சத்யத்தின் கதை (5)

உண்மை எது, பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே..

ராமலிங்க ராஜுவின் ஒப்புதல் வாக்குமூலம் குறித்து இரண்டு வகைக் கருத்துக்கள் நிலவுகின்றன. அது ஒரு நாடகம்; மகாப் பெரிய ஊழல் ஒன்றை மறைப்பதற்காகவும், யாரோ பெரிய புள்ளிகளைக் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்காகவும் இப்படி ஒரு கதை வசனம் எழுதியிருக்கிறார் என்று ஒரு சாரார் சொல்லுகிறார்கள். மற்றொரு சாரார், நிஜமாகவே பாலன்ஸ் ஷீட் பொய் (பலே, பலே! நிஜமாகவே பொய், found missing என்பது போல, Oxymoron!) என்கிறார்கள்.

நம்மைப் பொறுத்தவரையில், இரண்டு விதமாகவும் கற்பனை செய்து பார்ப்போம்.

காட்சி-1: ராஜுவின் வாக்குமூலம் உண்மை.

இப்படி பாலன்ஸ் ஷீட்டில் கையிருப்புப் பணத்தையே பொய்யாகக் காட்டிய நிகழ்வு – உலக வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும். இந்தியாவின் என்ரான் என்று சத்யம் ஊழலைச் சொல்வது பொருந்தாது. மகா மகா என்ரான் ஊழலிலும் இப்படி நடக்கவில்லை!

சரி, இது உண்மையானால் எப்படி நடந்திருக்கலாம் என்பது பற்றி நமக்கு ஒரு யூகம். கணக்கு இறுதி நாளில், கணக்குப் புத்தகங்களை எல்லாம் எழுதி முடித்து விட்டு, அதற்குப் பிறகு செக்குகள் வந்திருப்பதாகச் சொல்ல வேண்டும். அந்த செக்குகளுக்கான பட்டியலைப் போட்டு, கையிருப்பிலுள்ள செக்குகள் என்று ஒரு எண்ட்ரியைப் போட்டு விட வேண்டும். புத்தகத்திலும் வரவு இல்லை. பேங்க்கிலும் வரவு இல்லை. எனவே பேங்க் ரிகன்சிலியேஷன் என்ற ஸ்டேட்மெண்டில் இந்தத் தொகை வரவே வராது! (புலனாய்வாளர்கள் இந்தத் தடயத்தை வைத்துக் கொண்டு விசாரித்து துப்பு ஏதும் கிடைக்குமானால், வேணி & வைத்திக்கு அவார்டு தருவார்கள் என்று நம்புகிறோம்!)

பாலன்ஸ் ஷீட்டில் பொய்க் கையிருப்பு காட்ட வேண்டுமானால், அது வேறு எப்படி சாத்தியமாகும்?

1. பாங்குகள், Fixed Deposits மற்றும் accrued Interest க்கான பொய் ஸ்டேட்மெண்ட்கள் தந்து உதவி இருக்க வேண்டும். அல்லது,
2. சத்யம் நிர்வாகமே இப்படி போலி ஸ்டேட்மெண்ட்களைத் தயாரித்திருக்க வேண்டும்.
3. ஆடிட்டர்களும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்திருக்க வேண்டும். அல்லது,
4. அவர்கள் "ஐயோ! பாவம், ஒன்றும் தெரியாது!" கேசாக இருக்க வேண்டும். பச்சை மையில், நீட்டின இடத்தில், டிக் போடும் டிக்காகான்களாக இருக்க வேண்டும். அல்லது,
5. ராஜு சொல்வது போல் இது சம்பந்தமாக யாருக்கும் தொடர்பு இல்லையென்றால், சத்யம் கம்பெனியின் நிதி இலாகா ஊழியர்கள் அத்தனை பேரும் தண்டத்துக்கு சம்பளம் வாங்கிக் கொண்டு, நெட்டில் படம் பார்த்துக் கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

இவர் சொல்வது போல் ஊழலை முறைப்படுத்த, பல்வேறு புத்தகங்களில் ஏறத்தாழ 250 எண்ட்ரிகள் போட வேண்டியிருந்திருக்கும் என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அத்தனையையும் ராஜுவே செய்திருக்க வேண்டும். ஊழியர்கள் எல்லாம் கொலு பொம்மைகளே!

இந்தக் காட்சியை நம்ப முயல்வது நமது மூளைக்கு மிகவும் கஷ்டம் தருகிறது. எனவே, அடுத்த காட்சியைப் பார்ப்போம்.

காட்சி-2: பாலன்ஸ் ஷீட்டில் காட்டியுள்ளது நிஜம்.

பாலன்ஸ் ஷீட் படி செயல்பாட்டு அளவு லாபம் 24%. இது மற்ற சக கம்பெனிகளின் லாப சதவீதத்துடன் ஒத்துப் போகிறது. ராஜுவின் ஒப்புதல் வாக்குமூலத்தில் சொல்வது போல 3% லாபம் என்பது நம்பும்படியாக இல்லை. நிகர கணக்கு பார்க்கும்போது இது நஷ்டத்தில் அல்லவா முடியும்?! இவ்வளவு ஆட்களை வைத்து, இவ்வளவு முதல் போட்டு நடத்தி நஷ்டம் அடைவதற்கு ராஜு என்ன அரசாங்கக் கம்பெனியா நடத்துகிறார்? (ஹி.. ஹி!!)

செப்டம்பர் இறுதியில், பாலன்ஸ் ஷீட்டில் காட்டிய தொகை இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு, அந்தப் பணத்தை எடுத்து மைட்டாசுக்குக் கொடுத்து விட்டார்கள், நிலம் நீச்சு வாங்குவதற்கு. மைட்டாசை வாங்குவதாகப் போட்ட தீர்மானம் அரங்கேறி இருந்தால், விஷயம் அல்வா மாதிரி வழுக்கிக் கொண்டு போயிருக்கும். அது தடைப் படவே, திட்டங்கள் தவிடுபொடியாயின. ராஜு கதை வசனம் எழுத வேண்டியதாயிற்று! இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகப் படுகிறது.

அடுத்தபடி, ராஜு சொன்ன பொய்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

பொய் 1 : 8 வருஷங்களாக நிறுவனர்கள் பங்குகள் எதையும் விற்கவில்லை.

பின் எப்படி ஸ்வாமி, 21 சதவீதப் பங்குகள் 3 சதவீதத்துக்கும் குறைவாகப் போச்சு?

பொய் 2 : சத்யமாக நாங்கள் ஒரு ருபாய்/டாலர் கூட எடுக்கவில்லை.

அபா, அபா! சத்ய சந்தராயிற்றே, நீங்கள்? ஆனால் விசாரணைகளில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள் வந்து கொண்டிருக்கின்றனவே, கடைசியில் பார்ப்போம்!

பொய் 3 : 1230 கோடி ரூபாய் வெளியிலிருந்து கொண்டு வந்தோம். புத்தகத்தில் வரவு வைக்க வில்லை.

பின்னே எங்கே அது போச்சு? இப்ப உங்க துணைக் கம்பெனிக்காரங்க (அதுவும் உங்க ஆளுங்கதானே?) அது நாங்க கொடுத்த பணம், அதைத் திருப்பிக் கொடுன்னு புது டைரக்டர்களை நச்சரிக்கிறாங்களே? adding insult to injury போல?

பொய் 4 : ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய’ பொய் என்பார்கள். அதற்கு இது வரை அர்த்தம் என்னது என்று புரியவில்லை. இப்போது அது எப்படி இருக்கும் என்று விளங்கி விட்டது. என்னைத் தவிர யாருக்குமே இதில் சம்பந்தமில்லை என்று போட்டீர்களே ஒரு போடு! இது உண்மையாயிருந்தால் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. சில பிள்ளைகள் 7 மார்க்கை 70 மார்க்கு என்று மாற்றி ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை அப்பாவிடம் காட்டுவார்கள். அதைப் போல நீங்கள் ‘அன்னண்டை இன்னண்டை’ பார்த்துக் கொண்டு யாரும் பார்க்காத வேளையில் பாலன்ஸ் ஷீட்டில் நம்பர்களை அழித்து மாற்றி எழுதிப் போட்டிருக்க வேண்டும்!

இத்தனையும் செய்து விட்டு கூசாமல் எப்படி சார் சொல்கிறீர்கள், திருடன் கையிலேயே சாவியைக் கொடு என்பது போல், உங்கள் கூட்டாளி ராம் மைனம்பட்டியை முதன்மை நிர்வாக அதிகாரி ஆக்கு என்று? அரசாங்கம், கட்டுப்பாட்டு அமைப்புகள், முதலீட்டாளர்கள் எல்லாருமே ஆட்டையாம்பட்டியில் அள்ளி முடிந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா என்ன?

(தொடரும்)”

About The Author