யாழ்ப்பாணத்திலிருந்து என்னைப் பார்ப்பதற்கென்றே ராத்திரி முழுக்கக் கண் விழித்து பஸ்ஸில் பயணம் செய்து கொழும்பு வந்து சேர்ந்திருந்தவர், சோர்ந்திராமல் காலை எட்டு மணிக்கே என்னைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டார்.
அவருக்கு அறிமுகமாயிருந்த அமெரிக்க சமூக சேவகரொருவரை சந்திக்கப் போக வேண்டுமென்றார். போனோம். பஸ்ஸேறிப் போய் டியூப்ளிக்கேஷன் ரோடில் இறங்கி, டீல் வீதியைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு வழிப்போக்கரிடம் சிங்களத்தில் விசாரித்துப் பார்த்தார். அந்த ஆளுக்குத் தெரியவில்லை. பிறகு சாலையோரம் குப்பை அள்ளிக் கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவரிடம் விசாரித்தார், தமிழில்.
எனக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம். யாரிடம் சிங்களத்தில் பேச வேண்டும், யாரிடம் தமிழில் கதைக்க வேண்டும் என்று சாந்தனுக்கு எப்படித் தெரிகிறது? தமிழன் யார், சிங்களவன் யார் என்று அவரவர் முகத்தில் எழுதியா ஒட்டியிருக்கிறது? சந்தேகத்தை அவரிடமே கேட்டேன்.
"அந்த மனிசன்ட்ட சிங்களத்திலை கேட்டீங்கள், சரி. இந்த முனிஸிப்பாலிட்டி ஆள்கிட்டத் தமிழிலை கதைக்கிறீங்கள். இவர் தமிழ் ஆள் எண்டு ஒங்களுக்கு எப்படித் தெரியும் சாந்தன்?"
பதிலுக்கு சாந்தன் அதிரடியாய் அடித்தார் ஒரு நெத்தியடி.
"இந்தக் குப்பை அள்ளுற வேலையெல்லாம் நம்மத் தமிழன் தானே ஐயா செய்வான்!"
***
ஃபிஷ் பிரியாணி யாரெல்லாம் சுவைத்திருக்கிறீர்கள் என்றொரு கேள்வியை மக்கள் மன்றத்தில் வைத்தால், அநேகமாய் ஒரு கை கூட உயராது.
மட்டன் பிரியாணியும், சிக்கன் பிரியாணியும் காசு கொடுத்தால் எங்கேயும் கிடைக்கும். பீஃப் பிரியாணி என்று பிரியமாய்க் குறிப்பிடப்படுகிற பீஃப் பிரியாணி கூட சென்னையில் சாலையோர ப்ளாட்ஃபாம் பவன்களில் கொதிக்கக் கொதிக்கக் கிடைக்கும்.
பாப்புலரான புலால் ஐட்டங்கள் உலகத்தின் எந்த மூலையிலும் கிடைக்கும். ஏன் சந்திர மண்டலத்துக்குப் போய்ச் சேர்ந்தால் கூட, நம்மை ஓவர்ட்டேக் பண்ணிக் கொண்டு நமக்கு முந்திப் போய்ச் சேர்ந்து நாயர் ஒருவர் அங்கே ஒரு சாயாக் கடை போட்டு, மட்டன் சமோசா விற்றுக் கொண்டிருப்பார்.
ஆனால், ஃபிஷ் பிரியாணி என்கிற வஞ்சிர மீன் பிரியாணி அண்ட சராசரத்திலும் ஒரேயொரு இடத்தில் தான் கிடைக்கும்.
ஆசியாக் கண்டத்தில், இலங்கைத் தீவில், கொழும்பு நகரத்தில், வெள்ளவத்தைப் பகுதியில், பாமன் கடை வீதியில், நம்ம மாமியார் வீட்டில்.
மருமகன் விஸிட் கொடுத்து விட்டால், வாரம் இருமுறை காரம் மணம் குணம் நிறைந்த ஃபிஷ் பிரியாணி ரெடி.
ஐயே, என்னது இது, ஒரே கவிச்சி வாடையாயிருக்கிறதே என்று யாரும் முகஞ்சுளிக்கப்படாது.
அரசியல் நாவலில் அசைவம் தூக்கலாயிருந்தால் தான் ருசிக்கும்.
மாலு, மாலு என்று கூவியபடி வீதிவழியே, சிங்களத்தில் மீன் விற்றுக் கொண்டு வருவார்கள்.
அப்படி வராத தினங்களில், ஒரு நாள் கே எஃப் ஸி, ஒரு நாள் மறீ பிரவுன் ஒரு நாள் மக்டொனல்ட்ஸ், ஒரு நாள் சைனா டவுன், ஒரு நாள் பிட்ஸா ஹட்.
எல்லாம் நம்ப ஆத்துக்காரி உபயம்.
மேற்படி மேல் தட்டு உணவகங்களெல்லாம் சென்னையிலேயே பேட்டைக்குப் பேட்டை இருக்கின்றன தான். நம்ம அண்ணா நகரில் கூட அமோகமாய் இருக்கின்றன. ஆனால் அங்கேயெல்லாம் அடியெடுத்து வைக்க வேண்டுமென்றால் மனி பர்ஸ் வலிமையாயிருக்க வேண்டும். எளிமையான இந்த எழுத்தாளனுடைய மெலிந்து கிடக்கிற மினி பர்ஸுக்கு அதெல்லாம் கட்டுப்படியாகாது.
கொழும்பில், இந்த உலகளாவிய உணவகங்களுக்குள் புகுந்து பார்த்தால், இருபத்தெட்டு வருட உள்நாட்டு யுத்தத்திலிருந்து முந்தா நாள் தான் மீண்டிருக்கிற நாடு இது என்று நம்பவே முடியாது. அவ்வளவு செழிப்பு, பகட்டு, ஆடை அலங்காரங்கள், ஆங்கில உரையாடல்கள்.
ஆனால், குட்டி யாழ்ப்பாணம் என்று சிறப்புப் பெற்றிருக்கிற வெள்ளவத்தையில் சில சாமான்யத் தமிழர்களோடு கதைத்துப் பார்த்தபோது, அவர்கள் இன்னும் விரக்தியிலும் விசனத்திலும் தான் இருக்கிறார்கள் என்று அறிய முடிந்தது. விரக்தியிலும் விசனத்திலுமிருக்கிற அந்தத் தமிழர்கள், அவர்களுக்காகக் கண்ணீர் சிந்துவதாய் சொல்லிக் கொள்கிற தமிழ்நாட்டுத் தலைவர்கள் மேல் கோபமாயும் இருக்கிறார்கள்.
பிரபாகரன் படத்தைப் போஸ்டர்களில் போட்டுத் தமிழ்நாட்டில் வலு ஜோராய் நடந்து கொண்டிருக்கிற போட்டா போட்டி அரசியல் வியாபாரங்களையும், ஈழத் தமிழர் ஆதரவு வீர வசனங்களையும் அவர்கள் வெறுப்போடு அவதானிக்கிறார்கள்.
"தமிழ் நாட்டிலை உங்கட தலைவர்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தாலே நாங்கள் இலங்கையில் நிம்மதியாய் இருப்பம். அங்கை இருந்து கத்திக் கொண்டிருக்கிற நெடுமாறனுக்கோ, கோபாலசாமிக்கோ, சீமானுக்கோ, திருமாவுக்கோ எங்கட வாழ்க்கையை விட அவியளோடை பிஸினஸ் தான் வலு முக்கியம். அவியள் கனக்கப் பேசப் பேச எங்களுக்குத்தான் இங்கை மேலும் மேலும் பிரச்சனை."
வெள்ளவத்தைத் தமிழர்கள் சொன்ன ‘பிஸினஸ்’ தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு சூடு பிடித்திருக்கிறது என்றால், உத்திரப் பிரதேசத்தில் உள்ளூர் அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிற மாயாவதியின் கட்சியைத் தமிழ்நாட்டில் தூக்கிப் பிடித்திருக்கிற பிரமுகர்கள் கூட, ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்த முத்துக் குமாருக்கு இரங்கல் விழா எடுக்கிற அளவுக்கு.
மாயாவதிக்கு முத்துக் குமாரைத் தெரியுமா? முத்துக் குமார் தீக்குளித்த போது உ பி யில் மாயாவதி ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அப்போது மூலைக்கு மூலை தன்னுடைய சொந்தத் திருவுருவச் சிலைகளை நிறுவிக் கொள்வதில் மாயாவதி மும்முரமாயிருந்ததால், முத்துக் குமாரின் மரணம் மாயாவதியின் கவனத்தை ஈர்த்திருக்க வாய்ப்பே இல்லை.
தலைநகர்த் தமிழர்கள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத் தமிழர்களின் நிலைப்பாடும் அது தான் என்று அறியத்தந்தார் சாந்தன்.
ஷெல்களுக்கும், பொம்மர்களுக்கும், ஏ.கே 47 களின் இரைச்சல்களுக்கும் மத்தியில் உட்கார்ந்து நாற்பத்தியாறு வருடங்களாய் இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கிற சாந்தன்.
தமிழீழ விடுதலைப் போர் உச்சத்திலிருந்த போது இலங்கை மண்ணில், ஏழு வருடங்களுக்கு முன்பு நான் கூடக் கொஞ்சம் ரத்தம் சிந்தியிருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிற சாந்தன்.
ஹெவ்லொக் வீதியில் நடந்து கொண்டிருந்த போது, நான் ரத்தம் சிந்திய இடம் வந்தது.
"இந்த இடம் தானே?" என்று ஞாபகமாய்க் கேட்டார்.
"தேதி ஞாபகமிருக்கு தானே?"
"மறக்க முடியுமா சாந்தன்? 18. 01. 2006."
****
மறக்கவே முடியாது.
கொஞ்சம் கவனக் குறைவாய் சாலையைக் கடந்து கொண்டிருந்த என்னை, வேகமாய் வந்த மோட்டார் சைக்கிளொன்று முட்டித் தூக்கியெறிந்ததை, அரை மயக்கத்தில், தார்ச் சாலையில் நான் வெயிலிலும் வேதனையிலும் கிடந்ததை, ஆம்புலன்ஸில் ஆஸ்பத்தரிக்குப் போனதை, பிறகு வீல்ச் சேரோடு சென்னைக்கு விமானமேறியதை, நாலு மாசம் கால் கட்டோடு கட்டிலில் கிடந்ததை, ஊன்றுகோல்களில் ஊசலாடிக் கொண்டே நடந்ததை, எதையுமே மறக்க முடியாது.
ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த நண்பர் கண்ணன், “ஆப்காப் பேர் கைஸா ஹை?’ (பேர் = கால்) என்று ஹிந்தியிலும் உர்துவிலும் துக்கம் விசாதித்த போது, “ஹமாராப் பேர் ரிப்பேர் ஹை” என்று நானொரு கடி விகடம் செய்ததையும் கூட மறக்க முடியாது.
****
அந்த வெள்ளிக்கிழமை ராத்திரியே சாந்தன் யாழ்ப்பாணத்துக்கு பஸ்ஸேற வேண்டும்.
அதற்கு முன்னால், காலையில், அவருடைய சிங்கள சிநேகிதர் சந்தனவின் சொகுசுக் காரில், எக்ஸ்ப்ரஸ் ஹைவேயில் பறந்து,. ‘காலி’ வரை போய்வருகிற திட்டம் இருந்தது.
எக்ஸ்ப்ரஸ் ஹைவேயில், சாலையில் சக்கரம் பதியாமல் பறந்து தான் போக வேண்டும்.
குறைந்தபட்ச வேகம் 100 கி மீ என்று எச்சரிக்கிற கவன ஈர்ப்புப் பலகைகள் சாலையோரம் பொருத்தப் பட்டிருக்கின்றன. கொழும்பு ட்டூ கால், நூற்றிச் சில்லறைக் கிலோமீற்றரை ஐம்பத்தொன்பதே நிமிடங்களில் கடந்தது சந்தனவின் வாகனம்.
இதுபோன்ற துரித சாலைகளுக்கென்றே வடிவமைக் கப்பட்ட விசேஷமான வாகனம். கொழும்பு நகர எல்லையை
அடையுமுன்பு சாலை நெருக்கடியிலும், வாகன நெரிசலிலும்தான் கார் ரொம்ப சிரமப்பட்டது.
ஒவ்வொரு அலுங்கலுக்கும் குலுங்கலுக்கும் "ஓ ஜீஸஸ்" என்று சந்தன ஏசுநாதரை உதவிக்கு அழைத்தார்.
காலி நகரத்தைப் போய் அடைந்த போது பகல் மணி ஒன்று. ஜும்மாத் தொழுகைக்கு உகந்த நேரம். தொழுகை முடிந்து உடனே கொழும்புக்குத் திரும்புகிற பயணம்.
திரும்பவும் ஐம்பத்தொன்பதே நிமிடம். அந்த ஐம்பத்தொன்பது நிமிடமும், ஈழ விடுதலை யுத்தத்தின் அவலக் கதைகளைக் கதைத்துக் கொண்டே வந்தார் சாந்தன். அதில் தலையாய கதை, இப்போது சாந்தன் பணியாற்றுகிற கல்வி நிறுவனத்தில் அவரோடு பணியாற்றுகிற செல்வியின் சோகக் கதை.
"வானத்திலையிருந்து ஷெல் மழை விழுந்து கொண்டிருக்கிறது. ஷெல்லுக்குத் தப்பி செல்வியோடை ஹஸ்பண்ட் செல்வியையும், கைக் குழந்தையையும் ஒரு பாதுகாப்பான இடத்திலை விட்டிட்டுப் பள்ளிக் கூடத்துக்குப் போயிருந்த மகனைத் தேடிப் போனவராம். அப்பாவும், பிள்ளையும் திரும்பி வரேக்குள்ளை மேலேயிருந்து ஷெல் விழுந்து ரெண்டு பேருமே மரணம். செல்வி ஒரு வடிவான பெட்டை இப்ப, விதவையான பெட்டை."
செல்வியுடைய கைக் குழந்தைக்கு இப்போது ஆறு வயது.
அப்பனையும் அண்ணனையும் இழந்த குழந்தை.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை யாருக்குமே தெரியாது. உயிரிழந்திருந்தால் பரவாயில்லை. உறவுகளையும் உடலுறுப்புகளையும் இழந்து அரை குறை மனிதர்களாய் அவதிப்படுகிறவர்களின் நிலை தான் பெரிய கொடுமை.
****
தொடர்வேன்
தொடர்வேன்