வானத்திலிருந்து வந்தவையா பன்னாட்டு கம்பெனிகள்?
சத்யத்தின் ஆடிட்டர்கள் ப்ரைஸ்வாட்டர் கூப்பர் என்ற பன்னாட்டு நிறுவனம் என்பது நாம் அறிந்ததே. சத்யம் நிறுவனத்தின் ஊழல் வெளியானதும் பத்திரிகைக்கரர்கள் மொய்த்துக் கொண்டபோது இந்த ஆடிட்டர்கள் சொன்னது என்ன? "ஐயையோ! வாடிக்கையாளர் பற்றிய தகவல்களையெல்லாம் நாங்கள் வெளியிடக்கூடாதே! ரகசியக் காப்புக் கொள்கை இருக்கிறதே!" என்றார்கள். விஷயம் ஊரறிந்த ரகசியமானதும் அவர்கள் சொன்னது, "நாங்கள் எல்லாம் சரியாய்த்தான் செய்தோம். ஆடிட் சட்ட விதிமுறைப்படி என்னென்ன பரிசீலிக்க வேண்டுமோ, அத்தனையையும் பரிசீலித்து விட்டோமாக்கும்!" என்றார்கள். அதற்குப் பிறகு, "ஆடிட்டர்கள் வேட்டை நாய்கள் அல்ல. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பேலன்ஸ் ஷீட்டை சரி பார்த்து தப்பு எதுவும் இருந்தால் சொல்லுவோம். அவ்வளவே. புலன் விசாரணை எங்கள் வேலை இல்லை" என்றார்கள். 85 லட்சம் ரூபாய் ஆண்டு ஊதியத்திலிருந்து சில வருஷங்களில் 4.90 கோடி ரூபாயாக ஊதிய உயர்வு பெற்ற ப்ரைஸ்வாட்டர் நிறுவனம் எப்படி எல்லாம் சப்பைக்கட்டு கட்டுகிறது பாருங்கள்!
இதை விடக் கொடுமை என்னவென்றால் Institute of Chartered Accountants of India-வின் தலைவர் உத்தம் ப்ரகாஷ் அகர்வால் சொன்னதுதான்: "ஆடிட் நிறுவனங்கள் the Balance sheet gives a true and fair view of the state of affairs என்றுதான் சான்றிதழ் கொடுக்கிறார்கள். "True and Correct view" என்று சொல்வதில்லையே?"
என்னென்னவோ சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாலும், சத்யம் நிறுவனத்தை ஆடிட் செய்த கோபாலகிருஷ்ணனையும் தெல்லூரியையும் ப்ரைஸ்வாட்டர் நிறுவனம் சஸ்பெண்ட் செய்தார்கள். அந்த இருவரும் கைது வேறு ஆகி விட்டார்கள். ப்ரைஸ்வாட்டர் நிறுவனத்தின் ஆடிட் பிரிவின் தலைவரான தாமஸ் மாத்யூ தமது பொறுப்பிலிருந்து விலகி விட்டார். அனால் நிறுவனத்தின் பார்ட்னராக நீடிக்கிறார். நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கு 5 உறுப்பினர்கள் கொண்ட ஓர் ஆலோசனைக் குழுவை நியமித்திருக்கிறார்கள்.
கடைசியாக இந்த ஆடிட் நிறுவனம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டி வந்துள்ளது. புதிய சத்யம் போர்டுக்கு அவர்கள் அனுப்பியுள்ள கடிதம்: "நாங்கள் சத்யம் நிறுவனம் சம்பந்தமாகக் கொடுத்த நிதி நிலை அறிக்கைகள் சரியில்லாதவை. நம்பகத்தன்மை இல்லாதவை. அவற்றைப் பொருட்படுத்த வேண்டாம்." ஒரு புகழ் வாய்ந்த பன்னாட்டு ஆடிட் நிறுவனத்துக்கு இதை விட அவமானம் வேண்டுமா? இப்போது சத்யம் புதிய போர்டு புதிய, சரியான கணக்கை எழுத டெல்லாயிட், மற்றும் கே.பி.எம்.ஜி என்ற இரு நிறுவனங்களை நியமித்துள்ளது. சுத்த சுயம்பிரகாச இந்தியக் நிறுவனமான பிரம்மையா அண்ட் கம்பெனியை இண்டெர்னல் ஆடிட்டர்களாக நியமித்துள்ளார்கள்.
ப்ரைஸ்வாட்டர் நிறுவனம், ஊழலுக்கு அகில உலகப் புகழ் பெற்றது. செயல்படாத சொத்துக்கள் அபரிமிதமாக இருந்ததால் குளோபல் ட்ரஸ்ட் வங்கி என்று ஒரு வங்கி இழுத்து மூடப்பட்டதே, ஞாபகம் இருக்கிறதா? அதை ஆடிட் செய்தவர்கள் சாக்ஷாத் ப்ரைஸ்வாட்டர்தான்! Madoff Scandal என்று ஒரு மகா பெரிய ஊழல் அடிபட்டதே ,50 பில்லியன் டாலர் ஊழல், அந்தக் கம்பெனிக்கும் ப்ரைஸ்வாட்டர்தான் ஆடிட்டர்கள். அது சம்பந்தமாக இந்த ஆடிட் நிறுவனம் தண்டனைக்குள்ளானது.
இன்னமும் மேல்நாடு என்றால் உயர்த்தி என்ற மயக்கம் நம் நாட்டில் தீர்ந்தபாடில்லை. Big 5 என்ற பெரிய பன்னாட்டு ஆடிட் நிறுவனங்கள் 5. அவை ப்ரைஸ்வாட்டர், டெல்லாயிட், எர்னெஸ்ட் & யங், கே.பி.எம்.ஜி, ஆர்தர் ஆண்டர்ஸன் ஆகியவை. இவற்றில் ஆர்தர் ஆண்டர்சன் என்ரான் ஊழல் காரணமாக கலைக்கப்பட்டு விட்டது. மிச்சம் நாலு நிறுவனங்களும் இந்தியாவில் நுழைவதை ஆடிட்டர் குருமூர்த்தி தலைமையிலான குழு வன்மையாக எதிர்த்தது. அவர்கள் இந்தக் கம்பெனிகளின் நம்பகத் தன்மையைப் பற்றி எல்லாம் விரிவாக விண்டுரைத்தார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் புறக்கணிக்கப்பட்டன. தொழில் ரீதியான பொறாமையினால் சொல்லுகிறார்கள் என்று அலட்சியப்படுத்தி விட்டார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் என்றால் அவை வானத்திலிருந்து வந்து இறங்கியவை அல்ல, அவையும் சேற்றில் அமிழ்ந்த கால்கள் கொண்டவையே என்பதை ஏன் அதிகார மையத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளவில்லை?
இப்போது சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் பிரைஸ்வாட்டரின் ஆடிட் செயல்முறைகளைப் புலன் விசாரித்து வருகிறார்கள். செபி ப்ரைஸ்வாட்டர் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்று விட்டது.
இன்ஸ்டிட்யூட்டினர் புதிய எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி யோசித்து வருகிறார்கள். ஒரு ஆடிட் நிறுவனம் ஆடிட் செய்த கணக்கை இன்னொரு நிறுவனத்தைக் கொண்டு ஆடிட் செய்ய வைப்பது. அல்லது ஒரே கம்பெனியை இரண்டு ஆடிட் கம்பெனிகள் தனித் தனியாக ஆடிட் செய்வது, இவை போல. இதற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. “இப்படி எல்லாம் செய்தால் எங்களால் வேலை பார்க்க முடியாது, ஆடிட்டர்களுக்கு பதில் சொல்லத்தான் நேரம் சரியாக இருக்கும்.” என்கிறார்கள்.
அனுபவத்துக்கு ஏற்ப புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதுதான். ஆனால் உண்மை என்னவென்றால் இருக்கும் நெறிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே இவ்வளவு பெரிய ஊழல்கள் நடக்கமுடியாது என்பதுதான்.
இப்போதுள்ள நெறிமுறைகள் என்ன?
அடுத்த வாரம் பார்ப்போம்.
“