குழந்தைகளை குஷிப்படுத்த வரும் ‘கதோத்கச்‘
மாயாபஜாரில் வரும் கடோத்கஜனை அடிப்படையாகக் கொண்ட அனிமேஷன் படம் ‘கதோத்கச்’. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி ஆகிய 7 மொழிகளில் தயாரித்துள்ளனர். சிங்கீதம் ஸ்ரீனிவாஸ ராவ் இயக்கத்தில், சூர்யதேவர வினோத் தயாரிப்பில் வரும் இப்படத்திற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம், தலெர் மெஹந்தி, ஷ்ரேயா கோஷல், சுதேஷ் போன்ஸ்லே, ஷான் மற்றும் பலர் டப்பிங் பேசியுள்ளனர்.
மதுமிதாவின் ‘வல்லமை தாராயோ’
மதுமிதாவின் இயக்கத்தில் பார்த்திபன், சாயாசிங் நடித்துள்ள ‘வல்லமை தாராயோ’ வெளியீடுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. படத்தின் இயக்குனர் மதுமிதா சிங்கப்பூர் வளர்ச்சித் துறை மற்றும் பிரிட்டிஷ் ஒளிபரப்புத் துறையிடமிருந்து விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கணவன் நல்லவன் என்ற நிலையில் மனைவி விவாகரத்து வேண்டுவதால் ஏற்படும் உணர்ச்சிப் போராட்டத்தை விளக்குகிறது ‘வல்லமை தாராயோ’.
மீண்டும் கலக்க வரும் செந்தில்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘ஆதிவாசியும் அதிசயப்பேசியும்’. மேலும் நிதின் பார்த்தசாரதியின் இயக்கத்தில் ‘அபூர்வா’ மலையாளப் படத்திலும் நடிக்கிறார் செந்தில்.
‘ரோபோ’வில் பாலகுமாரன்
சுஜாதாவின் மறைவினால் ஷங்கரின் ‘ரோபோ’ டீம் குழப்பநிலையை அடைந்தது. அதற்குத் தீர்வு எழுத்தாளர் பாலகுமாரன் வடிவில் கிடைத்திருக்கிறது. பாலகுமாரன் ஷங்கருடன் இணைந்து ‘காதலன்’ மற்றும் ‘ஜென்டில்மேன்’ படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார் என்பது நாம் அறிந்ததே. துண்டுச் செய்தி – தெலுங்கு நடிகர் சக்கரவர்த்தி படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
கணியன் கூத்து ஆடும் வடிவேலு
23ம் புலிகேசிக்குப் பிறகு இரட்டை வேடங்களில் வடிவேலு நடிக்கும் படம் ‘செவ்வேல்’. படத்தில் திருநெல்வேலி மாவட்டப் புகழ் கணியன் கூத்து இடம்பெறவுள்ளது. இதற்கென கணியன் கூத்தாட்டக்காரர்களிடம் தனிப்பயிற்சி பெறுகிறார் வடிவேலு.
கணவர் வழி செல்லும் மனைவி
இயக்குனர் ஜீவாவின் மனைவி அனீஸ் தன்வீர் கணவரின் நினைவாகத் தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனம் விஷன் ஜீவா ஸ்டூடியோ. அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் முத்திரை. அனீஸ் இது பற்றிக் கூறுகையில், "நான் என்னுடைய கணவரை சந்தித்ததும் இழந்ததும் இந்த சினிமாவில்தான். அவர் நினைவாகவே இந்நிறுவனத்தை ஆரம்பித்துள்ளேன்" என்றார்.
சாமிக்கு இனி தடையில்லை
‘மிருகம்’ படப்பிடிப்பில் இயக்குனர் சாமிக்கும் பத்மப்ரியாவிற்கு இடையே நடந்த பிரச்சினையினால் இயக்குனருக்கு ஒரு வருடம் தடைவிதிக்கப்பட்டதல்லவா? பல திரைப்பட அமைப்புகளின் உதவியுடன் அவரின் தடை நீக்கப்பட்டுவிட்டது. சாமியின் அடுத்த படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வன்முறைக்கு நோ!
வெளிவரத் தயாராக இருக்கும் சுந்தர்.சியின் அடுத்த படம் ‘ஆயுதம் செய்வோம்’. இந்தப் படத்திலும் அவர் ரவுடியாக வருகிறார் என்று சொல்லவும் வேண்டுமோ! மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தில் ஒரு மாதம் இருக்க வேண்டும் என்று கோர்ட் அளிக்கும் தண்டனையினால் அவருள் ஏற்படும் மாற்றங்களே படத்தின் கதை.
“