கமாண்டோக்களுடன் நடிகர் சூர்யா
‘வாரணம் ஆயிரம்’ படத்திற்காக நடிகர் சூர்யா மற்றும் என்.எஸ்.ஜி கமான்டோக்கள் பங்கு பெற்ற சண்டைக் காட்சிகள் கோயம்புத்தூர் அருகே உள்ள சூலூர் விமானப் படை பயிற்சி நிலையத்தில் படமாக்கப்பட்டன. திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன், சமீரா ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்
ராஜீவ்மேனனின் ‘சீதா’
தன்னுடைய பிலிம் இன்ஸ்டிடூட் மாணவர்களுடன் இணைந்து ‘சீதா’ என்ற குறும்படத்தை இயக்குகின்றார் ராஜீவ்மேனன். இப்படத்தில் திவ்யா ஸ்பந்தனா, ரேவதி மற்றும் பலர் நடிக்கின்றனர். "நான் மதித்து வியக்கும் ராஜீவ்மேனனின் இயக்கத்தில் நடிப்பதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார் திவ்யா.
இளமையான ‘குளிர் 100 டிகிரி’
பள்ளி மாணவர்களைப் பற்றிய ‘குளிர் 100 டிகிரி’ படத்தினை இயக்குகிறார் அனிதா உதீப். "சண்டைக் காட்சிகள், நகைச்சுவை மற்றும் பல திருப்புமுனைகளுடன் அமைந்துள்ளது இப்படம்" என்கிறார் இயக்குனர். அனிதா உதீப் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஜே.சூர்யாவின் அனிமேஷன் படம்
‘புலி’க்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் படம் ‘பேசும் தெய்வங்கள்’. இப்படத்தில் வரும் சிங்கம், புலி, யானை கார்ட்டூன்கள் குழந்தைகளைக் கவரும் விதத்தில் அமையும் என்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யா எடுக்கும் குழந்தைகள் படமா!!!
மீண்டும் தொடங்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’
திட்டமிட்டதை விட ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பட்ஜெட் செல்வராகவனால் அதிகரித்துள்ளது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகினார் ரவிச்சந்திரன். சமாதான பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. கார்த்தி, ரீமா சென், ஆன்ட்ரியா மற்றும் பார்த்திபன் இப்படத்தில் நடிக்கின்றனர்.
‘தனம்’ இசை வெளியீடு
இயக்குனர் சிவாவின் ‘தனம்’ படத்தின் இசை ஆல்பத்தை கே.பாலசந்தர் வெளியிட்டார். "என்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிவா ‘தனம்’ என்றொரு படம் இயக்குவதாக சொன்னபோது ஆச்சர்யமடைந்தேன். ஆனால் படம் பார்த்த பிறகு சிவாவினால் கருத்தாழமிக்க படங்களையும் சிறப்பாகக் கையாள முடியும் என்று அறிந்து கொண்டேன்" என்று விழாவில் கூறினார். தயாரிப்பாளர்கள் ராம நாராயணன், முரளிதரன், ‘அன்பாலயா’ பிரபாகரன், காஜா மொய்தீன், பெப்சி விஜயன் மற்றும் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
உதவி இயக்குனராகிறார் பத்மப்ரியா
‘பொக்கிஷம்’ படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குனர் சேரனின் உதவி இயக்குனராகவும் பணிபுரிகிறார் பத்மப்ரியா. "இயக்குனர் சேரன் மிகவும் திறமை வாய்ந்தவர். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிவதில் பெருமைப்படுகிறேன்" என்கிறார் பத்மப்ரியா.
குசேலனில் ரஜினியின் பதில்?
குசேலனில் படம் ஆரம்பித்த 15 நிமிடம் கழித்து தான் ரஜினி நடித்த காட்சி இடம்பெறுகிறது. ரஜினிகாந்த் தன்னுடைய இமயமலை யாத்திரை, அரசியல் பிரவேசம் போன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். டோக்கியோ சர்வதேச விழாவில் ‘குசேலன்’ திரைப்படம் காட்சிக்குச் செல்கிறது.”