ஆஞ்சநேயர் சில கோயில்களில் மிகவும் உயரமாக, ஏணி வைத்து ஏறி அபிஷேகம் செய்ய வேண்டிய வகையில் அமைந்திருக்கிறார். தில்லியில் கரோல் பாக் முடியும் இடத்தில் ஒரு சிறிய அனுமான் கோயில் இருந்தது. நாளடைவில் அவர் சக்தி பலருக்கும் தெரிய, பக்தர்கள் அனைவரும் சேர்ந்து சுமார் இரண்டு மாடி உயரத்திற்கு அனுமன் சிலையை வடித்தார்கள். அத்தனை உயரமான அனுமானை மிகச் சில இடங்களில்தான் காண முடிகிறது. மிகப் பழமையான ஆஞ்சநேயர், சுசீந்திரம் தாணுமாலயப் பெருமாள் கோயிலில் உள்ளார். இவர் உயரம் சுமார் பதினெட்டு அடிகள் இருக்கும். இவர் அஞ்சலி ஹஸ்தத்தில், அதாவது, வணங்கும் நிலையில் இருந்து ஆசி வழங்குகிறார். இதே போல், அஞ்சலி ஹஸ்தத்தில் இருக்கும் நாமக்கல் அனுமாரும், சென்னை நங்கைநல்லூரில் இருக்கும் ஆஞ்சநேயரும் இதேபோல் மிக உயரமாக இருப்பதைக் காண முடிகிறது. தூத்துக்குடியில் இருக்கும் அனுமார் எழுபத்தேழு அடி உயரத்தில் இருக்கிறார். இவர்தான் மிக உயரமான அனுமார் என நினைக்கிறேன்.
இப்போது நான் சொல்ல இருக்கும் ஆஞ்சநேயர் பக்தர்களால் சுந்தர புருஷன் என்றும் அழகு ஆஞ்சநேயர் என்றும் புகழப்படும் ‘சாளக்கிராம அனுமார்’. இவர் திண்டுக்கல் அருகில் இருக்கும் சின்னாளம்பட்டி கிராமத்திற்கு மிக அருகில், மேட்டுப்பட்டி எனும் இடத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இவரும் சுமார் பதினெட்டு அடி இருக்கலாம். இவரின் சிறப்பு என்னவென்றால், இவர் வணங்கிய நிலையில் இருப்பதோடில்லாமல் தனது திருக்கரங்களில் கதாயுதமும் கொண்டிருக்கிறார். இவர் சிவஸ்வரூபம் என்பதைக் காட்டுவது போல் இவரது ஜடாமுடி சிவனைப் போல் உள்ளது. இவரது வலக் கண் சூரியன் என்றும் இடக் கண் சந்திரன் என்றும் சொல்லப்படுகிறது. இவரைப் பார்த்தோமானால், நாம் எங்கெல்லாம் திரும்புகிறோமோ அங்கெல்லாம் இவர் நம்மைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
இந்தக் கோயில் மிகப் பழமை வாய்ந்தது. திரேதாயுகத்தில் இராம – இராவண யுத்தம் நடந்தபோது இலக்குவன் போரின் மூர்ச்சை ஆன நேரத்தில், அவரை உயிர்ப்பிக்க சஞ்சீவினி மூலிகை தேவைப்பட்டது. அதை அனுமான் எடுக்கச் சென்று, சஞ்சீவி மலையையே தூக்கியபடி மிக விரைவாகப் பறந்து வந்தார். அதிலிருந்து சிறு பகுதி இந்த இடத்தில் விழுந்ததாம். அதை மக்கள் சிறுமலை எனப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
இந்தக் கோயிலைக் கட்டியவர் ஆஞ்சநேயரின் தீவிர பக்தரான கனகராஜ் என்பவர். இவர் ஒரு நாள் பூஜை செய்து முடித்த பின், தியானத்தில் இருக்க, ஒரு கனவு வந்ததாம். அதில் அனுமான் தியானக்கோலத்தில் இங்கு வீற்றிருப்பதாகவும், அங்கு அவருக்கு ஒரு கோயில் கட்டும்படியும் கட்டளையிட்டாராம். கனகராஜும் மிகவும் மகிழ்ச்சியடைந்து இந்தக் கோயிலைக் கட்டினாராம். இங்கு ஆஞ்சநேயரின் வால் கீழ் நோக்கிப் பாதத்தைப் பார்ப்பது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கேட்டது கிடைக்கிறது, சனி தோஷம் போகிறது, புத்திர பாக்கியம், திருமண பாக்கியம் கிட்டுகிறது, தீராத வழக்கும் வெற்றியுடன் முடிகிறது என இங்கு பக்தர்கள் வழக்கம் போல் வடை மாலை, வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்கிறார்கள். தவிர, வெண்ணெய்க் காப்பும் சாற்றப்படுகிறது. சனிப் பெயர்ச்சியின்போது சிறப்பு வழிபாடு நடக்கிறது. அஷ்டமத்து சனி, ஏழரை சனி போன்றவற்றால் அவதிப்படுகிறவர்கள் இங்கு வந்து எள் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்கிறார்கள்.
கோயில் விமானத்தைப் பார்த்தால், பல சிற்பங்கள் நம்மைக் கவருகின்றன. எல்லாமே சுந்தரக் காண்டத்துக் காட்சிகள். அத்துடன் ஒரு கோடி நாம ஜபம் அங்கு சேர்க்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் இங்கு சுற்றி வந்து நல்ல பலனைப் பெறுகின்றனர். தவிர, மகா மண்டபத்தில் அனுமார் தலைவராக மிக கம்பீரமாக அமர்ந்திருக்க, சுற்றி அஷ்ட பரிவாரங்களாக நலன், நீலன், சுக்கிரீவன், குமுதன், ஜாம்பவான், ஜிதன், ஜூவிதன், அங்கதன் ஆகியோர் சிலைரூபத்தில் காட்சி தருகிறார்கள்.
இத்தனை பழமையான கோயில் பலருக்கும் தெரியவில்லை. நாமக்கல் ஆஞ்சநேயர் போன்ற இடம் பலருக்குத் தெரிகிறது. மதுரை வரை செல்பவர் இந்த மேட்டுப்பட்டி ஆஞ்சநேயரையும் தரிசித்து ஆசி பெறலாமே!