தேவையான பொருட்கள்:
பால் – 2 லிட்டர்,
பொடித்த சர்க்கரை – 1 தேக்கரண்டி,
நீர் (வெதுவெதுப்பாக) – சிறிதளவு,
ஜி.எம்.எஸ் (Glycol Monostarate) – 1 தேக்கரண்டி,
ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர் – ½ தேக்கரண்டி,
ஜெலட்டின் – 1 தேக்கரண்டி,
கிரீம் – 1 கோப்பை,
செய்முறை:
ஐஸ்கிரீம் செய்யத் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, உறையத்தில் (ஃப்ரீசரில்) குளிர்நிலையைச் சரி செய்து கொள்ள வேண்டும்.
முதலில் ஒரு லிட்டர் பாலை மட்டான தழலில் வைத்து அரை லிட்டராகக் குறுக்கிக் கொள்ள வேண்டும். அதிகம் சூடில்லாத இன்னொரு லிட்டர் பாலில் ஒரு தேக்கரண்டி ஜி.எம்.எஸ்-ஸைக் கலக்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, ஒரு தேக்கரண்டி பொடித்த சர்க்கரையில் அரை தேக்கரண்டி ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசரைச் சேருங்கள். அடுத்து, ஒரு தேக்கரண்டி ஜெலட்டினைச் சற்று வெதுவெதுப்பான நீரில் கலந்து பாலுடன் சேர்க்க வேண்டும்.
இப்பொழுது, மிக்சியில் விப்பர் பிளேடு பொருத்தி, இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து இரண்டு நிமிடங்கள் மிக்சியில் அடித்துக் கொள்ளுங்கள். அடுத்து, கிரீமைத் தனியாக இரண்டு நிமிடங்கள் அடித்துக் கொள்ளுங்கள். பின், எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அலுமினியப் பாத்திரத்தில் ஊற்றி மூன்று மணி நேரம் உறையத்தில் வையுங்கள்.
மூன்று மணி நேரம் கழித்து எடுத்து, மிக்சியில் போட்டு மீண்டும் அடித்து, மறுபடியும் ஒரு மணி நேரம் உறையத்தில் வைத்தால் கடைகளில் கிடைப்பது போன்ற வழுவழுப்பான, தரமான ஐஸ்கிரீம் தயார்!
சுவைத்துப் பாருங்கள்! கோடைகாலத்தைக் கொண்டாடுங்கள்! மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!