சாதனைக் காதல் (2)

மூர்த்தியிடம் எதிர்கால வாழ்க்கையில் என்னவாக விருப்பம் என என் தந்தை கேட்டார்.

கம்யூனிஸக் கட்சியில் அரசியல்வாதியாகவும், அனாதைகளுக்கு இல்லம் அமைக்க விரும்புவதாகவும் மூர்த்தி தெரிவித்தார். தன் குடும்பத்தை நடத்தத் தேவையான பணம் சம்பாதிக்க முடியாதவனால் எப்படி அனாதைகளுக்கு இல்லம் அமைக்க முடியும்? கம்யூனிஸக் கொள்கைகளில் பிடிப்புடையவனுக்கு என் மகளைத் திருமணம் செய்து தர இயலாது என என் தந்தை கூறிவிட்டார்.

இன்று நான் பல ஆதரவற்றோர் இல்லங்களைத் திறந்திருக்கிறேன். 25 வருடங்களுக்கு முன்னர் மூர்த்தி செய்ய நினைத்ததைத் தற்போது சாதித்து உள்ளோம். மூர்த்தி என் பெற்றோரை சந்தித்த பின் நானும் அவரை விரும்ப ஆரம்பித்தேன். அவரிடம் உள்ள குறைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி என்னை விரும்புவதாக அவர் கூறியது எனக்குப் பிடித்திருந்தது.

என் தந்தையாரின் ஆசீர்வாதமில்லாமல் நான் மூர்த்தி¨யை மணந்து கொள்ள மாட்டேன் என்றும், அதேசமயம் மூர்த்தியைத் தவிர வேறு யாரையும் மணந்து கொள்ள முடியாது என்பதையும் என் தந்தைக்குத் தெளிவுபடுத்தினேன்.

மூர்த்திக்கு நிலையான வேலை கிடைத்தால் திருமணத்திற்கு சம்மதிப்பதாக என் தந்தை கூறினார். ஆனால் மூர்த்தி மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகத் தன் வேலையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. வளர்த்த பாசத்திற்கும், பழகிய பாசத்திற்கும் இடையில் நான் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தேன்.

என் வாழ்க்கையின் மிக முக்கிய நபர்களுக்கிடையேயான போராட்டம் மூன்று வருடங்கள் தொடர்ந்தது. அந்த நாட்களில் பூனாவில் உள்ள அனைத்து உணவு விடுதிகளும், சினிமா தியேட்டர்களும் எங்கள் காதலை வளர்த்தன. அந்தக் கால கட்டங்களில் மூர்த்தியால் அதிகம் சம்பாதிக்க முடியாததால் மனம் உடைந்தே காணப்பட்டார்.

இன்று ஆண்டுக்கு $4 பில்லியன் லாபம் அளிக்கும் இன்ஃபோசிஸ் கம்பெனியை நிர்வகித்தாலும் நாங்கள் காதலித்த நாட்களில் என்னிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வது மூர்த்தியின் வழக்கம். நாங்கள் உணவு விடுதிக்கு செல்லும் போதெல்லாம் அவருடைய பங்கையும் என்னையே கட்டச் சொல்லுவார். பிற்காலத்தில் அவற்றைத் தந்துவிடுவதாகச் சொன்ன மூர்த்தி கடைசி வரை தரவேயில்லை. மூன்று வருடங்களில் 4000 ரூபாய் வந்திருந்தது அவரின் கணக்கு. திருமணத்திற்குப் பின் அந்தக் கணக்கு நோட்டையே கிழித்து விட்டேன்.

இந்தக் காலகட்டத்தில் மூர்த்தி அவரின் ஆராய்ச்சி உதவியாளர் பணியை விட்டுவிட்டு சொந்தமாக மென்பொருள் வியாபாரத்தைத் தொடங்கினார். அப்போது எங்கள் குடும்பச் செலவுகளையும் நானே சமாளிக்க வேண்டியிருந்தது.

எழுபதுகளின் பின்பகுதியில் கணிப்பொறிகள் இந்தியாவில் நுழைய ஆரம்பித்தன. 1977-ஆம் ஆண்டின் இறுதியில் மூர்த்தி பம்பாயிலுள்ள பட்னி கம்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளராக சேர விரும்பினார். பணியில் சேர்ந்ததும் பயிற்சிக்கு அமெரிக்கா செல்ல வேண்டியிருந்ததால் அதற்கு முன்னரே என்னை மணக்க விரும்பினார். மூர்த்திக்கு நல்ல வேலை கிடைத்ததால் எங்கள் திருமணத்திற்கு என் தந்தையார் சம்மதித்தார்.

1978-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் நாள் எங்கள் திருமணம் பெங்களூரிலுள்ள மூர்த்தியின் இல்லத்தில் நடந்தது. எங்கள் இருவரின் பெற்றோர் மட்டுமே பங்கேற்ற திருமண நிகழ்ச்சிக்கு எனக்கு முதன் முதலாய் பட்டுப் புடவை எடுக்கப்பட்டது. திருமணச் செலவான 800 ரூபாயை நானும் மூர்த்தியும் பகிர்ந்து கொண்டோம்.

பின் நானும் மூர்த்தியுடன் அமெரிக்கா சென்றேன். ஊர் சுற்றிப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அமெரிக்காவின் பல இடங்களையும் நான் தனியே சென்று பார்க்க மூர்த்தி என்னை ஊக்கப்படுத்தினார். மூன்று மாத கால அமெரிக்கா சுற்றுலாவில் எனக்குப் பலவிதமான மறக்க முடியாத புது அனுபவங்கள் கிடைத்தன.

இத்தாலிய நாட்டு போதைப்பொருள் வைத்திருப்பதாகத் தவறாக எண்ணி ஹர்லெம் பகுதியில் நியூயார்க் போலீஸாரால் கைது செய்யப்பட்டது, கிராண்ட் கேன்யான் மலையடிவாரத்தில் வயதான தம்பதியருடன் நான் கழித்த ஒரு இரவு என நினைக்க நினைக்கப் புத்துயிர் பெறும் நினைவுகள் அவை.

க்ராண்ட் கேன்யானில் இருந்த போது இரவில் நான் ஹோட்டலுக்குத் திரும்பவில்லை. மூர்த்தியுடனும் தொடர்பு கொள்ளவில்லை. நள்ளிரவாகியும் என்னிடமிருந்து பதில் வராததால் நான் கொல்லப்பட்டோ, கடத்தப்பட்டோ இருக்கலாமென மூர்த்தி பயந்து போனார். இது போன்ற பல கதைகள் என் பயணத்தில்.

(தொடரும்)

About The Author