சினி சிப்ஸ் – கொறிக்க, சுவைக்க (5)

ஜீவாவின் அடுத்த இன்னிங்ஸ்

திருமணத்திற்குப் பிறகு ஜீவா நடிக்கவிருக்கும் படம் இயக்குனர் ராஜேஷின் "சிவா மனசுல சக்தி". 2 வருடத்திற்கு முன்பே இதன் கதையை கேட்டு ஓ.கே செய்துவிட்டார். ஆனால் அப்போது ‘ஈ’ படம் நடித்துக் கொண்டிருந்ததால் உடனே படப்பிடிப்பு தொடங்கமுடியவில்லை. நகைச்சுவை கலந்த காதலைச் சொல்ல வருகிறது இந்த சிவா மனசுல சக்தி.

*****

அஜீத்தைப் புகழும் அமீர்

இயக்குனர் அமீர் தற்போதைய நடிகர்களிலேயே தன்னுடைய முதல் சாய்ஸ் விக்ரம் என்று கூறியுள்ளார். இரண்டாவது சாய்ஸ் அஜீத்தென்று கூறியுள்ளார். ‘அஜீத் பல திறமைகளைக் கொண்டவர். அவரின் திறமைகளை சரிவர யாரும் பயன்படுத்துவதில்லை. தனக்கு வாய்ப்புக் கிடைத்தால் அதனை நிரூபிக்கமுடியும்’ என்று கூறியுள்ளார்.

*****

குழப்பத்தில் ஷங்கர்

அறிவியல் சம்பந்தமான தன்னுடயை ‘ரோபோ’ படத்தின் வசனங்களுக்கு இயக்குனர் ஷங்கர், சுஜாதாவை நம்பியிருந்தார். சுஜாதாவின் மறைவிற்குப் பிறகு அவருக்கு நிகரான ஒருவரைத் தேடும் வேட்டையில் உள்ளார். படத்தின் பூஜை ஏப்ரல் 14ம் தேதி நடக்கவுள்ளது. படத்தின் ஷுட்டிங் மே மாதம் தொடங்கவுள்ளது.

*****

பிரச்சினையில் ஜெயமோகன்

தன்னுடைய வலைப்பூ (blog) மற்றும் சில நாளிதழ்களில் எழுத்தாளர் ஜெயமோகன், எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி பற்றிக் கூறியுள்ள கருத்துக்க வன்மையாகக் கண்டித்துள்ளது நடிகர் சங்கம். எழுத்தாளரும், நாளிதழ்களும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியுள்ளனர். மன்னிப்பு கேட்காத பட்சத்தில் புறக்கணிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.

*****

‘சென்னையில் ஒரு மழைக்காலத்தில்’ த்ரிஷா

‘வாரணமாயிரம்’ படத்திற்கு அடுத்து கௌதம் இயக்கும் படம் ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’. இதில் த்ரிஷா கால்சென்டரில் பணிபுரியும் பெண்ணாக நடிக்கவுள்ளார். கால் சென்டர் அலுவல்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டது இப்படம்.

*****

சில்க் ஸ்மிதாவின் மரணம் பற்றி மீண்டும் சர்ச்சை

இயக்குனர் திருப்பதி ராஜா, சில்க் ஸ்மிதாவைப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவரின் மரணம் தற்கொலையல்ல என்று கூறியிருப்பதாகவும், இதனால் அவருடன் சம்பந்தப்பட்டவர்கள் பலருக்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சில்க் ஸ்மிதாவின் முதல் மற்றும் கடைசி படத்தை இயக்கியதும் இந்த திருப்பதி ராஜாவேதான்.

*****

புவி வெப்பமடைதல் (Global warming) பற்றி ‘அச்சமுண்டு அச்சமுண்டு’

அமெரிக்க வாழ் தமிழரான அருண் வைத்தியநாதனின் முதல் படத்தில் (அச்சமுண்டு அச்சமுண்டு) பிரசன்னா மற்றும் சினேகா நடிக்கவுள்ளனர். படத்தின் கரு நாளுக்கு நாள் பூமி சூடாகி வருவதைப் பற்றியது என்று தெரிவித்துள்ளார் இயக்குனர். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரசன்னாவின் நடிப்பிற்கு தீனி போடுமா இப்படம் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

*****

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளி

‘KM இசைக் காப்பகம்’ என்ற இசைப்பள்ளியை சென்னையில் துவங்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹமான். இப்பள்ளியில் வாய்ப்பாட்டு, அனைத்து விதமான இசைக்கருவிகள், இசை தொழில் நுட்பங்கள் போன்ற பல துறைகளில் பயிற்சியளிக்கப்படவுள்ளது. இப்பள்ளியில் சேர்வதற்கு இசை ஆர்வம் என்ற ஒரு தகுதி மட்டுமிருந்தால் போதுமாம். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை மூலம் ஊக்கத்தொகையும், ஏழை மாணவர்களுக்கு 50% உதவித்தொகையும் வழங்க உள்ளனர்.

***** 

About The Author