட்ரஸ் சொல்லுங்க சார், ஒன் அவர்ல வர்றேன்."
முகவரியைப் பெற்றுக்கொண்டு முக்கால் மணி நேரத்திலேயே இயக்குநர் முன்னால் ஆஜராகி விட்டேன்.
(தொடர்வேன்)
“