ஜப்பான் மொழியிலும் ‘பஞ்ச்’
ரஜினியின் ‘பாபா’ படத்தில் ஜப்பானிய நடிகர்கள் நடித்தது நினைவிருக்கலாம். தற்போது வளர்ந்து வரும் ‘குசேலனி’லும் 9 ஜப்பானிய நடிகர்கள் இடம் பெறுகின்றனர். மற்றொரு துண்டுச் செய்தி, படத்தில் ஜப்பான் மொழியில் பஞ்ச் டயலாக் ஓன்றும் பேசியுள்ளாராம் ரஜினி. ஜப்பான் ரசிகர்கள் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர்.
மனம் மாறினார் எஸ்.ஜே.சூர்யா
இனி மற்றவர்கள் இயக்கத்தில் நடிப்பதில்லை என்றிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் சாய் செல்வாவின் ‘நியூட்டனின் மூன்றாம் விதி’யின் கதை அவருடைய முடிவை மாற்றியுள்ளது. இப்படத்தின் பூஜை ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. படத்தின் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
‘சிலந்தி’யின் இசையமைப்பாளர் மாற்றம்
‘சிலந்தி’ படத்தின் இயக்குனர் ஆதிராஜ் மற்றும் இசையமைப்பாளர் நீல் முகர்ஜி இடையே பின்னணி இசை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இசையமைப்பாளர் மாற்றப்பட்டார். கார்த்திக் படத்தின் தற்போதைய இசையமைப்பாளர்.
சென்னை கிரிக்கெட் குழுவில் விஜய், நயன்தாரா
சினிமா, கிரிக்கெட் இரண்டும் தனித்தனியே உற்சாகம் தருபவை. இவை இரண்டும் சேர்ந்தால் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு அளவில்லை. சென்னை ஐ.பி.எல் கிரிக்கெட் குழுவின் பிரதிநிதிகளாக விஜய், நயன்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜீவ் மேனன் இயக்கத்தில், மணி சர்மா இசையில் இவர்களைக் கொண்டு விளம்பரப்படமொன்று தயாரிக்கின்றனர்.
மீண்டும் ‘தம்பிக்கு எந்த ஊரு’
‘பில்லா’வை அடுத்து ரஜினியின் மற்றொரு படமான ‘தம்பிக்கு எந்த ஊரு’ ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இவர் ரஜினியின் மிகப் பெரிய ரசிகரென்பது குறிப்பிடத்தக்கது. லாரன்ஸ் தற்போது நடித்துக் கெணடிருக்கும் ‘பாண்டி’ படத்திற்குப் பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
‘தசாவதாரத்தின்’ சிறப்பு அம்சங்கள்
‘தசாவதாரத்தின்’ வெளியீடு நெருங்கி வரும் நேரத்தில் படத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் :
* இப்படத்தில் வடஇந்தியா மற்றும் வெளிநாட்டுத் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
* வெளிநாட்டிலிருந்து 45 தொழில்நுட்பக் கலைஞர்களை வரவழைத்து நம்முடைய கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.
* இப்படத்தின் சிறப்பு ஒளிப்பதிவிற்காக (Visual Effects) லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து ப்ரயன் வரவழைக்கப்பட்டுள்ளார்.
‘நேபாளி’க்காக காத்திருக்கும் பரத்
‘நேபாளி’யில் பரத் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் பரத்தின் மேக்கப்பிற்காக மும்பையிலிருந்து வித்யா சாகர் பட் இதற்கென வரவழைக்கப்பட்டுள்ளார். நேபாளியாக தோன்றும் பரத் மேக்கப்பிற்காக தினமும் 3 மணி நேரம் செலவிட்டிருக்கிறார். ஏப்ரல் இரண்டாவது வாரம் திரைக்கு வரவிருக்கிறான் நேபாளி.
‘சரோஜா’வில் கலக்கும் ப்ரேம்ஜி
வெங்கட் பிரபுவின் அடுத்த படமான ‘சரோஜா’வைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் :
* இப்படத்தில் ஜெயராம் போலீஸ் அதிகாரியாகவும், பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்திலும் தோன்றுகின்றனர்.
* படத்தில் ப்ரேம்ஜியின் நகைச்சுவை பெரிதும் பேசப்படுமென எதிர்பார்க்கிறார் இதன் இயக்குனர்.
* படத்தின் நாயகி புதுமுகம் மேகா ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர்.
“