பத்து நாட்களுக்கு ஒரு முறை நான் சியாமளியைப் பார்த்துவிட வேண்டும், அல்லது அவள் என்னைப் பார்க்க வருவாள். பழக ஆரம்பித்து மூன்று வருடங்களாகத் தடங்கலின்றி நடக்கிற விஷயம்.
முதல் முறையாய் இன்றோடு மூன்று வாரங்களாகி விட்டன. நான் போயிருக்க வேண்டும். இல்லை.
ஃ போன் செய்தாள் ஆபிசுக்கு. ‘ஸீட்டில் இல்லை’ என்று நானே சொன்னேன், வேறு குரலில்.
அகாலமாய் வீட்டிற்குத் திரும்பினேன். ஞாயிறு அதிகாலையில் வெளியே போய் நள்ளிரவு வீடு திரும்பினேன்.
"உன்னை எதிர்பார்த்து எட்டு மணி வரை காத்திருந்தா பாவம்", என்றாள் அம்மா.
பதிலே பேசவில்லை. இத்தனை முயற்சித்தும் மாட்டிக்கொண்டேன்.
மாதம் ஒரு முறை அந்த இல்லத்திற்குச் செல்வேன். சியாமளியைக் கூட அங்கே வைத்துத்தான் நட்பானேன். காலையில் போய்விட்டால் சுத்தமாய் உலகம் மறந்து போகும். வேறொரு உலகம் பரிச்சயமாகும். நேசம் மட்டுமே பிரதானமாய் வேறேதும் எதிர்பார்ப்புகளற்ற உலகம்.
மாட்டிக் கொண்டேன் சியாமளியிடம். தலைகுனிந்து இரண்டரை வயசு வினோத்தைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது எனக்குப் பரிச்சயமான கிரீம் கலர் காட்டன் புடவை.
நிமிர்ந்தால், சியாமளி. ஒன்று சொல்ல வேண்டும். சியாமளியிடம் எனக்கு மிகவும் பிடித்த அந்த குணம். எதுவுமே நிகழாதது போலப் பேச ஆரம்பித்தாள். "இங்கே கொடுங்க. நான் டிரஸ் பண்ணிவிடறேன். நீங்க ஹரியைக் கவனிங்க."
மூன்று வயசு ஹரிக்கு பொசசிவ்னஸ் அதிகம். நான் எப்போது வந்தாலும் கண்ணில் பட்டதும் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொள்வான். இன்னமும் சரியாகப் பேச்சு வரவில்லை.
வேறு குழந்தைகளைக் கொஞ்சினால் முகம் சுண்டிப் போவான். அழமாட்டான். கட்டளை இல்லை. மூலையில் ஒதுங்கிப் போய்விடுவான். பிறகு அவனை சமாதானம் செய்வதற்குள் திண்டாடிப் போவேன்.
இதோ இப்போது கூட வினோத் முதலில் குளித்து விட்டதால் முகச் சிணுக்கம்.
"ஹரி…"
நகர்ந்து பின்னுக்குப் போனான். நானும் முன்னேறினேன். "வாடா ராஜா"
இன்னமும் நகர்ந்தான்.
"வாடா செல்லம், பிளீஸ்."
ஊஹும். மசியவில்லை. இன்னமும் இரண்டடி பின்னுக்கு நகர்ந்தால் சுவர் தடுக்கும். நான் அப்படியே நின்றேன்.
தடுக்கப்பட்டால் ஹரிக்கு சீற்றம் வரும். ஒன்று அப்படியே குப்புறக் கவிழ்ந்துவிடுவான். அல்லது எழுந்து ஓடுவான். பிறகு அவனுக்கு சமமாய் வேகங்காட்டாமல் ஓடவேண்டும்.
கடவுளே, ஒரு குழந்தையைக் கூட என்னால் என் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. மனசுக்குள் தேம்பத்தான் முடிந்தது.
"என்ன, ஹரி ரெடியா?"
"நீங்க போங்க"
"நான்… வந்து"
அவள் குரலில் கண்டிப்பு தெரிந்தது.. ஹரி வினோதமாய்ப் பார்த்தான். என்ன இது….
நான் நகர்ந்தேன். சியாமளி நேராய் ஹரியிடம் போனாள். திகைத்து நின்றவனை வாரி எடுத்துக் கொண்டாள். "வா, நானே குளிப்பாட்டி விடறேன்."
"நானாம்…", "குளிக்க வேண்டாம்." ஹரி என்புறம் கையைக் காட்டினான்.
‘நான்தான் வேண்டுமாம்.’
"பின்னே என் ஓடறே.. அவர் கிட்ட வந்தா."
என்ன சொல்லுவான்? லேசாய்த் திமிறி என்னிடம் வரமுயன்றான்.
நான் வேகமாய் வாங்கிக் கொண்டேன். என் கண்கள் பனித்து விட்டன. அந்த நிமிஷம் சின்னக் குழந்தையாய் உணர்ந்தேன். உள்ளுக்குள் விசும்பினேன்.
"போ… விளையாடு சமர்த்தா."
புது பொம்மையைப் பற்றிக்கொண்டு ஹரி நகர்ந்து போனான். சியாமளி சமையலறைக்குப் போயிருந்தாள். அடுத்து சாப்பாடு பரிமாற வேண்டும்.
இல்லத்தலைவி எட்டிப் பார்த்து புன்னகைத்தாள். சட்டைப் பையிலிருந்த கவரை எடுத்து நீட்டினேன்.
"இந்த மாச கலெக்ஷன்"
"போகும் போது மறக்காம ரசீது வாங்கிட்டுப் போங்க"
"ஆர்.கே. இண்டஸ்ட்ரில வரச் சொல்லி இருந்தாங்களே மேடம்."
"போனேன், செக் அனுப்புறதாச் சொன்னாங்க. இந்த வீக்ல வருதான்னு பார்க்கணும்"
விளையாடிக் கொண்டிருந்த ஹரியைப் பார்த்துச் சிரித்தேன். "போன வாரமே வரணும்னு நினைச்சேன்..
ஆனா…" என்னால் முழு மனதாய் என் இயலாமையைச் சொல்ல முடியவில்லை. என் மீதே குற்ற உணர்வு. மழுப்ப முயல்வதாய் நினைப்பு.
மேடம் நகர்ந்து போனார்.
சியாமளி ‘சமையல் ஓவர்’ என்று சைகை செய்தாள்.
பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தோம்.
"சொல்லுங்க, என்ன காரணம்?"
‘நான்…"
"நான் ஏதாவது உங்களை சங்கடப்படுத்தற மாதிரி செய்துட்டேனா?.."
”இல்லை, சியாமளி.. இல்லை. நான்தான் செய்து விடுவேன் போலிருக்கிறது. இத்தனை நாட்களாய் நல்ல சிநேகிதம் என்கிற எல்லை மீறாத நட்புக்குள், அந்தரங்கமாய் வேறு அர்த்தங்களை உணரத் துவங்கி விட்டேன் சியாமளி.
என் வாழ்க்கையில் இது மாதிரி சலனங்களுக்கு இடமில்லை என்ற வைராக்கியம் என்னையும் மீறிப் பொடிப் பொடியாய் சிதறிப் போனது சியாமளி . யெஸ்… ஜ ஸ்டார்ட் லவ்விங் யூ. நெள ஜ ல வ் யூ . லவ் யூ ஸோ மச். என்னால் என் பிம்பம் சிதறிப்போன அதிர்ச்சி தாங்க முடியவில்லை. ஹரியை விடவும் குழந்தையாய் மிரண்டு சுவரோடு ஒட்டிக்கொண்டு நிற்கிறேன். பேசவில்லை ஒரு வார்த்தை கூட.
குழாய் நீர் சொட்டி குடம் நிரம்பி வழிந்த மாதிரி எண்ணங்கள் தளும்பி வெளியே கொட்டிவிடுமோ என்று நடுங்கினேன்.
சியாமளி என்னை உற்றுப் பார்த்தாள். "என்ன பிரச்சனை? மனசு விட்டுத்தான் சொல்லுங்களேன்.."
"வேண்டாம் சியாமளி, என்னைத் தூண்டாதே, பிளீஸ்."
"டூ யூ லவ் மீ…?" திரை விலக்கி சட்டென்று உள்ளே எட்டிப் பார்த்துவிட்டாள்.
‘தலை கவிழ்ந்தேன். காதலைச் சொல்ல ஏன் தயங்க வேண்டும்? அவமானங்கொள்ள இது என்ன விபரீத வேட்கையா.. இல்லையே!"
மறுவினாடி தலை நிமிர்ந்தேன்.
"ஆமாம்… ஆமாம்…" என்னையும் மீறி உணர்ச்சியாய் முழங்கினேன். ஜ ல வ் யூ சியாமளி. ஆனால்…"
சியாமளி என்கிற என் புத்திசாலி சிநேகிதி அந்த வினாடி இன்னமும் அருகில் நெருங்கி வந்து என் கையைப் பற்றினாள்.
"நானும்தான். நாம் ஒன்றாய் இனி இதேபோல மனசுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழலாம். அன்பு வேண்டும் ஜீவன்களுக்காய் நம்மை அர்ப்பணித்து.. நேசம் விதைத்து.. பிரியம் விளைத்து…"
என் மீது சரிந்து சாய்ந்து கொண்ட போது தூரத்தில் பஸ் வெளிச்சம் தெரிந்தது. என்ன இயல்பாய், அழகாய்ச் சிக்கல் தன் முடிச்சவிழ்த்துக் கொண்டது தெரிந்தது அப்போது.
“
Narrated well, but story does not have anything in it!
AZHAGU