முன்வரிசையிலிருந்து தாடியைக் கோதிக் கொண்டிருந்த கனவான்களெல்லாம், கோதலை நிலுவையில் வைத்து விட்டுத் தொப்பியைக் கழட்டி மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டார்கள்.
கொலகாரக் கொடும் பாவிகளா, கொறை தீக்கப் போறோம்னு யார வேய் கோட்டிக்காரனாக்குதீக!
வெலவெலத்துப் போனார் இல கணேசன். "எங்க மேடைய நீங்க துஷ்பிரயோகம் பண்ணீட்டீங்க" என்று பொருமினார்.
நானாவா வந்தேன்? நீங்க தானேஜி வரவேற்புக் குடுத்தீக!
தேவநேசனுக்குப் பாவம் செம டோஸ் விழுந்திருக்கும். ஆனால் அவன் ஒரு முக்கல் முனகலை வெளிப்படுத்தவில்லை. நல்ல பையன். என்னுடைய ‘துஷ்பிரயோகத்தை’ ஸ்போர்ட்டிவ்வாய் எடுத்துக் கொண்டான்.
ஆனால் அதற்குப்பிறகு என்னோடு அரசியல் பேசுவதை நிறுத்திக் கொண்டான்.
மூணு வாரங்களுக்கு முன்பு தொலைபேசியில் என்னிடம் ஒரு விண்ணப்பம் வைக்கும் வரை.
"ஒனக்கு ஒரு இ மெய்ல் வந்திருக்குமே, பாத்தியாடா?" என்றான்.
"மெய்ல் அனுப்பி ரெண்டு வாரமாச்சி. நீ ரிப்ளை பண்ணுவேன்னு நெனச்சேன்."
"ரோட்டரி க்ளப் மேட்டரா?"
"ரோட்டரி மேட்டர் இல்லடா, நரேந்திர மோடியப்பத்தி."
"அந்த ஆளப்பத்தி எனக்கெதுக்குடா மெய்ல் அனுப்புற?"
"விஷயம் இருக்கு. நரேந்திர மோடிய நாங்க பிரதம மந்திரியாக்கப் போறோம்."
"குஜராத் கொடுமைகள அகில இந்தியாவுக்கும் விஸ்தரிக்க சதித் திட்டம் போட்டுட்டீங்க."
"நீ பழசையே நெனச்சீட்டிருக்க."
"மறக்கக் கூடிய பழசாடா அது?"
"மறக்க முடியாததுன்னு எதுவுமே கெடையாதுடா. அந்த நினைவுகள்ளயிருந்து விடுபட்டு வா. வா, வந்து புதிய பாரதத்தப் பார். இந்தியன் ஒவ்வொருவனுக்கும் இப்ப ஒரு முக்கியமான கடமை இருக்கு."
"நரேந்திர மோடிய வீட்டுக்கு அனுப்பற கடமை தானே? நா ரெடி."
"அதில்லடா இது சீரியஸ் சப்ஜெக்ட். டைம் மேகஸின் ஒரு சர்வே நடத்தி, உலகத்தின் சக்தி வாய்ந்த மனிதர்கள்னு ஒரு லிஸ்ட் தயார் பண்ணிட்டிருக்கு. அந்த லிஸ்ட்ல நரேந்திர மோடி பேரும் வந்தே ஆகணும். அப்பத்தான் அவர் பிரதமர் ஆகற வாய்ப்பு பிரகாசமாகும். அதனால…"
"அதனால?"
"நரேந்திர மோடிக்கி சாதகமாக் கருத்துக் கணிப்புல ஓட்டுப்போடணும், நானும் நீயும்"
"நோ வே. அதுக்கு வேற ஆளப் பார்."
"உச்சாணிக் கொம்புலயே நிக்கிறயேடா, கொஞ்சம் கீழ எறங்கி வா. நீ முந்தி பாத்த நரேந்திர மோடி இல்ல. இப்ப அவர் ரொம்ப மாறிட்டார்."
"சொல்லவேயில்ல?"
"அதான் இப்ப சொல்றேன்ல, கேட்டுக்க. இப்ப இருக்கிற நரேந்திர மோடி, ரிஃபைன் ஆனவர். புது மனுஷன். முஸ்லிம்களுக்கு நண்பன். மத நல்லிணக்கத் தூதுவர்."
"இதெல்லாம் பேப்பர்ல போட்ருந்துச்சு. புதுசா ஏதாவது இருந்தா சொல்லு."
"பேப்பர்ல போட்ருந்துச்சா? இதெல்லாம் ஐயாவோட சொந்தச் சரக்குடா. பேப்பர்ல எப்டிப் போடுவான்!"
"இல்லடா, பேப்பர்ல போட்ருந்தான்."
"நெஜம்மாவா! என்னன்னு போட்ருந்தான்?"
"அஹ்மதாபாத்ல…."
"அஹ்மதாபாத்ல?"
"ஓநாய் ஒண்ணு வெஜிட்டேரியனா மாறிருச்சின்னு போட்ருந்தான்."
****
கட்சி ஆஃபீஸில் எட்டிப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே, போய் எட்டிப் பார்த்து விட்டு வருவோம் என்று கைனட்டிக் ஹோண்டாவை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
போகிற வழியில், ப்ரஃபஷனல் கூரியரில் ஒரு வேலை இருக்கிறது. நம்ம ஆன்ட்டி – ஸ்மோக்கிங் நாவலின் பிரதிகளை நண்பர்கள் சிலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் போய்க் கொண்டிருந்த போது, சாலையோரமாய் நின்று கொண்டிருந்த ஒருவர் தம்ஸ் அப் காட்டினார்.
வாகனத்தை ஓரங்கட்டினேன்.
"சார், எங்க வரக்யும் போறீங்க" என்று என்னை சமீபித்தார்.
"நீங்கஎங்கபோகணும்னுசொல்லுங்க, டிராப் பண்ணிட்டுப் போறேன்" என்றேன்.
"நா ரொம்ப தூரம் போகணும் சார்" என்று தயங்கினார்.
"மவுன்ட் ரோடு."
நானும் மவுன்ட் ரோடு மார்க்கமாய்த்தான் கட்சி ஆஃபீஸக்குப் போகவேண்டும். ஆனால் அதற்கு முன்னால் இங்கே அண்ணா நகரில் கூரியர் ஆஃபீஸýக்குப் போகவேண்டுமே! பரவாயில்லை. கட்சி ஆஃபீஸிலிருந்துத் திரும்பி வருகிறபோது கூரியர் பண்ணிக் கொள்ளலாம்.
"ஏறிக்கோங்க சார். மவுன்ட் ரோடு வழியாத்தான் நானும் போறேன்."
"ரொம்பத் தாங்ஸ் சார்" என்று ரொம்ப சந்தோஷமாய் அவர் பின்னால் தொற்றிக் கொண்டார்.
"பீக் அவர்ல பஸ்ùஸல்லாம் ஃபுல்லா வருது. அடிச்சிப் புடிச்சிட்டு ஏற முடியல. நானும் ஒரு இருவது நிமிஷமா எல்லா ட்டூ வீலருக்கும் கை காட்டிட்டிருக்கேன், யாருமே நிறுத்தல. புண்ணியவான் நீங்க தான் நிறுத்தினீங்க. ரொம்ப ரொம்ப நன்றி சார்."
காலை வேளையில் ஒரு புண்ணிய காரியம் செய்த திருப்தியோடு அவரை ஸ்பென்ஸர் ஸிக்னலில் இறக்கி விட்டு விட்டு நம்மப் பார்ட்டி ஆஃபீஸுக்குப் போனால் அங்கே ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது.
திருநெல்வேலிக்கார மோத்திலால் அங்கே இருந்தார். அவரோடு தூத்துக்குடி சக்திலிங்கமும், தி நகர் சந்தான கிருஷ்ணனும். மூன்று பேருமே நம்மக் கட்சிக் கட்டடத்தைத் தாங்கி நிற்கிற உறுதியான தூண்கள். சோதனைக் காலங்களில் மாநிலத் தலைவருக்குப் பக்கபலமாயிருக்கிற தானைத் தலைவர்கள். மூன்று பேரையும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஒரு சேரப் பார்த்தது ரொம்ப சந்தோஷமாயிருந்தது.
முன்னே பின்னே பார்த்திராத யாரோ ஒரு மதறாஸிக்கு மவுன்ட் ரோடு வரை லிஃப்ட் கொடுத்ததற்கு இறைவன் இன்ஸ்ட்டன்ட்டாய்த் தந்திருக்கிற வெகுமதி.
"என்ன சார், நீங்க மூணுபேரும் ஒண்ணா வந்து ஒக்காந்திருக்கீங்க!" என்று என் மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தினேன்.
"ஒரு எங்க்கொயரிக்காக வந்தோம் தம்பி" என்றார் மோத்திலால்.
"ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுல எங்க மூணு பேத்தையும் நம்ம மாநிலத் தலைவர் போட்ருக்கார்ல்லா, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுல இன்னிக்கி ஒரு எங்க்கொயரி."
"யார் மேல எங்க்கொயரி சார்?"
"புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மேல ஒரு புகார் வந்திருக்கு, அதுக்குத்தான் எங்க்கொயரி."
"அப்ப நா கௌம்பறேன் சார்."
"என்ன, வந்தவொடனக் கௌம்புதேங்கீக? ஒக்காருங்க. நாம சந்திச்சி ரொம்ப நாளாச்சே தம்பி."
"ஆனா சார், நீங்க எங்க்கொயரிக்காக வந்திருக்கீங்க…"
"இல்ல தம்பி, அந்த மாவட்டத் தலைவர் வரலியாம். வரலன்னு லெட்டர் போட்ருக்கார். சங்கடப்படாம நீங்க எங்கக் கூட இருக்கலாம்." என்று மோத்திலால் என்னை உற்சாகப் படுத்த, சக்திலிங்கம் உற்சாகங் குன்றிப் பேசினார்.
"பாருங்களேன், நாம மூணு வக்கீல்களும் இன்னிக்கிக் கோர்ட் வேலய வுட்டுப்புட்டு இங்க வந்து ஒக்காந்திருக்கோம். இந்த மனுஷனுக்காக ஊர் விட்டு ஊர் வந்திருக்கோம். இந்த ஆள் வரலன்னு லெட்டர் போட்டுட்டு நம்மப் பொழப்பக் கெடுத்துட்டார் பாருங்க."
சக்திலிங்கத்துடன் சேர்ந்து சந்தான கிருஷ்ணனும், பிழைப்பு கெட்டுப் போனதற்காக வருந்திவிட்டு ஒரு சந்தேகத்தை முன்வைத்தார்.
"இந்த ஆளும் அந்த மூவரணியோட கட்டுப்பாட்ல இருப்பாரோ?"
சந்தான கிருஷ்ணனின் சந்தேகத்தை சக்திலிங்கம் சாந்தப் படுத்தினார்.
"மூவரணிங்கறதெல்லாம் சும்மா ஒரு மாயை தாங்க. இது நம்மக் கட்சிக்கி ஒரு தற்காலிகமான பின்னடைவு தான். இப்ப சண்டித்தனம் பண்ணிட்டிருக்கிறவங்கல்லாம் காலப்போக்ல சரியா வந்துருவாங்க. காலை வாரி விடறது, முதுகுல குத்தறது, தலைமைக்கித் துரோகம் பண்றது இந்த மாதிரி வேலையெல்லாம் நம்மக் கட்சிக்காரனுக்குத் தெரியவே தெரியாது."
சக்திலிங்கத்தின் நன்னம்பிக்கை சிந்தனை நமக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு.
மற்ற ரெண்டு தலைவர்களுக்கும் கூட அது பிடித்துப் போனதை அவர்களுடைய முக மலர்ச்சி காட்டியது.
"நீங்க சொல்ற மாதிரி நல்லது நடந்தா எல்லாருக்கும் சந்தோஷம் தான் சார். "என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் மோத்திலால்.
"சரி, அந்த விஷயத்த வுடுங்க. நம்ம சிறுபான்மையர்ப் பிரிவுத் தலைவர் கம் எழுத்தாளர ரொம்ப நாளக்யப்புறம் பாக்கறோம். அவர்ட்ட பேசிட்டிருப்போம். தம்பி, இப்பல்லாம் குமுதம், ஆனந்த விகடன்ல ஒங்கக் கதைகளப் பாக்கவே முடியலியே, எழுதறத நிப்பாட்டிட்டீகளா?"
"எழுதறத நிப்பாட்ட முடியுமா சார்? எழுதிட்டுத்தானிருக்கேன். குமுதம், ஆனந்த விகடன்ல எழுதறத மட்டும் நிப்பாட்டிட்டேன்."
"ஐயையோ, ஏன் தம்பி? எங்கக் கண்ல படற பத்திரிகைகள் அது ரெண்டு தான்."
"ஆனா, அவங்கக் கண்ல என்னப் போல எழுத்தாளர் கள்ளாம் இப்பப் படறதில்ல சார். பேசும் படம்னு முந்தி ஒரு சினிமாப் பத்திரிகை வந்தது தெரியுமா?"
"ஆமா. ஆனா, அது நின்னு போச்சு போலயிருக்கே?"
"அது நின்னு போச்சு. அதனால குமுதம், ஆனந்த விகடனெல்லாம் இப்பப் பேசும் படமா மாறிருச்சு. சினிமா சமாச்சாரங்களப் போட்டா அவங்களுக்குப் பத்திரிகை வியாபாரம் நடக்குது. என்னப் போல எழுத்தாளர்கள் அவங்களுக்குத் தேவையில்லாமப் போய்ட்டாங்க. ரொம்ப அலட்சியப் படுத்த ஆரம்பிச்சாங்க. சன்மானம் தர்றாங்கங் கறதுக்காகத் தன்மானத்த இழக்க முடியுமா சார்! அந்த ரெண்டு பத்திரிகையோடயும் நா சண்ட போட்டுக்கிட்டேன். போங்கடான்னு திட்டி ரெண்டுக்கும் லெட்டர் எழுதிப் போட்டுட்டு நா நூறு சதவீதம் இலக்கியப் பத்திரிகைகளுக்குப் போய்ட்டேன்."
"நம்மக் கட்சிக்காரன் மானஸ்தன்னு காட்டிட்டீக. வெரிகுட் தம்பி. ஆனா, ஒங்க இலக்கியப் பத்திரிகைங்கல்லாம் எங்களுக்கு வாசிக்கக் கெடக்யாது. நீங்க அனுப்பிச்சி வச்சீகன்னா ஒங்க வாசகர்கள் நாங்க அப்பப்ப ஒங்களப் படிச்சிக்குவோம்லா?"
மோத்திலால் சொன்னதைக் கேட்டதும் எனக்கு மூளைக்குள்ளே ஒரு மத்தாப்பு.
"கொஞ்சம் இருங்க சார், இதோ வந்துட்டேன்" என்று கீழே ஓடினேன். ஸ்கூட்டரின்
கூடையிலிருந்து நம்மப் புகை மறுப்பு நாவல் பிரதிகள் மூன்றை எடுத்துக் கொண்டுத் திரும்பி வந்தேன்.
(தொடர்வேன்)
“