சாகசப் பட்சிணிகள்

கையில் அப்பாவின் கடிதம் படபடத்தது.
‘பிறகு உன் விருப்பம் போலச் செய். ஆசிகள்!’.

நேரில் பேசுகிற தொனியில் கடித வரிகள் பார்வையில் பதிந்து மனதில் ஓடின.

பவானியின் குரல் வாசற்புறமிருந்து கேட்டது. பக்கத்து வீட்டுக்காரியுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்.

மேஜையின் மீது பிளாஸ்க்கில் டீ. பக்கத்தில் கப். அவளை எதிர்பார்க்க வேண்டாம். அலுவலகத்திலிருந்து திரும்பியதும் எடுத்துக் குடிக்கலாம்.

எதிலுமே பிராக்டிகல். இந்த டீ விஷயமே உதாரணம். "தெனம் சாயங்காலம்.. வந்தா நீ எப்ப டீ தருவேன்னு அல்லாடணும்.." என்றதன் விளைவு.

மறுநாள் பிளாஸ்க்கில் டீ. தனக்கு போடும் போதே போட்டு வைத்து விடுகிறாள்.

"என் வேலையும் பாதிக்கலே. உங்க எதிர்பார்ப்பையும் பூர்த்தி செஞ்சாச்சு!"

சம்பளத்தில் கூடுதல் வந்தது.

"அப்பாவுக்கு அனுப்பலாமா..?" என்றேன்.

"வேணாம்.. ஆர்.டி ஆரம்பிங்க.."

"இல்லே பவா வந்து.."

"ப்ச்.. நான் சொன்னதைச் செய்யுங்க.."

இரண்டு வருஷம். சிவகாமியின் கல்யாணம் வந்தது. "இப்ப அதை எடுத்து.. அப்பாகிட்டே கொடுங்க.." என்றாள்.

கணிசமான தொகை. ஆர்.டி.. எஃப்டி ஆகி..

வியப்புடன் பார்த்தேன்.

"அப்பப்ப கொடுத்தா ..செலவழிச்சுரத் தோணும். தரலேன்னா.. இருக்கறதுல போட்டடிச்சு ஏதோ பண்ணிக்குவாங்க..இப்ப இந்த பணம் சேர்ந்திருக்காது."

இன்று இந்தக் கடிதம். மூத்தவள் சிவகாமிக்குப் பின் கடைசித் தங்கையின் திருமணம். எனக்கும் இக்கட்டான நிலை. பழைய பாக்கிகளின் முரட்டுப் பிடிக்குள் சிக்கியவன்.

பவானி என்ன சொல்லப் போகிறாள்?

உள்ளே வந்தாள்.

"லெட்டர் பார்த்தியா.."

பிரித்த கடிதம் படிக்காமலா இருந்திருப்பாள்..

"ம்.."

"என்ன செய்யலாம்"

"கையில் பணம் இருக்கா?"

வலை விரிக்கப்பட்டது புரியாமல்.. நான்.

"பி.எஃப் காலி.. ஆனா பேங்க் லோன் எடுக்கலாம். பதினெட்டாயிரம்…"

யோசித்தாள்.

"உங்க வண்டியைத் தள்ளிவிட்டு புதுசு வாங்கணும்னு சொன்னீங்களே.."

"ஆமா ஆனா.."

"செஞ்சுருங்க. பாண்டி ரெஜிஸ்ட்ரேஷன். எப்பவோ செஞ்சு வச்சது.. இப்ப நல்லதா அமைஞ்சதால.. பணம் கொடுத்துட்டதா எழுதிருங்க. ஆங்..மீதியை எஃப்.டில போட்டுருங்க.."

"பவா என்னைத் தப்பா.."

"மாட்டாங்க.."

நோ அப்பீல்.. ஜட்ஜ் மேஜையைத் தட்டி விட்டார்.

கல்யாணம் நன்றாய் நடந்தது. அப்பா எப்படியோ பணம் ஏற்பாடு செய்து விட்டார்.

"பெரியவன் எவ்வளவு கொடுத்தான்?"

"சிவகாமிக்கு முழுக்க முழுக்க அவன்தானே பண்ணினான். சின்னவளுக்கு என் ரெண்டாவது பையன் பொறுப்பு எடுத்துக்கிட்டான். அதானே முறை.."

"இருந்தாலும் பெரியவனுக்கும்.."

"உன்கிட்டே சொன்னா என்ன.. அவனையும் கேட்டேன். ஏதாவது ஏற்பாடு பண்ணிக்க. ரெண்டு மாசத்துல அடைச்சுரலாம்.. இப்ப உடனே கையில இல்லேன்னான்.."

"விட்டுராதே.. ரெண்டு மாசத்துலே வாங்கிக்க.."

அப்பாவுடன் மாமாவின் பேச்சு தற்செயலாய் என்னால் ஒட்டு கேட்கப்பட்டது.

புது வண்டியில் பவானியுடன் போகும்போது குஷியாய்த்தான் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் சுலபத் தீர்வுகள். மனிதன் சாகச பட்சிணியாகி வெகு நாட்களாச்சு..

About The Author

1 Comment

  1. panneer selvam

    அருமையான கதை. நல்ல கருத்துகள்.ரசித்தேன்

Comments are closed.