ஜெயம் ரவி – ராஜா கூட்டணியிலிருந்து இன்னுமொரு வெற்றிப்படம். கோடையிலே ஒரு வசந்தம்.
சின்ன வயதிலே குழந்தைகள் கையைப் பிடித்து நடைபயில வைக்கும் அப்பாக்கள் தனது பிள்ளைகளுக்கு வயதான பிறகும் அவர்களுக்கு சுய சிந்தனை, விருப்பு, வெறுப்புகள் இருக்கும் என்பதை அறியாமல் இன்னும் அவர்களைக் குழந்தைகளாகவே பாவித்து கைபிடித்து வருவதினால் ஏற்படும் சிக்கல்களைக் கூறுகிறது படம்.
மகனாக ஜெயம் ரவி, அப்பாவாக பிரகாஷ் ராஜ். இந்த அப்பா பாத்திரத்திற்கு அவரைத் தவிர (ரகுவரன்?) வேறு யாரும் கச்சிதமாகப் பொருந்துவது ஐயமே! மகனுக்கு ஆடைகளைத் தேர்வு செய்வதிலிருந்து, கேரம் போர்ட் விளையாடுவது, அவனுக்கு தகுந்த துணையைத் தேர்ந்தெடுப்பது என்று எல்லாவற்றிலும் தான் தான் தன் மகனுக்கு முடிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். பையனோ தன் காலில் தான் நிற்க வேண்டும், தான் விரும்பும் பெண்ணை மணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறான். அதை அப்பாவிடம் சொல்ல முடியாமல் தவிப்பது, அப்பாவின் தலைமறைந்த பிறகு நண்பர்களிடம் குமுறுவது என்று படம் முழுவதிலும் கலக்கியிருக்கிறார் ரவி. ஆனால் ஜெனிலியாவுடனான காட்சிகளில் அவரிடம் ஒருவித செயற்கைத்தனம் தெரிவது ஏனோ?
ரவியின் காதலியாக பாய்ஸ் படத்தில் நடித்த ஜெனிலியா. எல்லாரையும் நண்பர்களாக பாவித்துப் பழகும் அப்பாவிப் பெண்ணாக ரசிக்கும்படி செய்திருக்கிறார். படம் முழுதும் அவர் செய்யும் ரகளை படத்துக்குப் பெரிய பலம்.
சாயாஜி ஷின்டே, ஜெனிலியாவின் தந்தையாக வருகிறார். இதைத் தவிர, சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் என்று காமெடி கோஷ்டி. பாஸ்கர் கலாமாகக் கலாய்க்கிறார். நகைச்சுவை வசனங்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. சடகோபன் ரமேஷ் (கிரிக்கெட்டெல்லாம், விளையாடுவாரே!) கவுசல்யா, கீதா, சத்யன் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். வேலைக்காரராக வரும் சத்யன் கொஞ்ச நேரமே வந்தாலும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
படத்தின் முக்கிய அம்சம், ஜெனிலியா ரவியின் காதலை மறுத்து பிரகாஷ் ராஜ் வீட்டிலிருந்து வெளியேறுவதும், ஜெயம் ரவி அப்பாவிடம் குமுறுவதும் தான்! தன்னை எப்படி அப்பா சுதந்திரமாக வாழ விடவில்லை என்று காரணங்களைச் சொல்லிப் பொருமும் போது பிரகாஷ் ராஜ் அமைதியாகக் கேட்டுக் கொண்டு உணர்ச்சிகளைக் கண்களில் பிரதிபலிப்பதும், "சாரி, தப்பு செஞ்சுட்டேன், நீயாவது என்னிடம் சொல்லக் கூடாதா?" என்று சொல்லி வருத்தப்படுவதும் நெகிழ்ச்சி. வசனங்களில் கடைசி சில காட்சிகளில் இருக்கும் ஆழம் படம் முழுவதும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலோட்டமான வசனங்கள் ஏமாற்றமளிக்கின்றன.
ஜெனிலியா ரவியின் குடும்பத்தினரின் மனதில் இடம்பிடிப்பதற்கான காரணங்களில் அரைவேக்காட்டுத்தனம்.
தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையும், கண்ணனின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கின்றன.
நல்ல கருதான், கதையும் கூட ஓகேதான். ஆனால் திரைக்கதை கொஞ்சம் வீக். எனினும் அதிரும் பஞ்ச் டயலாக், திணிக்கப்பட்ட குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த வசனம் என்றெல்லாம் இல்லாமல் குடும்பத்தோடு சென்று முழுதாய்ப் பார்க்க முடிவதைச் சொல்லியாக வேண்டும். சந்தோஷ் வசூலைக் குவிப்பான் என்றுதான் தோன்றுகிறது.”