சிபி (11)

திருமணங்கள்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
விவாகரத்துக்கள்
நரகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.. சரி

பூலோகத்தில்
எவைதான் நிச்சயிக்கப்படுகின்றன?

வேறென்ன
வரதட்சணையும் ஜீவனாம்சமும்தான்

என்னுடைய கல்யாணத்துக்கு முந்தி, ஆனந்த விகடனில் நான் எழுதியிருந்த கவிதை.

திருமணங்கள் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் சொர்க்கத்தில் கூட ஒரு நச்சு மரம் இருந்தது. சாத்தான் கூட இருந்தான், பாம்பு ரூபத்தில். ஆகையால் தானோ என்னமோ சில திருமணங்களில் சிக்கல்கள்.

என்னுடைய திருமணம் கூட சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்பட்டிருக்க வேண்டும்.

கல்யாணமான ஏழாவது நாள் கொழும்புக்குப் பறப்பு. மாமனார் வீட்டுக்கு. ஆறு நாள் வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த சாத்தான், ஏழாவது நாள் சின்னதாயொரு சில்மிஷத்தை ஆரம்பித்தான். ஷைத்தானுடைய கைங்கர்யத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்துப் புத்தம் புதுப் பொண்டாட்டியால் சிறுமைப் படுத்தப்பட்டது, வாழ்க்கையில் முதன் முதலாக மேக மண்டலத்துக்கு மேற்பரப்பில் சஞ்சரிக்கிற அந்தக் கன்னிப் பறப்பில் மனம் லயிக்காமல் போனது எல்லாம் பழைய கதை. இப்போது நினைத்துப் பார்க்கவே கூடாது.

அதற்குப் பிறகு எத்தனையோ முறை இலங்கைக்குப் போய் வந்தாச்சு.

ஒரு வழியாய் இந்த முன்னுரை முடிந்து, இப்போது நாம் கொழும்பு மாநகரத்துக்குள்ளே பிரவேசித்துக் கொண்டிருக்கின்றோம்.

நடுச் சாமத்தில் திரிசூலத்தில் விமானமேறி, கட்டு நாயக்கா விமான நிலையத்தில் நள்ளிரவு ஒரு மணிக்குத் தரையிறங்கி, ஒரு ரக்ஸி அமர்த்திக் கொண்டு கொழும்பு மாநகர எல்லையை அடைகிறபோது மணி மூணு.

நள்ளிரவா அதிகாலையா என்று அனுமானிக்க இயலாத அகால வேளையிலும், சாலையில் போக்குவரத்து ஸிக்னல்கள் வேலை செய்கின்றன.

வெளிக்கடைச் சிறைச்சாலைக்கு சமீபத்தில், நான்கு வீதிகள் சந்திக்கிற ஒரு சந்திப்பு.

எந்த வெளிக்கடைச் சிறைச்சாலை? எண்பத்தி மூண்டு கலவரத்தின் முதல் கட்டத்தில், தங்கதுரை, ஜெகன், யோகச்சந்திரன் என்கிற குட்டிமணி முதலிய தமிழின விடுதலைப் போராளிகள், கண் விழிகள் பிடுங்கப்பட்டு, சிங்களக் காடையர்களால் கொடூரமாய்க் கொல்லப்பட்டார்களே அதே வெளிக்கடைச் சிறைச்சாலை.

இதோ இந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற கார்ச் சாரதி கூட ஒரு சிங்களவர்தான். ஆனால் சிங்கள மக்களெல்லாம் இப்போது மாறி விட்டார்கள்.

ஆட்சியாளர்கள் மட்டுந்தான் மாறாமல் அப்படியே இருக்கிறார்கள், துட்ட கெ முனுவின் வாரிசுகளாய்.

வெளிக்கடைச் சிறைச்சாலையை சமீபிக்கிற நாற்சந்தியில் பச்சை மாறி, சிகப்பு ஸிக்னல் ஒளிர்கிறது. நம்மக் கார் சிகப்பு ஸிக்னலுக்கு நிற்கிறது. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன அந்த அகால வேளையில், நம்மக் காருக்குப் பின்புறமோ அல்லது எதிர்ச் சாலையிலோ, இடது, வலது பக்கச் சாலைகளிலோ கண்ணுக்கெட்டிய தொலைவு வரை ஒரு வாகன வெளிச்சங்கூடத் தென்படவில்லை. போலீஸ்காரர் யாரும் அங்கே இல்லை, கண்காணிப்புக் கேமராக்களும் இல்லை. ஆனாலும் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு இந்தக் கார்ச் சாரதி சிகப்பு விளக்கில் தரித்து நிற்கிறார்.

இவர் மட்டுமல்ல. இன, மத, மொழி பேதமில்லாமல், கொழும்பு நகரத்தில் எல்லா வாகன ஓட்டிகளும் வலிந்து சாலை விதிகளைக் கடைப்பிடிக்கிறார்கள், ஒழுக்கத்தைப் பேணுகிறார்கள்.

இங்கே சென்னையிலோ, சிகப்பு ஸிக்னலில் பிரேக் போடுவதற்கு ரொம்ப யோசிப்பார்கள். அப்பாவி வாகனங்கள் ஸிக்னலில் நின்றால் பின்னாலிருந்து ஹாண் அடித்து நெட்டித் தள்ளுவார்கள்.

நம்ம சென்னை வாசிகளுக்கு, நம்மத் தமிழர்களுக்கு, நம்ம இந்தியர்களுக்கு, இலங்கை மக்களுக்கிருக்கிற சுய ஒழுக்கமோ கட்டுப்பாடோ கூடக் கொஞ்சமும் இல்லையே என்று நான் விரக்தி கொள்கிற போது, திடீரென்று ஒருநாள் பார்த்தால் நம்மப் பாடிக்குப்பம் ரோடு ஸிக்னலில் வாகனங்களெல்லாம் சிகப்பு ஸிக்னலுக்கு மரியாதை தந்து வேகந்தணியும். இன்றைக்கு என்ன ஆச்சு நம்ம சகோதர சகோதரிகளுக்கு என்று ஆச்சர்யப்பட்டுக் கொஞ்சம் பார்வையை எட்டிப் போட்டால், சாலையோரமாய் ஒரு வெள்ளைச் சட்டையும் நீலத் தொப்பியும் தெரியும்.

போக்குவரத்துப் போலீஸ்காரர்.

ஸிக்னலுக்குக் கட்டுப்படாமல் சீருடைக்கு மட்டுமே கட்டுப்படுகிற சில்லறை ஜீவராசிகள்.

கொழும்பில், அடுத்த நாள் ஓர் ஓட்டோவிலேறி ஸ்ரீகதிரேசன் வீதிக்கு, மல்லிகை மாத இதழின் அலுவலகத்துக்குப் போனபோது இன்னொரு ஆச்சர்யம்.

கொழும்பு நகரத்தில், ஓட்டோக்களில் மீட்டர் போடுகிறார்கள்!

நம்ம ஊரிலும் எல்லா ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்தித்தானிருக்கிறார்கள். எதற்காக அந்த மீட்டரைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள் என்கிற விவரத்தை ஆட்டோக்காரர்களும் போலீஸ்காரர்களும், ஆர்ட் டி ஓ ஆஃபீஸ்காரர்களும் பொது மக்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்று பரம ரகசியமாய் வைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீகதிரேசன் வீதியில் போய் இறங்கிக்கொண்டபோது, ஓட்டோவின் மீட்டர் 377 ரூபாய் ஐம்பது சதம் என்று காட்டியது. நான் ஐநூறு ரூபாய்த் தாளொன்றையெடுத்து நீட்டியபோது அந்த சிங்கள ஓட்டோக்காரர் 123 ரூபாய் மீதி சல்லி கொடுத்தார்.

ஐம்பது சதம் அவரிடம் இல்லையென்று ஒரு ரூபாயாய்த் திருப்பிக் கொடுத்தார், போனஸாய் ஒரு புன்னகையோடு.

நம்ம ஊரிலென்றால் ரவுண்டாய் நானூறு ரூபாயைப் பிடுங்கிக் கொண்டுதான் பயணியை ரிலீஸ் பண்ணுவார்கள்.

மல்லிகைக் கந்தோரில் டொமினிக் ஜீவாவையும், மேமன் கவியையும் கண்டு கதைத்துவிட்டு, நம்ம ஆன்ட்டி – ஸ்மோக்கிங் நாவலை அவர்களுக்குப் பரிசளித்து விட்டு, அதற்குப் பண்ட மாற்றாய் ஜீவா தந்த நாலு கிலோ புத்தகச் சுமையை சுமந்து கொண்டு, போதாததற்குப் பூபாலசிங்கம் புத்தக சாலையில் ரெண்டு புத்தகங்கள் வாங்கி அதையும் பையில் திணித்துக் கொண்டு, புத்தகங்களோடு, மலரும் நினைவுகளையும் சுமக்க மாட்டாமல் சுமந்து கொண்டு செட்டியார்த் தெரு வழியாய் நடந்தேன்.

பாதையின் ரெண்டு பக்கங்களிலும் ஒரே நகைக்கடை மயமாயிருக்கிற செட்டியார்த் தெரு. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இலங்கை வானொலி அறிவிப்பாளர்களால் தினம் தினம் உச்சரிக்கப்பட்ட செட்டியார்த் தெரு. இலங்கை வானொலி இப்போது பொலிவிழந்து போனாலும், செட்டியார்த் தெரு பொலிவோடுதான் இருக்கிறது.

இலங்கை வானொலி திடகாத்திரமாயிருந்த காலத்தில், கே எஸ் ராஜாவாலும், பி ஹெச் அப்துல் ஹமீதாலும் அடிக்கடி முன்னிலைப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஸ்தாபனம் ஜெயசித்ரா நகை மாளிகை. பெயர்ப்பலகையிலேயே நடிகை ஜெயசித்ராவின் படத்தையும் போட்டிருப்பார்கள். ஜெயசித்ரா படங்களிழந்து போன பின்னால் அந்தக்கடையே காணாமல் போய் விட்டது போல. செட்டியார்த் தெருவில் ஜெயசித்ராவைக் காணவில்லை. ஆனாலும் ஓர் ஆறுதல். பழ முத்து முத்துக்கருப்பன் செட்டியார் நகை மாளிகை என்கிற ஆதி காலத்து நகைக் கடை அப்படியே இருக்கிறது. மயில்வாகனன் சகாப்தத்திலிருந்தே இலங்கை வானொலியில் அடிக்கடி அடிபடுகிற பெயர்.

செட்டியார்த் தெருவிலிருந்து வெளிக்கிட்டு, பொடி நடையாய்க் கோட்டைப் புகையிரத நிலையத்தையடைந்து வெள்ளவத்தைக்கு பஸ் ஏறினேன்.

அடுத்த நாள் சாந்தனோடு சந்திப்பு.

— தொடர்வேன்

About The Author