"ஒரு விஷயம் கேட்டீங்களா?" என்று புவனா அருகில் வந்தாலே விவகாரம் கூட வருகிறது என்று எனக்குப் புரியாதா?
"சொல்லேன்"
"நம் அம்மன் கோவில் சன்னதிக்கு முன்னால திடீர்னு ஒரு ஆஞ்சநேயர் பிரத்தியட்சம் ஆயிருக்காரு."
தேங்காய், பழத்தட்டைப் பார்த்துட்டு குதித்து வந்திருக்கும்" என்றேன் சுவாரசியமின்றி.
"நீங்க வேற. தூண்ல சிலை. இத்தனை நாளா யார் கண்ணுலயும் படலே. இப்ப திடீர்னு ரெண்டு நாளா ஒரே பரபரப்பு. அனுமாருக்கு முன்னால ஒரு விளக்கு,பின்னால ஒரு விளக்கு ஏத்தி வச்சா. நாற்பத்தைந்து நாள்ல நினைச்ச காரியம் பூர்த்தி ஆவுதாம்" என்றாள் பக்திப் பரவசமாய்.
எனக்கு பக்தி உண்டு. ஆனால் புவனா அளவுக்கு வெறி கிடையாது. ரோட்டில் ஒரு பசுமாடு, கன்றுடன் போய்விடக்கூடாது. அது மிரண்டு ஓடுகிற மாதிரி பண்ணிவிடுவாள். சுற்றிச் சுற்றி வந்து கன்னத்தில் போட்டுக் கொண்டு, கோமாதா எந்தன் குலமாதா என்று பாடாமல் விடுகிற ஒரு குறைதான். வாரத்துக்கு ஏந்தான் ஏழு நாட்களோ என்று அலுத்துக் கொள்கிற மாதிரி, ஏழு நாட்களிலும் ஏதாவது ஒரு தெய்வம், விரதம், பூஜை!
அதனால நான் முடிவு பண்ணிட்டேன்… நாம பிளாட் வாங்கி எவ்வளவு நாளாச்சு… இன்னும் வீடுகட்டவே முடியலே. உங்க நண்பர் பாஸ்கர், இப்பதான் பிளாட் வாங்கினாரு… கிடுகிடுன்னு வீடு கட்டி குடியே போயிட்டாரு. நாம் மட்டும் ஏன் வாடகை வீட்டுலேயே காலம் தள்ளணும்?" என்றாள் லா பாயிண்டாக.
"நமக்கு அதுக்கு நேரம் வரணுமே".
"வந்தாச்சு…." என்றாள் கண்கள் மின்ன.
"என்னது… உங்கப்பா வட்டியே இல்லாம கடனாத் தர்றேன்னு சொன்னாரா?"
"அலையாதீங்க. என்னைக் கல்யாணம் செஞ்சு கொடுத்ததே அதிகம். உங்க வீட்டுக்கு லெட்சுமியே வந்த மாதிரின்னு உங்க மாமாவே சொன்னாரே."
"தெரியாமச் சொல்லிட்டாரு…"
"நாளையிலேர்ந்து நீங்க தெனம் விடாமே கோயிலுக்குப் போறீங்க. ஆஞ்சநேயருக்கு விளக்கேத்திட்டு வரீங்க. நல்லபடியா வீடு கட்டி முடியணும்னு வேண்டிக்கிட்டு."
"எ..ன்னது?"
"அபசகுனமா எதுவும் பேசாதீங்க. நான் எது சொன்னாலும்… அது நம்ம நன்மைக்குத்தான்…"
வேறுவழி? போக ஆரம்பித்தேன்.
நாற்பத்தைந்து நாட்கள் எப்போது முடியும் என்றாகி விட்டது.
பத்தியமாக இருக்கணும் என்று மிரட்டியே எல்லா ஆசைகளும் ‘கட்’. தினசரி மிளகு ரசம், துளசி கஷாயம், பூண்டு, வெங்காயம் மூச்!
‘அப்பாடா’ வென்றிருந்தது பூர்த்தியானதும். ஒரு வாரம் நிம்மதியாகப் போனது.
"கேட்டீங்களா?" என்றாள் அருகில் வந்து.
"என்ன?" என்றேன் மிரண்டு.
"அம்மன் கோவில் வாசல்ல, வலது பக்கம் ஒரு தூண்ல துர்க்கையம்மன் இருக்கிறதைப் பார்த்தீங்களா?"
"ஆமா…" என்றேன் பலவீனமாய்.
"எலுமிச்சம்பழ மூடியில விளக்கேத்தினா நினைச்சது நடக்குமாம்."
"அது பெண்களுக்குத்தானே…?" என்றேன் உற்சாகமாய்.
"யார் செஞ்சாலும் நல்லதுதான். ஆனா இதுக்கு நானே போறேன். அம்மன் ரொம்ப சக்திங்க. நம்ம பக்கத்து வீட்டு ரமாவை எத்தனை பேர் பெண் பார்த்துட்டுப் போனாங்க… ஒரு வாரம்… ஒரே வாரம் ராகு காலத்துல விளக்கு ஏத்தினா. அவ்வளவுதான். நேத்து வந்து பத்திரிக்கை கொடுத்துட்டு போனாங்க. அடுத்த மாசம் கல்யாணமாம்…"
எப்படியோ என்னைத் தொல்லை பண்ணாமல் விட்டால் சரி.
புவனா விடாமல் போய்க்கொண்டிருந்தாள். பத்து நாட்கள் கூட ஆகவில்லை.
"கேட்டிங்களா?" என்றாள் எதிரில் வந்து.
இன்று என்ன புது சாமியோ!
"அம்மன் சன்னிதி பிரகாரத்துல புதுசா ஒரு விஷ்ணு சிலை தூண்ல தெரியுதுங்க. சனி வாரம் அர்ச்சனை செஞ்சா…"
"சரி! விஷயத்தை சொல்லு."
"நீங்க விஷ்ணுவுக்கு அர்ச்சனை பண்ணப் போறீங்க… ஒவ்வொரு சனியும்…"
சம்பளம் வந்ததும் மாதாந்திர பட்ஜெட்டில் ‘கோவிலுக்கு’ என்று தனிநிதி ஒதுக்க வேண்டியதாயிற்று.
நெற்றியில் இனி இடமே இல்லாதபடி விபூதி… குங்குமம், சந்தனம், செந்தூரம்… என்று கலர் கலராய்த் தீற்றல்கள்.
ராத்திரியில் தற்செயலாய் என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தே மிரண்டு போனேன். இனம் புரியாத ஒரு மிருகத்தை வாகனமாய் வைத்துக்கொண்டு, நானே வில் அம்புடன் சவாரி செய்கிற மாதிரி கனவு வேறு.
"இன்னைக்கு என்ன சமையல்?" என்று கேட்டதுபோக, "இன்னைக்கு எந்த கோயில் பிரசாதம்?" என்று கேட்க வேண்டியதாயிற்று.
‘சாமி’ என்றால் இப்போது யார் மிரள்கிறார்களோ இல்லையோ, நான் நடுங்கினேன். ஆபிசில் ‘நல்லுசாமி’ என்று யாராவது பியூனைக் கூப்பிட்டால்கூட அலறி அடித்துக் கொண்டு நின்றேன்.
பிரமை பிடித்தவன் போல அன்று அமர்ந்திருந்தேன்.
"என்னங்க?" என்றாள் அருகில் வந்து அமர்ந்து.
புதிதாக என்ன சொல்லப் போகிறாளோ என்று பயத்துடன் பார்த்தேன்.
"உங்ககிட்டே ரொம்ப நாளா சொல்லணும்னு… இன்னைக்குத்தான் சமயம் கிடைச்சுது…’
"எ…ன்ன?"
"சாமியை மாத்தணுங்க… தினம் ஒரு பிரச்சனை…"
கையிலிருந்த தினசரியைத் தூக்கிப் போட்டேன். முன் பக்க பழனி முருகன் என்னைப் பார்த்துச் சிரித்தார்.
"என்ன சொல்றே நீ…?"
"பின்னே என்னவாம்? எப்பவும் பிரச்சனைதான். லேட்டா வரான். இல்லை… சேர்ந்தா மாதிரி இரண்டு மூணு நாள் வரதேயில்லை. ஏன் வரலேன்னு கேட்டா, பொய் வேற தினம். இவன் எப்ப வருவான்னு காத்துக்கிட்டு இருக்கிறதுல கோயிலுக்குப் போக முடியறதிலே."
புரியாமல் விழித்தேன்.
"உங்களுக்கு கேரியர் எடுத்துகிட்டு வரானே… சாமிக்கண்ணு அவனைத்தான் சொல்றேன்! நேத்து சொல்றான், என்னை விட்டா வேற யாரு இந்த ஏரியாவுக்கு வந்து துணிஞ்சு கேரியர் எடுப்பாங்கன்னு! இவனை நிறுத்திர வேண்டியதுதான். நீங்க காலையில போகும்போதே மோர் சாதம் கலந்து எடுத்துக்கிட்டுப் போயிருங்க… மாசா மாசம் அவனுக்குக் கொடுக்கற பணமாவது மிச்சமாகும்" என்றாள் நிதானமாக.
"ஓ… கேரியர்வாலா சாமியா…" மூச்சு வந்தது எனக்கு! வேகமாய்த் தலையசைத்தேன்.
"இந்த பரிமளா மாமியை இன்னும் காணோமே. ஏதோ வேப்ப மரத்துல பால் வடியுதுன்னு சொன்னாங்க. எங்கேன்னு விசாரிச்சுகிட்டு வரதா சொன்னாங்க. இன்னும் வரலியே…"
புவனா வாசல்பக்கம் போக…இன்னும் என்ன புது ‘சாமியோ’ என்று சோபாவில் மயங்கிச் சரிந்தேன்…
“
Excellent presentation. Hats Off to Sri. Rishaban