போளுருக்குப் போய்த் திரும்பி வந்து, அவரவர் இடங்களில் அனைவரையும் இறக்கி விட்டு விட்டு வீட்டுக்கு வந்து, பொழுது விடிகையில்தான் படுக்க முடிந்தது என்றாலும், காரில் போகிற போதும், வருகிற போதும், மாநிலத் தலைவர், சந்தான கிருஷ்ணன், அருளானந்தம், தங்க தேவன் ஆகியோரோடு உரையாடிக் கொண்டு வந்தது, ஜெகந்நாதன் வீட்டுக் கல்யாணத்தில் பம்பரக் கண்ணாலே பாடியது எல்லாமே சந்தோஷந்தருகிற சங்கதிகளாயிருந்ததால், அலுப்புமில்லை, களைப்புமில்லை.
பொதுக்குழுவில் நேர்ந்த மனக்கசப்புகள் கூட மறந்து போகவிருந்தன.
காலையில், பத்து மணிக்குப் பல்லு விளக்குகிற போது தான் முந்தின நாள் முற்பகலின் உரசல்கள் ஆழ்மனதின் மேல் மட்டத்துக்கு வந்து எட்டிப் பார்த்தன.
இந்த அறிவரசன் எப்படி இப்படி அடியோடு மாறிப்போனார் என்று சங்கடத்தோடு நினைத்துப் பார்த்தேன்.
மாநிலத் தலைவர் முதன் முதலாய்ப் பதவியேற்பதற்காக எழும்பூரில் வந்து இறங்கிய போது, ஒரு தொண்டர்ப் படையோடு வந்து அவரை வரவேற்றது அறிவரசன் தான்.
காலையொடித்துக் கொண்டு நான் படுக்கையில் கிடந்த போது, மாநிலத் தலைவரை நம்ம வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்ததும் அறிவரசன் தான்.
எப்போது, எங்கே, எப்படி, ஏன் ஏற்பட்டது விரிசல்?
அறிவரசனுடைய மகன் சாலை விபத்தில் அகால மரணமடைந்த போது, தேவநேசனோடு அவருடைய வீட்டுக்குப் போய் அவருடைய துயரத்தைப் பகிர்ந்து கொண்டது நினைவுக்கு வருகிறது. பிறகு, முதுகில் ஆப்ரேஷன் செய்து கொண்டு வீட்டில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, வீடு மாறிப் போயிருந்தார்.
தேவநேசனும் கட்சி மாறிப் போயிருந்தான்.
பழைய மஹாபலிபுரம் சாலையில் பத்துக் கிலோ மீட்டர் கைனட்டிக் ஹோண்டாவில் பயணம் செய்து, கிளைச் சாலைகள், சந்து பொந்துகளிளெல்லாம் புகுந்து புறப்பட்டு அவருடைய வீட்டைக் கண்டு பிடித்தேன்.
முக்கால் முதுகில் பேண்டேஜோடு இருந்த நிலையில் கூட தன்னுடைய சுகவீனத்தைப் பற்றிக் குறைப் பட்டுக் கொள்ளாமல், கட்சி வளர்ச்சித் திட்டங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
அந்த மாதிரி, உடம்பில் பட்டையைச் சுற்றிக் கொண்டு படுத்துக்கிடந்தால் நான் நொந்து போயிருப்பேன். கடவுள் புண்ணியம், சாலை விபத்தில் காலில் ஏற்பட்ட சின்னஞ்சிறு சிதைவைத்தவிர, உயர்மட்ட உபாதைகள் எதுவுமே இந்த உடம்பை ஊடுருவவில்லை.
உருப்படியாய் உடற்பயிற்சி செய்து வருவது ஒரு காரணமாயிருக்கலாம். குஷன் குறைந்து போன ஒரு சிறு குறையைத் தவிர வேறு குறைபாடுகள் இல்லை.
உடம்பில் இதுவரை கத்தி படவில்லை.
கண்ணாடி போடவில்லை.
சங்கர நேத்ராலயா, வாசன் ஐக் கேர், அர்விந்த் கண் மருத்துவமனை போன்ற கண்ணியஸ்தலங்களை எட்டிப் பார்க்க அவசியமேற்படவில்லை.
சின்ன வயசில் கைகளில் சொறி சிரங்கு வந்ததைத் தவிர வேறு ஹோல்úஸல் சுகவீனங்கள் ஏதும் இந்த உடம்புக்கு வரவில்லை.
சொறி சிரங்கு வந்தால் கைகளைக் கீழே தொங்க விட முடியாது. ரெண்டு காலில் நிற்கிறபோது குரங்கு, கையைத் தூக்கிக் கொண்டு அநாகரீகமாய் நிற்குமே அந்த மாதிரி, கைகளை உயர்த்திக் கொண்டு தான் நடக்க வேண்டும். சக மாணவர்களெல்லாம் கேலி செய்வார்கள். கேலிகளைத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் முருங்கைப் பட்டைச் சாறைக் குடிக்கக் கொடுப்பார்களே, அதுதான் கொடுமை.
டெட்மோஸால் சோப்பைப் போட்டுத் தேய்த்துக் குளித்தால், கைகளை டெட்மோஸால் சோப்புப் போட்டுக் கழுவிக் கொண்டேயிருந்தால் கொஞ்சங் கொஞ்சமாய் சிரங்கு குறையும்.
அறிவரசன் மூத்த பொதுச் செயலாளராய் ஆவதற்கு முன்னால், அவரினும் மூத்த பொதுச் செயலாளர் ஒருவர் சென்னையில் இருந்தார், முந்தைய மாநிலத் தலைவரின் காலத்தில்.
ஸி கே போஸ் என்றால் மாநிலத் தலைவரின் வலது கரமான மாநிலப் பொதுச் செயலாளர் என்று பிரபலமடைந்திருந்தார். அதோடு, நம்மக் கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்தபோது தனக்கு நல்ல வசதி பண்ணிக் கொண்டவர் என்றும் புகழ் பெற்றிருந்தார்.
நம்ம ஆட்சி அகன்ற பிறகு வசதிக் குறைவு ஏற்பட்டு, இங்கே அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை.
மாநிலத் தலைவரை இழுத்துக் கொண்டு இந்திராக் காங்கிரஸýக்கு போனால் மீண்டும் வசதிகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம். சும்மா மாநிலத் தலைவரை மட்டும் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போனால் இந்திராக் காங்கிரஸில் எந்த கோஷ்டியும் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால் ஒரு கும்பலோடு போக வேண்டும். காமராஜரின் மறைவுக்குப் பின்னால் இந்திரா காந்தி போட்ட இணைப்பு மாநாடு நாடகம் மாதிரி இல்லாவிட்டாலும், ஓர் ஓரங்க நாடமாவது போட
வேண்டும். அதற்காக ஆள் சேர்க்கப் புறப்பட்டார் போஸ். அவருடைய போதாத காலம், நம்ம வீட்டுக்கும் வந்து சேர்ந்தார்.
"வாங்க சார், நம்ம வீடு தேடி இது வரக்யும் நீங்க வந்ததேயில்ல, திடீர்னு வந்திருக்கீங்க!"
"நீங்க மட்டும் எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்களா?"
"அதுக்கு எனக்கு அவசியமே ஏற்படலியே."
"எனக்கு இப்ப அவசியம் எற்பட்டிருக்கு, அதான் வந்தேன். ஒங்களுக்கு ஒரு அழைப்புக் கடிதம் குடுக்க வந்தேன். அடுத்த வாரம் மாநிலத் தலைவர் ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ணியிருக்கார். நீங்க அவசியம் கலந்துக்கணும். இந்தாங்க அழைப்பு."
"மாநிலத் தலைவர் வழக்கமாக் கூட்ற கூட்டந்தானே சார் இது, பொதுக்குழுவா செயற்குழுவா?"
"ரெண்டுமில்ல. நம்ம அகில இந்தியத் தலைவர் மாநிலத் தலைவர மாத்தப் போறாராம்."
"அதனால, பொதுக்குழுவும் இல்லாம, செயற்குழுவும் இல்லாம மாநிலத் தலைவர் தனியா ஒரு குழு அமச்சிக்கிட்டு, ஒங்க ஆலோசனைப்படிப் போட்டிக் கூட்டம் கூட்டப் போறார்னு சொல்றீங்க."
"அப்டி ஒரு கூட்டம் நடத்துறது அவசியமாகிப் போச்சி இப்ப. ஏன்னா இந்தக் கட்சில நமக்கெல்லாம் எதிர்காலம் இல்ல."
"நமக்குன்னா?"
"எல்லாருக்கும் தான்."
"ஒங்கள மாதிரி ஒரு சிலருக்கு எதிர்காலம் இல்லாமலிருக்கலாம். ஆனா, நாங்கள்ளாம் எதிர்காலத்த எதிர்பாத்து இந்தக் கட்சில இல்ல. நம்மக் கட்சிக்கி விவரந்தெரிஞ்ச மக்கள் மத்தில ஒரு நல்ல பேர் இருக்கு. பித்தலாட்டம் பண்ணாதவங்க, அடாவடித்தனம் பண்ணாதவங்க, அமைதியானவங்க, அஹிம்சா வாதிங்கன்னு மக்கள் நம்மள மதிக்கிறாங்க. பணமோ பதவியோ பகட்டோ வரும்ங்கற பேராசையோட நாம இந்தக் கட்சில இல்ல. நல்லவங்க நெறையபேர் இருக்கிற கட்சி, இன்னி வரக்யும் இந்தியாலயே நல்ல அரசியல் கட்சிங்கற திருப்தியோடத்தான் நாமல்லாம் ஒரு தியாக சிந்தனையோட இந்தக் கட்சில தொடர்ந்து இருக்கோம். என்னப் பொருத்த வரக்யும், உடலாலும் பொருளாலும் என்னால முடிஞ்சதெல்லாம் கட்சிக்காக செஞ்சேன். புல்லா அவென்யூல தேவ கவுடாவ வச்சிப் பொதுக் கூட்டம் போட்டோமே, அத எத்திராஜனும், நானும் தான் அரேய்ஞ்ஜ் பண்ணோம். குஜராத் கவண்மன்ட்டக் கலக்யணும்னு கவர்னர் மாளிகக்கி ஊர்வலம் போனோமே, அத தேவநேசனும் நானும் ஏற்பாடு பண்ணோம். மத்திய மந்திரி வீரேந்திர குமாருக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டேல்ல விருந்து குடுக்கணும்னு சொன்னீங்க, நாந்தான் அந்த விருந்த ஹோஸ்ட் பண்ணேன், பார்க் ஷெரட்டன் ஹோட்டேல்ல. எலக்ஷன் ஸீஸன்ல இஃப்தார் பார்ட்டி ஒண்ணு ஏற்பாடு பண்ணனும்னு மாநிலத் தலைவர் சொன்னார். அதையும் நாந்தான் செஞ்சேன், தாஜ் கோரமண்டல் ஹோட்டேல்ல. நீங்களும் மாநிலத்தலைவரும் சொன்னதெல்லாம் நா செஞ்சி முடிச்சேன்."
"அதுக்குத்தான் மாநிலத் தலைவர் ஒங்களுக்கு சென்ஸார் போர்டு பதவிக்கி ஏற்பாடு பண்ணாரே!"
"அத நா மறுக்கவுமில்ல, மறக்கவுமில்ல. நம்மக் கட்சி ஆட்சி டெல்லில இருந்தப்ப நா சினிமா சென்ஸார் போர்டு மெம்பராயிருந்தேன். இப்ப இல்ல. இன்ட்டர்வல்ல அவங்க தர்ற முந்திரிப்பருப்பு பக்கோடாவுக்காக மூணுமணி நேரம் ஒக்காந்து இந்தப் பாடாவதிப் படங்களப் பாக்க வேண்டிய அவஸ்தை இல்லன்னு இப்ப நா நிம்மதியாயிருக்கேன்."
"ஆனா, இதவிடப் பெரிய மத்திய அரசுப் பதவிங்கல்லாம் எதிர் காலத்ல ஒங்களுக்குக் கெடக்ய வாய்ப்பு இருக்கு"
"அதாவது, ஒங்கக் கூட சேந்து நானும் கட்சி மாறினா."
"கட்சி மாறல, காங்கிரஸ்க்குத்தான் போறோம்."
"இந்திராக் காங்கிரஸ்க்கு."
"எப்டி வேணாலும் வச்சிக்குங்க. நாம திராவிடக் கட்சிகளுக்கோ பி ஜே பிக்கோ போகல. நம்மத் தாய்க் கட்சிக்கித்தான் போறோம்."
"இத்தாலியத் தாயோட கால்ல விழுந்து கும்புடப் போறீங்க. சோனியா காந்திக்கி ஜே போடப் போறீங்க"
"அது காலத்தின் கட்டாயம்."
"இல்ல. இது காலக் கொடுமை. எனக்குத் தெரிஞ்ச ஒரே காந்தி மஹாத்மா காந்தி தான். மஹாத்மா காந்தி வாழ்க, காமராஜ் வாழ்க, மொரார்ஜி வாழ்கன்னு வாழ்த்தின வாயால நா இந்திரா வாழ்க, சோனியா வாழ்க, ப்ரியங்கா வாழ்க, ராகுல் வாழ்க, ராபர்ட் வத்ராவோ வதேராவோ வாழ்கன்னு கெட்ட வார்த்தையெல்லாம் சொல்ல மாட்டேன்."
"காமராஜ் வாழ்கன்னு நீங்க சொல்றீங்க. ஆனா, காமராஜ் பிறந்த நாளக்கி மவுன்ட் ரோட் ஜிம்கானா க்ளப் வாசல்ல காமராஜ் சிலைக்கி மாலை போடப் போனப்ப, கட்சிக்காரங்க எத்தன பேர் வந்தாங்க? ஏழே ஏழுபேர் தான் வந்தாங்க."
"ஏழு பேர் என்ன சார், ஒரேயொரு ஆள் வந்தாலும், அந்த ஒரேயொரு ஆளா நா இருப்பேன்."
"அப்ப, எங்கக்கூட நீங்க வரமாட்டீங்க."
"இன்னுங் கூடவா நீங்க புரிஞ்சிக்கல? ரொம்ப ஸ்லோ சார்
நீங்க."
"சரி, அப்ப அந்த அழைப்புக் கடிதத்தக் குடுங்க."
"எந்த அழைப்புக் கடிதத்த?"
"நீங்கக் கைல வச்சிருக்கீங்களே அதான்."
"இது நீங்க எனக்குக் குடுத்தது."
"அது, இப்ப ஒங்களுக்குத் தேவையில்ல. நீங்க தான் எங்கக்கூட வரலியே. கடிதத்தக் குடுங்க."
"ஒங்கக்கூட கட்சி மாறத்தான் வரலன்னு சொன்னேன். ஒங்க மீட்டிங்க்கு வரமாட்டேன்னு சொல்லல."
"நீங்க வரவேண்டாம்."
"வருவேன்."
"வரக்கூடாது."
"கட்டாயம் வருவேன்."
போனேன்.
சும்மாப் போகவில்லை. அனுமதி வாங்கிக் கொண்டு தான் போனேன்.
யாரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு போனேன்?
அடுத்த பொதுச் செயலாளர் அறிவரசனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு போனேன்.
அன்புக்குரியவராயும், மரியாதைக்குரியவராயும் அப்போது இருந்த அறிவரசன், அனுதாபத்துக்குரியவராய் இப்போது மாறிப்போனது கூட காலக் கொடுமை தானோ!
சரி, மாநிலத்தலைவர் அவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார் நாமும் நம்பிக்கையோடு இருப்போம்.
(தொடர்வேன்)
“