மென்பொருள் துறையில் இந்தியாவில் சாதித்த நிறுவனங்களைப் பட்டியலிட்டால் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு நிச்சயம் முக்கிய இடம் கிடைக்கும்.
நாராயண மூர்த்தி என்ற சாதாரண மனிதனை சாதனை மனிதனாக்க அவருடைய காதலும், கள்ளமில்லாத நட்பும் எப்படியெல்லாம் தோள் கொடுத்தன என்பதை அவரது மனைவி சுதா நாராயண மூர்த்தி தன்னுடைய சுயசரிதையில் கூறியுள்ளார்.
அதிலிருந்து சில நிகழ்வுகளை உங்கள் நினைவிற்குத் தருகிறோம்.
காதல் வந்த வேளை:
நான் பூனாவில் டாடா மோட்டார்ஸில் பயிற்சி பெறும் போது உடன் பயின்ற ப்ரசன்னாவிடம் நான் கடன் வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் நாராயண மூர்த்தியின் பெயரையே தாங்கியிருந்தன. அந்தப் புத்தங்களின் வாயிலாக மூர்த்தி என்பவரைப் பற்றிய கற்பனை உருவம் என் மனதில் பதிந்தது. என் கற்பனைக்கு மாறாக மூர்த்தி கண்ணாடி அணிந்தவராக, சமூக வழக்கங்களுக்கு மாறாகத் தன் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுபவராக இருந்தார்.
சக மனிதர்களுடன் பழகுவதில் சற்றே தயக்கம் காட்டுபவராக இருந்த அவர் என்னையும் ப்ரசன்னாவையும் டின்னருக்கு அழைத்தபோது நான் மறுத்தேன். அங்கிருந்தவர்களில் நான் மட்டுமே பெண் என்பதே என் மறுப்புக்குக் காரணம். ஆனால் மூர்த்தி விடவில்லை எங்களை. அதனால் நாங்கள் அனைவரும் அடுத்த நாள் மாலை 7.30க்கு பூனாவின் முக்கிய சாலையில் இருக்கும் கீரின் பில்ட்ஸ் ஹோட்டலில் சந்திப்பதாக முடிவு செய்தோம்.
அடுத்த நாள் மாலை நாங்கள் சந்திப்பதாகச் சொன்ன ஹோட்டலுக்கு அருகிலுள்ள தையல் கடைக்குச் செல்ல வேண்டி இருந்ததால் நான் 7.00 மணிக்கு ஹோட்டலை அடைந்தேன். முதலில் தையற் கடைக்குச் சென்றுவிட்டுப் பின் நண்பர்களைப் பார்க்க எண்ணியிருந்த எனக்கு ஹோட்டலின் முன்னால் மூர்த்தி நிற்பதைப் பார்த்ததும் அதிர்ச்சி. நான் 7.00 மணிக்கு தையற்காரரைப் பார்க்க அங்கே வருவதாக முந்தினம் மாலை நான் சொன்னதாக இன்று வரை மூர்த்தி சொல்கிறார். மூர்த்தியை நண்பராக மட்டுமே பார்த்த அந்தக் காலகட்டத்தில் என்னுடைய அலுவலை அவரிடம் நான் கூறியதாக எனக்கு நினைவில்லை.
ஹோட்டல் சந்திப்பிற்குப் பின் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டோம். மூர்த்தியின் அயல்நாட்டுப் பயணங்கள், அவர் படித்த புத்தகங்கள் பற்றியே எங்களின் உரையாடல் இருந்தது. என் மீதுள்ள ஈடுபாடு காரணமாக மூர்த்தி என்னைக் கவர முயலுவதாக என் நண்பர்கள் கூறினர். நான் அதை மறுத்து வந்தேன் அந்த ஒரு நாள் வரை.
எப்போதும் போல டின்னர் முடித்தபின், மூர்த்தி என்னிடம் ஒரு விஷயம் சொல்ல விரும்புவதாகக் கூறினார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்குப் புரிந்தாலும் அவரே சொல்லட்டும் என காத்திருந்தேன்.
"என் உயரம் 5 அடி 4 அங்குலம். நடுத்தர வர்க்கத்தின் அடியில் உள்ள நான் என்றும் ஆகாயத்தில் மாளிகை கட்ட முடியாது. பட்டும் பகட்டும் என்றும் நான் உனக்குத் தர முடியாது. அழகான அறிவான உன்னை மணக்க பலர் முன் வருவார்கள். ஆனால் நீ என்னை மணந்து கொள்ளுவாயா?" என்றார்.
அவருக்குப் பதில் கூற சில நாட்கள் தரச் சொல்லிக் கேட்டேன். அனாதைகளுக்கு ஆதரவாக இல்லம் அமைக்க விரும்பும் கம்யூனிஸக் கொள்கைகளில் பிடிப்பு கொண்ட, அரசியல்வாதியாக விரும்பும், நிலையற்ற வேலையையுடைய மூர்த்திக்கு என்னைத் திருமணம் செய்து கொடுக்க என் தந்தை விரும்பவில்லை.
கல்யாண கலாட்டா:
என் பெற்றோரைப் பார்க்க ஹூப்ளிக்குப் போன போது மூர்த்தியைப் பற்றியும், அவர் என்னை மணந்து கொள்ள விரும்புவதையும் கூறினேன். என் தாயார் நன்கு மூர்த்தியைப் பற்றி விசாரித்தார். கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்ட மூர்த்தியின் குடும்பம் நல்ல குடும்பமாகத் தோன்றவே மூர்த்தியும் நல்லவராக இருப்பார் என என் தாயார் எண்ணினார். அதற்கு மாறாக என் தந்தையோ மூர்த்தியின் வேலை, சம்பளம், அவருடைய படிப்பு என துருவித் துருவிக் கேட்டார்.
ஆராய்ச்சிப் பணியில் உதவியாளராகப் பணியாற்றிய மூர்த்தி என்னை விடக் குறைவான சம்பளமே பெற்றார். அந்தச் சமயத்தில் டச்சு நாட்டிற்கு நாங்கள் செல்ல வேண்டுமென்பது அவரின் விருப்பம்.
பல நாள் யோசனைக்குப் பின் பூனாவில் என் பெற்றோர் ஒரு நாள் காலை 10.00 மணிக்கு மூர்த்தியை சந்திக்க சம்மதித்தனர். மணி பத்திலிருந்து பனிரெண்டை நெருங்கிய போதும் மூர்த்தி வரவில்லை. சொன்ன நேரத்திற்கு வர முடியாதவனை நம்பி என் பெண்ணை எப்படித் திருமணம் செய்து கொடுக்க முடியுமென என் தந்தை கேட்க நான் மௌனத்தையே பதிலாய்த் தந்தேன்.
மதியம் 12.00 மணி ஆகிய போது சிகப்புக் கலர் சட்டையில் மூர்த்தி எங்களைச் சந்திக்க வந்து சேர்ந்தார். அலுவலக வேலையாய் பம்பாய் சென்றிருந்த மூர்த்தி டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டதால் அவரால் குறித்த நேரத்திற்கு வர முடியவில்லை. அவருடைய சக்திக்கு மீறியதாக இருப்பினும் ஒரு டாக்ஸி பிடித்து எங்களைப் பார்க்க வந்திருந்தார். என் தந்தைக்கு அவரைப் பிடிக்கவில்லை.
(தொடரும்)
“
வாழ்க்கையின் வெற்றிப் படிகள் அற்புதமான இணையின் துணையால்
அடித்தளமாக அமைந்தது சாதனையாளரின் முயற்சிக்கு கிடைத்த வரமென்று வாழ்த்துவோம்.