வெகு காலத்திற்கு முன்பு…
சிறிய தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன. மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்பது தான் பந்தயத்தின் இலக்கு.
இந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்காகவும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் அந்த பெரிய கோபுரத்தைச் சுற்றி மிகப்பெரும் கூட்டம் கூடி விட்டது.
போட்டி ஆரம்பமாகி விட்டது. உண்மையிலேயே அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவருக்குக் கூட அந்த சிறிய தவளைகளால் கோபுரத்தின் உச்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லை.
கூட்டத்திலிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்…..
"வழி மிகவும் கடினமானது"
"இந்தச் சிறிய தவளைகளால் நிச்சயமாக உச்சியை அடைய முடியாது"
"வெற்றிபெற ஒரு சிறிய வாய்ப்பு கூட அவற்றுக்குக்கிடையாது"
"கோபுரத்தின் உயரம் மிகவும் அதிகம்"
பார்வையாளர்களின் இத்தகைய பேச்சைக்கேட்ட அந்த சிறிய தவளைகள் ஒன்றன்பின் ஒன்றாக கோபுரத்தின் மேலே ஏற முடியாமல் சரிய ஆரம்பித்தன. ஒரு ஜான் ஏறினால் ஒரு முழம் சறுக்கியது. தொடர்ந்து உற்சாகத்துடன் இருந்த ஒரு சில தவளைகள் மட்டும் மேலும் அதிக உயரத்திற்கு ஏறிக் கொண்டிருந்தன.
கூடியிருந்த கூட்டம் தொடர்ந்து கூக்குரலிட்டது.
"இது மிகவும் கடினமான விஷயம்"
"உங்களில் ஒருவரும் உச்சியை அடையப்போவதில்லை"
உற்சாகமாக இருந்த அந்த சிறிய தவளைகளில், சில மிகவும் சோர்வடைந்து தங்கள் முயற்சியைக் கைவிட்டு விட்டு கீழ் நோக்கி இறங்கத் தொடங்கின.
ஒரே ஒரு தவளையைத் தவிர அனைத்து தவளைகளும் தங்கள் முயற்சியை கைவிட்டு விட்டன. அது மட்டும் தொடர்ந்து மேலே மேலே ஏறிக்கொண்டே இருந்தது. அது தன் முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை. அது மிகுந்த பிரயத்தனத்துடன் கோபுரத்தின் உச்சியை சென்றடைந்தது.
மற்ற அனைத்துத் தவளைகளும் அந்த ஒரு தவளையால் மட்டும் எப்படி கோபுரத்தின் உச்சியை அடைய முடிந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாக இருந்தன.
போட்டியில் கலந்து கொண்ட தவளைகளில் ஒன்று, வென்ற தவளையிடம் "உனக்கு மட்டும் கோபுரத்தின் உச்சியை அடைவதற்கு உண்டான பலம் எங்கிருந்து வந்தது?" என்று கேட்டது.
வெற்றி பெற்ற தவளையிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.
பிறகு தான் தெரிந்தது, வெற்றி பெற்ற அந்தத் தவளைக்கு காது கேட்காது என்பது.