சின்னதாய் ஒரு பெருநாள்

அண்ணாநகர் மேற்கு டிப்போவில் பஸ்ஸிலிருந்து இறங்கித் தங்கச்சி வீட்டுக்கு நடக்கிற வழியில், ஒரு மீடியம் ஸைஸ் மிட்டாய்க் கடையில் அரைக்கிலோ ஸ்வீட்ஸ் வாங்கிக் கொண்டேன்.

ஐம்பது ரூபாய் அவுட்.

நம்ம தரித்திரத்துக்கு இது ஆடம்பரச் செலவுதான். சரி அதற்கென்ன செய்ய, சின்னப் பிள்ளைகள் மூணு பேர் இருக்கிற வீட்டுக்குக் கையை வீசிக் கொண்டு போய் நிற்க முடியுமா!

என்னைப் பார்த்ததும் ‘மாமா வந்துட்டாங்க, மாமா வந்துட்டாங்க’ என்று குழந்தைகள் குதூகலமடைந்தன.கடைக்குட்டியின் கையில் மிட்டாய்ப் பெட்டியைக் கொடுத்தது, அதுகளப் பெரிசாய் சந்தோஷப் படுத்திவிடவில்லை.

‘மாமா, பெருநாக்காசு, பெருநாக்காசு’ என்று பிடுங்கியெடுத்த பிள்ளைகளிடமிருந்து தங்கச்சி வந்து என்னைத் தடுத்தாட்கொண்டாள்.
‘புள்ளைங்களா, வந்தவொடனேயே மாமாவத் தொந்தரவு பண்ணப்படாது. பெருநாக்காசெல்லாம் மாமா தருவாக. கிச்சன்ல போய் பிரியாணி ஆயிருச்சான்னு பாருங்க. மாமா பசியோடயிருப்பாக’ என்று பிள்ளைகளைத் திசைதிருப்பிய தங்கச்சி என்னை வரவேற்றாள்.

”வாங்கண்ணே, காலைல நாஷ்டாவுக்கே வந்துருவீங்கன்னு பாத்தேன்.”

‘நாஷ்டாவா? அதயெல்லாம் நா மறந்து போய் ரொம்ப நாள் ஆச்சும்மா’ என்று சிரித்தேன்.

”ஒரு நாளக்கி நாஷ்டா பண்ணா, அப்பறம் சொல்லி வச்ச மாதிரி காலைல காலைல பசிச்சிரும். நமக்குக் கட்டுபடியாகாது.”

‘அப்படியெல்லாம் பேசாதீகண்ணே, நீங்க என்ன இப்படியேவா இருந்துரப் போறீக. எல்லாம் சரியாப் போயிரும். எல்லாம் ஒரு சோதன தானே, ஒங்கள இப்படியேயிருக்க வுட்றுவானாக்கும் அல்லா?’ என்று தங்கச்சி எனக்கு நல்ல வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருந்தபோது, பெட்ரூமுக்குள்ளிருந்து வெளியே வந்தார் மச்சான்.

”ஈத் முபாரக் மொதலாளி! வாங்க, இப்பத்தான் வந்தியளாக்கும்?”

”மொதலாளி என்ன மச்சான் மொதலாளி! கிண்டல் தான இது!”

”அல்லா, கிண்டலெல்லாம் கெடையாது மொதலாளி, என்னக்கிருந்தாலும் நீங்க எங்களுக்கெல்லாம் மொதலாளி தான். இப்ப ரெஸ்ட்ல இருக்கீக. திரும்பவும் மொதலாளி ஆகாமலா போயிரப் போறீக? திரும்பவும் நீங்க யாவாரம் தொடங்கி ஓஹோன்னு வரணும்னுட்டுத்தானே நாங்க நெதம் அஞ்சு நேரம் தொழுகையில அல்லாட்ட துஆக் கேட்டுட்டிருக்கோம் மொதலாளி.”

”ஆமீன். ஒங்க துஆ பலிக்கட்டும் மச்சான்-.”

”பலிக்காம வுட்றுவோமா! சரி, பெருநாத் தொழுகக்கி இங்ஙன அண்ணாநகர்க்கு வந்துருவீகண்டு பாத்தேன். தொழுக்கி எங்க போனீக?”
”வூட்டுக்குப் பக்கத்துல பள்ளி இருக்குல்லா, அங்ஙனயே தொழுதுக்கிட்டேன். பிரியாணி வாசம் ஆளத் தூக்குதே மச்சான்! பயங்கரப் பசி. சாப்ட்டுட்டே பேசுவோமே.”

”அதுவும் சரிதான், நீங்க நாஷ்டா பண்ணாத ஆசாமி. சீக்கிரம் சாப்பாடு வக்யச் சொல்லுவோம்.”

டைனிங் டேபிளைச் சுற்றி மச்சான், தங்கச்சி, பிள்ளைகள், நான் எல்லோரும் உட்கார்ந்து மட்டன் பிரியாணியையும் சிக்கன் ஃப்ரையையும், ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ‘மாமா, நீங்க பெருநாளக்கி புது டிரஸ் எடுக்கலியா? எங்களுக்கெல்லாம் வாப்பா ரெண்டு ரெண்டு ஸெட் எடுத்துக் குடுத்தாங்க’ என்று ஒரு வாண்டு சொன்னதற்கு, ‘ஒங்களுக் கெல்லாம் வாப்பா இருக்காக. எனக்கு டிரஸ் எடுத்துக் குடுக்க யார் இருக்கா கண்ணு?’ என்றேன், சோகமாய் முகத்தைச் சுளித்து.

‘நா ஒங்கட்ட சொல்லணும்னு நெனச்சிட்டிருந்தேன். மறந்தே போச்சுங்க. அண்ணனுக்கு ஒரு பான்ட் ஷர்ட் எடுத்திருக்கலாம்’ என்று தங்கச்சி வருத்தப்பட்டதற்கு, ‘நீ ஒண்ணும்மா, நா என்ன சின்னப் புள்ளையா?’ என்று நியாயம் பேசினேன் நான்.

‘அப்ப நாங்க மட்டும் என்ன சின்னப் புள்ளைங்களா?’ என்று மறுப்பு வெளியிட்டார் மச்சான்.

”ஒங்க ஸிஸ்டரும் சொல்லல. எனக்கும் தோணல பாருங்க மொதலாளி.”

புது டிரஸ்!

தோள்பட்டையில் ஃப்ளாப் வைத்து, நானே டிஸைன் செய்த கலர்க் கலரான, வித்யாசமான சட்டைகளை இன் செய்து கொண்டு, மாட்ச்சிங்காய் டை கட்டிக் கொண்டு கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு வளைய வருவேன், என்னுடைய பிரம்மாண்டமான கடைக்குள்ளே, நிஜம்மாகவே, நான் முதலாளியாயிருந்த வசந்த காலத்தில்.

ரகம் ரகமான, டைகள் மட்டும் ஒரு மூணு டஜன் ஸ்டாக் வைத்திருந்தேன். என்னுடைய அசத்தலான ஆடையலங்காரம், ஆகாய விமானப் பைலட் மாதிரியிருக்கிறது என்று கண் திருஷ்டி போட்டவர்கள் நிறைய. இப்போது, பிஸினஸ் போச்சு. கடையை மூடியாச்சு. டை கட்டி அசத்தின காலமெல்லாம் காலாவதியாகிப் போச்சு.

‘என்ன மொதலாளி, என்ன யோசனையா இருக்கீக’ என்று என்னை உசுப்பி விட்ட மச்சானை, ‘பிரியாணி ரொம்பட் டாப் மச்சான், ரசிச்சி ரசிச்சித் தின்னுட்டிருக்கேன்’ என்று சமாளித்தேன்.

‘பிரியாணியப் போட்டு வயித்த நெரப்பிராதீங்கண்ணே, டெஸர்ட்டுக்குக் காரமல் புட்டிங் இருக்கு மறந்துராதீங்க’ என்று சிரித்தாள் தங்கச்சி.

‘இன்னொண்ணையும் மறந்துராதீங்க மாமா’ என்று நினைவு படுத்தியது ஒரு சின்னக் குரல்.

”பெருநாக் காசு!”

‘ஷ்ஷ்’ஷென்று உதடுகளின் குறுக்கே விரலை வைத்து அந்தக் குரலை அடக்கினாள் தங்கச்சி.

”சாப்புடும்போது யாரும் பேசப்படாது.”

”அப்ப நீங்க பேசறீங்க?”

”நாங்க பெரியவங்க பேசலாம். சின்னப் புள்ளைங்க பேசப் படாது.”

பெருநாள் காசு!

நாங்கள் சின்னப் பிள்ளைகளாயிருந்த காலத்தில் பெருநாக்காசு என்று ஐம்பது பைசா கிடைத்தால் அபூர்வம். வீட்டுக்கு விருந்தாளிகள் நிறைய பேர் வந்தால், ஒரு ரூபாய் வரை தேறும்.

ஸ்ரீவைகுண்டத்திலிருந்த போது, வாப்பாவுக்குத் தெரிந்த ஒரு ஹாஜியார் ஈத் அன்று வீட்டுக்கு வந்தவர், புத்தம்புது ரெண்டு ரூபாய்த் தாள் ஒன்றைக் கொடுத்துப் புளகாங்கிதப் படுத்தி விட்டார் என்னை.

அதில் ஒரு ரூபாய்க்கு வாடகை சைக்கிள், நாள் வாடகைக்கு எடுத்து, பின்சக்கரத்தில் பலூன் கட்டிக் கொண்டு, மோட்டார் சைக்கிள் மாதிரி டபடப என்று ஒலியெழுப்பியபடி பள்ளி வாசலையும் கோவிலையும் சுற்றிச் சுற்றி வந்தது நினைவிருக்கிறது.
ரெண்டு ரூபாயைப் பார்த்தது ஸ்ரீவைகுண்டத்திலென்றால், அஞ்சு ரூபாய் நோட்டை முதன் முதலாய் முழுசாய்ப் பார்த்தது, பாளையங்கோட்டையில், சித்தி கல்யாணத்தில்.

சித்தியின் சகோதரர்களெல்லாம் சித்தியை விட மூத்தவர்களானதால், அக்கா மகனான எனக்கு அடித்தது. மாப்பிள்ளைக்குக் கால் நனைத்து விடுகிற அதிர்ஷ்டம். அப்போது தான் ஐந்து ரூபாய்த் தாள் ஒன்று கை மாறி என்னைத் திக்கு முக்காட்டி விட்டது.
அந்த அஞ்சு ரூபாயைச் சில்லறை மாற்றி, அதில் பாதியை அக்காவுக்குத் தந்தது போக, மீதி ரெண்டரை ரூபாயில் அசோக் டாக்கிஸுக்குப் பக்கத்திலிருந்த வாப்பாக் கடையில் அரையணா ஆம வடையாய் வாங்கிக் கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு தினந்தினம் கான்வென்ட் விட்டு வந்ததும் தின்று தீர்த்தது ஒரு மலரும் நினைவு.

வாப்பாக்கடையை நடத்திக் கொண்டிருந்த சகோதரர்கள் அந்தக் காலத்துத் திராவிட இயக்கத்தின் ரசிகர்கள். கடைக்குள்ளே அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, என்விஎன், சத்தியவாணி முத்து, அன்பழகன், மதியழகன் என்று வரிசையாய் இளந் திராவிடத் தலைவர்களின் படங்கள் மாட்டியிருக்கும். அதோடு, திராவிட நடிகர் கே ஆர் ராமசாமியின் சொர்க்க வாசல் ஸ்டில்லும் ஃப்ரேம் போட்டுத் தொங்கும். வாப்பாக் கடை மட்டன் சுக்காவின் நறுமணத்தை இப்போது நினைத்துப் பார்த்தாலும் நாக்கில் நீர் ஊறுகிறது.

அசோக் டாக்கீஸெல்லாம் இப்ப மூடியாச்சு என்று சொன்னார்கள். வாப்பாக் கடை கூட இப்போது இருக்கிறதோ இல்லையோ.
பாளையங்கோட்டைப் பக்கம் போயே பத்து வருஷத்துக்கும் மேலாச்சு.

சரி, அம்பது பைசா ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் பெருநாக்காசு பெரிசாய்த் தெரிந்ததெல்லாம் நம்ம பள்ளிப் பருவத்தில்.
இப்போது, இந்தக் குழந்தைகளுக்குப் பெருநாக்காசு தர வேண்டுமென்றால், தலா அம்பது ரூபாயாவது தர வேண்டும். மூணு இன்ட்டு அம்பது, நூத்தியம்பது.

அல்லா, செத்தேன்.

பாக்கெட்டில் நாப்பது நாப்பத்தஞ்சு ரூபாய் இருந்தால் அதிகம். அஞ்சு வருஷத்துக்கு முந்தி வரை ஓர் அஞ்சு நட்சத்திர டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்திக் கொண்டிருந்த இந்த ‘மொதலாளி’ ஒரு ஐம்பது ரூபாய் பெருநாக்காசு கொடுக்க வக்கத்துப் போனேனே என்று உணர்ந்தபோது நெஞ்சில் நோவெடுத்தது.

நம்ம கடை ஓஹோவென்றிருந்த காலத்தில், இந்தக் கடைக்குட்டி மட்டும் பிறந்திருக்கவில்லை. பெரிய ரெண்டு பிள்ளைகளும் சர்வ சுதத்திரத்துடன் கடைக்குள்ளே புகுந்து, விளையாட்டுச் சாமான்கள் என்ன, காமிக்ஸ் என்ன, சாக்லெட் பார்கள் என்ன என்று மாமாக் கடையிலிருந்து அள்ளிக் கொண்டு போனதுண்டு.

இப்போது நான் அதாலபாதாளத்தில் விழுந்து கிடப்பது இந்தப் பிஞ்சுகளுக்குப் புரிந்திருக்க நியாயமில்லை.
புரியாமலேயிருப்பதே நல்லது.

ஆனால் இன்னொரு தரம், ‘மாமா, பெருநாக்காசு’ என்று இதுகள் வாயைத் திறந்தால் நான் ரொம்ப அசிங்கப்பட்டுப் போவேன்.
உண்ட மயக்கத்தில் இதுகள் உறங்கப் போய்விடாதா?

போகவில்லை.

சினிமாவில் 70எம்எம் இருக்கிற மாதிரி டெலிவிஷனிலும் 70 எம்எம் இருக்கிறதோ என்று ஆச்சர்யப்படுகிற மாதிரி, அகன்ற எல் ஸி டி திரையில் என்னமோ ஒரு மிஸ்டர் பீன் காமெடி ஓடிக் கொண்டிருந்தது.

உட்கார்ந்திருக்கவும் இருப்புக் கொள்ளாமல், கிளம்பவும் தைரியமில்லாமல் நான் தவிப்புடன் இருந்தேன். எப்படியும் கிளம்பத்தான் வேண்டும்.

குழந்தைகளின் விழிகள் டெலிவிஷன் திரையில் பதிந்திருக்க, ‘நா கௌம்பறேம்மா’ என்று செய்கையால் உணர்த்தினேன் தங்கச்சிக்கு.

ஸோஃபாவிலிருந்து எழுந்து கொண்ட அவள், ‘அண்ணே, இப்படிக் கொஞ்சம் வாங்களேன்’ என்று என்னைக் கிச்சனுக்கு வழி நடத்திப் போனாள்.

போனவள், ‘அண்ணே, ஒண்ணும் தப்பா நெனச்சிக்கிராதீகண்ணே’ என்று, நூறு ரூபாய்த் தாள்கள் மூன்றை என்னுடைய கைகளில் திணித்தாள்.

”பெருநாக்காசுன்னு சொல்லி அதுக மூணுங்க கையிலயும் ஆளுக்கொரு நோட்ட, நீங்க குடுத்த மாதிரிக் குடுத்துட்டுப் போயிருங்கண்ணே.”

 கல்கி, 23.11.2008
(பெருநாள் காசு)

About The Author

3 Comments

  1. P.Balakrishnan

    பிரியாணி வாசனையை மிஞ்சிவிட்டது நெல்லைத் தமிழ் வாசனை!

  2. natcha

    அருமையான கதை. கண்ணில் நீர் வந்து விட்டது.

Comments are closed.