அரியர்ஸெல்லாம் அழுதுவிட்டு வணிகவரித் துறை அலுவலகத்திலிருந்து படியிறங்குகிற போது, ஒவ்வொரு படிக்கட்டுத் திருப்பத்திலும், மூலையில் வெற்றிலை எச்சில் துப்பிக் காவி மயமாயிருந்ததை நம்ம அக்கவுன்ட்டன்ட்டிடம் சுட்டிக்காட்டி முகஞ்சுளித்தேன்.
"இப்பத்தான் பாக்றீங்களா சார்?"
"இல்ல. போன வருஷமும் பாத்தேன், அதுக்கு முந்தின வருஷமும் பாத்தேன். கவண்மென்ட் ஆஃபீஸ்ல இப்டி அசிங்கம் பண்ணி, ஹிந்துத்வா பண்ணி வச்சிருக்காங்களே."
"இப்டி இருந்தாத்தான் சார் அது கவண்மென்ட் ஆஃபீஸ். எல்லா ஆஃபீஸ்லயும் இப்டித்தான் சார் படிக்கட்ல வெத்தலயத் துப்பி வச்சிருக்காங்க."
அக்கவுன்ட்டன்ட் சொன்னது உண்மை தான் என்று சமீபத்தில் அம்பத்தூர் சப்ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸுக்குப் போனபோது புரிந்தது.
சப்ரிஜிஸ்ட்ரார்ஆஃபீஸில்இன்னொன்றையும் பார்த்தேன்.
முதலமைச்சரின் படம்.
இதுவும் எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் இருக்கும் போல.
அரசு அலுவலகங்களில் முதலமைச்சரின் படங்கள், ரேஷன் கடை பேனர்களில் முதலமைச்சரின் படங்கள், செய்தித் தாட்களில் முதலமைச்சரின் படத்தோடு முழுப்பக்க விளம்பரங்கள்.
ஆனால், மதுக்கடைகளில் முதல்வரின் படம் இருக்குமா? சந்தேகமாயிருந்தது.
சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள, அரசாங்க பார் ஒன்றில் அத்து மீறிப் பிரவேசித்துப் பார்த்து விடலாமா என்கிற ஆசை வந்தது. ஆனாலும், அந்தப் பாவப் பிரதேசத்தில் பிரவேசிப்பதற்குத் தயக்கமாயிருந்தது. தயக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு, எழும்பூரிலிருந்த பார் ஒன்றுக்குள் கடவுள் பேரைச் சொல்லிக் கொண்டு புகுந்தே விட்டேன்.
பார் ஜனரஞ்சகமாயிருந்தது. கும்பல் கும்பலாய்க் குடிமக்கள். மந்தமான ஒளியமைப்பு. தமிழ், ஹிந்தித் திரைப்படங்களில், ஹீரோவும் வில்லன் கும்பலும் சண்டை போடுகிற கடைசிக் காட்சியில், வில்லனின் வாசஸ்தலமாக வருமே ஒரு பாழடைந்த உள்ளரங்கம், அந்த மாதிரி வடிவமைக்கப்பட்ட மதுக்கூடம். உள்ளே எல்லோரும் சந்தோஷமாயிருந்தார்கள். உற்சாகத்தின் உச்சத்தில், உலகத்தின் உயரத்திலிருந்தார்கள்.
மனைவிமார் தான் வீட்டில் துயரத்திலிருப்பார்கள்.
சுற்றிச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டதில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. எங்கேயுமே முதலமைச்சரின் படம் தொங்கவில்லை. அரசுக்குக் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித்தருகிற ஒரு நிறுவனத்தில் முதலமைச்சரின் உருவப்படம் இல்லாதது எவ்வளவு அதர்மம்!
அடுத்த நாள் நடைபெறவிருக்கிற மதுக்கடை மறியலில் இந்த அதர்மத்தை மக்கள் முன் எடுத்து வைக்கலாமா என்கிற நினைப்பு வந்தது. வேண்டாம். காவல்துறை கோபித்துக்கொள்ளும். கோபித்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் கைது பண்ணத்தான் போகிறார்கள்.
மதுக்கடை மறியலுக்கான போஸ்டர்களெல்லாம் அட்டகாசமாய் அச்சடித்து நகரமெங்கும் ஒட்டியாச்சு. போஸ்டர்களில் பிரதானமாய் மூத்த மாநிலப் பொதுச் செயலாளர் அறிவரசனின் பெயர்.
மாநிலத்தலைவர் உத்தரவு.
ஏற்பாடு எல்லாம் தங்க தேவன்.
தலைமை அறிவரசன்.
அறிவரசனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
"என்னங்க, எம்ப் பேரப் பெரிசாப் போட்ருக்கீங்க? என்னத் தலைமைன்னு போட்ருக்கீங்க!"
"மாநிலத் தலைவர் சொன்னபடிப் போட்ருக்கோம் சார்."
"அவர் சொல்லியிருக்க மாட்டார். நீங்களாப் போட்ருக்கீங்க."
"சத்தியமா சார், மாநிலத் தலைவர் தான் சொன்னார்" என்று நான் அறிவரசனிடம் சொல்லி அவரை குஷிப்படுத்திக் கொண்டிருந்தபோது, "சத்தியமா, இந்த மாதிரித் தப்பெல்லாம் நாங்க செய்ய மாட்டோம்" என்றார் தங்க தேவன், தணிந்த குரலில், எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி.
மறியலுக்குள்ளாகப் போகிற மதுக்கடைக்கு முன்னால் சுமார் முன்னூறு தொண்டர்கள் திரண்டு விட்டார்கள்.
நம்ம மாவட்டத் தலைவரும் அவருடைய பிராந்திய நண்பர் பத்மநாபனும் கூட வந்திருந்தார்கள். ரெண்டு பேரும் சேர்ந்து தான் தினமும் பிராந்தியடிப்பார்கள் என்று கேள்வி.
டாஸ்மாக் கஸ்டமர்கள், வேக வேகமாய்த் தாகத்தோடு வந்தவர்களெல்லாம் சோகத்தோடு திரும்பிப் போனார்கள் என்று எதுகையில் எழுத ஆசையாய்த்தானிருக்கிறது. ஆனால் கஸ்டமர்கள் யாருமே கஷ்டப்படவில்லை. எல்லோரும் அடுத்த கடையில் போய் ஐக்கியமாகி விட்டார்கள்.
நம்ம சென்னையில்தான் அரைக் கிலோமீட்டருக்கு ஆறு கடைகள் இருக்கின்றனவே!
ரோட்டரி க்ளப்பில் சேர்ந்த புதிதில், கண்ணாடி டம்ளரில் சரக்கை ஊற்றிக் கையில் கொடுத்து விடுவார்கள். அதில் ஐஸ் வாட்டரோ சோடாவோ ஊற்றி உறிஞ்ச வேண்டுமாம்.
எந்தெந்த சரக்கில் எதை எதைக் கலக்க வேண்டுமென்பதற்குக் கவிஞர் கண்ணதாசன் ஒரு கவிதை வைத்திருந்தார்.
ரம் அண்ட் வாட்டர்
விஸ்க்கி அண்ட் சோடா
ஜின் அண்ட் லெமன்
மென் அண்ட் விமன்
சம்பிரதாயத்துக்கு, ஒரேயொரு முறை நான் ரெண்டே ரெண்டு உறிஞ்சு உறிஞ்சினேன். அந்த அற்ப உறிஞ்சலுக்கே அடுத்தடுத்து ஆல்கஹால் ஏப்பம் வந்து அருவறுப்பூட்டியது.
இப்போதெல்லாம் ராவாகவே அடிக்கிறேன், கோக் அல்லது பெப்ஸி அல்லது சுதேசித் தம்ஸ் அப். கருப்பு தான் நமக்குப் புடிச்ச கலரு.
இந்த மிடாக்குடியர்கள் தினந்தினம் எப்படி இந்த இழவை விழுங்கி, வீச்சமெடுக்கிற விஸ்க்கி ஏப்பங்களை வெட்கமேப் படாமல், வாய் கூசாமல் வெளியேற்றிக் கொண்டிருக்கறார்களோ!
******
‘மாநில அரசே, மதுக்கடையை மூடு’
‘தமிழக அரசே, டாஸ்மாக்கை மூடு’
‘மஹாத்மா வழி நடப்போம் மது அரக்கனை அழிப்போம்’
‘மொரார்ஜி வழி நடப்போம் மதுக்கடைகளை ஒழிப்போம்’
‘காமராஜ் வழி நடப்போம் குடிப் பழக்கத்தை ஒழிப்போம்’
என்று கோஷங்கள் கோரஸாய் எழுந்தன. காவல்துறை வாகனங்கள் வந்து நின்றன. காவலர்கள் காத்திருந்தார்கள்.
"அறிவரசன் சார், தொண்டர்கள் மத்தியில நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் பேசுங்க" என்று தங்க தேவன் அழைப்பு விடுக்கவும், "நானா" என்று மறுத்தார் அறிவரசன்.
"மைக் இல்லாம என் குரல் எடுபடாது. நீங்க பேசுங்க. இல்லாட்டி சிபியப் பேசச் சொல்லுங்க"
"சிபி?" என்று தங்க தேவன் விழிக்க, "நாந்தான் சிபி" என்று நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
"சிறுபான்மையர்ப் பிரிவுங்கறத சுருக்கி சிபின்னு செல்லமாக் கூப்புடுவார் அறிவரசன்."
"அது கூட நல்லாத்தான் இருக்கு. அப்ப நீங்க பேசறீங்களா சிபி?"
"ஓக்கே."
மைக்கே இல்லாமல் தொண்டர்களை நோக்கி ஒலி பெருக்கினேன்.
(தொடர்வேன்)
“