த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை
‘ராஜா’ என்கிற தெலுங்குப் படத்தில் பாடகியாக நடிக்கும் த்ரிஷா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சொந்தக் குரலில் பாடல் ஒன்றையும் பாடுகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாட வேண்டுமென்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியிருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் த்ரிஷா.
ஒரே படத்திற்கு மூன்று இயக்குனர்கள்!
மூணாறில் பேய் உலவுவதாகச் சொல்லப்படும் வீடொன்றில் குடியேறும் நகுல் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். சந்தேகமடைந்த டிவி ரிப்போர்ட்டர் டெய்ஸி, அதனை ஆராய்ந்து, திடுக்கிடும் பல உண்மைகளை வெளிக் கொணர்வதே ‘இரா’ படத்தின் கதை. முற்றிலும் புதியவர்கள் இணைந்து இதன் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க சேதி. ஒளிப்பதிவாளராக சதீஷ், இசையமைப்பாளராக வெங்கட் பிரபு சங்கர், எடிட்டராக ஹரி சங்கர் பணியாற்றும் இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கத்தை ஹரி சங்கர், ஹரீஷ் நாராயணன் மற்றும் கிருஷ்ண சேகர் என மூவர் கவனிக்கின்றனர்.
போலீஸாக அசத்தும் சினேகா
ரீமேக் செய்யப்படும் படங்களின் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறது விஜயசாந்தி நடித்த ‘வைஜயந்தி IPS’. ஆர்த்தி குமார் இயக்கத்தில், விஜயசாந்தியின் பாத்திரத்தில் சினேகா நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.
‘குசேலன்’ படத்திற்கான நஷ்டஈடு
‘குசேலன்’ படத்தின் விநியோதஸ்தர்களுக்கு 7 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று ரஜினிகாந்த் மற்றும் ‘குசேலன்’ படத் தயாரிப்புக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
தெலுங்கு ரீமேக்கில் தனுஷ்
‘ஆர்யா’ தெலுங்கு படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. சிவாஜி ஃபிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் மற்றும் ஷ்ரேயா நடிக்கின்றனர். தேவிஸ்ரீ ப்ரசாத் இசையமைக்கிறார். ‘யாரடி நீ மோகினி’யை இயக்கிய ஜவஹர் இப்படத்தை இயக்குகிறார்.
திருநங்கையாக நடிக்கும் கரண்
நந்தா பெரியசாமி இயக்கத்தில் திருநங்கையாக கரண் நடிக்கும் படம் ‘அர்த்தநாரி’. இப்படத்தின் மூலம் திருநங்கைகளைப் பற்றிய மக்களின் தவறான எண்ணங்கள் மாறும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் கரண்.
தாம்தூம் அறிவிப்புகள்
‘தாம்தூம்’ படத் தயாரிப்பு நிறுவனமான மீடியா ஒன் குளோபல் எண்டெர்டெய்ன்மென்ட், தமிழ் திரைப்பட பாதுகாப்பு நிறுவனம் மற்றும் ‘ஜெயம்’ ரவி ரசிகர் மன்றங்கள் இணைந்து மக்களின் உதவியுடன் திருட்டு விசிடிகளை ஒழித்திட முடிவு செய்திருக்கின்றனர். ‘தாம்தூம்’ திருட்டு விசிடிகளைக் கண்டால் தயாரிப்பு நிறுவனம் இதற்கென அறிவித்துள்ள பத்து தொலைபேசி எண்களில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார்கள்.
மாளவிகாவிற்கு பதில் அமோகா
‘கார்த்தீகை’ படத்திற்காக விக்கிரமாதித்யா, அமோகா நடித்த பாடல் சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. சர்ச்சைக்குள்ளான வகையில் படத்திலிருந்து வெளியேறிய மாளவிகாவிற்கு பதில் அமோகா இப்பாடலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘அறிந்தும் அறியாமலும்’ சமிக்ஷா முதன்முறையாக இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மாரீச்சன் தோன்றும் ‘பஞ்சாமிர்தம்’
ராஜூ ஈஸ்வரன் இயக்கும் ‘பஞ்சாமிர்த’த்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெறுகிறது. இதில் நாசர், சரண்யா, ஜெயராம், சமிக்ஷா மற்றும் பலர் நடிக்கின்றனர். ராமாயண கதாபாத்திரமான மாரீச்சன் இப்படத்தில் மீண்டும் உயிர் பெறுவதாக அமைந்திருக்கிறதாம் கதை.
“