சிக்கன் காஷ்மீரி புலவு

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 500 கிராம்
கோழிக்கறி – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 4
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 10 பல்
பாதாம் பருப்பு அல்லது முந்திரிப் பருப்பு – 10
மிளகு – 1 தேக்கரண்டி
கருஞ்சீரகம் – ½ தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
ஜாதிக்காய் – 1
பட்டை – 1
கிராம்பு – 2
உப்பு – தேவையான அளவு
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
தயிர் – சிறிதளவு
நெய் – சிறிதளவு
கொத்துமல்லி – சிறிதளவு

செய்முறை:

பாசுமதி அரிசியைத் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள்!

இரண்டு பெரிய வெங்காயங்களை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக் கொள்ளுங்கள்.

குக்கரை அடுப்பில் வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், சிறிது மிளகு, ஜாதிக்காய், பட்டை, கிராம்பு, அரைத்த இஞ்சி, பூண்டு இவற்றை வதக்கி, இத்துடன் சுத்தம் செய்து நன்கு கழுவிய கோழிக்கறியையும் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்குங்கள்.
பின்னர், தேவையான அளவு தண்ணீர், உப்புச் சேர்த்து, குக்கரை மூடி 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்க வேண்டும். அதிலிருக்கும் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊற வைத்த அரிசியைத் தண்ணீர் இன்றி அதில் போட்டு, சிறிது நேரம் வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு குக்கரில், கறி வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து நான்கு கோப்பைத் தண்ணீரை ஊற்றி, அரிசிக்குத் தேவையான அளவு உப்புச் சேர்த்து, கொதித்ததும் மூடி போடுங்கள். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடுங்கள்.

இரண்டு பெரிய வெங்காயங்களை மெலிதாக நறுக்கி, சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். பாதாம் பருப்பு அல்லது முந்திரிப் பருப்பை மெலிதாகச் சீவி மிதமான தீயில் வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடி கனமான பாத்திரத்தில் நெய்யைத் தடவி, வேக வைத்த சாதத்தில் கொஞ்சம் பரப்பி, அதன் மீது சிறிதளவு கறிக்கலவை, சிறிதளவு தயிர் ஆகியவற்றைப் பரப்பி அதன் மீது மிளகு, கருஞ்சீரகம், கரம் மசாலா தூவுங்கள். பிறகு, மீண்டும் ஓர் அடுக்கு சாதம் பரப்ப வேண்டும். இப்படியே சாதம் தீரும் வரை சாதம், கறிக்கலவை – தயிர் என மாற்றி மாற்றிப் பரப்பி, மேல் பக்கம் சாதம் வரும்படியாக அடுக்கி முடித்ததும் மூடி, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

அவ்வளவுதான், சுவையான ‘சிக்கன் காஷ்மீரி புலவு‘ தயார்! சிவக்க வறுத்த வெங்காயம், பாதாம் பருப்பு அல்லது முந்திரிப் பருப்பு, கொத்துமல்லி தூவிப் பரிமாறுங்கள்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author