சிபி (13)

கொழும்புக்குத் திரும்பி, சந்தனவின் வீட்டில் சிங்களச் சாப்பாடு.

அதுவரை அவரை ஒரு சிங்களக் கிறிஸ்தவர் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, வீட்டு முகப்பிலிருந்த புத்தர் படத்தைப் பார்த்த பிறகு தான் புரிந்தது, அவர் புத்த மதத்தைச் சார்ந்தவர் என்று.

ஓ ஜீஸஸ்!

விடை பெற்றுக் கிளம்புகிறபோது, அவரோடு என்னுடைய பரவசத்தைப் பகிர்ந்து கொண்டேன்.

"மிஸ்டர் சந்தன, மதச்சார்பின்மைக்கு நீங்கள் ஒரு முறையான முன்னுதாரணம்."

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"நீங்கள் ஒரு பௌத்தர். உங்களுடைய நெருங்கிய நண்பர் சாந்தன் ஒரு ஹிந்து."

"சரி."

"நீங்கள் நூறு கிலோ மீற்றர் தொலைவிலிருக்கிற ஓர் ஊருக்கு, வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் பள்ளிவாசலுக்குக் கூட்டிக் கொண்டு போனீர்கள், உங்களுடைய காரில், ஒரு முஸ்லிமான என்னை."

"ஓ! அதுவும் சரி."

"இடைஞ்சல்கள் ஏற்படுகிற போதெல்லாம் உங்கள் புத்த பகவானிடம் முறையிடாமல் ஏசுநாதரை அழைக்கிறீர்கள் நீங்கள்."

"ஹோ ஹோ ஹோ. சரியாகச் சொன்னீர்கள், சரியாகச் சொன்னீர்கள். என்னைக் குறித்து எனக்கே கூட இப்போது பெருமையாயிருக்கிறது."

எனக்கும் பெருமையாய்த்தானிருந்தது அந்த மதச்சார்பற்ற மாமனிதரைக் குறித்து,டாட்டா நானோ ரக்ஸியில் சாந்தனோடு வெள்ளவத் தைக்குத் திரும்பி வருகிற வழியில் நினைத்துக் கொண்டே வந்தேன்.

நம்முடைய மதச்சார்பற்ற கட்சிக்கு இலங்கையில் ஒரு கிளை ஆரம்பிப்பதாயிருந்தால் இந்தச் சந்தனவை அகில இலங்கைத் தலைவராய்ப் போடலாம்.

மதச்சார்பின்மையில் இந்த பௌத்த சகோதரனுக்கு இருக்கிற ஈடுபாட்டில் ஒரு பின்னம் அளவுக்குக் கூட நம்ம மூவரணிப் பிரமுகர்களுக்கு இல்லையே!

இந்தச் சந்தனவை வைத்துத்தான் அவர்களுக்கெல்லாம்மதச்சார்பின்மையில் வகுப்பெடுக்க வேண்டும்.

இலங்கைக் கிளைக்குச் சந்தனவைத் தலைவராக்கிக் கட்சியை நன்றாய் வளர்த்து விட்டு விட்டால், தமிழ்நாட்டில் நம்ம மாநிலத் தலைவர் முதலமைச்சராய் பதவியேற்கிற அதே வேளையில், இன்ஷா அல்லா, இலங்கையில் சந்தன ஜனாதிபதி!

"என்ன, திடீரெண்டு சிரிக்கிறீங்கள்? என்ன பகிடி?"

"பகிடி ஒண்டுமில்லை சாந்தன், ஒரு கனவு."

"பகல்க் கனவே?"

"பலிக்கப் போற கனவு.. பாதியாவது பலிக்கும். கட்டாயம் பலிக்கும்."

"அருமையான மனிசர் நீங்கள். உங்கட கனவு நியாயமான கனவாத்தானிருக்கும். பலிக்க வேண்டிய கனவாத்தானிருக்கும். பலிக்கட்டும். வாழ்த்துக்கள்."

சாந்தனை யாழ்ப்பாணத்துக்கு பஸ்ஸேற்றி விட்ட பிறகு, எனக்கும் நாள் நெருங்கிவிட்டது, விமானமேறுவதற்கு.

மே மாதம் பத்தொன்பதாம் தேதி.

ஆகாயத்தில் போர் விமானங்களும் ஹெலிக்கொப்ரர்களும் குறுக்கும் நெடுக்குமாய்ப் பறந்து கொண்டிருந்தன. இலங்கை அரசு விடுதலைப்புலிகளை வெற்றி கொண்ட மூன்றாம் ஆண்டு வெற்றி விழா என்றார்கள். காலிமுகத் திடலில் கோலாகலக் கொண்டாட்டமாம். ஜனாதிபதி முன்னிலையில் முப்படைகள் அணிவகுப்பாம். டிவியில் மதியம் வரை ஒளிபரப்பினார்கள்.

யாழ்ப்பாணத்தில், சாந்தனோடு பணி புரிகிற செல்வியும், அவளைப் போல ஆயிரக்கணக்கான செல்விகளும் விதவைகளாக்கப்பட்ட தினத்துக்கு ஒரு விழா, ஒரு கொண்டாட்டம், ஓர் அணிவகுப்பு.

அவர்கள் அங்கே விழா எடுத்துக் கொண்டு இருக்க, என் பங்குக்கு நான் அந்த செல்விகளுக்காக விசேஷமாய் ஒரு பிரார்த்தனை செய்தேன்.

அடுத்த நாள் விமான நிலையத்துக்குப் போகிற வழியில், சாலை விதிகளை இதய சுத்தியோடு அனுசரிக்கிற வாகன ஓட்டிகளின் பண்பாடு திரும்பவும் காணக் கிடைத்தது.

குறிப்பாக, சாலையைக் கடக்கிற பாதசாரிகளுக்காக பிரேக் பிடித்து நின்று அவர்களுக்கு வழிவிடுகிற பெருந்தன்மை.

நம்ம சென்னையில், பாதசாரிகள் சாலையைக் கடப்பதென்பது ஒரு சாகசச் செயல்.

எந்த வாகனமாவது நின்று வழிவிடும் என்று பாதையோரம் நின்று நின்று பார்த்துப் பொறுமையிழந்து, சரி அதிரடியாய்க் குறுக்கே பாய்ந்து விடுவது என்று ஓர் எட்டு எடுத்து வைக்கிறவன் தொலைந்தான்.

ஹாண்கள் அலறோ அலறென்று அலறி அவனை அரை உயிராக்கிவிடும்.

"என்ன தைரியம்டா ஒனக்கு! ரோட க்ராஸ் பண்ணிருவியா நீ? ஒன்ன க்ராஸ் பண்ண விட்ருவோமா? மரியாதியா ப்ளாட்ஃபாம்ல ஏர்றியா, இல்ல காரேத்திக் கொல்லவா?"

நாலு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் இருக்கட்டும், ரெண்டு சக்கர வாகனங்கள் கூடப் பாதசாரியை மதிக்காது.

பிரேக் அடிக்க வேண்டிய நேரத்தில் ஹாண் அடிப்பது தான் தமிழ்ப் பண்பாடு. நானறிந்தவரையில், சென்னை மாநகராட்சி எல்லைக்குள்ளே, ஒரேயொரு நாலு சக்கர வாகனத்துக்குத்தான் பாதசாரிக்குப் பணிந்து போகிற பண்பாடு தெரிந்திருக்கிறது.

அது, ஹ, நம்ம வாகனம் தான்!

This car is pedestrian – friendly. Halts automatically when pedestrians attempt to cross the road. Please do not horn from behind என்று ஒரு கவர்ச்சியான வாசகம் DTP செய்யப்பட்டுப் பின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்தாலும், பின்னால் நின்று கொண்டு ஹாண் அடிக்கிற ஹிம்சாவாதிகள் தான் சென்னையில் நிறைய.

மூணு வயசு, நாலு வயசு குழந்தைப் பருவத்தில், ஸ்ட்டீரிங்கை இப்படி அப்படித் திருப்பினால் கார் ஓடும் என்று நான் நினைத்திருந்ததுண்டு. ஆனால், இன்னுங்கூட சில வயசுக்கு வந்த வாகன ஓட்டிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஹாண் அடித்தால் வண்டி ஓடும் என்று. ஸ்ட்டீரிங் இல்லாத, ஆக்ஸலரேட்டர் இல்லாத வாகனத்தைக் கூட ஓட்டி விடுவார்கள் ஆனால் ஹாண் இல்லாத வாகனத்தை இவர்களால் ஓட்ட முடியாது. அனாவசியத்துக்கு ஹாண் அடிக்கிற அனாச்சாரம், இந்தியாவையன்றி உலகத்தில் வேறு எந்த நாட்டிலுமே கிடையாது என்று உலகம் சுற்றும் வாலிபர்களும், வாலிபிகளும் சொல்கிறார்கள்.

இலங்கையில் கூட இந்த அனர்த்தம் கிடையாது. இலங்கையில், கடந்த எட்டு வருடங்களில் பாதசாரியொருவனோ ஒருத்தியோ சுதந்திரமாய் சாலையைக் கடக்கிறபோது ஒரு வேக வாகனம் வந்து இடித்துத் தள்ளியதாய்ப் பதிவு எதுவுமே இல்லை.

மன்னிக்க வேண்டும். சின்னதாய் ஒரு திருத்தம்.

கடந்த எட்டு வருட காலத்தில், ஒரேயொரு நாள், ஒரேயொரு முறை, ஒரேயொரு பாதசாரி பாதிப்புக்குள்ளானதாய் ரிக்கார்டுகள் சொல்கின்றனவாம்.

தேதி : 18. 01. 2006.

******

ஆங்கில மொழி ஒரு விசேஷமான மொழி. சிக்கனமாய் இருபத்தாறே இருபத்தாறு எழுத்துக்களை வைத்துக் கொண்டு வித்தைகள் செய்கிற மொழி.

ஆங்கிலம் ஒரு வில்லங்கமான மொழியும் கூட.

c என்கிற எழுத்தை ஸீ என்பார்கள்.

See என்று மூன்று எழுத்துக்கள் எழுதி, ஸீ என்பார்கள்.

Sea என்று எழுதி அதையும் ஸீ என்பார்கள்.

அதேபோல, T, Tee, Tea .

ட்சுனாமி என்று எழுதுவார்கள், சுனாமி என்று வாசிப்பார்கள்.

வோக்ஸ்வேகன் என்று எழுதுவார்கள், ஃபோக்ஸ்வேகன் என்று உச்சரிப்பார்கள்.

தி கிரேட் ரேஸ் என்றொரு திரைப்படம் வந்தது. தி ஸிக்ஸ்த் ரேஸ் என்றொரு புத்தகம் வந்தது. ரெண்டுமே ரேஸ் தான். ஆனால் ரெண்டு ரேஸ்களும் ஒன்றோடொன்று தொடர்பில்லாதவை. முன்னது பிரம்மாண்டமான பந்தயம். பின்னது ஆறாவது இனம்.

தி கிரேட் ரேஸ் படத்தில் நெடுந்தூரக் கார்ப் பந்தயம் நடக்கும். ஆண்கள், பெண்கள், வெள்ளைக்காரர்கள், கருப்பு இனத்தவர் எல்லோரும் பந்தயத்திலிருப்பார்கள். பந்தயத்தின் இறுதிக் கட்டத்தில் விபத்துக்கள் நடக்கும். விபத்தில், நீக்ரோ ஒருவர் தூக்கியெறியப் படுவார். தூக்கியெறியப்பட்ட நீக்ரோ, தரையைத் தொடுமுன், ஆப்ரஹாம் லிங்க்கனின் சிலையொன்று, அந்த நீக்ரோவைக் கைகளில் ஏந்திக் கொள்ளும்.

செத்துங் கொடுத்தான் சீதக்காதி என்கிற மாதிரி, சிலையான பின்னாலும் கருப்பனைக் காப்பாற்றினார் ஆப்ரஹாம் லிங்க்கன் என்று அமைந்த உணர்ச்சிகரமான காட்சி அது.
ஆப்ரஹாம் லிங்க்கனைப் போலவே கருப்பர்களின் சம உரிமைக்காகப் பாடுபட்டவர் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி என்பதாலோ என்னவோ, அந்த ரெண்டு
பேருக்குமிடையே பல தெய்வாதீனமான ஒற்றுமைகள்.

லிங்க்கனுக்கும் கென்னடிக்கும் சரியாய் நூறு வருட இடைவெளி.

லிங்க்கன் காங்கிரஸ் உறுப்பினராய்த் தேர்வு பெற்றது கி. பி 1846.

கென்னடி, 1946.

காங்கிரஸ்? ஆமாம் காங்கிரஸ் தான். ஆனால் இந்தியாவின் இந்திராக் காங்கிரஸ் இல்லை. அமெரிக்காவின் அசல் காங்கிரஸ்.

லிங்க்கன் ஜனாதிபதியானது 1860.

கென்னடி 1960.

ரெண்டு பேருமே தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஃபோர்டு என்கிற த்யேட்டரில் வைத்து லிங்க்கன் சுடப்பட்டார். ஃபோர்டு கம்ப்பெனி தயாரிப்பான லிங்க்கன் என்கிற காரில் வைத்துக் கென்னடி சுடப்பட்டார்.

லிங்கனுடைய செயலாளரின் பெயர் கென்னடி. கென்னடியுடைய செயலாளரின் பெயர் லிங்கன்.

லிங்கனைத் தொடர்ந்து ஜனாதிபதியானவரும், கென்னடியைத் தொடர்ந்து ஜனாதிபதியானவரும் ஒரே பெயரைக் கொண்டிருந்தார்கள்: ஜான்ஸன்.

முன்னவர் ஆண்ட்ரூ ஜான்ஸன், பின்னவர் லிண்டன் ஜான்ஸன்.

******

ஆப்ரஹாம் லிங்கனும் கென்னடியும் கருப்பர்களுக்காகப் பாடுபட்ட, வெள்ளையர் என்றால், கருப்பர்களுக்காகப் போராடி, சுடப்பட்டு மடிந்த கருப்பரொருவரும் இருந்தார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.

மதுரை ஸெயின்ட் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில் எஸ் எஸ் எல் ஸி படித்துக் கொண்டிருந்த போது, மாரல் இன்ஸ்ட்ரக்ஷன் வகுப்பு எடுத்த ஃபாதர் சொன்ன, மார்ட்டின் லூதர் கிங் அடக்குமுறைக்கு எதிராகப் பேசிய புரட்சி வசனங்கள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு எனக்கு நினைவிலிருக்கும்.

If you hurt us, do we not cry?
If you prick us, do we not bleed?
If you kill us, do we not die?
If you wrong us, shall we not revenge?

மார்ட்டின் லூதர் கிங் அன்றைக்கு செய்த உயிர்த் தியாகம்தான், இன்றைக்கு வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பர் குடியிருக்கிறார்.

(தொடரும்)

About The Author