"உங்களுக்கு தெய்வ நம்பிக்கை வராவிட்டாலும் பரவாயில்லை. சத்யத்தைக் கடைப்பிடியுங்கள். ப்ரேமையைக் கைக்கொள்ளுங்கள். இவையே தெய்வத்திடம் உங்களை அழைத்துச் சென்றுவிடும்" (சத்ய சாய் பாபா)
ஆந்திராவின் புட்டபர்த்தி என்னும் ஒரு சிறிய கிராமத்தில் எளிய தம்பதியருக்கு சத்ய நாராயண ராஜுவாகப் பிறந்தார் சத்ய சாய். 1940ம் ஆண்டில் தம் பதினான்காம் வயதில் தன்னை சாயிபாபாவாக அவர் அறிவித்துக்கொண்டபோதே அவரது சொந்த சரிதம் முடிந்துவிட்டது.
அது அனைவருக்கும் அன்பையும், கருணையையும், சேவையையும் போதித்த ஒரு புனிதமான பொது சாயி சரிதமாகி விட்டது.
அரசர்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை அனைவருமே "சாயிநாதா" என்று அன்போடும், நம்பிக்கையோடும் அழைக்கும் ஒரு திவ்ய சரித்திரமாகிவிட்டது.
அந்தச் சரிதமே எவரும் அறியாத புட்டபர்த்தி என்னும் ஒரு குக்கிராமத்தை அகில உலகமும் அறிந்து பக்தி விஜயம் செய்யும் ஒரு புனித ஸ்தலமாக்கி இருக்கிறது.
ஒரு குக்கிராமத்தில் சாமானிய குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பு கூட முடிக்காத பிள்ளை புவிக்குள்ளே முதன்மை பெற்று சர்வ தேசங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் பகவானாக தொழப்படும் விந்தைதான் என்ன?
மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து வறண்டு கிடந்த கிராமங்களுக்குத் தண்ணீர் வசதி, கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், எளியவருக்கும் இலவச மருத்துவ வசதி கிட்டுவதற்கு சிறந்த மருத்துவமனைகள் இவை யாவும் அமைத்து மகிழ்ந்த அவரின் அளப்பறியாத சேவையா?
பாபா அருகில் இல்லாவிட்டாலும், அருகிலேயே இருந்து எப்போதும் தம்மைக் கவனித்துக்கொண்டே இருப்பார் என்ற உணர்வுடனும், ஒழுங்குடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்துகொள்ளும் பால விகார், சேவா சமிதிகள் எனும் சமுக நலப் பணி அமைப்புகளையும் அதை நடத்தும் பக்தர்களையும் உருவாக்கியிருக்கும் அவரின் சொல்லாமல் சொல்லுகின்ற கனிவான கண்டிப்பா?
உலகின் பல பாகங்களில் உள்ள கோடானு கோடி குடும்பங்களும் அவரை உற்ற உறவினர்போல, ஆசான் போல தங்களின் சொந்த மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் பங்கு கொண்டு, பிரச்னைகளுக்கெல்லாம் தோன்றாத்துணையாக வழிகாட்டுவார் என மனமார நம்புகிற நம்பிக்கையா?
"அன்பும், ஆனந்தமும் இரு வேறு விஷயங்கள் இல்லை. ஆனந்தமே அன்பு செய்வதொன்றுதான், அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள், அனைவருக்கும் சேவை செய்யுங்கள்" என்று அதற்கு நிதரிசனமாக தானே வாழ்ந்து காட்டியதா?
"இருப்பது ஒரு மதம்தான், அன்பு மதமே அது! இருப்பது ஒரு ஜாதிதான், மக்கட்குலம் என்பதே அது!" என சர்வ மத சமரசம் என்று புகன்றதாலா?
மானுடப் பண்பு போதனை எனும் பெயரில் (education in human values) அவர் அளித்த கல்வித்திட்டம் உலகளவில் வெற்றி நடை போடுவதாலா?
கருணையின் இனிப்பில் எதைச் சுவைக்க? எதை விட?
பல பரிமாணங்கள் அடங்கிய பாபாவின் திவ்ய சரித்திரத்திற்கு முடிவே கிடையாது என்று மனப்பூர்வமாக நம்பிய பக்தர்கள் ஒரு மாதமாக அவர் நோயுற்று உறுப்புகள் செயலிழந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்றபோது கூட வழக்கம்போல் அவர் எந்த பக்தருடைய நோயையோ வாங்கிக்கொண்டிருக்கிறார் என்றுதான் நம்பினார்கள். அவர் தீராத விளையாட்டுப் பிள்ளையல்லவா? ஆகவே சற்று நாள் விளையாட்டுக் காட்டிவிட்டு மீண்டும் எழுந்து வந்து தங்களுக்கு தரிசனம் தருவார் என நம்பினார்கள்.
ஆனால் இறுதியில் கருணை வடிவம் அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் சலனமற்றுக் கிடந்தபோது கதறி அழுகிறார்கள். மனித வடிவெடுத்த பின்பு எந்த அவதார புருஷனும், மகானும் தன் மனித உடலைத் துறக்க வேண்டுமென்ற உலக நியதிகளை ஜீரணிக்க முடியாமல், தாய்போற் பிரியமுற ஆதரித்து நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய் இருந்த சாய்நாதனின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
சத்திய சாய் கருணை அன்பு, ஆன்மீகம், தொண்டு, நற்பண்புகள் ஆகியவை யாவும் கலந்த ஒரு புனித இயக்கம். அந்த இயக்கத்தின் சரிதத்திற்கு என்றுமே முடிவுரை கிடையாது. சத்தியம் உள்ளவரை அந்த இயக்கம் வாழும். அவரை நம்பியவர்களை என்றும் வாழ வைக்கும்!
நம்பிக்கையை வளர்க்கும் நல்ல பதிவு. சத்தியமான வாசகங்கள். மிக்க நன்றி.
இந்த கலியுகத்தில் புண்ய பூமியான பாரதத்தில் அவதாரம் செய்து உலக மக்களை ஸத்தியத்தின் பாதயில் நடத்தி வேதஙளை திரும்பவும் எல்லோரும் பரவலாக பாராயணம் செய்து திரும்பவும் ஸத்திய யுகம் மலரும்படி செய்ய வித்திட்ட பகவான் ஸத்த்ய ஸாயி பாபா எப்போதும் நம் இதயத்தில் வஸிப்பாராக.