சிபி (18)

எத்திராஜன், எம் எல் ஏ எலக்ஷனுக்கு நின்ற போது நம்மக் கைவசம் பிஸினஸ் இருந்தது, கரன்ஸி இருந்தது, கட்சியில் ஒற்றுமை இருந்தது.

பெரிய சைஸ் கட்சிக் கொடியைக் காரில் கட்டிக்கொண்டு எத்திராஜனோடு தேர்தல் பிரச்சாரத்துக்குப் போய்விட்டு அண்ணா நகருக்குத் திரும்பி வருகையில், நாசூக்காய் உடையணிந்த நாலைந்து நபர்கள் ஒரு காரில் வந்திறங்கிப் பரிதாபமாய்ப் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்கப் பாவமாயிருந்தது.

பாரதிய ஜனதாக் கட்சிப் போஸ்டர்கள். இவர்களெல்லாம் எந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டி முடித்து, தேர்தலில் நின்று ஜெயித்து, தமிழ் நாட்டில் காலூன்றப் போகிறார்கள் என்று நான் சிரித்துக் கொண்டிருந்தது மிஸ்ஃபயர் ஆகிவிட்டது.

மதச்சார்பின்மை, மதச்சார்பின்மை என்று நாங்கள் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்க, ஹிந்துத்வா, ஹிந்துத்வா என்று அவர்கள் உரக்கக் கூவினார்கள், கூட்டம் சேர்த்தார்கள், சட்டசபைக்குள் புகுந்தார்கள், குஜராத்தில் மாறி மாறி மந்திரிசபை அமைத்தார்கள். மத்தியில் ஆட்சியைப் பிடித்த அசம்பாவிதமும் நடந்தது.

அதைவிடப் பெரிய அசம்பாவிதம் தமிழ்நாட்டில் நடந்தது. நம்ம சிறுபான்மையர்ப் பிரிவில் மாநிலப் பொதுச் செயலாளராயிருந்த நம்ம தோஸ்த் தேவநேசன், ஹிந்துத்வா மேல் காதல் கொண்டு பா ஜ க வுக்குப் போய் விட்டான்.

அவன் போவதற்கு சில மாதங்கள் முந்தி தான் அவனும் நானும் சைதாப்பேட்டைப் போலீஸ் அஸிஸ்ட்டன்ட் கமிஷனரைப் போய்ப் பார்த்து அனுமதி வாங்கி வந்திருந்தோம்.

என்ன அனுமதி?

நம்மக் கட்சி ஊர்வலத்துக்கு அனுமதி.

என்ன ஊர்வலம்?

சிறுபான்மை முஸ்லிம் மக்களைக் கொன்று குவித்த குஜராத் பா ஜ க அரசைக் கலைக்கக் கோரிக் குடியரசுத் தலைவருக்கு ஒரு விண்ணப்பத்துடன் கவர்னர் மாளிகைக்கு ஊர்வலம்.

மஹாத்மா பிறந்த புண்ணிய மண்ணில் கோட்சேக்களின் கொடுங்கோலாட்சியா! என்று வாசகந்தாங்கிய பேனரை, ஒரு முனையில் தேவநேசனும் மறுமுனையில் நானும் ஏந்திக் கொண்டு நடந்தோம். சைதாப்பேட்டையும் கிண்டியும் ஸ்தம்பித்துப் போயின.

கவர்னர் மாளிகைக்கு முன்னே ஊர்வலம் நிறுத்தப்பட்டு, அன்றைய மாநிலத் தலைவரோடு தேவநேசனும் நானும் போலீஸ் வாகனத்தில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு, ஆளுநரை சந்தித்து மனுக் கொடுத்து விட்டு வந்தோம்.

நாங்கள் மனுக் கொடுத்து ஒண்ணும் ஆகவில்லை, இனப்படுகொலை புரிந்த குஜராத் அரசு, நரேந்திர மோடியின் தலைமையில் முன்னிலும் அமோகமாக இன்றளவும் ஆட்சி புரிந்து கொண்டு தானிருக்கிறது என்பதெல்லாம் நிரந்தர நெருடல்களாயிருந்தாலும், ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு தேவநேசனும் நானும் போயிருந்த போது அந்த சைதாப்பேட்டை ஏ ஸி சொன்ன இதமான வார்த்தைகள் இன்னும் இதயத்தில் படிந்திருக்கின்றன.

"ஒங்கக் கட்சியப் பத்தி எனக்குத் தெரியாதா சார்? நல்லவங்க நெறைய இருக்கிற கட்சி. நாணயமான கட்சி. அமைதியான கட்சி. ஊர்வலத்ல ஆர்ப்பாட்டம் அராஜகமெல்லாம் பண்ணமாட்டீங்க. பஸ் மேலக் கல்லெறியல்லாம் ஒங்களுக்குத் தெரியவே தெரியாது. ஒங்க ஊர்வலத்துக்குப் பர்மிஷன் குடுக்க எனக்கு ஆட்சேபணையேக் கெடையாது. ஆல் தி பெஸ்ட்."

இப்படிப்பட்ட அழகான அரசியல் கட்சியை விட்டுவிட்டு ஓடிப் போய்விட்டாயே நண்பா என்று தேவநேசனைக் குறித்து வருத்தம் இருந்தாலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு எங்கள் தோழமை தொடர்ந்து கொண்டு தானிருந்தது. ரெண்டு பேரும் இணைந்து சிறு சிறு மேடைகளில் இனிமையான பழைய சினிமாப் பாடல்களைப் பாடிக் கொண்டு தானிருந்தோம்.

*****

ஜவஹர்லால் நேரு உள்ளரங்கம். மெட்ராஸ் மவுன்ட் ரோட்டரி சங்கத்தின் மெகா இசை நிகழ்ச்சி.

ரெண்டாயிரம், ரெண்டாயிரத்தைநூறு இசை ரசிகர்களுக்கு முன்னிலையில், லக்ஷ்மண் ஸ்ருதி கலைஞர்கள் இசை முழங்குகிறார்கள்.

அரங்கத்தின் முன் வரிசையில், உர்து, தெலுங்கு, தமிழ்க் கவிஞரும் பாடகருமான பி பி ஸ்ரீநிவாஸும், சினிமா இசையின் சர்வாதிகாரி டி எம் சவுந்தர ராஜனும்.

அரங்கத்தின் முன் வரிசையில் பாடகர்கள் என்றால், மேடையில் யார்?

மேடையில், ஹ, நானும் தேவநேசனும்.

நல்லவன், எனக்கு நானே நல்லவன்,
சொல்லிலும் செயலிலும் நல்லவன்.

தேவநேசன் பி பி எஸ், நான் டி எம் எஸ். படித்தால் மட்டும் போதுமா படத்துக்காக, நாற்பத்தஞ்சு வருடங்களுக்கு முன்னால் பி பி ஸ்ரீநிவாஸும், டி எம் சவுந்தர ராஜனும் பாடிய அந்த ஸூப்பர் ஹிட் பாடலை, அதே மேகலோகப் பாடகர்களுக்கு முன்னால் நாங்கள் ரெண்டு பேரும் மேடையில் பாடிக் கை தட்டல் வாங்கியது, பாடி முடித்த பிறகு, டி எம் எஸ்ஸிடம், "ஐயா நா நல்லா பாடினேனா?’ என்று கேட்டு, "ரொம்ப நல்லாப் பாடினீங்க தம்பி" என்று பாராட்டுப் பெற்றது எல்லாம், நூறு வருடத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு கிலோ மீட்டர்க் கல் இல்லையா!

அரங்கத்துக்குள்ளே, வி ஐ பி வரிசையில் ராண்டார் கய் இருந்தாரா என்று தெரியவில்லை. இருந்திருந்தால், இன்னும் அறுபது அறுபத்தஞ்சு வருடங்கள் கழித்து, ஒரு ஹிண்டு ஸண்டே மேகஸினில் இதைப்பற்றி எழுதுவார்.

கல்யாண வரவேற்புகளில் கரோக்கே பாடுவதற்கு தேவநேசனுக்கு வாய்ப்பு வருகிறபோது என்னையும் கூப்பிடுவான்.

பாடக் கூப்பிட்டவன், பேசவும் கூப்பிட்டதைத் தவிர்த்திருக்கலாம். கூப்பிட்டான்.

அவனுடைய பா ஜ க அலுவலகத்தில், அவனுடைய தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு முன்னால் பேசக் கூப்பிட்டான்.

குஜராத்தில் மட்டுமல்ல, டெல்லியிலும் கூட பா ஜ க ஆட்சி நடந்து கொண்டிருந்த வேதனைக் காலம் அது.

தமிழ் நாட்டு சிறுபான்மை மக்களின் குறைகளை, அவர்கள் வாயாலேயே சொல்லக்கேட்டு, இங்கே உள்ள லோக்கல் தலைவர்கள், தங்களுடைய டெல்லித் தலைவர்களுக்குத் தெரிவிப்பார்களாம். அந்த டெல்லித் தலைவர்கள் குறைகளையெல்லாம் களைந்து விடுவார்களாம்.

ஸெட் அப் செய்யப்பட்ட சில முஸ்லிம் கனவான்கள் தொப்பிகளோடும் தாடிகளோடும் வந்து, ஏஸி ஹாலில் மேடைக்கு முன்னே முன் வரிசையில் பணிவாய் உட்கார்ந் திருந்தார்கள்.

குறைகளைச் சொல்வதற்காக வந்ததாய்க் கருதப்பட்டவர்கள், பா ஜ க வின் ‘நிறைகளை’ ஒப்பித்து விட்டு மன நிறைவோடு உட்கார்ந்து தாடிகளைக் கோதிக் கொண்டிருந்த போது நான் பேச அழைக்கப்பட்டேன்.

ஸில்வஸ்டர் ஸ்டாலோனுடைய ராம்போ 3 படத்தில், ஆஃப்கானிஸ்தானில் முஜாஹிதீன் போராளிகளுக்கும் ரஷ்ய ஆக்கிரமிப்புப் படையினருக்கும் நடந்த போரில், ஆஃப்கான் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, ரஷ்யப் படையினர் சிசுக்களை எடுத்து நெருப்பில் போட்டதாக வசனமொன்று வரும். அந்தக் காட்சி படத்தில் காட்டப்படாது. ஆனால் அது போன்ற கொடிய காட்சிகள் குஜராத் வீதிகளில் நடந்தன.

நரேந்திர மோடியின் மதவாத அரசு, முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தூண்டி விட்ட அரசாங்க அராஜகத்தில் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவைப் பிடுங்கியெடுத்து நெருப்பில் வீசியெறிந்த கொடுமையை ஹிண்டுவில் படித்துக் கொதித்துப் போயிருந்தவன் நான். கண்களில் மரண பீதியோடு, கொலைகாரக் கும்பலை நோக்கிக் கும்பிட்டபடி அழுகிற முஸ்லிம் இளைஞனின் படத்தை இண்டியன் எக்ப்ரஸ்ஸில் பார்த்துத் துடித்துப் போயிருந்தவன் நான்.

இஷ்ரத் ஜஹாங் என்கிற பத்தொன்பது வயதுப் பெண்ணைத் தீவிர வாத முத்திரை குத்தி, ஒரு போலி எங்க்கவுன்ட்டரில் சுட்டுத் தள்ளியிருந்தார்கள். பெஸ்ட் பேக்கரியில், ஒரு பாவமுமறியாத பதினாலு முஸ்லிம் அப்பாவிகளைத் தீயிட்டுக் கருக்கியிருந்தார்கள்.

முன்னாள் குஜராத் பெண் (பெண்!) மந்திரி டாக்டர் (டாக்டர்!!) மாயாபென் கோட் நானி – நரேந்திர மோடி – பஜ்ரங் தள் கூட்டுத் தலைமையால் தூண்டிவிடப்பட்ட ரவுடிக் கும்பலால், நரோடா – பாட்டியாவில் 97 முஸ்லிம்கள் கதறக் கதறக் குதறப் பட்டுக் கொல்லப் பட்டிருந்தார்கள். குழந்தைகள் கூட கொன்று குவிக்கப்பட்டிருந்தார்கள். பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டுக் கொளுத்தப் பட்டிருந்தார்கள்.

பஜ்ரங் தள்ளுக்குத் தலைவனும், சாத்தானுக்கு அடியாளுமான பாபு பஜ்ரங்கி என்கிற படு பாதகன், நிர்வாணப் படுத்தப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் பிறப்புறுப் புக்குள்ளே கையை நுழைத்துக் கருவை உருவியெடுத்து நெருப்பில் எறிந்த கொடூரச் செயலில் கையும் கருவுமாய்ப் பிடிபட்டிருந்தான்.

அதற்குக் கொஞ்சம் முந்தி தான் கிரஹாம் ஸ்டீன்ஸ் என்கிற கிறிஸ்தவ மத போதகரை ஒரிஸவில் குடும்பத்தோடு எரித்துக் கொன்றிருந்தார்கள், சங் பரிவார் சண்டாளர்கள்.

தெரியாத்தனமாய் என்னுடைய கையில் மைக்கைக் கொடுத்துத் தொலைத்து விட்டார்கள்.

பா ஜ க குழுமத்தின் எல்லாக் கொடுங்கோன்மைகளையும் மனதில் இருத்தி, உள்மன வெப்பத்தையெல்லாம் உதட்டுக்குக் கொண்டு வந்து, மைக்கில் விளாசு விளாசென்று நான் விளாசினதில் மேடையிலிருந்த தலைவர்களெல்லாம் வியர்த்துப் போனார்கள், ஏஸிக் குளிரிலும்.

(தொடர்வேன்)

About The Author