சத்யத்தின் கதை (8)

துணைக் கதை – மைட்டாஸ்

சத்யத்தின் கதையைத் தொடர்ந்து படித்து வரும் சில நண்பர்கள் ஒரு கேள்வி கேட்கிறார்கள். "சத்யத்தைப் பற்றி சக்கரவட்டமாக எழுதி வரும் நீங்கள் ஏன் மைட்டாசைப் பற்றிப் பட்டும் படாமலும் எழுதுகிறீர்கள்? அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தகவல்களைத் தூவியுள்ளீர்கள்; அவ்வளவுதான். கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள்" என்கிறார்கள். நியாயம்தான்; சொல்லிடுவோ….ம்!.

மைட்டாசின் நிறுவனர், ராமலிங்க ராஜுவின் புதல்வர் தேஜா ராஜு. மைட்டாசுக்கும் சத்யத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று Serious Fraud Investigation Office துப்பறிந்து கண்டுபிடித்துள்ளது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி! மைட்டாஸ் மட்டுமல்ல; இன்னும் 350 கம்பெனிகள் ராஜு குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் இருக்கின்றன என்பது இப்போது ஊரறிந்த ரகசியம்!

டிசம்பர் 16ம் தேதி போர்டு மீட்டிங் வரை மைட்டாசைப் பற்றி வெளியுலகம் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. அதற்குப் பிறகு, மைட்டாஸ் பங்கு விலை ரூ 485 லிருந்து கிடுகிடுவென்று ரூ 50 அளவுக்குச் சரிந்தது. பங்கு விலை சரிந்ததற்கு இன்னொரு முக்கிய காரணம், மெஜாரிட்டி பங்குகளை வைத்திருந்த ராஜு குடும்பத்தினர் தங்கள் பங்குகளை விற்றுவிட்டு 1% அளவுக்குக் கொண்டு வந்ததுதான். அந்த ஒரு சதவிகிதமும் அடமானத்தில்!

கொஞ்ச காலமாகவே ராமலிங்க ராஜுவின் மனதில் "புவிமிசை ஓங்கும்; மென்பொருள் மெல்லத் தாழும்" என்ற ஓர் எண்ணம் உருவாகி விட்டது. எனவே மைட்டாசில் தமது நேரத்தையும் கவனத்தையும் முழு ஈடுபாட்டுடன் செலுத்த ஆரம்பித்தார். எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்திருக்கும், ரியல் எஸ்டேட் மதிப்புகள் குறையாமல் இருந்திருந்தால். மைட்டாசுக்குச் சொந்தமான 6400 ஏக்கர் நிலத்தை ஏக்கர் 1 கோடி ரூபாய் அளவில் மதிப்பிட்டிருந்தார்கள். உண்மை மதிப்பு அவ்வளவு இல்லை. அதுவும் குறைந்து ஏக்கர் ரூ. பத்து லட்சத்துக்கும் குறைவாக வந்து விட்டது.

"மதிப்பிட்டிருந்தார்கள்" என்றோம். மதிப்பிட்டது யார் என்ற விஷயமே இப்போது பிரச்சினைக்குள்ளாகி இருக்கிறது. நிர்வாகத்தினர், முதன்மை நிலை வகிக்கும் நான்கு ஆடிட் கம்பெனிகளில் ஒன்று மதிப்பீடு செய்தது என்று மையமாகச் சொல்லி வைத்தார்கள். ஆனால் அந்த நால்வரோ (Ernest & Young, Pricewater, Delloites, and KPMG), "ஐயோ சாமி! ஆளை விடுங்கள்; எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை" என்று விட்டார்கள்.

ஆடிட் கம்பெனிகளைப் பற்றிப் பேசும்போது நினைவுக்கு வருகிறது. சத்யம் விவகாரத்தில் Pricewater பெயர் பரபரப்பாக அடிபடுகிறது. "மைட்டாஸ்" கம்பெனிகளை ஆடிட் செய்தது யார்? Ernest & Young கம்பெனியின் associates ஆன எஸ்.ஆர்.பாட்லிபாய் மற்றும் கிருஷ்ணா அண்டு பிரசாத் என்ற இந்திய நிறுவனங்கள். இதில் Ernest & Young, Institute of Chartered Accountants of India வின் உறுப்பினர் இல்லையாதலால் அவர்களை இன்ஸ்டிட்யூட் கேள்வி கேட்க முடியாது. எப்படி இருக்கிறது கதை?

மைட்டாஸ் நிலத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். "சத்யம் சத்யம்தான்: மைட்டாஸ் மைட்டாஸ்தான்" (‘கூந்தல் கருப்பு; குங்குமம் சிவப்பு’ என்பது போல இல்லை?) "இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை; மைட்டாசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றியே தீருவோம்" என்று வீராப்பாகப் பேசிக் கொண்டிருந்த ராஜசேகர ரெட்டிக்கு இப்போது காலம் கடந்த ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. "ஆமாம்; 6400 ஏக்கர் நிலம் மைட்டாஸ் வசம் இருக்கிறது என்றோமே, அதை விற்றவர்கள் நிலத்தின் உண்மை சொந்தக்காரர்கள்தானா? பத்திரங்கள் எல்லாம் சரியானதா? என்று பரிசோதிக்க வேண்டும்" என்று இப்போது சொல்கிறார். கா.க. ஞானோதயம் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இல்லை.

ஆந்திர, மகாராஷ்டிர, கர்நாடக அரசுகள், மைட்டாசுக்கு வழங்கிய ஒப்பந்தங்கள் மொத்தம் 40000 கோடி ரூபாய்க்கு. இதில் ஹைதராபாத் மெட்ரோ ரயில் ப்ராஜக்ட் மட்டும் 12000 கோடி ரூபாய். இது குறித்து டெல்லி மெட்ரோ ப்ராஜக்ட் மேலாண் இயக்குனரும் ஹைதராபாத் ப்ராஜக்டின் ஆலோசகருமான ஈ.ஸ்ரீதரன் ஆணித்தரமாக, "Future Political Scam" என்று வெளிப்படையாகச் சொன்னார். "அதெப்படி சொல்லப் போச்சு?" என்று கண்டனம் தெரிவித்தார் ராஜசேகர ரெட்டி. "மான நஷ்ட வழக்குப் போடுவோம், போடுவோம், போட்டுடுவோம்" என்று பயமுறுத்திக் கொண்டே இருந்தது மைட்டாஸ். கடைசியில் மானம் (இருந்தால்) நிஜமாகவே போச்சு! இப்போது சொல்கிறார் ராஜசேகர ரெட்டி, "மைட்டாசுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்வோம்!"

மைட்டாஸ் விவகாரங்களை சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்து அனுப்பி விட்டார், ஆவணங்கள் எல்லாம் (யார் கண்ணிலும் படாமல்) பத்திரப்படுத்தப்பட்ட பிறகு!

‘மைட்டாஸ் கம்பெனிகளுக்குப் பெரிதும் துணை நின்றவர் சந்திரபாபு நாயுடுவா? ராஜசேகர ரெட்டியா?’ என்பது ஏறத்தாழப் பட்டிமன்றப் பொருளாகி விட்டது. நாம் கருத்து எதுவும் சொல்லாமல், தகவல்களை மட்டும் தருகிறோம்.

சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் மைட்டாஸ் sales turn over:
1996-97ல் 20.76 கோடி ருபாய்.
2003-04ல் 299 கோடி ரூபாய்.

ராஜசேகர ரெட்டி ஆட்சிக் காலத்தில்:
2004-05ல் 383 கோடி ருபாய்.
2007-08ல் 1874 கோடி ரூபாய்.

ஸ்டேட் பாங்க், ஐ.சி.ஐ.சி.ஐ.., ஐ.டி.பி.ஐ. ஆகிய பாங்குகள் மைட்டாசுக்கு கடனாகவும், பாங்க் உத்தரவாதமாகவும் 1000 கோடி ரூபாய் அளித்துள்ளன. பாங்க் உத்தரவாதங்களை அமல் படுத்தக் கூடாது என்று அவை ஆந்திர உயர்நீதி மன்றத்தில் மனு செய்துள்ளன.

மைட்டாசின் முதன்மை நிர்வாக அதிகாரியாக பி.கே.மாதவ் என்பவர் இருந்தார். அவர், நாகார்ஜுனா நிதிக் கம்பெனியின் ஊழல் காரணமாகக் கைதானார். மைட்டாஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டார். டைரெக்டர் சி.பி.பன்ஸால் ஜனவரி 8ம் தேதி (ராமலிங்கராஜுவின் ஒப்புதல் வாக்குமூலத்துக்கு அடுத்த நாள்) பதவி விலகி விட்டார். ஆர்.சி.சின்ஹா என்ற மைட்டாஸ் இன்ஃப்ரா சேர்மனும் பதவி விலகி விட்டார். 400 ஊழியர்களும் (மொத்த ஊழியர்களில் 75%) வேலை நீக்கம் செய்யப்பட்டு விட்டார்கள். ஆக, மைட்டாசில் மிஞ்சி இருப்பது எலும்புக் கூடுகள் மட்டுமே!

இன்றையத் தேதிக்கு இவையே மைட்டாஸ் பற்றிய முக்கியத் தகவல்கள்!

அடுத்த வாரம் ஆடிட்டர்கள் சங்கதியைப் பார்ப்போம்!

(தொடரும்)”

About The Author

1 Comment

  1. Jothi

    இன்றைய சத்யம் நிறுவன ஊழியர்களின் நிலை என்ன? யாருக்கும் வேலை பறிபோனதா? சம்பளம் ஏதும் குறைக்கப்பட்டதா? அப்படி இல்லையேல், அனைவருக்கும் தங்கு தடையின்றி சம்பளம் யார் வழங்குகிறார்கள்? மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளதால், மக்களின் நிதிப் பணம் கோடி கோடியாக வாரி வழங்கப்படுகிறதா? அல்லது சத்யத்திலேயே அவ்வளவு லாபம் இன்றளவும் வருகின்றதா? இக்கேள்விகளுக்கும் விடையளிக்கவும். இன்றைய சத்யத்தின் நிலை என்ன?

Comments are closed.