மொராக்கோவில் உள்ள மார்கேஷ் என்ற இடத்துக்கு அந்தப் பாதிரியார் வந்திருந்தார். வந்தவுடன், தினமும் காலையில் நகரத்தின் எல்லையிலிருந்த பாலைவனப் பகுதியில் நடை பழக வேண்டும் என்று தீர்மானித்தார்.
அதன்படி அடுத்தநாள் அதிகாலையில், பாலைவனத்துக்குச் சென்றார். அங்கு, வழியில் ஒரு மனிதன் பாலைவனத்தில் படுத்துக் கொண்டு மணலைக் கையால் அணைத்தவாறே கீழே காது வைத்து எதையோ உன்னிப்பாகக் கேட்பதைப் பார்த்தார். ‘இவன் என்ன செய்கிறான்? ஏதோ பைத்தியம் போலிருக்கிறது!’ என்று எண்ணியவாறே அங்கிருந்து அகன்றார். மறுநாள் காலையிலும் அவர் பாலைவனத்தில் உலா சென்றபோது, அதே ஆள் அதே இடத்தில் மணலைக் கைகளால் அணைத்தவாறே காது கொடுத்து எதையோ கேட்பதைப் பார்த்து அவருக்கு வியப்பு தாங்கவில்லை. நேராக அவனிடம் சென்று தனக்குத் தெரிந்த அரைகுறைப் பாரசீக மொழியில், "நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்டார். அதற்கு அந்த மனிதன், "இந்தப் பாலைவனம் தான் மட்டும் தனியாக இருப்பதாக எண்ணிக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது. நான் அதனை அணைத்து ‘உனக்கு நான் இருக்கிறேன்’ என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறேன்" என்றான்.
பாதிரியார், "பாலைவனம் கண்ணீர் கூட விடுமா? எனக்கு இதுவரை தெரியவில்லையே" என்று சொல்ல, அவன் சொன்னான், "அது தினமும் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருக்கிறது. நாம் ஒரு சோலைவனமாக மாற மாட்டோமா, மரங்களும் காய் கனிகளும் நிறைந்து அனைவருக்கும் பலனளிக்க மாட்டோமா என்று கனவு கண்டு கொண்டிருக்கிறது" என்று சொன்னான்.
பாதிரியார் சொன்னார், "அது மிகவும் நன்றாகவே தனது பணியைச் செய்து கொண்டிருக்கிறது. நான் தினமும் காலையில் நடந்து வரும்போது இந்த விரிந்த பாலைவனத்தைப் பார்த்து, மனிதன் இயற்கைக்கு முன்னால் எவ்வளவு சிறியவன் என்று அறிய முடிகிறது. ஒவ்வொரு முறையும் இந்த மணல் குவியல்களைப் பார்க்கும்போது, இந்த உலகில் பிறந்த கோடானுகோடி மக்கள் பிறப்பில் சமமாக இருந்தாலும் அவர்களது வாழ்க்கையில்தான் எவ்வளவு ஏற்றத் தாழ்வுகள் என்ற ஏக்கம் எழுகிறது. உலகம் எல்லாருக்குமே நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பது புரிகிறது. இங்குள்ள மலைகளில் தியானம் செய்து மன நிம்மதியைத் தேடிக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் இங்கிருந்து கதிரவன் உதிப்பதைப் பார்த்ததும், இயற்கையின் அற்புத சக்தி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது என்று இந்தப் பாலைவனத்திடம் சொல்" என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.
ஆனால் அடுத்தநாள், அந்த மனிதனை அதே இடத்தில் அதே நிலையில் பார்த்தபோது திகைத்துப் போனார். அவனிடம் சென்று, "பாலைவனத்திடம் நேற்று நான் சொன்னதைச் சொன்னாயா?" என்று கேட்டார். அவன் தலையசைத்தான்.
"அப்படிச் சொன்ன பிறகும் பாலைவனம் அழுகிறதா?" என்று பாதிரியார் கேட்க, தன் காதை மணலில் சாய்த்தவாறே அவன், "பாலைவனத்தின் ஒவ்வொரு விம்மலையும் நான் கேட்க முடிகிறது. தான் உலகுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறோம் என்று தெரியாமல் இவ்வளவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளை வீணடித்து விட்டோமே! அநியாயமாகக் கடவுளைக் குறை கூறினோமே என்று நினைத்துக் கதறுகிறது" என்றான்.
பாதிரியார் அவனிடம், "நீ இந்தப் பாலைவனத்திடம் சொல்லு, ‘மனிதன், அவனது வாழ்நாட்கள் மிகவும் குறைவாக இருந்தாலும் தன் வாழ்க்கையில் இலக்கு என்ன என்பது தெரியாமலே பல ஆண்டுகளை வீணடித்து விடுகிறான். கடவுள் தன்னை மட்டும் ஏன் சோதிக்கிறார் என்று அவரிடம் தன் கோபத்தைக் காட்டுகிறான். ஆனால், அவனது பிறப்பின் காரணத்தை அவன் அறியும்போது காலம் கடந்து விடுகிறது. ‘இனிமேல் நம்மை மாற்றிக் கொள்ள முடியாது’ என்று நினைத்து மீண்டும் அல்லல்களிடையே உழல்கிறான்” என்றார்.
அந்த மனிதன் சொன்னான், "இந்தப் பாலைவனம் நான் சொல்வதைக் கேட்குமா என்று தெரியவில்லை. அது துயரப்பட்டுத் துயரப்பட்டே பழகிவிட்டது" என்று. பாதிரியார், “அப்படியானால் இந்தச் சூழ்நிலையில் நான் வழக்கமாகச் செய்வதைச் செய்யலாம். நாம் இரண்டு பேரும் பிரார்த்தனை செய்வோம்” என்றார். அந்த இஸ்லாமிய மனிதன் மெக்கா நோக்கித் தொழ, பாதிரியார் அவனோடு கைகோத்து ஏசுபிரானை எண்ணிப் பிரார்த்தனை செய்தார்.
அடுத்தநாள், அவர் காலையில் பாலைவனத்தில் வழக்கம்போல் உலாவச் சென்றபோது அந்த மனிதனைக் கணவில்லை. ஆனால், மணலில் அந்த இடத்தில் ஈரம் கசிந்திருந்தது. ஒரு நீரூற்று தோன்றியிருந்தது! நாட்கள் செல்லச் செல்ல அந்த நீரூற்றில் தண்ணீர் வெள்ளம் பெருகத் துவங்க, நகரத்தின் மக்கள் அங்கே ஒரு பெரிய கிணற்றைக் கட்டினார்கள்.
அந்தக் கிணறுதான் இன்று ‘பாலைவனத்தின் கண்ணீர்க் கிணறு’ என அழைக்கப்படுகிறது. இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் குடிப்பவர்கள் தங்கள் துன்பத்தின் காரணங்களை மறந்து அவற்றையே மகிழ்ச்சிக்கான ஏணிப்படிகளாகக் கருதுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் இலக்கை நோக்கிப் பயணத்தைத் தொடங்குகிறார்கள் என்று இன்றும் நம்பப்படுகிறது.
(ஆதாரம்:- பாலோ கொய்லோ).