சாட்சியின் பயணம்

சாட்சிநாதன் பிறந்தபோது தேவர்கள் பூமாரி பெய்து கொண்டாடவும் இல்லை. உற்பதங்கள் ஏராளமாய் நேர்ந்து அந்த ஜெனனத்திற்கான ஆட்சேபங்களும் நேரவில்லை. யாரும் பார்க்கவில்லை. அறியவுமில்லை. ஒரு அனுமானம். இது இப்படித்தான் நேர்ந்திருக்க வேண்டும் என்ற உத்தேசம்.

எந்த விபத்தான உறவிலோ தாங்கிப் பெற்று பாசம் துறந்து அந்த வனாந்திரத்தில் வீசிப் போயிருக்க வேண்டும். ஒரு சோனி நாய் விசித்திரமாகப் பார்த்துவிட்டு பத்திரப்படுத்தும் கடமையை ஏற்றிருக்க வேண்டும். இனம் தெரியாத பட்சியொன்று லேசாக ஒலியெழுப்பி ‘நானும் உனக்கு உறவுதான்’ என்று சந்தோஷமாக அறிவித்துவிட்டுப் பறந்திருக்க வேண்டும். ஏதோ ஒன்று அவனது இருப்பை நிச்சியப்படுத்த – நீட்ட உதவியிருக்கக் கூடும்.

ஆளரவமற்ற அந்தப் பிரதேசத்தில் யாருமே வழிபட வராத சிவன்கோயில் படிக்கட்டில் அழுவதற்குக்கூட சக்தியற்று நெளிந்து கொண்டிருந்ததை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த சாட்சிநாதசாமி – அவருக்கு ஆயிரம் கவலைகள். மிகையான எந்த சக்தியையும் அற்புதங்களையும் வரங்களையும் காட்டி வித்தைகாட்டி மக்களை ஈர்க்க சாமர்த்தியமில்லாத சாட்சிநாதசாமி. இவனும் சாட்சிநாதனானான் – சாட்சி – சாட்சிகளற்றவன் பெயர் சாட்சி – பிரமாதம்!

எவரும் நீருற்றி உரம் போட்டு பரிவு காட்டாமலே மரங்கள் செடிகள், நிகுநிகுவென அபாரமாக வளர்ந்திருந்த புற்கள் – எங்கும் பரவியிருந்த பசுமை. சந்திரனும் சூரியனும் மெல்லிய காற்றும் ஆவேசமான புயலும் நட்சத்திரக் கூட்டங்களும் பேய் மழையும் இதமான தூரலும் சாட்சிக்கு சினேகமாயின.

மௌனமாய் ஆகாயத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் சாட்சிக்குப் பசியுண்டோ – பயம் உண்டோ. எல்லாம் கடந்து எல்லாம் அறிந்த திரிகால ஞானியோ. யாரறிவர்?

கருவறை நோக்கி அடிக்கடி ஒரு பார்வை. என் இனிய குருவே. "எனக்கு அர்த்தமென்ன. அதற்கு முன் உன் அர்த்தமென்ன?"

சாட்சி நின்றான், நடந்தான்; ஆகாயம் நோக்கினான். மரக்கிளைகளில் சஞ்சரித்தவன். இயற்கையின் அங்கம் நான். அதனின்று பிரிக்க முடியாதவன் என்பதுபோல ஒவ்வொன்றிலுமாய் உறவு கொண்டு சுற்றிச் சுற்றி வந்தான். மரங்களின் வாசனை, மலைகளின் வாசனை, பூக்களின் வாசனை எல்லாம் கலவையாய் அவன் வாசனை. அது ஓர் அற்புதம் – இவனை என்றென்றும் எங்களுக்குத் தெரியும் என்று பட்டாம்பூச்சிகளும் சிள் வண்டுகளும், சலசலத்தோடும் அருவிகளும் அறிவித்ததை அறிவான். அவற்றின் பாஷை புரிந்த பெருமிதம். உதிர்ந்து விழுந்த மெல்லிய இறகுகள் ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் எடுத்துப் பொருத்தும் நேர்த்தி, பொறுமை, வித்தை – ஆருக்கு வரும். இழந்ததைப் பெற்ற மகிழ்ச்சியில் இனிய ரீங்காரத்தை எழுப்பிக் கொண்டு ஒழுங்கற்றுப் பறக்கும் அவற்றின் அழகு –

ஓரத்துப் புளியமரத்துக் கிளையிலிருந்து ஒரு குயில் கனமாகக் கூவிற்று. எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது போலவே இனம்காண முடியாத பறவை மெல்லவே பதிலாக இசைத்தது. நெருக்கமான கொடிகளின் இடுக்குகளில் குறுக்கும் நெடுக்கமாய் வியாபித்து வெளிவந்து இதுவரை யாருமே கேட்டறியாத இசைத்துகள்களை நெடுகப் பரப்பின.
– நாத விந்துக்கள் –
நெடிதுயர்ந்த மூங்கில் புதர்களில் தேடி வசமான ஒரு மூங்கிலை உருவி நாத வீச்சுக்களை உலகத்திற்கான உயிர் மூச்சாய் வள்ளலாய் வழங்கி ரம்மியமாக்குவது என்ன மாயம்?

கண்ணன் குழல் – எங்கும் கிறக்கம். பொருள் புரிந்ததோ? புரிந்தால் ரசமற்றுப் போகும். புரிதல் அந்நியமானது. புதிர் போல் தோன்றும் புதிரற்றது. வெளிச்சமானது. நிஜமானது. அதீத ஒளி எதையும் மறைத்துவிடும். அதீத சந்தோஷம்கூட அப்படித் தானோ. சூரியன் தன்னின் பொருளையே மறைப்பதாகி – சித்தமறியாதபடி சித்தத்தில் நின்று லகு –
எதையும் உட்புகுந்து பார்க்கவும் ஆராயவும் எல்லோருக்கும் எப்போதும் பயம்தான் –

சாட்சி குளிப்பதாகத் தெரியவில்லை. எப்போதும் பக்கத்து மரத்திலேயே அடைந்து கிடக்கும் மூன்று கிழட்டுக் காகங்களும் பார்த்ததில்லை. அடிக்கடி வானம் பொத்துக் கொண்டு பூமியைத் துளைத்துவிடும் வைராக்கியத்தோடு தடித்த நீர்க்கம்பிகள் உக்கிரமாய்த் தாக்கும். சாட்சி படிக்கட்டுகளிலிருந்து இறங்கி வருவான். உடம்பு ஜில்லிட ஜில்லிட சிலிர்த்துக் கொண்டு ஆகாயத்தை – இதுவென்ன அதிசயம், இதுவென்ன பெருங் கருணை என்பதைப்போல – பார்த்துவிட்டு சொட்டச்சொட்ட மண்டபத்தில் உட்காருவதும் சாட்சிநாதசாமிக்கு ஏதோ அவசரச் செய்தியைச் சொல்லிவிட்டு, இன்னொரு செய்தியை வெள்ளைக் கொக்குகளின் கூட்டத்திற்குச் சொல்லுவதைப் போல மெல்ல அவற்றின் அருகே சென்று இங்குமங்குமாய் அலைவதும், குதூகலிப்பதும் ரசிக்கத் தோதானதுதான்.

குளியல் – அசுரக் குளியல் – யுகம் முழுவதற்கும் போதுமான குளியல் – சாட்சியின் கம்பீரம் இன்னும் கம்பீரமாகி – ஏயப்பா இதுவோர் புத்துலகு – அந்த மழைக்கம்பிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சாட்சி ஏறிக் கொண்டிருக்கிறான். அசாதாரணங்கள் சாதாரணம் என்றாலும் அடிக்கடி நடக்கிறது பிரமிப்புதான். சாட்சியின் வேகம் கடுமையானது.

சாட்சி ஏறிக் கொண்டிருக்கிறான் – சாட்சிநாதர் சாட்சியாக – அவரில்லாவிட்டாலும் இந்த அதிசயத்தை உலகிற்குச் சொல்வேன் என்பதுபோல. ஓர் அணில் குஞ்சு மரப் பொந்திலிருந்து உன்னிப்பாய்க் கவனிக்கத் தொடங்கிவிடும். இதுதவிர வேறேதும் லட்சியமில்லை என்பதுபோல் சாட்சி கிடுகிடுவென எங்கே பயணம்? ஆகாயத்திற்கா அதற்கப் பாலுமா? ஓர் அற்புத ரகசியத்தைத் தேடிக்கண்டு பூமிக்கு அறிவிக்கவா?

அந்த நேரம் அமானுஷ்யமானது. கொஞ்சம் கொஞ்சமாக சுழற்சியின் வேகம் தளர்ந்து சற்று தடுமாறி தென்படுகிற அனைத்திலும் இயல்பு துறந்த ஒர் இயக்கம். நடுக்கம் – அது லேசானதானாலும் பூமிக்கு வரும் அபாயத்தை உணர்ந்து தடுக்கும் ஆவேசத்தில் யுத்தத்தின் முஸ்தீபுகளோடு இது நடக்கிறதா! யாருக்குத் தெரிகிறது இன்மை? இருப்பின் முக்கியத்துவம் தெரியாதபோது இல்லாமையின் வெறுமை தெரிய வாய்ப்பில்லை. அல்லது தெரிந்துதான் ஆகப்போவ தென்ன?

சாட்சிநாதருக்குத் தெரியுமோ – உருண்டு திரண்டிருந்த அந்த எண்ணைகாணாத சாம்பல் பூத்த பாரிய லிங்கத்திலிருந்து எந்தக் குறிப்பும் தென்படவில்லை. எந்நேரமும் இடிந்து விடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் கருவறை மண்டபத்தின் அபாயம் நினைத்து நேரும் அல்லாடலினால் மறந்ததோ?

நாளின் தொடக்கத்தை மகிழ்ச்சியோடு ஆரம்பிக்க வேண்டுமென்று உறுதி எடுத்துக் கொண்டவைபோல குயில்கள் நாரைகள், பட்டு வால் குருவிகள், சிங்கங்கள், கூவின, சப்தித்தன சலசலத்தன கர்ஜித்தன. அவை விதவிதமானவையானாலும் நோக்கங்கள் உன்னதமாயின.

எல்லாம் இனிது. எப்போதும் இனிது –

சாட்சியின் ஆழ்ந்த உறக்கம். எப்போது வந்தான். புதர் மண்டிய முகத்திற்குள்ளிருந்து, ஒளிந்து கொண்டிருக்கும் கண்களிலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாவற்றையும் தாண்டிய சலனமற்ற முகம் – காற்றில் பறக்கும் ஒழுங்கற்ற நீண்ட கேசக் கற்றைகள் – எப்போது எப்படி இறங்கி வந்தான். என்ன ரகசியம் கொண்டு வந்தான். எப்போது சொல்லப் போகிறான்? சர்வ உலகங்களுக்குமான சந்தோஷத்தை, மந்திரத்தை அமிர்தத்தை அறிவிக்கப் போகிறான்.

நம்பலாமோ, கனவா காட்சியா, பிரமையா, இதுவென்ன குழப்பம்? எப்படி இது சாத்தியம்? அறிவையும் அறிவியலையும் தாண்டி அவற்றை ஏமாற்றிவிட்டு எப்படி இது நடக்கிறது. புரியல்லையே! புதிர்கூட ஒருவிதத்தில் சந்தோஷமளிப்பது தான்-
எதற்கும் அழிவில்லை. அலுப்பில்லை. தூரத்தில் தெரிந்த மலைகளின் பிரம்மாண்டம் – பசுமை – வெள்ளிக் கம்பிகளாய் நீர் வீழ்ச்சிகள், மாலைச் சூரியனின் செம்மைப் பரவல் – இயற்கையின் கூறுகளை உள்வாங்கி வேர்கள் பூமிக்கு இறங்கி இன்னும் பெரிதாய் விஸ்தாரமாய் அடர்த்தியாய் லட்சம் மடங்கு பருமனாகி குளுமையும் குதூகலமும் செய்வதாய் – ஒரு நிஜமான பிரதேசம் அசலான பூமி – சாட்சி அதன் பிரஜையாகி அதனோடு இயங்கி அதுவாகவே ஆகி பிரிக்க முடியாதவனாய் தலைவனாய் அங்கீகாரம் பெற்றவனாய், அடிக்கடி மழைக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு ஆகாசமேறி ரகசியம் கற்று இறங்கி, கற்றதைச் சொல்ல நல்ல நேரம் பார்த்துக் காத்திருப்பதுபோல் – சாட்சிநாதனே சீக்கிரம் சொல் –

கூடைக்காரிகளின் வரிசை – பாதை பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி வளைந்து வளைந்து மறிக்கும் செடிகளை பரிவோடு விலக்கி வேகவேகமான நடை – நீண்ட தூரம், நீண்ட நேரம் நடந்திருக்க வேண்டும். மோர் வாசனை நெய் வாசனை தயிர் மணம். எங்கோ தூரத்து நகரத்திற்கு எடுத்து வழங்க இந்தப் பயணம். இடிந்த மண்டத்துத் தூணில் சாய்ந்து கொண்டிருக்கும் சாட்சியைப் பார்த்துவிட்டால் தாய்மை முகங்கள் இன்னும் பிரகாசமாகும். வாழையிலையை நறுக்கி தாராளமாக சோற்றைக் குவித்து அவனருகே நகர்த்துவார்கள். நூற்றாண்டு பசியைக் கொண்ட ஆவேசத்தோடு – அள்ளி அள்ளித் தின்னும் வேகம் பிரமிப்பூட்டும். தவிட்டுக் குருவிகள் சலசலத்துக் கொண்டே கூட்டமாய்ப் பறக்கும். இனி எப்போது பசி எப்போது அன்னம் – யாருக்குத் தெரியும்? சின்னக் குன்றிலிருந்து இரைச்சலுடன் இறங்கி சாந்தமாய்ப் பயணிக்கும் ஆற்றில் இறங்கி நுரை விலக்கி அள்ளி அள்ளிக் குடிப்பான். கட்டியிருந்த துண்டு நனைய நனைய கரையேறி வரும்போது அடே டே… என ஒரு கிளிப்பிள்ளை துள்ளிக் குதிக்கும்.

சட்டென்று வெட்டிய ஒரு மின்னல் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாய். இருட்டு ஒரு வினாடி மிரண்டது.

கோயில் பிராகாரத்தில் ஒரு மூலையில் புரிந்துகொள்ள முடியாத சப்தங்கள் – சர்ப்பங்களா – பளபளப்பாய் பின்னிப் பிணைந்து

புரண்டு புரண்டு உலகம் மறந்து…

என்னது என்னது…

சாட்சி எட்டிப் பார்த்துவிட்டு புருவம் தூக்கினான். வெளி மண்டபத்திற்கு வந்து நின்றான் –

வளையல் சப்தமும், செல்லமான சிணுங்கல்களும், மெல்லிய சிரிப்பும் உலகத்து இருப்பை மறந்து – லயித்து இது ஒன்றே சாஸ்வதமானதென்றாற்போல் முயங்கி – ஆவேசப்பட்டு வியர்வை வழிய வழிய புஸ்புஸ்ஸென்று மூச்சு வாங்க –
என்ன நடக்கிறது?

சாட்சிநாதரைப் பார்த்தான். ஒரு பத்து வவ்வால்கள் விருட்டென்று அவசரமாக வெளியே பறந்து வட்டமடித்து எதையோ மறந்து விட்டதைப்போல மீண்டும் உள்ளே விரைந்து கிடைத்த இடங்களில் ஆங்காங்கே தொங்கின –

பட்சிகள் சந்தோஷமாகப் பறந்தன. மரமேற முடியாத நொண்டிக் குரங்கு கீழே விழுந்து புரண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தது. அணில் குஞ்சு குடுகுடுவென மரத்தில் ஏறிக் கீழே குதித்தது. ஆகாய மேகங்கள் அடுக்கடுக்காய் மெல்ல மெல்ல நகர்ந்தன. எங்கும் குதூகலம் –

…வாக்கும் அங்கங்களும் காதுகளும் கண்களும் இதர இந்திரியங்களும் தம்தம் பணியைப் புரிந்து அவ்வாறே செய்யும் திறனுடையதாகட்டும்…

"ய்யேய்…ய்…."

ஏழெட்டு பேர்கள் கருத்த உருவங்களாய் ஆகாசத்திற்கும் பூமிக்குமாய் கூச்சல் போட்டுக் கொண்டு ஓடி வருவது தெரிந்தது. எல்லையற்ற ஆக்ரோஷம். கைகளில் வீச்சரிவாள் களின் பளபள…

"எங்கே… அதோ… த்தோ… திருட்டுக் கழுதைங்க…" புயலாய் உள்ளே புகுந்துவிட – மூச்சு வாங்கியது. கோபம் தணலாய் வீசியது.

இரண்டும் துணிவிலக்கி பெரிய குழந்தைகளாய் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு என்ன நடக்கிறது என்பதொன்றையும் அறியாமல் –

இந்த அற்புத லயத்தைக் கலைக்கக் கூடாது. கலைக்க விடக்கூடாது. இந்த அழகிய முயக்கத்தை விகாரப்படுத்திவிடக் கூடாது.

"யேய்… யார்ர்டா அது… பித்து புடிச்சவனா… தள்றா… தள்ளு…"

ஒரு வெட்டு சாட்சியின் இடது மணிக்கட்டில் விழுந்தது. ரத்தம் கொப்பளித்து குபீரென பீச்சியடித்தது.

சாட்சி பிரம்மாண்டமாய் மறித்து நின்றான்.

புதரிலிருந்து அவசரமாய் வந்து பார்த்த ஓணான் பயந்து நடுங்கி திக்குத் தெரியாமல் ஓடியது.

ஒரே தள்ளு… ஒருவன் எட்டிப் போய் விழுந்தான். வீச்சரிவாள் ஆகாயத்திற்குப் பறந்து சற்று வேகமிழந்து ஆற்றில் விழுந்தது – க்ளக் –

"ஏய்….!"

அடிபட்ட இன்னொருவன் வலிதாங்காமல் அலறினான். எழ முடியாமல் புரண்டு, மனுஷன்தானா என்று அண்ணாந்து பார்த்துவிட்டு துவண்டு சாய்ந்தான்.

"வெட்டுங்கடா…"

அடுத்தவன்.

அடுத்தவன்.

அதற்கடுத்தவன்… வரிசையாகத் துவண்டு விழ –

ஹே ஹ் ஹே…. ஏ….ஏ…. மிச்சமிருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு ஓடினார்கள். திரும்பிப் பார்க்கவும் பயம். ஓடினார்கள்.

சாட்சி பார்த்தபோது இந்த இரண்டு பேரும் காணாமல் போயிருந்தனர். நசுங்கிச் சிதறிய மல்லிகைப் பூக்களும் ஒரு துணிப்பையும் மிச்சமாய்…வானம் மீண்டும் பொத்துக் கொண்டது.

மெல்ல மெல்ல கூடைக்காரிகளின் போக்குவரத்து நின்று போனது. மோர் வாசனையும் நெய் மணமும் கூடவே, சாட்சிநாதரின் வழக்கமான மௌனம். சாட்சியின் உறக்கமும் விழிப்பும் எப்போதும் போல.

சூரியன் சோகையாக உதித்தது. திடீரென மனிதக் குரல்கள் வித்யாசமானவை – அதிகார வாசனை பூசிக் கொண்டவை. யாரது யாரிவர்கள் எதற்காக என்ன நோக்கத்திற்காக அத்துமீறி நுழைந்திருக்கிறார்கள்?

சாட்சி நந்தி மண்டபத்தில் சாய்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

செடிகளை நசுக்கிக் கொண்டு இலைகளையும் பூக்களையும் சிதைத்துக் கொண்டு – வழி ஏற்படுத்தியவாறே அங்குமிங்கும் அலைந்தது ஒரு ஜீப். எங்கும் புகை வாசனை. அந்தப் பிரதேசத்திற்கே அந்நியமான புது வாசனை –

என்ன நடக்கிறது இங்கே – என்ன நடக்கப் போகிறது?

தூரத்தில் யானையின் தீனமான பிளிறல். குரலில் வலி –

ஆழ்ந்த உறக்கம். விசித்திரமான கனவுகள். உயர்ந்த புங்க மரத்தின் கிளையிலிருந்து ஏராளமான இலைகள் உதிர்ந்துவிழத் தொடங்கின. சாட்சி எழுந்து உட்கார்ந்தான்.

எட்டினவரை புகை மண்டலம். வழக்கமான பனி மூட்டமா? மரங்கள் அலைந்து ஆடிக் கொண்டிருந்தன. அடிக்கடி வரும் பேய்க்காற்றில் சுழன்று சுழன்று எனக்கா உனக்கா என பலம் பார்த்துவிடுவதுபோல – இது விளையாட்டாய்த் தெரிய வில்லை. கிளைகளை விரித்து ஆடும் வழக்கமான ஆட்டம் போல் தெரியவில்லை. ஒரு யுத்தத்தில் மூர்க்கமான எதிரியோடு போரிடுவதுபோல் அல்லாடின.

ஊழிக்கூத்தா?

சாட்சி…சாட்சிநாதா ஏன் மௌனம். காப்பாற்றேன். நீ தலைவன். இந்தப் பிரதேசம் உன் ஆளுகைக்குட்பட்டது. நின்னைச் சரணடைந்தோம்.

ஆரவாரம்… கூச்சல்…

எதற்காக இவர்கள் வந்தார்கள். நடையில் மிடுக்கும் முகத்தில் கர்வமும் அதிகாரம் தெறிக்கும் வார்த்தைகளுமாய் யாரிவர்கள்?

சிரிப்பையே மறந்த இவர்கள் யார்?

நெடுநாட்களாக காணாமல் போயிருந்த கூடைக்காரிகள் இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே கடந்து போனார்கள். மேகங்களற்ற ஆகாயம் வெறுமையாய்க் காட்சியளித்தது.

‘சாட்சி சாட்சி… ஏய் சாட்சி – உறக்கமா… எழுந்துவா அவசரம் அவசரம்…’

யார் கூப்பிட்டது. என்ன அவசரம்? கூப்பிட்டது சாட்சியையா சாட்சிநாதரையா? இரண்டு பேரையுமா. குரங்குக் கூட்டங்கள் பதட்டத்தோடு ஓடின.

படீர்… படீர்… என்ன ஓசை… படீர்…!

"சீக்கிரம் சீக்கிரம்…" அதட்டல்கள். இந்தப் பிரதேசம் அறியாக் கள்ளக் குரல்கள் –

அனைத்தையும் மறித்துத் தடுப்பதுபோல் கைகளை அகட்டிக் கொண்டு நின்ற சாட்சி யாருக்கும் புலப்பட வில்லையோ.

எல்லாம் ஓடின. எதிரெதிர் திசைகளில் ஓடின. கிடைத்த இடைவெளிகளில் புகுந்து புகுந்து ஓடின. வண்ணத்துப் பூச்சிகள் எட்டின மட்டும் பறந்து பார்த்துவிட்டு மயங்கி கூடை கூடையாய் விழுந்தன.

எல்லாவற்றிற்கும் தலைவனாக தன்னைக் கற்பித்துக் கொண்டு கம்பீரமாக கர்வமாக ஓங்கியிருந்த பெரிய ஆலமரம் மடமடவெனச் சாய்ந்தது. ஆயிரக்கணக்கான விழுதுகள் – பின்னிப்புரண்டு சிதைந்து என்ன கோரம். எவற்றின் சாபமிது?

– ரணம் – சாட்சி நாதரே – எல்லாவற்றிலும் உள்ளே இருப்பதும் அதுவே எல்லாவற்றிற்கும் வெளியே இருப்பதும் அதுவே –

அப்படியாயின் இந்தச் சிதைவு – இந்த கோரம் இந்த அலங்கோலம் இந்த முரண் – எதனால்? சாட்சி – சாட்சிசொல்ல வேண்டியவன் எங்கே போனாய்?

மரங்கள் லாரிகளில் முழு வீச்சோடு ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன சவக் குவியல்களாய் –

உய்ய்ய்…ய் யென்று ஒலி எழுப்பியவாறே ஏராளமான பறவைகள் மேற்கே பத்திரம் தேடி அவசரமாய்ப் பறந்தன. மேகங்கள் அசுரவேகத்தில் விரைந்தன.

– அறிகின்ற ஞானவான் எதன் மீதும்

பகை கொள்வதில்லை – சரியோ?

அதுவே ரணமுமற்றது. தசையுமற்றது. உடலுமற்றது

தூயது -சரியோ சாட்சிநாதரே –

ஒரு பறவை குற்றுயிராய் வேதனை தாங்காது முனகியது. அடியற்றுக் கிடந்த பிரம்மாண்டமான ஆலமரத்தின் அடியில் –

– சாட்சிநாதர் இரண்டாகப் பிளந்து கிடந்ததார்.

– மெய்ப்பொருளின் வாசல் பொன்னிறமான ஒளியால் மறைக்கப்பட்டுள்ளது –

– சாட்சியும் கிடந்தான் சலனமற்று –

About The Author

2 Comments

  1. Guru

    என்ன கதை இது ? யாருக்குமே புரியாம ஒரு கதை எதுக்கு எழுதுரீங்க? எங்கே தொடக்கம் எங்கே முடிவு என்பது யாருக்குமே விலங்காது! உங்கல் கதை எல்லாமே இப்படிதான் இருக்கு

Comments are closed.