அன்றைக்கு நம்ம வீட்டுக்கு வந்து, ஆளுங்கட்சிக்குக் கட்சிமாற அழைப்பு விடுத்து விட்டுப் போன ஸி கே போஸ், அவரை நம்பிப் போனவர்களையெல்லாம் அந்தரத்தில் விட்டுவிட்டு, அரசாங்கப் பதவியொன்றைப் பெற்றுக்கொண்டு ஆனந்தமாய் ஸெட்டில் ஆகிவிட்டார். அவரோடு கட்சி தாவிய நம்ம முந்தைய மாநிலத் தலைவர் கூட இப்போது அந்தரத்தில் தான் ஊசலாடிக் கொண்டிருப்பதாய்க் கேள்வி. அவரைக் குனிய வைத்து இவர் அவரை மிதித்துக் கொண்டு மேலே ஏறிப் போய்விட்டார்
போன வருஷம் நடந்த அவருடைய மகளுடைய திருமணத்துக்கு, நுங்கம்பாக்கத்திலிருக்கிற அவருடைய பங்களாவிலிருந்து அண்ணா நகரிலிருக்கிற கல்யாண மண்டபம் வரைக்கும் தோரணங்கள், கொடிகள், மின் விளக்குகள் என்று அமர்க்களப் படுத்தியிருந்தார்.
வறுமைக்கோட்டை வளைத்து அரை ஞாண் கொடியாக்கி இடுப்பில் சுற்றிக் கொண்டிருக்கிற நம்மக் கட்சியில் அவர் தொடர்ந்து இருந்திருந்தால் அவருடைய தெருவைச் சுற்றிக் கூடத் தோரணம் கட்டியிருக்க முடியாது.
அந்த நபரை நம்பி நம்மப் பழைய மாநிலத் தலைவர் சோரம் போய்விட்டது ஒரு சோகம்.
எமர்ஜன்ஸி காலத்தில் எழுச்சியுரைகள் ஆற்றிக் கொண்டிருந்த ஆனானப்பட்ட பா ராமச்சந்திரனே கவர்னர் பதவிக்கு ஆசைப்பட்டுக் கட்சி மாறிவிட்ட பிறகு, இவர் எம்மாத்திரம்!
முந்தைய மாநிலத் தலைவர் அவராகவே போய் இந்திராக் காங்கிரஸில் ஒட்டிக்கொண்டார், ஆனால் சந்தான கிருஷ்ணனுக்கு அங்கிருந்தே அழைப்பு வந்தது.
"எனக்கு, மணியனுக்கு, கருப்பையாவுக்கு மூணு பேருக்கும் அழைப்பு வந்தது. அப்ப இருந்த இந்திராக் காங்கிரஸ் தமிழ் நாட்டுத் தலைவர் எங்க மூணு பேரையும் அவரோட வீட்டுக்கு விருந்துக்கு கூப்ட்டார். சாப்ட்டு முடிஞ்சதும், வெளிப்படையா ஒரு அழைப்புக் குடுத்தார். மூணு பேரும் இந்திராக் காங்கிரஸ்க்கு வந்துருங்கனார். ஐயா, ஒங்கத் தகப்பனார் சம்பத் எங்கத் தலைவர் காமராஜரோட இருந்தவர். அதனால அவர் மேல எனக்கு மரியாத உண்டு. அந்த மரியாதயாகத்தான் நீங்க கூப்ட்டு ஒங்க வீட்டுக்கு வந்தேன். ஒங்க அழைப்புல இப்டி ஒரு உள்நோக்கம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நா வந்தேயிருக்க மாட்டேன்னு நா சொன்னேன். ஆனா மத்த ரெண்டு நண்பர்களும் அவரோட அழைப்ப ஏத்துக்கிட்டுக் கட்சி மாற சம்மதம் சொல்லிட்டாங்க. இவங்க ரெண்டு பேரும் சரின்னுட்டாங்க, நீங்க மட்டும் பிடிவாதமாயிருக்கிங்களே வக்கீல் சார்ன்னார் சம்பத் மகன். அதுக்கு நா ஒரு பதில் சொன்னேன். “ஒரு பொண்ணுக்கு, கற்பு மிஞ்சணும், இல்லாட்டிக் காசு மிஞ்சணும்னு கவிஞர் கண்ணதாசன் சொல்லுவார். ஆணுக்கும் கூட இது பொருந்தும்னு நா நம்பறேன். இந்த நண்பர்கள் ரெண்டு பேருக்கும் காசு மிஞ்சிரிச்சி. எனக்குக் கற்பு மிஞ்சிரிச்சி."
ஓ!
சந்தான கிருஷ்ணனைக் குறித்துக் கூடுதல் தகவலொன்றைத் தந்தார், தஞ்சை இளஞ்சிங்கம்.
"எமர்ஜன்சி கஷ்டகாலம் முடிஞ்சி ஜனதாக் கட்சி ஆட்சி. மொரார்ஜி தேசாய் பிரதம மந்திரியானவொடன இந்திரா காந்தியக் கைது பண்ணினார். எமர்ஜன்ஸில மொரார்ஜி, ஜெயப்ரகாஷ் நாராயண், கிருபளானி மாதிரித் தலைவர்களையெல்லாம் இந்திராகாந்தி கைது பண்ணப்ப குத்துக்கல்லாட்டம் இருந்தவங்க, காமராஜர் படுக்கைல விழாம, ஆரோக்யமாயிருந்திருந்தா அவரக்கூட கைது பண்ணி ஜெயில்ல போட்டுருக்கும் அந்த அம்மாங்கறத வசதியா மறந்துட்டவங்க, இந்திரா காந்தி அரெஸ்ட் ஆனவொடன கூப்பாடு போட்டாங்க. மொரார்ஜி எதிர்ப்பு ஊர்வலம் போனாங்க.
மொரார்ஜி படத்துக்கு செருப்பு மாலை போட்டாங்க. சீரணி அரங்குல மீட்டிங் போட்டாங்க. சிவாஜி கணேசன் அப்ப அவங்கக்கூட இருந்தார். சிவாஜி கணேசன் பேசி முடிச்சவொடன அதிரடியா நா மேடைல ஏறி மைக்கப் புடிச்சேன். இருபது வருடம் நெருக்கடி நிலை என்கிற பெயரில் இந்திய மக்களை திறந்த வெளிச் சிறையில் வைத்திருந்த சர்வாதிகாரி இந்திராவைச் சிறையிலடைத்ததற்காக, என் தலைவன் மொரார்ஜி தேசாய்க்கு நீங்கள் செருப்பு மாலை போட்டீர்கள். ஆனால், ஒரு புனிதமான காரியத்தை செய்த என் தலைவனை மலர்தூவி வாழ்த்த நான் மேடையேறியிருக்கிறேன்னு சொல்லிக் கையோட கொண்டு போயிருந்த பூக்கள மேடைல கொட்னேன். மேடைல இருந்தவங்க, கீழ இருந்தவங்க எல்லாருக்கும் ஷாக். கீழ இருந்த அடியாட்கள் மேடைய நோக்கி ஓட்டமா ஓடி வந்தானுங்க. மேடைல ஏறி அவனுங்க எம்மேலக் கை வக்கிறதுக்கு முன்னால, இந்திரா ஒழிக, மூப்பனார் ஒழிகன்னு நா கோஷம் போட்டு முடிச்சிட்டேன். அப்புறம் விழுந்தது பாருங்க அடி! அடின்னா அடி, எங்க வூட்டு அடி, ஒங்க வூட்ட அடி இல்ல சும்மாப் பின்னி எடுத்துட்டானுங்க. போலீஸ்காரங்க வந்து என்னக் காப்பாத்தி, மேடக்கிக் கீழ உள்ள அறையில கொண்டு போய்ப் போட்டுட்டு, நீ செத்துப் போய்ட்டடான்னு ஸர்ட்டிஃபிக்கேட் குடுத்துட்டுப் போனாங்க. அப்புறம் போலீஸ் ஸ்டேஷன், அதுக்கப்புறம் ராயப்பேட்டை ஆஸ்பத்திரி. நா இருக்கேனா போய்ட்டேனான்னு தெரியாம நம்மக் கட்சி நண்பர்கள் கவலையாயிருக்க, இங்கயிருந்து போய் இந்திராக் காங்கிரஸ் காரனா ஆய்ட்டவனெல்லாம் ஆச ஆசயா ரேடியோக் கேட்டுட்டிருந்தான், நா செத்துப் போய்ட்ட ந்யூஸ் வருமா வருமான்னு.
அவனுங்களுக்கு சாதகமான செய்தி வரவேயில்ல பாவம். இப்டியொரு கிறுக்குத்தனமான காரியம் பண்ணிட்டியே தம்பின்னாரு, ஆஸ்பத்திரில என்னப் பாக்க வந்த டெப்பூட்டிப் போலீஸ் கமிஷனர். எமர்ஜன்ஸில, இருவது மாசம் இந்த நாட்டு மக்களப் பூரா கிறுக்கன்களாக்கி வச்சிருந்த ஒரு பொம்பள மேல இப்பக் கிறுக்காயிருக்கிற இந்தப் பைத்தியக்காரங்களோட பைத்தியத்தத் தெளிய வக்கிறதுக்காக ரெண்டு நிமிஷம் மேடைல பேசினது தப்பா சார் னு நா அந்த டி ஸியக் கேட்டேன். ஒன்ன என்னமோக் கிறுக்கன்னுல்ல நெனச்சேன், நீ ஒரு லட்சியவாதியா இருக்கியே தம்பின்னு அந்தப் போலீஸ் அதிகாரி, புதுசா ஒரு
ஸர்ட்டிஃபிக்கேட் குடுத்துட்டுப் போனார். எம்மேலக் கேஸ் போட்டாங்க. நம்பக் கட்சிக்கார வக்கீல்கள் ரெண்டு பேர் எனக்காகக் கேஸ் நடத்த முடியாதுன்னு கைய விரிச்சிட்டாங்க. திக்குத் தெரியாம நா அனாதையா நின்னுட்டிருந்தப்பத்தான் நம்ம சந்தான கிருஷ்ணன் களத்ல எறங்கினார். நீ என்ன அனாதையா? ஒனக்காக நா கேஸ் நடத்றேன் பார். ஜெயிச்சிக் காட்றேன் பார்னு சவால் விட்டுக் கேஸ நடத்தினார். ஒண்ர வருஷம் நடந்த கேஸ ஒண்ணுமில்லாம ஆக்கி, எனக்கு விடுதலை வாங்கிக் குடுத்தார். எங்கிட்ட ஒரு பைசா ஃபீஸ் வாங்கலங்கறது மட்டுமில்லாம, கோர்ட்டுக்கு வர்றப்பல்லாம் அவர் செலவுல தான் எனக்குச் சாப்பாடு!"
திரும்பவும் ‘ஓ’ப்போட வேண்டும். யாருக்கு ‘ஓ’ப்போடுவது?
தன்னலங்கருதாத சாதனையாளர் சந்தான கிருஷ்ணனுக்கா, அல்லது, ஒரிஜினல் அஞ்சா நெஞ்சன் தஞ்சை இளஞ்சிங்கத்துக்கா?
ஏன், ரெண்டு பேருக்குமே போடலாம்.
சந்தான கிருஷ்ணன் மாதிரி, சக்திலிங்கம் மாதிரி, மோத்திலால் மாதிரிப் பாரம்பரியம் மிக்க, தியாக சிந்தனை உள்ள, கொள்கைப் பிடிப்பு உள்ள அறிவார்ந்த பெரியவர்கள் எல்லாம் தலைமைப் பதவிக்கு ஆசைப் படாமல் மாநிலத் தலைவருக்கு விஸ்வாசமாயிருக்க, இவர்களோடு ஒப்பிடவே முடியாத அறிவரசன் மாநிலத் தலைவருக்கு எதிராய் கோஷ்டி அரசியல் நடத்துகிறார், மாநிலத் தலைமைக்குத் தன்னுடைய பெயரைப் பரிந்துரை செய்யும்படி, நான் உட்பட எல்லோருக்கும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் துன்பியல் சம்பவங்கள்.
சரி சரி, மாநிலத்தலைவர் இன்னுங்கூட அவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். நாமும் நம்பிக்கையோடே இருப்போம்.
மாநிலத் தலைவரைப் போய்ப் பார்க்க வேண்டும். பார்த்து அவரை மதிய உணவுக்குக் கூட்டிக் கொண்டு போக வேண்டும்.
பிறகு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அஞ்சரை மணிக்குக் கன்யாகுமரி எக்ஸ்ப்ரஸ்ஸில் ஏற்றிவிட வேண்டும்.
வெளியே கிளம்ப ஆயத்தமாயிருந்த போது ஃபோன் வந்தது, தேவநேசனிடமிருந்து.
"இன்னிக்கு ரோட்டரி க்ளப் மீட்டிங்க்கு வர்றேல்ல?"
"இல்லடா."
"பாட வர்றியாடான்னு கூப்ட்டா ஒடனே வந்துருவ. ரோட்டரின்னா வரமாட்ட"
"அப்டியில்லடா. நேத்துப் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. நம்ம மாநிலத் தலைவர் வந்திருக்கார். அவரப்பாக்கத்தான் இப்பக் கௌம்பிட்டிருக்கேன்."
"தலைவர் வந்திருக்காரா! அவருக்கு என் சார்பா சலாம் சொல்லுடா. வேற யார் யாரெல்லாம் வந்துருக்காங்க?"
"மோத்திலால், சக்திலிங்கம், சந்தான கிருஷ்ணன்"
"என்ன அருமையான மனுஷங்க! அவங்களையெல்லாம் பாத்து எத்தன வருஷமாச்சு! எல்லாரையும் நா விசாரிச்சேன்னு சொல்லுடா."
"ஏன், நீயே நேர்ல வந்து விசாரிச்சிட்டுப் போகலாம்ல?"
"நம்மப் பழைய தலைவர்கள். அவங்களையெல்லாம் பாக்க மனசுக்குக் கஷ்டமாயிருக்கும்."
"அப்ப, நம்மக் கட்சிலயே இருந்திருக்கலாம்ல, எங்களையெல்லாம் விட்டுட்டு ஏன் போன?"
"அது காலத்தின் கட்டாயம்டா."
அட, அட, அட, காலத்தை எப்படியெல்லாம் காலை வாரி விடுகிறார்கள்!
அரசியலில் விலகிப் போய் விட்டாலும், கச்சேரி மேடைகளிலும், ரோட்டரி சங்கத்திலும் தேவநேசனோடு தோழமைகள் தொடருவது இன்பியல் சம்பவங்கள்.
"நான் ஒரு ரோட்டரி அடிக்ட்" என்று தேவநேசனிடம் நான் பெருமைப்பட்டுக் கொண்ட காலமொன்றிருந்தது. ஆனால்,
ரோட்டரி போன்ற சமூக சேவை ஸ்தாபனங்களில் கூட இப்போது பாலிட்டிக்ஸ் புகுந்து விட்டது.
அது சரி, நம்முடைய சின்னஞ்சிறு அரசியல் கட்சியிலேயே பாலிட்டிக்ஸ் இருக்கிற போது, உலகளாவிய ரோட்டரி ஸ்தாபனத்தில் இருக்காதா என்ன!
அந்த அரசியலையெல்லாம் பெருக்கித் தள்ளிவிட்டு, ஆத்ம திருப்திக்காக நாம் சமூகசேவை செய்ய வேண்டும் என்று தேவநேசன் சொல்லுவான்.
செய்யலாம், இன்ஷா அல்லா.
நமக்குப் பழையபடி வசதி வருகிறபோது, சகட்டு மேனிக்கு சேவை செய்யலாம். சாலையோரத் தையற்கலைஞர்களுக்குத் தையல் மிஷின் வாங்கிக் கொடுக்கலாம். இஸ்திரித் தொழிலாளிகளுக்கு இஸ்திரிப் பெட்டிகளும், வண்டிகளும் வாங்கித் தரலாம். வசதி குறைந்த பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகள், செருப்புகள், புத்தகங்கள் வாங்கி வழங்கலாம். இந்தக் காலத்துத் தமிழ் சினிமாக் கதாநாயகர்கள் பாவம் முகச்சவரம் செய்து கொள்ள வசதியில்லாமல் முள்ளு தாடி வளர்த்துக் கொண்டு அசிங்கமாய் அலைகிறார்கள். அவர்களுக்கு ஷேவிங் க்ரீம், ரேஸர்கள் வாங்கித் தரலாம். அவர்கள் அழுக்குத் தேய்த்துக் குளிப்பதற்கு டெட்மோஸால் சோப்புகள் தந்து உதவலாம்.
(தொடர்வேன்)
“