ஒரு ஊரில் ராமு, தாமு என்ற இரு நண்பர்கள் ஒற்றுமையாக வசித்து வந்தார்கள். ஒரு குறும்புக்காரன் அவர்கள் நட்பைச் சோதிக்க நினைத்தான். ஒரு நாள் அவர்கள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவர்களுக்கு நடுவே அவர்கள் பார்க்க நடந்து வந்தான்.
அவன் போட்டிருந்த சட்டை ஒரு பக்கம் நீலமாகவும் மறு பக்கம் சிகப்பாகவும் இருந்தது. ராமு பார்த்த போது அவன் சட்டை நீலமாகவும் தாமுவிற்கு சிகப்பாகவும் தெரிந்தது.
அன்று மாலை ராமு தாமுவிடம் அவன் போட்டிருந்த நீலச் சட்டை நன்றாக இருந்தது என்றான். உடனே தாமு அதை மறுத்து அது சிகப்புச் சட்டை என்றான். இல்லை இல்லை, அது நீலம் தான் என்று ராமுவும், அது சிகப்பு தான் என்று தாமுவும் வாதாடினார்கள். சண்டை முற்றிக் கட்டிப் பிடித்து உருண்டார்கள். இனி நாம் நண்பர்கள் இல்லை எனக் கோபமாகக் கத்தினார்கள்.
அப்போது அந்தக் குறும்புக்காரன் அவர்களிடம் அந்தச் சட்டையைக் காட்டினான். ஒரு பக்கம் நீலம் ஒரு பக்கம் சிகப்பு. ராமுவும் தாமுவும் கோபமாக உன்னால் தான் நாங்கள் சண்டை போட்டோம். நாங்கள் இது வரை சகோதரர்கள் போல் இருந்தோம் என்றனர்.
உடனே அந்தக் குறும்புக்காரன் என்னைத் திட்டாதீர்கள். உங்கள் சண்டைக்கு நான் காரணமில்லை. நீங்கள் இருவரும் பார்த்தது சரி தான். ஆனால் உங்களின் ஒரு பக்கக் கோணத்தித்திலேயே சண்டை போட்டீர்கள். மற்றவரின் கோணத்தில் பார்க்கவில்லை. அதுதான் உங்கள் சண்டைக்குக் காரணம் என்றான்.
ராமுவும் தாமுவும் வெட்கி இனி எந்த சம்பவத்தையும் எல்லாக் கோணங்ளிலும் பார்க்க வேண்டும் என்றனர்.