சினிமாக் கொட்டகை

முதல்மேளச் சத்தத்துல
புள்ளகுட்டிகளக் கூட்டிக்கிட்டு
ஓட்டமும் நடையுமா
கொட்டகை வந்து சேர்ந்தா
ரெண்டாம் மேளம்
போட்டுருவான்
எமகாதக ஆபரேட்டர்.

அஞ்சு ரூபா டிக்கெட் வாங்க
வரிசையில நின்னா
படம் போட்டு
நாழி ஆச்சுன்னு
மேனேஜர் மனுசன்
கத்துவான்.

மூச்சிரைக்க ஓடி
காலி பெஞ்ச் தேடி
கண் அலையும்
மூத்திர வாடையும்
கவுச்சி நாத்தமும்
பீடிப் புகையும் தாண்டி
திரையப் பார்த்தா
எழுத்து ஓடும்.

பெஞ்ச் ஓரமா ஒக்காந்து
அண்ணாந்து பார்த்தா
தலைவரு வருவாரு
விசிலுச் சத்தம்
காதக் கிழிக்கும் – நாலா
கிழிச்சுப் பறக்கவிடும்
இலாட்டரிச் சீட்டுக்
கூட மனசும் லேசாகிக்
காத்துல பறக்கும்.

About The Author