சிவப்பிரகாசம் தான் அந்தத் தேர்தலில் ஜெயித்தார்.
ஜனதாக் கட்சி – அ.தி.மு.க. கூட்டணிக்குப் பெரிய தோல்வி.
தொடர்ந்து, எம் ஜி ஆரின் ஆட்சி இந்திரா காந்தியால் கலைக்கப்பட்டதும், ஆட்சிக் கலைப்பைத் தொடர்ந்து வந்த சட்டசபைத் தேர்தலில், முன்னிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்ததும் எம் ஜி ஆருடைய மகத்தான வெற்றி வரலாறு.
அந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயித்து எம் எல் ஏ ஆனவர் தான் நம்ம மாநிலத் தலைவர்.
அன்றைக்கு எம் எல் ஏ ஆனதால் தான், எக்ஸ் எம் எல் ஏ ஆன பிறகும் கூட சென்னைக்கு வருகிற போது எம் எல் ஏ ஹாஸ்டலில் தங்க முடிந்தது.
எம் எல் ஏ ஹாஸ்டல் இடிபடுகிற வரைக்கும்.
அப்படி, தலைவர் ஹாஸ்டலில் ஒருமுறை தங்கியிருந்த சமயம், மதிய உணவுக்குப் பிறகு, மாநிலத் தலைவரை டிராப் செய்வதற்கு எம் எல் ஏ ஹாஸ்டல் வளாகத்தில் பிரவேசித்து, ஹாஸ்டல் கட்டடத்துக்கு முன்னால் பிரேக் பிடித்த போது, “வணக்கம் தலைவர்” என்று ஒரு முகம் கார் ஜன்னலுக்குள் எட்டிப் பார்த்தது. அந்த முகத்தைப் பார்த்ததும் நம்மத் தலைவருடைய முகம் பிரகாசமடைந்தது.
"வணக்கம் வணக்கம். வாங்க வாங்க" என்று கார்க் கதவைத் திறந்து கொண்டு இறங்கப் போகையில், அந்த நபரே கதவைத் திறந்து விட்டுக் கரங்குவித்தார்.
ஓர் அஞ்சு நிமிஷம் அளவளாவி விட்டுத் தலைவரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளி வாயிலை நோக்கி நடந்தார்.
"இவர் யார் தெரியுதா தம்பி?" என்றார் தலைவர், அவர் போன பின்னால்.
"இதுக்கு முந்தி பாத்திருக்கீங்களா?"
"பாத்ததில்லியே தலைவர். யார்?"
"இவர் ஒரு எக்ஸ் எம் பி. ரெண்டு டெர்ம் எம் பி யா இருந்தவர்."
"பேர் தலைவர்?"
"டி எஸ் ஏ சிவப்பிரகாசம்."
"டி எஸ் ஏ? சிவப்பிரகாசமா? திருநெல்வேலி எம் பி? என்ன தலைவர் இவர் இவ்ளோ ஸிம்ப்பிளா இருக்கார்!"
"அவர் எப்பவுமே ஸிம்ப்பிள் தான். ஒரு வித்யாசமான தி.மு.க.க் காரர். நல்ல மனுஷன்."
"பாத்தாலே தெரியுது தலைவர். அப்ப நா கௌம்பட்டுமா தலைவர்?"
"என்ன கௌம்பிட்டீங்க? ரூம்க்கு வந்துட்டுப் போங்க"
"நீங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க தலைவர். ஒரு சின்ன வேலயிருக்கு. நா வரணும்னா, ஃபோன் அடிங்க தலைவர், ஓடி வந்துருவேன்."
"நீங்க ஓடி வந்தாப் பிரயோஜனமில்ல. கார்ல வரணும்."
தலைவர் ஜோக் கடித்ததற்கு சிரித்து விட்டு, விடை பெற்றுக் கொண்டு விரைந்தேன்.
வெளி வாயிலில் வெளி வந்து இடது புறம் பார்வையைச் செலுத்தினால், டி எஸ் ஏ சிவப்பிரகாசம் சாலையோரமாய் நடந்து கொண்டிருந்தது தெரிந்தது. காரில் விரட்டினேன்.
கோடு போட்ட டி ஷர்ட், மடித்துக் கட்டிய வேஷ்டி.
ரெண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த ஓர் ஆளுங்கட்சிக்காரர், ரெண்டு மணி மதிய வெயிலில் மவுன்ட் ரோடை நோக்கி நடந்து போய்க்கொண்டிருக்கிறார்!
அவரை ஓவர்ட்டேக் செய்து காரை ஓரங்கட்டி இறங்கிக்கொண்டு கரங்குவித்தேன்.
"ஐயா வணக்கம்."
"தம்பி, எங்கேயோ எப்பவோ பாத்த மாதிரியிருக்கே?"
"எங்கயுமில்ல, எப்பவுமில்ல சார். இப்பத்தான் எட்டு நிமிஷத்துக்கு முந்தி எம் எல் ஏ ஹாஸ்டல்ல வச்சிப் பாத்தோம். எங்க மாநிலத் தலைவரோட நீங்க பேசிட்டிருந்தீங்களே சார்."
"ஓ, அந்தத் தம்பியா நீங்க! பச்சக் கலர்க் காரப் பாத்தும் ஞாபகம் வரல பாருங்க. வயசாயிட்டுருக்குல்லா."
"சார் எங்க போறீங்க?"
"எக்மோர் தம்பி. இப்டியே மவுன்ட் ரோட க்ராஸ் பண்ணிப் பொடிநடையாப் போயிருவேன்."
"எக்மோர் எவ்ளோ தூரம் இருக்கு சார்! வாங்க நா டிராப் ண்ணிர்றேன்."
"நடந்து பழகிருச்சி தம்பி. ஒங்களுக்கு எதுக்கு சிரமம். நா போயிருதேன்."
"நா அந்த வழியாத்தான் போறேன் சார். ஏறுங்க ப்ளீஸ்."
நான் கதவைத் திறக்க, அவர் ஏறிக் கொண்டார்.
"கார்லகொடி பறக்குதே, தம்பியும் அரசியல்ல இருக்கீகளா?"
"ஆமா சார். நம்ம மாநிலத் தலைவருக்குக் கீழ, சிறுபான்மையர்ப் பிரிவு மாநிலத் தலைவரா இருக்கேன்."
"ரொம்ப சந்தோஷம் தம்பி. ஒங்கத் தலைவர் இருக்காரே, தங்கமான மனுஷன்."
"இதையேத் தான் ஒங்களப் பத்தி அவர் சொன்னார்."
"நா என்ன தம்பி, சாதாரணமான பொலிட்டீஷியன். ஆனா ஒங்கத் தலைவர் ஒரு ஸ்டேட்ஸ்மேன். அதனால தான் அரசியல்ல அவர் ஷைன் பண்ணாமலேயே போய்ட்டார். அவர் ஓஹோன்னு வரணும் தம்பி."
"வருவார் சார். கட்டாயம் ஓஹோன்னு வருவார். கூடிய சீக்ரத்ல நம்மத் தமிழ் நாட்டுக்கே சீஃப் மினிஸ்டரா வரப் போறார் பாருங்க!"
"அப்டியா சொல்றீக?"
"என்ன சார் ஆச்சர்யப் படறீங்க? கட்டாயம் நடக்கப் போகுது பாருங்க. அதத்தான் நா கனவு கண்டுட்டிருக்கேன்."
"ஒங்கக் கனவு பலிக்கட்டும் தம்பி."
"ஒங்கள மாதிரி நல்லவங்களோட ஆசீர்வாதம் இருந்தா கண்டிப்பாப் பலிக்கும் சார்."
"அளவுக் கதிகமா என்னப் புகழ்றீங்க தம்பி."
"ஒரு காலத்ல ஒங்களப் பாத்துப் பிரமிச்சவன் சார் நா!"
"அப்டியா? என்னப் பாத்திருக்கீகளா?"
"நேர்ல பாத்ததில்ல. ஒங்கக் கட் அவுட்களப் பாத்திருக்கேன். பிரமாண்டமான படங்களப் பாத்திருக்கேன். திருநெல்வேலில, பாளையங்கோட்டைல. எம்பதாவது வருஷப் பாளிமென்ட் எலக்ஷன்ல."
"ஓ! சரி சரி."
"நீங்க ஆலடி அருணாவ எதுத்து நின்னீங்க. ஒங்களுக்குத்தான் ஆதரவு அதிகமா இருந்தது. நீங்க தான் ஜெயிச்சீங்க."
"ஆமா. ஜெயிச்சேன், ஜெயிச்சேன். அது ஒரு கனாக்காலம் தம்பி."
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனாக்காலம்.
இவருடைய கனாக்காலத்தில் மூழ்கிவிடப் போனவரை நான் மீட்டெடுத்தேன்.
"ஆனா சார்…"
"ஆனா என்ன தம்பி?"
"ஒரு விஷயம் நா சொன்னா நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது."
"சொல்லுங்க தம்பி."
"அந்த எலக்ஷன்ல நா ஆலடி அருணாவுக்கு ஆதரவா, ஒங்களுக்கு எதிரா வேல செஞ்சேன் சார்."
"இதுல தப்பா எடுத்துக்க என்ன தம்பி இருக்கு? அரசியல்ல இதெல்லாம் ரொம்ப சகஜம் தம்பி. ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?"
"எந்த விஷயம் சார்?"
"பிற்காலத்ல…"
"பிற்காலத்ல?"
"அதே ஆலடி அருணாவும் நானும்…"
"ஆலடி அருணாவும் நீங்களும்?"
"சம்மந்தியாய்ட்டோம் தம்பி!"
(தொடர்வேன்)
“