சென்னை என்று அறியப்படுகிற மெட்ராஸுக்கு, அல்லது, மெட்ராஸ் என்று அறியப்படுகிற சென்னைக்கு முதன் முதலாய் எப்போது வருகை தந்தேன் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
சித்தப்பாவுடைய கல்யாணத்துக்குத்தான் சென்னைக்கு வந்தேன். வாப்பாவுடைய தம்பி. கடைக்குட்டித் தம்பி.
சித்தப்பாவுக்குக் கச்சிதமான, வலுவான உடம்பு. நானெல்லாம் பிறப்பதற்கு முன்னால், ராஜபாளையத்து ஜட்ஜ் சாஹிப் தெருவில் கிடந்த கோள வடிவ ராட்சசக் கல்லைத் தூக்கித் தோளில் சுமந்தபடிச் சம்மந்த புரத்தைச் சுற்றிவந்து, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராஜபாளையத்தில் பிரபலமாயிருந்த ராஜா ஒருவரிடமிருந்து தங்க மோதிரம் பரிசு பெற்ற பயில்வான் சித்தப்பா.
பிற்காலத்தில், நம்ம டீன் ஏஜில் நானுங்கூட அந்தக் கோளப் பாறையைத் தூக்கித் தோளில் சுமந்திருக்கிறேன். ஒரு ரெண்டு நிமிஷம் என் தோளில் தரித்திருந்த அந்தக் கல், பிறகு தொப்புக்கட்டீர் என்று கீழே விழுந்து தரையில் தடம் பதித்தது. யப்பாடி, என்ன கனம்! ஓர் எழுபது கிலோ எண்பது கிலோ இருக்காது? கூடவே இருக்கும்.
கல்லைக் கீழே போட்டுவிட்டு அப்பாள் ராஜா ஊருணிக்குக் குளிக்கப் போனபோது, காலை எடுத்து வைக்கவே சிரமப்பட்டது. கல் சுமை தோளில் அழுத்திக் கொண்டேயிருப்பது போலவொரு பிரமை.
மப்பும் மந்தாரமுமான அந்த விடலை வயசில் அந்தப் பாறாங்கல்லைத் தூக்கிச் சுமக்கிற சாகசத்தில் நான் ஈடுபடாமலிருந்திருந்தால் ஓர் அரையடி அதிகமாய் வளர்ந்திருப்பேன் என்று நம்ம பால்ய காலத்து சிநேகிதர்கள் சொல்லிக் கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஹ்ம்ம்…
பிறகு, இருபத்தொண்ணாம் நூற்றாண்டில், அந்தக் கல் கிடந்த இடம் தளம் உயர்த்தப்பட்டபோது, அந்தக் கல்லை இடப்பெயர்ச்சி செய்ய முயற்சி செய்யாமல், பூமிக்குள்ளேயே புதைத்து விட்டார்கள்.
இடப்பெயர்ச்சி செய்ய முயற்சித்திருப்பார்கள்தான். ஆனால், அதற்கு உடல் வலிமை கொண்ட ஆண் மக்கள் வேண்டாமோ! சித்தப்பாவைப் போலவோ அல்லது, என்னைப் போலவோ திடகாத்திரமிக்கவர்கள் யாரும் ஸ்பாட்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அந்தக் கல் மண்ணுக்குள் புதைந்தே போனது.
இன்னும் ஒரு பத்துப் பதினஞ்சு நூற்றாண்டுகள் கழிந்து, ராஜபாளையம் என்கிற பழம்பெரும் நகரம் இருந்த இடத்தை வருங்கால விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சி செய்கிறபோது, வராலாற்றுப் புகழ்மிக்க ராஜபாளையத்து நாய்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்படும், வரலாற்றுக்கு முந்தைய காலத்து டைனோஸரின் எலும்புக் கூடுகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதைப் போல.
ராஜபாளையத்து நாய்களின் எலும்புக் கூடுகளோடு, இந்தப் புராதனக் கற்கோளமும் கண்டெடுக்கப்படலாம்.
இந்த ஞானம் நம்ம டீன் ஏஜில் எனக்கு எட்டியிருந்தால், நம்ம பெயரை அந்தக் காலத்தில் அந்தக் கோளத்தில் கல்வெட்டியிருக்கலாம். எழுத்தின் வலிமையோடு இந்த எழுத்தாளனின் வலிமையும் எதிர்காலச் சந்ததியினருக்கு எட்ட ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கும்.
அரையடி என்னுடைய உயரம் குறைந்து போன விசனம் கூட விலகிப் போயிருக்கும்.
சரி. அந்த, கல் சுமந்த சித்தப்பாவுக்குக் கல்யாணம். புதுக் கல்லூரி என்று அறியப்படுகிற நியூ காலேஜில், அல்லது, நியூ காலேஜ் என்று அறியப்படுகிற புதுக் கல்லூரியில் கல்யாணம்.
அந்தக் காரியம் கர்த்தரால் வந்தது.
நிக்காஹ் முடிந்த கையோடு, புது மனைவியைக் கைகளிலேந்தி, அநாயாசமாய்ச் சுமந்து கால் ஃபர்லாங் நடந்து வந்து காரிலேற்றினார் சித்தப்பா.
இந்தக் காரியம் கல்லுருண்டையால் வந்தது.
வாப்பா அப்போது விழுப்புரத்தில் டிவிஷனல் இன்ஜினியர். ரிட்டயர்டு டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜான தாதா சாப் தலைமையில் ராஜபாளையத்திலிருந்து ஜெயவிலாஸ் பஸ்ஸில் ஓர் உறவினர்ப் பட்டாளம் விழுப்புரம் வந்து, நம்ம வீட்டு டிக்கட்டுகளையும் ஏற்றிக்கொண்டு சென்னை மாநகரில் பிரவேசித்தது.
எந்த வருஷம்?
வேண்டாம். வருஷத்தைச் சொல்லி வயசைத் துப்பறிகிற வெட்டிவேலையை வாசகர்களுக்கு வைக்கக் கூடாது.
புதுக் கல்லூரிக்கு வெளியே இப்போதிருக்கிற மேம்பாலங்கள் அப்போது இல்லை. வாகன நெரிசலும் வலுக்குறைவு. கேட்டில் நின்று இடது பக்கம் பார்வையைச் செலுத்தினால், மௌண்ட் ரோடு தெரிந்தது. அம்பாஸடர் கார்களும், கருப்பு – மஞ்சள் ஃபியட் டாக்ஸிக்களும், ரெட்டை மாடி சிகப்புக் கலர் பஸ்களும் மௌண்ட் ரோடில் ஊர்ந்து போவது இங்கிருந்து காணக் கூடியதாயிருந்தது.
"அந்தா தெரியுது பாத்தியா, அதாம்ல மௌண்ட் ரோடு!"
"அதுவா! மௌண்ட் ரோடாஆஆ!"
மெட்ராஸ் என்றாலே ஒரு மயக்கமும், மௌண்ட் ரோடு என்றால் ரெட்டிப்பு மயக்கமும் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பாளையங்கோட்டைப் பையன்களில் ஒருவன் நான். மௌண்ட் ரோடில், சிவாஜி கணேசனுக்குச் சொந்தமான சாந்தி தியேட்டரில் ஒரு சிவாஜி படம் பார்த்து விடவேண்டும் என்கிற பேராசையும் ஏக்கமும் கொண்டிருந்த சாமான்யச் சிறுவன்.
"மெட்ராஸ் மாகாணத்லயே மொதல் ஏர்க் கண்டிஷன் தியேட்டராம்ல அது. உள்ள போய் ஒக்காந்தா ஜில்ல்ல்ன்னு இருக்குமாம். சொட்டர் போட்டுட்டுத்தாம் போவணும்."
சாந்தி தியேட்டரில் போய்ச் சினிமா பார்க்கிற ஆசை அடுத்த ஒன்பதாவது மாசத்திலேயே பூர்த்தியாகிற வாய்ப்பு கிட்டியது.
கோடை விடுமுறையில், நானும் நம்ம அத்தைப் பையன் லியாகத் அலியும் சென்னையை சமீபித்து வந்து, தாம்பரத்திலிருக்கிற லியாகத் அலியின் சித்தப்பா வீட்டில் தங்கியிருந்தோம். லியாகத் அலி கனடாவில் இப்போது கடுஞ்செழிப்பில் இருக்கிறான். ஆனால், தாம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் லியாகத் அலியின் காலில் செருப்பு கிடையாது. நான் பந்தாவாய்ப் போட்டுக் கொண்டு அலைந்த செருப்பும் தாம்பரம் பார்க்கில் களவு போய் விட்டது.
புழுதி படிந்த கால்களோடு லியாகத் அலியும் நானும் மின்சார ரயிலேறி எழும்பூரில் வந்திறங்கி, நிர்வாணப் பாதங்களோடு சென்னை மாநகரச் சாலைகளில் நடைபயின்று, லாயிட்ஸ் ரோடில் சித்தி வீட்டை வந்தடைந்தோம்.
ஒன்பது மாதங்களுக்கு முன்பு புதுக் கல்லூரியில் மணப் பெண்ணாயிருந்த சித்தி. இப்போது நிறை மாதக் கர்ப்பிணி. கல் சுமந்த சித்தப்பா சகல துறைகளிலும் சுறுசுறுப்பு.
எங்களுடைய வெற்றுக் கால்களைப் பார்த்து இரக்கங்கொண்ட சித்தி, தன்னுடைய தம்பியின் கையில் பணம் கொடுத்து, ரெண்டு பேருக்கும் மௌண்ட் ரோடு பாட்டாவில் செருப்பு வாங்கிக் கொடுத்து, செருப்புக் காலோடு ஒரு சினிமாவுக்கும் கூட்டிக்கொண்டு போகப் பணித்ததனால் சாந்தி A/C தியேட்டர் யோகம் அடித்தது.
சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி என்று தினத்தந்தியில் முழுப்பக்க விளம்பரங்களில் மட்டுமே பார்த்திருந்த பாமரப் பையன் நான். சாந்தி தியேட்டருக்குள்ளே பிரவேசித்தது கனவுலோக சஞ்சாரம் மாதிரி இருந்தது.
இருவர் உள்ளம் படம்.
"பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்" என்று திரையில் தோன்றுகிற சிவாஜி, தொப்பியைக் கழட்டி ரசிகப் பெருமக்களைப் பார்த்துக் கண்ணடித்தபோது சாந்தி தியேட்டரில் கிளம்பிய விஸிலில் மேனி சும்மாப் புல்லரித்தது. திருச்சிக்குத் தெற்கேயுள்ள நாகரிகங் குன்றிய ரசிகர்கள்தான் சிவாஜிக்கும் எம்ஜியாருக்கும் விஸிலடித்து மகிழ்வார்கள் என்று நினைத்திருந்தவனுக்குப் பட்டணத்து மேல்மட்ட ரசிகர்களுக்குக் கூட விஸிலடிக்க வரும் என்று புரிந்தபோது சென்னையின் மேல் ஒரு பாசம் பிறந்தது.
அன்றைக்கு சாந்தி தியேட்டரில் இருவர் உள்ளம் படம் பார்த்துக் காலேயரைக்கால் நூற்றாண்டு கழிந்த பின்னால், 2012ஆம் வருடம் ஏப்ரல் மாதம்தான் திரும்பவும் அந்தத் திரையரங்கில் கால் பதிக்கிற வாய்ப்பு வாய்த்தது.
கர்ணன் படம் பார்க்கப் போனபோது.
பள்ளி மாணவனாயிருந்தபோது நான் முதல் சுற்றில் பார்க்க விட்டுப் போன சிவாஜி படம். என்னுயிர்த் தோழி கேளொரு சேதி, இரவும் நிலவும் மலரட்டுமே போன்ற தேவகானங்களை ரேடியோ சிலோனில் கேட்கிறபோதெல்லாம், ஆஹா இந்தப் படத்தை அநியாயமாய் இழந்து விட்டோமே என்று என்னைச் சோகங்கொள்ள வைத்த விஸ்வநாதன் – ராமமூர்த்திப் படம். புதிதாய் மெருகூட்டப்பட்டு இப்போது வெளியிடப்பட்டிருப்பதாய்ச் சொன்னார்கள். என்ன மெருகு என்று நம்ம சிற்றறிவுக்குப் புலப்படவில்லை. இரவும் நிலவும் பாடலுக்குள்ளே ஒரு லோக்கல் இசையமைப்பாளர் புகுந்து விளையாடித் தன்னுடைய கை வரிசையைக் காட்டியிருந்தார். பாடலின் இடையில் தேனாய் இசைத்த ரெட்டை ஷெனாய் இசையைக் கீ போர்டில் இசைக்க முயற்சித்துச் சொதப்பியிருந்தது செவிப்பறையை உறுத்தியது. கம்ப்யூட்டர் யுகப் பின்னடைவுகள் இருந்தாலும் கூட, படம் அணு அணுவாய் ரசிக்கிற மாதிரியிருந்தது. ஆனால் தியேட்டர்தான் சரியான பராமரிப்பு இல்லாமல் பரிதாபமாய் இருக்கிறது.
சஃபயர், ஆனந்த், சித்ரா, சயானி, குளோப், வெலிங்டன், நியூ எல்பின்ஸ்டன், பாரகன், உமா, ராக்ஸி, கபாலி, ராஜகுமாரி என்று நீளமாய்ப் போய்க் கொண்டிருக்கிற, காணாமற் போன திரையரங்குகளின் பட்டியலில் சாந்தியும் இடம் பெற்று விடுமோ என்கிற கவலை ஒரு புறம் இருந்தாலும், கர்ணன் என்கிற அற்புதமான திரைப்படத்தை இன்னொரு முறை பார்த்தாக வேண்டும் என்கிற உந்துதல் தூக்கலாயிருந்தது.
முந்தியெல்லாம் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போனால், ஃபில்ம்ஸ் டிவிஷன் செய்திப்படம் ஒன்று போடுவார்கள். பெரும்பாலும் அது சோகப் படமாய்த்தானிருக்கும்.
‘பீஹாரில் வெள்ளம்’ என்று காட்டுவார்கள். அடுத்த படம் பார்க்க அதே தியேட்டருக்குப் போனால், ‘பீஹாரில் வறட்சி’ என்று காட்டுவார்கள்.
வெள்ளமும் வறட்சியும் தொலைக்காட்சி மூலமாய் இன்று வீட்டுக்குள்ளேயே வந்து விடுவதால், நியூஸ் காட்டுகிற நேரத்தில் விளம்பரப் படங்கள் காட்டி தியேட்டர்க்காரர்கள் பாக்கெட்மனி பார்த்து விடுகிறார்கள்.
ரெண்டாவது தடவை கர்ணன் பார்ப்பதற்கு, தியேட்டரை மாற்றுவோம் என்று, மௌண்ட் ரோடின் உபசாலையிலிருக்கிற விசாலமான பல்லடுக்குத் திரையரங்க வளாகத்துக்கு ஸ்கூட்டரில் போய்ச் சேர்ந்தேன்.
ஸ்கூட்டர் நிறுத்த வாடகையே பத்து ரூபாய் பிடுங்கிக் கொண்டார்கள்.
முன்னொரு காலத்தில் வீரத்திருமகன் பார்க்கப் போனபோது, அம்மாவிடம் ஐம்பது பைசா வாங்கிக் கொண்டு போய்ப் பாளையங்கோட்டை அசோக் டாக்கீஸில் பெஞ்ச் டிக்கட்டில் உட்கார்ந்து பார்த்தேன். இடைவேளையில் முள்ளு முறுக்கு, காலணா.
பிற்பாடு, மதுரை கல்பனா டாக்கீஸில், இக்பாலோடு வாழ்க்கைப் படகு பார்த்தபோது மாடியில் தகர நாற்காலி போட்ட முன்வரிசை எம்பத்தஞ்சு பைசா.
இடைவேளையில், மாப்பிள்ளை விநாயகர் கலர் பானம் பதினஞ்சு பைசா.
அதற்கும் பின்னால், திருச்சி வெலிங்டன் தியேட்டரில் நம்ம சிநேகிதியோடு உத்தரவின்றி உள்ளே வா பார்த்தபோது பின்வரிசை டிக்கட் ரெண்டு ரூபாய் என்று ஞாபகம். வெங்காய சமோசா இருபது பைசா.
இப்போது என்னடாவென்றால் சென்னையில் ஸ்கூட்டர் நிறுத்தவே பத்து ரூபாயாம்!
அப்படியென்றால் படம் பார்க்க டிக்கட் எவ்வளவு இருக்கும்?
இப்போது வருகிற புதுப்படக் கண்றாவிகளைப் பார்க்க மனசில்லாததால் திரையரங்குகளின் திசையில் தலைவைத்துப் படுத்தே கனகாலமாச்சு.
ஹைடெக் டிக்கட் வாங்க பலப்பல க்யூக்கள். ரயில்வே புக்கிங் கௌண்ட்டரில் எந்த ரயிலுக்கும் எந்தக் கௌண்ட்டரிலும் டிக்கட் வாங்கிக் கொள்ளலாம் என்றிருக்கிற மாதிரி, எந்தப் படத்துக்கும் எந்தக் காட்சிக்கும் எந்தத் தியேட்டருக்கும், எந்தக் கவுன்ட்டரிலும் டிக்கட் வாங்கிக் கொள்ளலாமாம். கர்ணன் படத்துக்கு ரெண்டு அம்பது ஷோவுக்கு எண்பது ரூபாய், நூற்றியிருபது ரூபாய் என்றார்கள். எண்பது ரூபாய் டிக்கட் முடிந்து விட்டது என்றும் சொன்னார்கள். ஒரேயொரு சினிமாவுக்கு நூற்றியிருபது ரூபாயா என்று என்னுடைய வாலெட்டுக்கு வலித்தது. இருந்தாலும், சிவாஜி படமாச்சே, கர்ணன் ஆச்சே என்று அதைத் தட்டிக் கொடுத்து நூற்றியிருபது ரூபாயை உருவிக் கௌண்ட்டரில் நீட்டி, டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு தியேட்டருக்குள்ளே நுழையக் கண்ணாடிக் கதவைத் தள்ளினேன்.
மறுபக்கம் எனக்காகவே காத்திருந்த தியேட்டர்ப் பாதுகாவலர் ஒருவர் என்னை நெருங்கிக் கைகளை உயர்த்தச் சொன்னார். எதுக்கு என்றதற்கு, செக்கிங் என்றார். தொடர்ந்து, என்னுடைய உடன்பாட்டுக்குக் காத்திருக்காமல், அத்துமீறி என்னுடைய சட்டையின் பாக்கெட்டுகளைத் தடவி விட்டுப் பான்ட் பாக்கெட்டுக்குக் கைகளைத் தாழ்த்தியபோது நான் திடுக்கிட்டுப் பின் வாங்கினேன்.
"என்னங்க இது செக்கிங்? நா என்ன ப்ளேன்லயா போறேன்? சினிமா பாக்க ஸெக்யூரிட்டி செக்கா! என்ன அசிங்கம்யா இது?" என்று நான் ஆட்சேபக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தபோதே நாகரிகத்தில் மேம்பட்ட சென்னை நகர ஜீவராசிகள், ஸெக்யூரிட்டி ஆளின் தடவலுக்குத் தயக்கமேயில்லாமல் தங்களை உட்படுத்திக் கொண்டு என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன என்று என்னைப் பொருட்படுத்தாமல் பலர் போய்க் கொண்டிருக்க, என்மேலே அக்கறை கொண்டிருந்த சிலர் என்மேலே ஓர் இளக்காரப் புன்னகையைப் பிரயோகித்து விட்டுப் போனார்கள்.
என்னைத் தடவ ஆர்வமாயிருந்த காவலர், "உள்ள வர்றீங்களா, வெளிய போறீங்களா" என்று பொறுமையிழக்க, “வெளிய” என்று பதில் தந்து விட்டு, என்னுடைய நூற்றியிருபது ரூபாய் டிக்கட்டை உயர்த்திப் பிடித்துக் கிழித்துப் போட்டேன்.
"குப்பையெல்லாம் இங்க போடக் கூடாது" என்று ஆட்சேபம் எழுந்தது.
அந்த நூற்றியிருபது ரூபாய்க் குப்பையைக் குனிந்து பொறுக்கிக் கொண்டு அந்தத் திரையரங்கிலிருந்து வெற்றிகரமாய் வெளிநடப்பு செய்தேன்.
–தொடர்வேன்…