சிந்தனைக் கதம்பம்

இங்கிலாந்தின் பிரதமராய்ப் பணியாற்றிய வின்ஸ்டன் சர்ச்சிலின் முதுமைக் காலத்தில் அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்க ஓர் இளைஞனும் வந்தான்.

விடைபெறுகையில், "அடுத்த ஆண்டும் உங்கள் பிறந்தநாளின்போது நான் வாழ்த்துவதற்கு வாய்ப்பு நேர வேண்டும்" என்றான்.

சர்ச்சில் சொன்னார். "நிச்சயமாக வாய்ப்புக் கிடைக்கும், உன்னைப் பார்த்தால் ஆரோக்கியமானவனாகத்தானே தெரிகிறாய்?"

********

புகழ் வாய்ந்த ஆங்கிலேய எழுத்தாளர் பெர்னாட்ஷா குறும்பாகப் பேசுவதில் வல்லவர். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

"புகை பிடிப்பதைக் கைவிடுவது கடினமா?"

அவரது விடை: "மிக எளிது. நான் பலமுறை விட்டிருக்கிறேன்!"

********

ஷேக்ஸ்பியர் நிறைய நாடகங்களை இயற்ற முடிந்ததற்கான காரணங்களுள் ஒன்று, தொலைபேசியில் பதில் சொல்லத் தேவையில்லாமல் இருந்தது – ஜான் டுடோர்.

********

‘இன்று ஒரு தகவல்’ புகழ் தென்கச்சி சுவாமிநாதன் தொலைக்காட்சியின் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியில் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தார். நேர்காணலில் கேட்டார்கள்:

"வேளாண்மைப் பட்டதாரியான நீங்கள் விவசாயத்தில் ஈடுபடாமல் இந்த வேலையை ஏன் விரும்புகிறீர்கள்?"

அவரது பதில் : "விவசாயம் செய்வது கஷ்டம். அதைப் பற்றிச் சொல்வது சுலபம் என்பதால்."

வேலை கிடைத்துவிட்டது. இது அவரே சொன்ன தகவல்.

********

பிரச்சனைகளைப் பற்றிய ஜென் கதை ஒன்று :

புத்தரைப் பார்க்க உழவர் ஒருவர் சென்றார். மழையானது பெய்தும் கெடுக்கிறது, காய்ந்தும் கெடுக்கிறது. மனைவி தம்மைப் புரிந்து கொள்ளவில்லை. மகன் எதிர்த்துப் பேசுகிறான் என்று தம்முடைய பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்தார்..

புத்தர் கூறினார். "என்னால் உதவ முடியாது. எல்லாருக்கும் 83 பிரச்சினைகள் உண்டு. சில பிரச்சினைகள் நீங்கினால் அவற்றின் இடத்தை வேறு பிரச்சினைகள் பிடித்துக் கொள்ளும். ஆக, 83 என்றும் குறையாது."

உழவர் ஏமாற்றம் உற்றார். "அப்படியானால் உங்களுடைய போதனைகளால் என்ன பயன்?" என்று கேட்க, புத்தர் பதிலுரைத்தார்.

"அந்த 83 பிரச்சினைகளைத் தீர்க்க என் போதனை பயன்படாது. 84 ஆம் பிரச்சினையை நீக்கத்தான் அது உதவும்."

"அது என்ன, 84 ஆவது பிரச்சினை?"

"பிரச்சினையே இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம் அல்லவா? அதுதான் 84 ஆம் பிரச்சினை."

********

About The Author