மதிய உணவு முடிந்து மாநிலத்தலைவரின் அறையில் இருந்தபோது, அவர் வாசிப்பதற்கென்று வாங்கி வைத்திருந்த அரை டஜன் செய்திப் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஆங்கிலப் பத்திரிகை, தமிழ்ப் பத்திரிகை என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லாப் பத்திரிகைகளிலும் முழுப்பக்க விளம்பரங்கள் வந்திருந்தன.
கலர்க்கலராய் விளம்பரங்கள்.
எல்லாம் அரசாங்க விளம்பரங்கள்.
எல்லா விளம்பரங்களிலும் முதலமைச்சரின் முகம்.
அந்த விளம்பரங்களை நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததைத் தலைவர் அவதானித்து விட்டு, "மக்கள் வரிப்பணம் எப்டி வெட்டி விளம்பரங்கள்ள வீணடிக்கப்படுது பாத்தீங்களா தம்பி!" என்று வருத்தப்பட்டார்.
"அரசாங்கத்தோட சாதனைகள் மக்களுக்குப் போய்ச் சேர்றதுக்கு விளம்பரங்கள் தேவைதானே தலைவர்?" என்று நான் அவருடைய வாயைக் கிளறினேன்.
"சாதனைகள்னு என்ன இருக்கு தம்பி?" என்று தலைவர் ஆட்சேபித்தார்.
"மக்களுக்கு சேவை செய்றதுக்குத்தான் அரசாங்கம் இருக்கு. அந்த சேவைக்கிப்பேர் சாதனையா? அதுக்குக் கோடிக் கணக்ல விளம்பரமா? யார் அப்பன் வீட்டுப் பணம் இது தம்பி?"
"எல்லாம் மக்களோட வரிப் பணம் தலைவர். நீங்க சொல்றது சரி தான். மக்களோட வரிப் பணத்ல வரி விளம்பரம் வேணா குடுக்கலாம். முழுப்பக்க விளம்பரம் குடுக்கலாமோ? ஆனாலும் தலைவர், எதிர்க்கட்சிகளோட எதிர்ப் பிரச்சாரத்த முறியடிக்கணும்னு ஆளுங்கட்சி நெனக்கிறது ஞாயந்தானே?"
"அந்த எதிர்க்கட்சிக்காரங்க ஆளுங்கட்சியாயிருந்த போதும் இந்த வேலையத்தான் பண்ணிட்டிருந்தாங்க. பெருந்தலைவர் சொன்ன மாதிரி ரெண்டுமே ஒரே குட்டைல ஊறின மட்டைங்கதான்"
"பெருந்தலைவர் காலத்ல இந்த மாதிரி விளம்பரங்க ளெல்லாம் இல்லியா தலைவர்?"
"பெருந்தலைவர் இலவசக் கல்வித் திட்டத்தக் கொண்டு வந்தார், இலவச மதிய உணவுத் திட்டத்தக் கொண்டு வந்தார். பலப் பல மக்கள் நலத் திட்டங்கள் சத்தங்காட்டாமக் கொண்டு வந்தார். அந்த சேவைக்கெல்லாம் மக்கள் வரிப்பணத்ல பத்திரிகைல முழுப்பக்க விளம்பரம் குடுத்தாரா, இல்ல போஸ்டர் அடிச்சி ஒட்டினாரா இல்ல டாக்குமென்ட்டரிப் படம் எடுத்து விட்டாரா? ஒண்ணுமே கெடையாது. நீங்க கேட்ட மாதிரியேத்தான் நானும் அவரோட ஆட்சிக் காலத்ல பெருந்தலைவர ஒரு கேள்வி கேட்டேன் தம்பி."
"என்ன கேட்டீங்க தலைவர்?"
"ஐயா, நம்ம சேவைகள்ளாம் மக்களுக்கு தெரிய வேண்டாமா? அதுக்கு விளம்பரம் பண்ண வேண்டாமான்னு கேட்டேன். அதுக்குப் பெருந்தலைவர் பொட்டுல அடிச்சமாதிரி ரெண்டே வாக்கியத்ல பதில் தந்தார்."
"என்ன பதில் தலைவர்?"
"கடமையச் செய்றதுக்கு விளம்பரம் எதுக்குன்னு கேட்டார். இது சாதாரணமான வாக்கியம். தொடர்ந்து, அவர் சொன்ன ரெண்டாவது வாக்கியம் மகத்தானது. பெருந்தலைவர் வாயிலயிருந்து வந்த அதே வார்த்தைகளச் சொல்றேன் கேளுங்க."
"ஆஹா! சொல்லுங்க தலைவர்."
"ஒங்க அம்மாவுக்கு நீ சேலை எடுத்துக் குடுக்கற, அத நீ ஊரெல்லாம் விளம்பரப் படுத்துவியான்னேன்."
******
மூணு வருஷத்துக்கு முந்தி ஒரு முகூர்த்த நாளில், ப்லாஸ்டிக் பைகளை எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்குப் புறப்பட்டேன்.
‘ஒரு கிலோ அரிசி ஒரே ரூபாய்’ என்று பேனர் கட்டியிருந்தார்கள், முதலமைச்சர் முகம் மலர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிற படத்தோடு.
"சார், என்ன வேணும்?"
“அரிசி.”
"எத்தன கிலோ?"
"பத்து."
"இருவது கிலோ நீங்க வாங்கிக்கலாம். கிலோ ஒரு ரூவா தான்."
"அதான் பேனர் வச்சிருக்கீங்களே, ஆனா இப்ப எனக்குப் பத்து கிலோ போதும்."
"துவரம் பருப்பு வேண்டாமா?"
"அது எவ்ளவு?"
"கிலோ எழுவது ருவா."
"துவரம் பருப்புக்கும், சீஃப் மினிஸ்டர் சிரிச்சிட்டிருக்கிற படத்தோட ஒரு பேனர் வச்சிருக்கலாமே."
"அரிசி ஒங்களுக்கு வேணுமா வேண்டாமா?"
"வேணும், வேணும்."
"அப்ப, வாயப் பொத்திக்கிட்டு வாங்கிட்டுப் போங்க."
வாயைப் பொத்திக் கொண்டேன். நம்ம வீட்டில் வேலை செய்கிற பூங்கோதைக்குப் போய்ச் சேர வேண்டிய அரிசி. துடுக்குத்தனமாய்ப் பேசி, ரேஷன் கடைக்காரரை நான் கடுப்படித்துக் கொண்டிருந்தால், பூங்கோதை வீட்டில் அடுப்பெரியாது.
நம்ம டிப்பாட்மென்ட் ஸ்டோரை மூடிவிட்டு நான் சுதந்திர மனிதனான பிறகு தான், ரேஷன் கடைக்குப் போகிற இந்த அவுட் டோர் வேலை எல்லாம். முன்பு, நம்மக் கடை இருந்த காலத்தில், அக்கவுன்ட்டன்ட்டைக் கூட்டிக்கொண்டு வருஷத்துக்கொரு தரம் அஸெஸ்மென்ட்டுக்காக வணிகவரித் துறை அலுவலகத்துக்குப் போய் ஸி டி ஓ வுக்கு ரெண்டாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து விட்டு வருகிற வேலை மட்டும் தான் அவுட் டோர்.
கணக்கு வழக்கு ஒழுங்காயிருந்தால் ரெண்டாயிரம். கள்ளக்கணக்கு என்றால் அதற்கு ரேட்டே வேறே.
ஒரு தடவை, குறளகத்து மாடியில், வணிகவரித் துறை அலுவலகத்துக்கு அஸெஸ்மென்ட்டுக்குப் போயிருந்த போது, ஒரு புது ஸி டி ஓ இருந்ததைப் பார்க்க சந்தோஷமாயிருந்தது. புது அதிகாரி என்பதில் சந்தோஷமொன்றுமில்லை. அது ஒரு பெண் அதிகாரி என்பது தான் சந்தோஷம்.
தாய்க்குலம். தாய்க்குலமெல்லாம் லஞ்சம் கேட்காது.
வேலை முடிந்து, அக்கவுன்ட்டன்ட்டும் நானும், தாங்க்யூ மேடம் என்று எழுந்திருக்கிற போது, தாய்க்குலத்தின் குரல் தடுத்தாட்கொண்டது.
"என்ன கௌம்பிட்டீங்க? கவர் ஒண்ணும் கெடையாதா?"
திடுக்கிட்டு நாங்கள் திரும்பவும் உட்கார்ந்தோம்.
"சார், சும்மா ஒரு ஆயிரம் ரூவா கவர்ல வச்சிக் குடுத்துருங்க" என்று நான் அக்கவுன்ட்டன்ட்டிடம் கிசுகிசுக்க, அவர் ஆயிரம் ரூபாய்க் கவரைக் கமுக்கமாய் ஒரு ரிஜிஸ்டரில் வைத்துப் பொத்தி ஸி டி ஓ விடம் கையளிக்க, கையூட்டு கைமாறியது.
அதற்கடுத்த வருஷம் அஸெஸ்மென்ட்டுக்குப் போன போதும் அதே பெண் ஸி டி ஓ. ரொம்ப ஜோர், இந்த வருஷமும் ஆயிரமே ஆயிரம் ரூபாயில் கவர் ஸ்டோரி முடிந்து விடும் என்கிற மிதப்பில் இருந்த போது, மண்டையில் விழுந்தது ஒரு குட்டு.
"போன வருஷம் ஆயிரம் குடுத்துட்டுப் போய்ட்டீங்க. பழைய ஸி டி ஓட்டக் கேட்டப்ப அவர் ரெண்டாயிரம்னு சொன்னார். ஆயிரம் ரூவா அரியர்ஸையும் சேத்துக் குடுத்துட்டுப் போங்க."
அரியர்ஸ்! அடேங்கப்பா, எவ்வளவு அற்புதமான சொற்பிரயோகம்!
பழைய ஸி டி ஓ போட்டுக் கொடுத்திருக்கிறார்.
ஸேல்ஸ் டாக்ஸ் ஆஃபீஸில் கூட்டுறவு முறையில் எவ்வளவு ஒற்றுமையாய்ச் செயல்படுகிறார்கள்!
(தொடர்வேன்)
“