ராத்திரி உணவுக்கு எங்கே போவது என்கிற கேள்வி வந்தபோது, அப்படியே கார் போனபோக்கில் போவது என்றும், ஓட்டல் சரவணபவனையல்லாது வேறு நல்ல, ஒழுக்கத்தில் அழுக்குப்படாத சைவ உணவகம் கண்ணில் தட்டுப்பட்டால் உள்ளே புகுந்து விடுவது என்றும் ஏகமனதாய்த் தீர்மானமாயிற்று.
காரில் போய்க் கொண்டிருந்தபோது, "இங்க ஒரு ஹோட்டேல் இருக்கிற மாதிரியிருக்கே" என்று பக்கவாட்டில் பார்வையைத் திருப்பினார் தலைவர்.
"ரொம்பக் கூட்டமாயிருக்குமோ? ரோட்ல ஒரே பைக்கா நிக்கிது?"
"ரோட்ல ஒரே பைக்கா நின்னா அது ஹோட்டேல் இல்ல தலைவர். அதுக்குப் பேர் டாஸ்மாக்."
"ஓ, டாஸ்மாக்கா! என்னா கூட்டம் நிக்கிது தம்பி! என்னமோ ஒய்ன் பாட்டில் ஓசியில கெடைக்கிற மாதிரி! இவங்கல்லாம் தண்ணியடிச்சிட்டு, போதையோட வண்டியோட்டிட்டுத்தான போவாங்க? எவ்ளோ ஆபத்தான வெளையாட்டு இது!"
"ஆபத்தான வெளையாட்டுத்தான் தலைவர், இவனுங்க ரொம்ப ஜாலியா வண்டியோட்டிட்டுப் போவாங்க, போலீஸ்காரங்க இவனுங்களக் கண்டுக்கவே மாட்டாங்க."
"எப்டிக் கண்டுக்குவாங்க? அரசாங்க கஜானாவுக்குக் கோடி கோடியாக் கொட்டிக் குடுக்ற கொடை வள்ளலுங்க ஆச்சே இந்தக் குடிகாரங்க! குடின்னா என்னன்னே தெரியாமயிருந்த ஒரு தலைமுறையயே கெடுத்துக் குட்டிச் சுவராக்கிட்டாங்களேய்யா பாவிங்க!"
"திராவிடக் கட்சிங்க ஆட்சி மாறி மாறி வர்ற வரக்யும் இப்டித்தான் இருக்கும் தலைவர்!"
"ஏன், இந்திராக் காங்கிரஸ் ஆட்சி செய்ற ஸ்டேட்ஸ்ல மட்டும் என்ன தம்பி வாழுது?"
"நம்ம கட்சி ஆட்சிக்கி வந்தாத்தான் நிலைமை மாறும் தலைவர். மதுவிலக்கு அமுலுக்கு வரணும்னா, நம்ம கட்சி ஆட்சிக்கி வரணும்."
"எங்க, டில்லிலயா?"
"அதுக்கு முந்தி, நம்ம தமிழ்நாட்ல. நம்ம கட்சி ஆட்சிக்கு வரணும், நீங்க முதலமைச்சரா வரணும், முதல் வேலையா டாஸ்மாக்குக்கெல்லாம் மூடுவிழா நடத்தணும்."
தலைவர் திடுக்கிட்டுப் போனார்.
இந்த மாதிரி விவகாரமான வசனங்களை என்னிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை அவர். தொண்ணூறு டிகிரி கழுத்தை வலது புறம் திருப்பி என்னை ஆச்சர்யமாய்ப் பார்த்தார்.
பிறகு, வாய்விட்டுச் சுதந்திரமாய்ச் சிரித்தார்.
"பகல் கனவு காண்றதுக்கும் ஒரு வரைமுறையே இல்லியா தம்பி?" என்றார் சிரிப்பினூடே.
"ராத்திரி நேரம் நீங்க பகல் கனவு காண்றீங்க."
"பலிக்கப் போற கனவை எந்த நேரம் வேணாலும் காணலாம் தலைவர்!"
"சரி சரி, அது பலிக்கிறப்ப பலிச்சிட்டுப் போகட்டும். நாம அது வரக்யும் காத்திருக்க வேண்டாம்! அதுக்கு முன்னால நா ஒரு உடனடித் திட்டம் வச்சிருக்கேன்."
"என்ன திட்டம் தலைவர்?"
"டாஸ்மாக் மறியல்."
"வெரிகுட் தலைவர்! ஆனா தலைவர், நம்ம கட்சில கூடக் குடிகாரங்க குடிவந்துட்டாங்க தலைவர்."
"வரத்தான் செய்வாங்க. நம்ம கட்சில இருக்கறவங்களும் மனுஷங்கதானே தம்பி? அவங்களுக்கும் வீக்னஸ் இருக்கத்தானே செய்யும்."
"அந்த வீக்னஸத்தான் அறிவரசன் பயன்படுத்திட்டிருக்கார் தலைவர். அந்தக் குடிகாரங்களுக்குக் கொம்பு சீவி விட்டுக் கைக்குள்ள போட்டுக்கிட்டுத்தான் ஒங்களுக்கு எதிரா ஏவி விடறார் அவர்."
"சரி, நாம டாஸ்மாக் மறியல் நடத்தறது பொதுமக்களுக்காக மட்டுமில்ல, நம்ம கட்சிக்காரங்களுக்கும் சேத்துத்தான். நல்லது நடக்கும்னு எதிர்பாப்போம். தங்கத் தேவனும் நீங்களும் சேந்துதான் தம்பி மெட்ராஸ்ல மறியலுக்கு ஏற்பாடு பண்ணனும். ஸிட்டில தெருவுக்கு ரெண்டு கடை இருக்கு. எல்லாக் கடைலயும் மறியல் பண்ண முடியாது. ஸிம்பாலிக்கா ஒரேயொரு கடைய ஸெலக்ட் பண்ணுங்க! போலீஸ் பர்மிஷன் குடுக்க மாட்டாங்க. அரெஸ்ட் பண்ணுவாங்க. ரெடியாயிருங்க."
"கவலையேபடாதீங்க தலைவர், அசத்திருவோம்!"
தலைவரிடம் நான் உற்சாக வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்தபோது, தடங்கலுக்கு வருந்தவே வருந்தாமல் தலைமைக் காவலரொருவர் வண்டியை வழி மறித்தார்.
"என்னங்க தம்பி?" என்று தலைவர் துணுக்குற, "தெரியல தலைவர், போலீஸ்காரங்க நிறுத்தறாங்க. என்ன செக்கிங்னு தெரியல" என்று காரை ஓரங்கட்டி ஹெட்லைட்டை அணைத்தேன்.
காரைச் சமீபித்த போலீஸ்காரர், என்னை நோக்கிக் குனிந்தார்.
"ஊதுங்க!" என்றார்.
****
அடுத்த நாளும் முழுக்க முழுக்க மாநிலத் தலைவரோடு தான். கட்சி அலுவலகம், கடிதங்கள், கடிதங்களுக்குப் பதில்கள், கட்சிப் பிரமுகர்களோடு சந்திப்பு, மௌமவுண்ன்ட் ரோடு புஹாரியில் ஒண்ணரை ப்ளேட் பிரியாணி.
மதிய உணவுக்குப் பிறகு, கென்னத் லேனில் ஹோட்டேலில் போய்ப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அறையைக் காலி செய்து விட்டு மதுரவாயல் வரை போய், தலைவரின் உறவினர் ஒருவருக்கு ஃப்ளையிங் விஸிட் தந்து விட்டு அப்படியே எழும்பூர் ஸ்டேஷனுக்கு வந்து விடுகிற மாதிரி ஏற்பாடு.
நுங்கம்பாக்கம் வழியாய்க் காரில் போகிற போது தாஜ் கோரமண்டல் ஹோட்டேல் வந்தது.
"தலைவர்!, இதான் தாஜ் கோரமண்டல" என்று நான் சுட்டிக் காட்டிய போது, "தெரியுமே தம்பி" என்றார்.
"தம்பி!, ஒங்களுக்கு முந்தியே மெட்ராஸ்க்கு வந்தவனாக்கும் நா" என்று சிரித்தார்.
"ஆனா, நா நடத்தின இஃப்தார் பார்ட்டிக்கி நீங்க வரலியே தலைவர்!".
"ஆமா, நா வரலேல்ல? ஏன் நா வரல? நம்மப் பேத்தி அப்ப சின்னக் கொழந்த. அவளுக்கு ஒடம்பு சரியில்லாமப் போச்சின்னு நெனக்கிறேன். அடடே, நீங்க ஒங்க இஃப்தார் பார்ட்டிய இதே ஹோட்டேல்ல தான நடத்தினிங்க?’
"ஆமா தலைவர்!, இதே தாஜ் கோரமண்டல் தான். 1996 ஆம் வருஷம். மத்தியில நம்மக் கட்சி ஆட்சி. நம்ம அகில இந்தியத் தலைவர் அப்பப் பிரதம மந்திரி. அது ஒரு கனாக்காலம் தலைவர்."
"அது ஒரு தேர்தல் காலம் கூட."
"ஆமா தலைவர். ஆளும் கட்சிக் கூட்டணில நாம இருந்தோம். இஃப்தார் பார்ட்டிக்கி முதலமைச்சரக் கூப்ட்டோம். ஆனா அவர் ரொம்ப லாவகமாக் கழண்டுக்கிட்டார்."
"வேற என்ன செய்வார்?, நாம நடத்தற கூட்டத்துக்கு வந்தார்ன்னா, மேடையில பேச வேண்டியிருக்கும். நம்மக் கட்சிக்கும் நாலஞ்சி ஸீட் தர்றேன்னு கமிட் பண்ண வேண்டியிருக்கும். சரி, வேற யார் யார் வந்தாங்க?"
"ஸி. எம் சார்பா மினிஸ்டர் ரஹ்மான் கான் வந்தார். அப்புறம், தமிழ் மாநிலக் காங்கிரஸ், வலது கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட் எல்லாத் தலைவர்களும் வந்தாங்க. மொத்தம் ஒரு முன்னூறு பேர் இருப்பாங்க. ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டேல்ல முன்னூறு பேருக்கு நா விருந்து குடுத்தேங்கறத இப்ப நம்பவே முடியல தலைவர்."
"செலவு எக்கச்சக்கமா ஆயிருக்குமே?"
"அன்னிக்கி ஒரு லச்சத்திச் சொச்சம். இன்னிக்கு ரேட்டுக்கு அஞ்சு லச்சம். பழைய மாநிலத் தலைவர் காலத்ல கட்சிக்காக நா லச்ச லச்சமா செலவு பண்ணினேன். அந்த ஆள் என்னடான்னா, நாம எல்லாருக்கும் டாட்டா காட்டிட்டு இந்திராக் காங்கிரஸ்ல போய் ஸெ ùஸட்டில் ஆய்ட்டார்."
"யாரோ அவர் புத்தியக் கெடுத்துக் கூட்டிக்கிட்டுப் போய்ட்டாங்க. ஆனாலும் அவர் நல்ல மனுஷன் தான். அவரப் பத்தித் தப்பாப் பேசாதீங்க தம்பி!".
"அவர் மேல எனக்கொண்ணும் வருத்தம் இல்ல தலைவர். சிறுபான்மையர்ப் பிரிவு மாநிலத் தலைவர்ங்கற இந்தப் பதவி எனக்கு அவர் குடுத்தது தான். அவர் நம்மக் கட்சிக்கி மாநிலத் தலைவராயிருந்த காலத்ல தான் நா ஃபில்ம் சென்ஸாஸôர் போர்டு மெம்பராக் கூட இருந்தேன். எனக்கு வருத்தம் என்னன்னா, அவர் காலத்ல கட்சிக்கி அள்ளி அள்ளிக் குடுத்தவன், இப்ப நீங்க தலைவராயிருக்கும் போது ஒண்ணுமே செய்ய முடியாம இருக்கேனேங்கறது தான். ஹ்ம்ம்… அப்ப எனக்கு ஓஹோன்னு ஒரு பிஸினஸ் இருந்தது. இப்ப எல்லாத்தயும் இழந்துட்டு நிக்கிறேன்."
"மனந் தளராதீங்க தம்பி!. ஒங்களுக்கு நல்ல மனசு இருக்கு. இன்ஷா அல்லா, திரும்பவும் நீங்க மேல வருவீங்க."
"ஒங்க ஆசீர்வாதம் பலிச்சி நா திரும்பவும் ஓஹோன்னு வந்துட்டேன்னா, இன்ஷா அல்லா, இந்த வருஷம் ரம்ஜான் மாசத்ல இஃப்தார் பார்ட்டி தலைவர். இதே தாஜ் கோரமண்டல் ஹோட்டேல்ல."
"இஃப்தார் பார்ட்டிய விடுங்க தம்பி. இந்தக் காலத்ல இஃப்தார் பார்ட்டிங்கறது ஒரு அரசியல் பிஸினஸ். ஜாதி மத பேதமில்லாம எல்லாரும் தலையில தொப்பி வச்சிக்கிட்டு, விதியேன்னு நோம்புக் கஞ்சி குடிப்பாங்க. நெத்தியில பொட்டு வச்ச தலைவிங்க, தலையில முக்காடு போட்டுக்கிட்டு ஆண்டவன்ட்ட கையேந்தி துவாக் கேக்கற மாதிரி ஃபோட்டோ எடுத்துப் போஸ்டர் அடிச்சி ஒட்டிக்குவாங்க."
"அரசியல்ல ஆதாயம் பாக்றவங்க இப்டியெல்லாம் நடிக்கிறாங்க தலைவர். ஆனா நம்ம இஃப்தார் பார்ட்டி நடிப்பு இல்ல. இதய சுத்தியோட செய்வோம் தலைவர். இந்த வருஷம் கட்டாயம் செய்வோம்."
"செய்வோம், அதுக்கு முன்னால ஒரு முக்கியமான வேல இப்ப செய்ய வேண்டியிருக்கு."
"சொல்லுங்க தலைவர்!".
"நம்ம டிக்கட் வெய்ட்டிங் லிஸ்ட்ல இருந்தது. கன்ஃபம் ஆயிருச்சான்னு கொஞ்சம் ஃபோன் பண்ணிக் கேளுங்க தம்பி!".
காரை ஓரங்கட்டிவிட்டு மொபைல் ஃபோனில் 139 அழுத்தினால், டிக்கட் கன்ஃபம் ஆகவில்லை என்கிற சோகச் செய்தி கிடைத்தது.
"மதுரவாயலுக்கு இப்ப வேண்டாம்!. நேரா எக்மோர்க்கு வண்டிய விடுங்க"என்று தலைவர் பணிக்க, அஞ்சரை மணி
ரயிலைப் பிடிக்க நாலு மணிக்கே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்து விட்டோம்.
கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ்ஸில், ஏஸி த்ரீ ட்டயர்.
பெர்த் கிடைக்காவிட்டால், தலைவரைக் கோயம் பேட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் நாகர்கோவிலுக்கு பஸ் ஏற்றிவிட வேண்டும்.
பழையபடிப் பதிமூணு மணி நேரம் பஸ் பயணமா?
கூடாது!. கடவுளே!, எப்படியாவது எங்கத் தலைவருக்கு இன்றைக்கு ஒரேயொரு இரவுக்கு ஒரேயொரு பெர்த் அருள்!.
டிக்கட் பரிசோதகரிடம் முட்டி மோதிப் பார்க்க வேண்டும். அந்த ஆள் முரண்டு பிடித்தாரென்றால், மத்தியில் நம்மக் கட்சி ஆட்சியிலிருந்த போது ரயில்வே அமைச்சர்களாயிருந்த மது தாண்டவதே, ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரிடம் தலைவருக்கிருந்த செல்வாக்கை அவர் முன் எடுத்து வைக்க வேண்டும்.
எப்படியோ தலைவருக்கு இன்றைக்கு மாநில அரசின் பஸ் கிடையாது, மத்திய அரசின் ரயில் தான்.
கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ்ஸில் மூன்றாவது ஏ.ஸி-யில் தலைவர் இன்றிரவு படுத்தபடிப் பயணம் செய்தே ஆக வேண்டும்.
கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ்ஸின் காலிப்பெட்டிகள் நாலாவது நடைமேடையில் பிரவேசித்து, கதவுகள் திறந்து விடப்பட்டதும், தலைவரின் பெட்டியோடு B-1 இல் ஏறினேன்.
"தலைவர்!, வாங்க, உள்ள ஒக்காருவோம்!."
"டிக்கட் கன்ஃபம் ஆகலியே தம்பி?".
"ஆயிரும் தலைவர்."
"டி. டி. இ இன்னும் வரலியே."
"வந்துருவார். நீங்க வாங்க!".
பெட்டிக்குள்ளே ஏறி எதிரெதிரே அமர்ந்து கொண்டதும்,
"பெர்த் கெடக்யலன்னா செலவேயில்லாம பஸ்ல போயிரலாம்!", என்று சிரித்தார்.
–தொடர்வேன்....”