சிபி (20)

அந்த ஆளுக்கு மவுன்ட் ரோடுக்கு லிஃப்ட் கொடுத்ததில் இன்னொரு நல்ல காரியமும் நடந்திருக்கிறது. ப்ரஃபஷனல் கூரியருக்கு நாளைக்குப் போய்க் கொள்ளலாம்.

"என்னோட லேட்டஸ்ட் நாவல் சார்" என்று, மூன்று தலைவர்களின் பெயர்களையும் எழுதிக் கையெழுத்துப் போட்டு ஆளுக்கொரு பிரதி கொடுத்தேன்.

"என்ன சப்ஜெக்ட் தம்பி?" என்று விசாரித்தார் சந்தான கிருஷ்ணன்.

"லவ் ஸ்டோரியா?"

"லவ் ஸ்டோரி தான். ஆனா ஒரு வித்யாசமான லவ் ஸ்டோரி. ஆன்ட்டி – ஸ்மோக்கிங் லவ் ஸ்டோரி."

"ஆன்ட்டி – ஸ்மோக்கிங்னா, சிகரெட் குடிக்கிறதுல இருக்கிற தீமைகள நீங்க நாசூக்கா சொல்றீங்க."

"நாசூக்கா இல்ல சார், வெளிப்படையாவே சொல்றேன். குடியை விடப் பெரிய உயிர்க்கொல்லி புகை தான் சார். ஆனா, அதப்பத்தின விழிப்புணர்வு மக்களுக்கு இல்ல. மதுக்கடை மறியல் நடத்தணும்னு ஒரு திட்டம் நம்ம மாநிலத் தலைவர் வச்சிருக்கார். ஒங்கக்கிட்ட சொல்லியிருப்பாரே?"

"ஆமா சொன்னார்."

"என்னக் கேட்டா, புகைக் கடை மறியல் கூட நடத்தணும்னு சொல்வேன்."

"நடக்கிற காரியமா தம்பி? ஒவ்வொரு பெட்டிக்கடை முன்னாலயும் போய் நாம மறியல் பண்ண முடியுமா?"

"முடியாது தான். ஆனா, சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தலாம். புகை விலக்குச் சட்டம் நிச்சயம் அமுலுக்கு வரும் சார், தமிழ் நாட்ல நம்மக் கட்சி ஆட்சி வந்தவொடன."

"என்னது! தமிழ் நாட்ல? நம்மக் கட்சி? ஆட்சியா!" என்று ஒரே சமயத்தில் மூன்று குரல்கள், கேள்விக் குறிகளும் ஆச்சர்யக் குறிகளும் பின்னிப்பிணைய என்னை எதிர் கொண்டன.

"என்ன சார், ஒங்களுக்கு நம்பிக்கையில்லியா?"

"நம்பிக்கைங்கறது வேற தம்பி, நடைமுறைல சாத்தியமான்னு பாக்கணும்லா?"

"சாத்தியமில்லன்னு சொல்ல முடியாது சார். ஒங்க மூணு பேர மாதிரி, கொள்கைப் பிடிப்புள்ள தலைவர்கள், தன்னலம் கருதாத் தலைவர்கள், பாரம்பரியம் மிக்கத் தலைவர்கள் நம்ம மாநிலத் தலைவருக்குத் துணையாயிருக்கிறப்ப நிச்சயம் சாத்தியப்படும்."

"ஆமென். ஆமீன்."

"மோத்திலால் சார், இதையெல்லாம் நா ஒங்கக்கிட்ட சொன்னதில்ல. என்னோட ஸ்கூல் டேய்ஸ் காலேஜ் டேய்ஸ்லயெல்லாம் ஒங்களப்பாத்து நா எப்டிப் புல்லரிச்சிப் போயிருக்கேன் தெரியுமா?"

"அப்டியா தம்பி? அப்பவே என்னப் பாத்திருக்கீகளா?"

"மோத்திலால் மோத்திலால்னு பாளையங்கோட்டை சுவர்கள்ளயெல்லாம் ஒங்கப் பேரப் பாத்திருக்கேன். மேடைல நீங்க பேசறத வாயப் பொளந்துட்டுக் கேட்டிருக்கேன். அப்பல்லாம் நெனச்சிக்கூடப் பாக்கல, இப்டி ஒங்கக்கூட நேருக்கு நேர் ஒக்காந்து பேசுவேன்னு."

"என்னப்போய்ப் பெரிசா சொல்லுதியளே தம்பி, பெருந்தலைவர் காமராஜர நேருக்குநேர் பாத்துப் பேசினவங்களுக்கு எப்டியிருந்திருக்கும்னு நெனச்சிப்பாருங்க!"

"நீங்க நேருக்கு நேர் பெருந்தலைவரப் பாத்திருக்கீங்களா மோத்திலால் சார்?"

"ஆமா, ஆமா! நேருக்கு நேர் பாத்துப் பேசியிருக்கேன் தம்பி. மறக்க முடியாத சந்திப்புல்லா அது!"

"மேல சொல்லுங்க சார்."

"அப்ப நா மெட்ராஸ் லா காலேஜ்ல படிச்சிட்டிருந்தேன். எங்க தகப்பனார் அந்தக் காலத்து சுதந்திரப் போராட்டத் தியாகி. பெருந்தலைவரப் போய்ப் பாத்துட்டு வான்னு அப்பாட்டயிருந்து போஸ்ட் கார்டு வந்திச்சி. ஒரு ஞாயித்துக் கெழம பஸ் புடிச்சி திருமலைப்பிள்ளை ரோடுக்குப் போனேன். கேட் தொறந்து கெடந்தது. சும்மா உள்ள நொழஞ்சிட்டேன். என்னால நம்பவே முடியல, பெருந்தலைவர், வீட்டு வாசல்ல நிக்யாக, கருகருன்னு, ஒசரமா. எனக்கு பயம்மாப் போச்சி. பக்கத்ல போவோமா இல்ல வந்த வழிய திரும்பி ஓடிர்வோமான்னு நிக்கையில பாத்தா, பக்கத்து சேரிப் பொம்பளைங்கள்ளாம் நம்மத் தலைவர் வீட்ல வந்து கொழாய்ல தண்ணி புடிச்சிட்டுப் போவுது. தலைவர சரியாப் புரிஞ்சிக்காம ஓடிரப் பாத்தமேன்னு எனக்கு வெக்கமாப் போச்சி. அவர் முன்னால போய் நின்னு வணக்கங்க ஐயான்னு கும்புடு போட்டேன். தம்பி யாருன்னாரு. ஐயா நா பாளையங்கோட்டைலயிருந்து வர்றேங்கய்யான்னு செல்லி, எம்ப் பேரையும் சொல்லி நா வாய மூடல. பொன்னம்பலம் மகனா நீன்னு கேட்டு ஒரு ஆனந்த அதிர்ச்சியக் குடுத்துட்டாரு. சட்டமா தம்பி படிக்யன்னு தலைவர் கேட்டாக. ஆமாங்கய்யா, லா காலேஜ்ல படிக்யேன்னேன். நல்லா படிச்சிப் பெரிய வக்கீலா வரணும் தம்பின்னாரு. ஒங்க ஆசீர்வாதம் இருந்தா நிச்சயமா வருவேங்க ஐயான்னேன். அதுக்குத் தலைவர் என்ன சொன்னாக தெரியுமா?"

"அவரோட லாங்வேஜ்ல சொல்லியிருப்பார்!"

"நல்ல பையங்களுக்கு என்னோட ஆசீர்வாதம் எப்பவுமே உண்டுன்னேன்."

"அதானே அவரோட லாங்வேஜ்!"

"பெருந்தலைவரோட ஆசீர்வாதம் தான், நா திருநவேலி ஜில்லாலயே பெரிய வக்கீலா ஆனதோட மட்டுமில்லாம, பார் கவுன்ஸில்ச் சேர்மனாவும் ஆனேன். பெயிலுக்கு லஞ்சம் வாங்கி ஜெயிலுக்குப் போற நீதிபதிகள் இருக்கற இந்தக் காலத்ல நா ஒரு அப்பழுக்கில்லாத அட்வக்கேட்னு பேர் வாங்க முடிஞ்சதுன்னா, அது நம்மப் பெருந்தலைவரோட ஆசீர்வாதம் தான்."

"மோத்திலால் சார், நீங்க லா காலேஜ்லயிருந்து வெளிய வாறீக, நா அப்பத்தான் உள்ள போறேன்" என்று உள்ளே புகுந்தார் சக்திலிங்கம்.

"சக்திலிங்கம் சார், ஒங்களக்கூட நா முந்தியே பாத்திருக்கேன்" என்று நான் இடை மறித்தேன்.

"பாத்திருப்பீக. நாந்தான் அடிக்கடி பாளையங்கோட்டக்கி வருவேனே"

"பாளையங்கோட்டைல இல்ல சார். ஒங்கத் தூத்துக்கிடில வச்சித்தான்."

"தூத்துக்குடிலயா?"

"ஆமா. நாலு வருஷம் நா தூத்துக்குடில இருந்தேன். அப்ப மத்தியில நம்ம ஜனதாக் கட்சி ஆட்சி. மொரார்ஜி தேசாய் ஆட்சி. தமிழ் நாட்ல அùஸம்ளி தேர்தல். ஜனதாக் கட்சி தனித்துப் போட்டி. பாளையங்கோட்டைத் தொகுதில நம்ம வேட்பாளர் ஜஸ்டின். தூத்துக்குடித் தொகுதில நீங்க தான் வேட்பாளர். ஏர் உழவன் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்கன்னு ஓப்பன் ஜீப்ல நின்னுக்கிட்டு கும்புட்டுக்கிட்டே வந்தீங்க நீங்க. கூட்டத்ல நின்னுக்கிட்டு நானும் பதில்க் கும்புடு போட்டேன். நீங்க கவனிச்சீங்களோ என்னமோ."

"நா கவனிச்சேன் கவனிச்சேன்."

"சும்மால்லாம் சொல்லாதீங்க சார். அந்தக் கூட்டத்ல நீங்க என்னப் பாத்திருக்க முடியாது. அன்னிக்கி ராத்திரி பொதுக்கூட்டம். டாக்டர் சுப்ரமண்யம் சுவாமி ஒங்கள ஆதரிச்சி இங்லீஷ்ல பேசினார். நீங்கதான் தமிழ்ல மொழிபெயர்ப்பு செஞ்சீங்க."

"ஆமா ஆமா. அப்பல்லாம் சுப்ரமண்யம் சுவாமி நல்ல மனுஷனா இருந்தார்."

"இப்பக் கூட அவர் நல்ல மனுஷன் தான் சார். தலைமறைவாயிருந்து பாளிமென்ட் எலக்ஷன்ல ஜெயிச்ச சாதனையாளராச்சே!"

"அதெல்லாம் காலாவதியாய்ப்போன சாதனை தம்பி. இப்ப அவர் செஞ்சிட்டிருக்கிற ஒரே நல்ல காரியம் இந்திராக் கட்சிக்கி எதிரா செயல்பட்டுட்டிருக்கிறது தான்."

"சக்திலிங்கம் சார், ஒங்கக்கிட்ட எனக்கு ரொம்பப் புடிச்ச ஐட்டம் சார் இது."

"எது தம்பி?"

"இந்திராக் கட்சி. ஒங்க வாயால இந்திராக் காங்கிரஸ்னு சொல்லவே மாட்டீங்க."

"எதுக்கு சொல்லணும் தம்பி? காங்கிரஸூக்கும் அந்தக் கட்சிக்கும் என்ன சம்மந்தம் இருக்கு? அந்தக் கட்சி எப்பவுமே இந்திராக் கட்சி தான். அந்தக் கட்சிக்கி எதிரா சுப்ரமண்யம் சுவாமி செயல்படறார்ங்கறது நல்ல விஷயம் தான். ஆனா பி ஜே பி க்கி ஆதரவால்ல இருக்கார் அவர்!"

"அது ஒரு மைனஸ் பாய்ன்ட் தான். ஆனா, நம்மப் பழைய ஜனதாக் கட்சியோட பெயரையும் ஏர் உழவன் சின்னத்தையும் இன்னும் உயிரோட வச்சிட்டிருக்காரே! அதோட, அதிகார வர்க்கத்தோட ஆஸிட் வீச்சால முகம் சிதைஞ்சி போன ஒரு பொம்பளையத் தனக்கு அடுத்த ஸ்தானத்ல வச்சிருக்கார். மதுரைல, முருகன் இட்லிக்கடைல அவர் பண்ணின சச்சரவை மட்டும் மறந்துட்டோம்னா சுப்ரமண்யம் சுவாமி ஒரு நல்ல மனுஷன். நல்ல அறிவாளி. சரி, சந்தான கிருஷ்ணன் சார், அடுத்தது ஒங்க டர்ண்."

"நீங்க என்ன தம்பி, எங்க மூணு பேரையும் பேட்டி எடுக்கறீங்களா?"

"அப்டிக் கூட வச்சிக்கலாம் சார். இப்ப நா ஒரு நாவல் எழுதிட்டிருக்கேன். அதுக்கு சில தகவல்கள் தேவப்படுது."

"பிரமாதம்! அடுத்த நாவலா!"

"அரசியல் நாவல்."

"அப்டிப் போடு. அப்ப எங்கப் பேர் எல்லாம் ஒங்க அரசியல் நாவல்ல அடிபடும்!"

"யாரையுமே விடறதாயில்ல சார். நாயனார்லயிருந்து நரேந்திர மோடி வரக்யும். சந்தான கிருஷ்ணன்லயிருந்து சோனியா காந்தி வரக்யும். சந்தான கிருஷ்ணன் சார், நீங்கக்கூட பெருந்தலைவர் காலத்லயிருந்தே கட்சில இருக்கீங்க."

"ஆமா தம்பி. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தப் பெருந்தலைவர் வாங்கின விவரம் கூட எனக்குத் தெரியும் அந்தக் காலத்ல தேனாம்பேட்டை கொலகாரன் பேட்டையாத்தான் இருந்தது. வீடுகளோ கடைகளோ கெடையாது. வெறும் தென்ன மரங்கள் தான். சட்டநாதக் கரையாளர் பேர்லயும் ஹிண்டு கஸ்தூரி ஐயங்கார் பேர்லயும் அந்த எடத்தத் தலைவர் வாங்கினார். இப்ப அது நம்மக் கைய விட்டுப் போயிருச்சி. அதே போலத்தான் சத்திய மூர்த்தி பவன். சத்திய மூர்த்தி பவன் மேல, இந்திராக் காங்கிரஸ் சார்பா பக்தவச்சலம் கேஸ் போட்ட போது, எதுத்து வாதாடின மூணு வக்கீல்கள்ள நானும் ஒருத்தன். கேஸ் தோத்துப் போச்சி. சத்திய மூர்த்தி பவன் இந்திராக் காங்கிரஸ்க்குப் போயிரிச்சி. கூடவே, பா ராமச்சந்திரனும் போய்ட்டார்."

"மெட்ராஸ்க்கு வந்த புதுசுல நம்மக் கட்சி ஊழியர் கூட்டங்கள்ள ஒங்கப் பேச்சக் கேட்டிருக்கேன். பொதுக் கூட்டங்கள்ள ஒங்கப் பேச்சக் கேட்டதில்ல. ஆனா ஒங்களப் பத்திப் பெருமையான ஒரு விஷயம் கேள்விப் பட்டிருக்கேன். பொதுக்கூட்டங்கள்ள பேசறதுக்கு, வெளியூர்க் கூட்டங்களுக்குக்கூட, கட்சிக்காரங்கட்ட நீங்க ஒரு பைசா வாங்க மாட்டீங்களாம். அதனால ஒங்க மேல எனக்கு ரொம்ப மரியாத சார். ஒங்க மேல மரியாத ரொம்பக் கூடிப் போற மாதிரி இன்னொரு விஷயமும் நடந்தது."

"என்ன விஷயம் தம்பி?"

"மணியனும் நீங்களும் இணை பிரியாத தோழர்கள்னு சொல்லுவாங்க. ஆனா, மணியன் நம்மக் கட்சிய விட்டுப் போனப்ப நீங்க அவர் கூடப் போகல."

"தோழமைக்கு மேல கொள்கைன்னு ஒண்ணு இருக்கில்லியா தம்பி! அவர் நம்மக் கட்சிய விட்டுட்டு இந்திராக் காங்கிரஸ்க்கு, மன்னிக்கணும், இந்திராக் கட்சிக்கிப் போனார். அவர் பின்னால நா அந்தக் கட்சிக்கிப் போக முடியுமா? மணியன் மட்டுமா போனார்? கருப்பையா கூடக் கட்சிய விட்டுப் போனார். பிற்பாடு திராவிடக் கட்சிக்குப் போய் எம் எல் ஏ வாக் கூட ஆனார். சமீபத்ல கூட அவர் வீட்டுக்கு நா போயிருந்தேன் தம்பி. வீட்டு ஹால்ல திராவிடத் தலைவர்கள், தலைவிப் படமெல்லாம் தொங்கிட்டிருந்துச்சு. மொரார்ஜி தேசாய்ப் படமும் காமராஜர் படமும் அலங்கரிச்சிட்டிருந்த சொவத்ல யார் யார்ப் படமெல்லாம் தொங்குதே கருப்பையான்னு அவர் மூஞ்சிக்கி நேராவே கேட்டேன்."

"மூஞ்சில ஒரு குத்து விட்ட மாதிரிக் கேட்டீங்க. இன்னிக்கி ஒங்கள நா பேட்டியெடுக்காம இருந்திருந்தா, இந்த மாதிரி நாக் அவுட்டெல்லாம் வெளியவே வந்திருக்காது சார். இந்த பேட்டிக்காக எனக்கு நானே சபாஷ் போட்டுக்கணும்னு தோணுது. சபாஷ், சரியான பேட்டி! சரி, நீங்க மூஞ்சிக்கி நேராவே கேட்டதுக்குக் கருப்பையா என்ன பதில் சொன்னார் சார்?"

"என்ன சொல்லுவார்? மொகத்தத் தொடச்சிக்கிட்டார். இத்தனக்யும், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதில செழியன் நம்மக் கட்சி சார்பாப் போட்டியிட்டப்ப, நானும் கருப்பையாவும் ஒரே மேடைல பேசியிருக்கோம்."

"செழியன எதுத்து நின்னது வைஜயந்தி மாலால்ல?"

"ஆமா. வைஜயந்தி மாலா தான். அந்தம்மாதான் ஜெயிச்சது. அப்ப இந்திராக் கட்சி. இப்ப பி ஜே பி."

வைஜயந்தி மாலா.

வைஜயந்தி மாலாவின் தேன் நிலவு திரைப்படத்தை விழுந்து விழுந்து பார்த்திருக்கிறேன். அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தில், திரும்பத் திரும்பத் தேன் நிலவு என்றொரு சிறுகதை கூட கணையாழியில் எழுதியிருக்கிறேன். இரும்புத் திரையிலும், பார்த்திபன் கனவிலும், நயா தவ்ரிலும், மது மதியிலும் சின்ன்ன்ன வயசிலேயே அந்தப் பழுதில்லா அழகைப் பார்த்து மெய் மறந்திருக்கிறேன்.

வஞ்சிக்கோட்டை வாலிபனில், பத்மினியும் வைஜயந்தி மாலாவும் ஆடுகிற "சபாஷ் சரியான போட்டி" பரத நாட்டியத்தில், கடவுளே வைஜயந்தி மாலா ஜெயிக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்திருக்கிறேன். ஆனால் விஷயம் என்னவென்றால், படப்பிடிப்புக்கு வந்திருந்த ரெண்டு நடிகைகளின் அம்மாக்களும், தன்னுடைய மகள் ஜெயிக்கிற மாதிரி தான் முடிவு அமைய வேண்டும் என்று அடம்பிடிக்க, வேறு வழியில்லாமல் போட்டி டிராவில் முடிக்கப்பட்டு விட்டது.

என்னுடைய வேண்டுதல் எல்லாம் வீணாய்ப் போய்விட்டது.

சினிமாவில் சாதித்ததைப் பார்க்கையில் வைஜயந்தி மாலா அரசியலில் சாதித்தது எதுவுமே இல்லை.

அப்படியானால் அரசியல் எதற்கு?

ரெண்டாவது அகில உலக அழகிக்கு அரசியல் தேவையா?

இரு இரு, வைஜயந்தி மாலா ரெண்டாவது அகில உலக அழகியா?

அப்படியானால், முதல் அகில உலக அழகி?

ஊகிக்க முடிகிறதா என்று பாருங்க, முடியவில்லையென்றால் கடந்த சில அத்தியாயங்களை புரட்டிப் பாருங்க!

(தொடர்வேன்)

About The Author