குருவுக்கு மரியாதை
இயக்குனர் செல்வராகவனிடம் அசோசியேட்டாக பணிபரிந்தவர் பரந்தாமன். குருவுக்கு மரியாதை செய்யும் வகையில் அவர் இயக்கும் முதல் படத்திற்கு, ‘செல்வராகவன் பி.ஈ’ எனப் பெயரிட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கங்கை அமரன் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.
வித்தியாசங்கள் செய்ய விரும்பும் ஜீ.வி.பிரகாஷ்
ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கும் படப் பாடல்களில் வித்தியாசமான குரல்களை உபயோகித்துள்ளார். ‘குசேலனி’ல் பஞ்சாபி பாடகர் தலெர் மெஹந்தியும், ‘ஆயிரத்தில் ஒருவனி’ல் பழம்பெரும் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸும் மற்றும் ‘ஆனந்த தாண்டவ’த்தில் சுபா முட்கலும் பாடியுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியுள்ள பிரகாஷ் தன்னுடைய இசையில் வரவிருக்கும் ‘அங்காடி தெரு’வில் பாட இருக்கிறார்.
இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் கலைஞர்
முதலமைச்சர் கருணாநிதி நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ் கணேஷின் ‘வாழ்க்கை’ இசை ஆல்பத்தினை வெளியிட்டார். தமிழில் ‘வாழ்க்கை’, ஹிந்தியில் ‘ஜீவன்’, தெலுங்கில் ‘ஜீவித்தம்’ மற்றும் மலையாளத்தில் ‘ஜீவிதம்’ என நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது இந்த ஆல்பம். ஒவ்வெரு மொழியிலும் 11 பாடல்கள் உள்ள இந்த ஆல்பத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், திப்பு, கார்த்திக், பின்னி கிருஷ்ணகுமார், சுஜாதா, ஸ்ரீநிவாஸ், ஹரிணி, விஜய் ஜேசுதாஸ், மஹதி மற்றும் பலர் பாடியுள்ளனர்.
தாயைத் தேடும் கதை ‘நந்தலாலா’
இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய ‘நந்தலாலா’ திரைப்படத்தின் மூலம் நடிகராவது நாம் அறிந்ததே. 6 வயதுக் குழந்தையும் 30 வயது மனிதனும் தங்களுடைய தாயைத் தேடும் கதையைச் சொல்ல வருகிறது ‘நந்தலாலா’. படப்பிடிப்பின் போதே குரல் பதிவு, எடிட்டிங் என பல முயற்சிகளை கையாண்டுள்ளார் இயக்குனர்.
திருநங்கைகளுக்காகப் பேச வருகிறது ‘பால்’
‘ஒவ்வொரு மனிதனுக்கும் – ஆண், பெண், திருநங்கை என்ற வேறுபாடில்லாமல் வாழும் உரிமை உள்ளது’ என்ற கருத்தினை வலியுறுத்தும் படம் ‘பால்’. இப்படத்தினை டி.சிவகுமார் இயக்க ஈரோட்டைச் சேர்ந்த கற்பகா (திருநங்கை) நடிக்கின்றார். தன்னுடைய காதலனிடம் உண்மையைச் சொல்லத் தயங்கும் திருநங்கை குறும்பட இயக்குனரின் கதைதான் ‘பால்’.
டாக்டர் ‘ஆச்சி’
தமிழ்நாட்டின் 5 முதலமைச்சர்களுடன் நடித்தவர் மற்றும் கின்னஸ் உலக சாதனை புரிந்தவர் ‘ஆச்சி’ மனோரமா. சத்யபாமா மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் இணைந்து மனோரமாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளனர்.
நீண்ட நாட்களுக்குப் பின் பின்னணி பாடிய இளையராஜா
சங்கிலி முருகன் தயாரிப்பில் இளையராஜா இசையில் வளரும் படம் ‘அழகர்மலை’. நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘கருகமணி கருகமணி கழுத்தில் ஆடுதடி..’ என்ற டூயட் பாடலைப் பாடியுள்ளார். ‘நான் கடவுள்’, ‘ஜெகன்மோகினி’, ‘வால்மீகி’ ஆகிய படங்களுக்கும் இளையராஜா இசையமைத்திருப்பது நாம் அறிந்ததே.
கமல் தோன்றும் ‘இந்திரலோகத்தில் இளவரசன்’
தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மின், ரீமா சென் நடித்த ‘எமகோளா’ என்ற தெலுங்குப் படத்தை தமிழில் ‘இந்திரலோகத்தில் இளவரசனா’க டப் செய்கின்றனர். கிராபிக்ஸ் உதவியுடன் கமலஹாஸன் நடித்த படங்களில் இருந்து சில காட்சிகளை இப்படத்தில் சேர்த்திருக்கின்றனர். காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படம் இது என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.
25 லட்சம் செலவில் அம்மன் திருவிழா
மாரியம்மன் கோவில் திருவிழா ‘வெடிகுண்டு முருகேசன்’ படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ராஜபாளையம் அருகில் உள்ள ராமலிங்கபுரத்தில் படப்பிடிப்பிற்காக 25 லட்சம் செலவில் கோவில் திருவிழா கொண்டாடுகின்றனர். ‘ஆத்தா வராடா மாரியாத்தா வராடா…’ என்ற பாடலையும் பதிவு செய்கின்றனர். பசுபதி, ஜோதிர்மயி நடிக்கும் இப்படத்தினை இயக்குகிறார் மூர்த்தி.”