சினி சிப்ஸ் – கொறிக்க, சுவைக்க (9)

பிரமிட் சாய்மீராவின் மெகா சாதனை

இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் 10 படங்களின் தயாரிப்பைத் துவக்கியுள்ளது பொழுதுபோக்கு நிறுவனமான பிரமிட் சாய்மீரா. இவ்விழா சென்னையில் உள்ள ஆண்டாள் பெண்கள் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் ராம நாராயணன், சரத்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், பெப்ஸி விஜயன், சத்யராஜ், சேரன், பார்த்திபன், பரத் மற்றும் பலர் கலந்து கெண்டனர்.

*****

தசாவதாரத்தை 1000 முறை பார்த்த இயக்குனர்!

கே.எஸ்.ரவிக்குமார் பொதுவில் தன்னுடைய படம் திரையிடுவதற்கு முன்பு பல முறை சரிபார்ப்பது வழக்கம். ஆனால் தசாவதாரம் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் 1000 முறைகளாவது சரி பார்த்திருப்பாராம். படத்தில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த காட்சிகள் இயல்பாகத் தோன்றுவதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யவேண்டி இருந்ததாம்!

*****

வசந்திற்கு கிடைத்த பாராட்டு

இயக்குனர் வசந்த் தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய சேவைக்காக அவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது சென்னை ரோட்டரி கிளப். விருதை வழங்கிய பாலச்சந்தர் அவர்கள் தன்னுடன் வசந்த் பணியாற்றிய 18 படங்களை நினைவு கூர்ந்தார். விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மணிரத்னம், வசந்தின் அனைத்துப் படங்களும் மக்களுக்கு வலுவான செய்திகள் கூறியுள்ளன என்று பாராட்டினார்.

*****

மீண்டும் விஜயசாந்தி?

சண்டைக்குப் பின் இயக்குனர் சக்தி சிதம்பரமும், சுந்தர்.சியும் மீண்டும் இணையும் படம் இடி. இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திட விஜயசாந்தியை அணுகியுள்ளார் சிதம்பரம். விஜயசாந்தியின் ஒப்புதல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

*****

ரஜினியுடன் இணையும் சந்தானம்

குசேலனின் புதிய வரவு நகைச்சுவை நடிகர் சந்தானம். சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதென்ற அவருடைய நீண்ட நாள் கனவு இவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறுமென எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் இவர். கதாநாயகனாக இவர் நடித்துள்ள ‘அறை எண் 305ல் கடவுள்’ திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

*****

பொறுப்பான பதவியில் கேயார்

சன் டிவி மற்றும் ராடன் நிறுவனம் இணைந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து மேலும் பல திரைப்படங்களைத் தயாரிக்கும் திட்டம் இருக்கிறதெனவும் இந்தக் கூட்டுத் தயாரிப்பின் பொறுப்பாளராக இயக்குனர் கேயார் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

*****

கமலின் ‘மர்மயோகி’

தசாவதாரத்திற்கு பிறகு கமல் நடிக்கவிருக்கும் படம் ‘மர்மயோகி’. இதனை வால்ட் டிஸ்னி மற்றும் பரத்பாலா இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியிட உள்ளனர். படத்தின் கதை 7ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வைச் சார்ந்ததென்று கோடம்பாக்க வட்டாரம் தெரிவிக்கின்றது.

*****

வல்லமை தாராயோவின் இசை வெளியீடு

வல்லமை தாராயோவின் இசை வெளியீடு ஏப்ரல் 9ம் தேதி நடைபெற்றது. பார்த்திபன், சாயாசிங் நடிப்பில் மதுமிதா இயக்கத்தில் வெளிவருகிறது இப்படம். விழாவின் சிறப்பம்சமாக பிரபல பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ், நடிகைகள் எம். என். இராஜம், மஞ்சுளா விஜயகுமார், சத்யப்ரியா மற்றும் கடம் வித்வான் விக்கு விநாயகம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

*****

About The Author