அந்த ஸ்ரீனிவாசன் அடிக்கடி வர ஆரம்பித்தார். சில சமயங்களில் மூர்த்தி இருப்பார். மூர்த்தி இல்லாத சமயங்களில் அவர் பேச்சிலும் பாவனைகளிலும் அதிக நெருக்கும் தெரிவதை அவள் கவனித்தும் கவனிக்காத மாதிரி இருந்தாள். அவருடைய நெருக்கமான பேச்சு தன்னுள் எந்தவிதக் கலவரத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை உணர்கையில் திகைப்பு ஏற்பட்டது. வாஸ்தவத்தில் அவருடைய பேச்சு அவளுக்கு இதமாக இருந்தது. புண்ணுக்கு இதமாக மருந்து தடவுகிற மாதிரி. அவருடைய பாராட்டுக்களில் ஒரு ஆத்மார்த்த அபிமானமும், சங்கீதத்தில் ஆழ்ந்த ஞானமும் தெரிந்தது காரணமாக இருக்க வேண்டும். அந்தப் பாராட்டுக்களில் எந்த வியாபார நோக்கமும் இல்லாதது காரணமாயிருக்க வேண்டும். நாள் செல்லச் செல்ல அவர் வருகையைத் தான் எதிர்நோக்க ஆரம்பித்திருப்பது அவளுக்கு லேசான அதிர்வைத் தந்தது. மூர்த்தி இதையெல்லாம் கவனித்திருப்பாரா? கவனித்தும் வாயை மூடிக்கொண்டிருக்கிறாரா என்று அவளுள் ஒரு பயம் ஏற்பட்டது. அவரை ஆழம் பார்ப்பதற்காக அன்று காலை மெல்லச் சொன்னாள்,"அந்த ஸ்ரீனிவாஸன் எதுக்கு இங்கே அடிக்கடி வரணும்? டில்லி ப்ரோகிராமும் டேட்டும் ஃபிக்ஸ் பண்ணினப்புறம் அவர் எதுக்கு வரணும்?"
"ஏன் அவர் வந்தா உன்னை என்ன பண்றார்? அவர் பெரிய மனுஷன். நிறைய கான்டாக்ட்ஸ் இருக்கு. அவருடைய சினேகிதம் நமக்கு நல்லதுதானே? உபயோக மத்தவனோடல்லாம் உனக்குப் பேசப் பிடிக்கும். டில்லியிலேயும், வெளிநாட்டிலேயும் தொடர்பு வெச்சிருக்கிற ஸ்ரீனிவாஸனோட பேச உனக்குக் கசக்கிறதா?"அவள் தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
டில்லி பயணத்துக்கான ஏற்பாடுகளையும், விளம்பரங்களையும் வெகு மும்முரமாக மூர்த்தியும், ஸ்ரீனிவாஸனும் செய்து கொண்டிருந்தார்கள். அவளுக்கு நாள் முழுவதும் கச்சேரிக்குப் பயிற்சி செய்வதே வேலையாகப் போயிற்று. பயிற்சியின்போது திடீர் என்று சொல்லாமல் வந்தமரும் ஸ்ரீனிவாஸனின் அருகாமையும், பாராட்டுதலும் புதுவெள்ள உற்சாகத்தை ஏற்படுத்தியது.
டில்லி கிளம்புவதற்கு முதல்நாள் கிராமத்தில் இருந்த மூர்த்தியின் அம்மா இறந்துவிட்டாள் என்று தந்தி வந்தது.
அவள் உண்மையான வருத்தத்துடன்,"உடனே கிளம்பலாம். டில்லி ப்ரோக்ராமை கான்ஸல் பண்ணிடலாம்." என்றாள்.அவர் கோபத்துடன் அவளைப் பார்த்தார். "இதுக்கும் உனக்கும் சம்பந்தமில்லே. உன்னை அழைச்சிட்டு நான் கிராமத்துக்குப் போனா என்னையே உள்ளே விடமாட்டா. நான் மாத்திரம் போறேன். நீ டில்லிக்கு புறப்புடு. உனக்கு சம்பந்தேமில்லாத விஷயத்துக்காக டில்லி ப்ரோகிராமை கான்சல் செய்வது மடத்தனம்."
அவளுக்குக் கண்களில் நீர் நிறைந்தது. உனக்கு எந்த அபரிமிதமான அந்தஸ்த்தையும், கௌரதவத்தையும் கொடுக்க தான் தயாராக இல்லை என்றது பார்வை. நீ என் மனைவியாக இருப்பது எனது சௌகர்யத்துக்காக என்றது பேச்சு.
இப்பொழுதெல்லாம் மனத்தில் சுரீரென்று உறைக்கும் சீற்றம் மறுபடி ஏற்பட்டது. அவள் தன்னைச் சமாளித்துக் கொண்டு கேட்டாள்.
"என்னது தனியாகப் போகச் சொல்றீங்களே?"
"தனி என்ன தனி? ஸ்ரீனிவாஸன்தான் கூட வராரே? அவர் எல்லாம் கவனிச்சுப்பார். அவருக்குத் தெரியாத பெரிய மனுஷன் டில்லியிலே கிடையாது."
ரயில் பெட்டியில் அவளையும் ஸ்ரீனிவாஸனையும் தவிர யாருமில்லே. அவள் எதுவுமே பேசாமல் வேகமாக நகரும் மரங்களைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். பச்சைப் பசேலென்ற புல்வெளிகள் நகர்ந்தன. வெள்ளை நாரைகளும், புறாக்களும் பறந்தன. சட்டென்று ஒரு உல்லாசம் மனசில் புகுந்தது. நாட்டக் குறிஞ்சியுடன் தொண்டைக்குள் சல்லாபித்து.
"இதெல்லாம் ஒரு தெய்வச் செயல் இல்லே அனுசுயா?"அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
ஸ்ரீனிவாஸனின் புன்னகையும் பார்வையிலும் கனிவும் நெருக்கமும் தெரிந்தது.
"எது?"
அவருடைய முகத்தில் அந்தக் கனிவும் புன்னகையும் மாறவில்லை.
"என்ன சமாதானம் சொல்லலாம்னு நீங்க முயற்சி பண்ண வேண்டாம். மூர்த்தி உங்கள ஆட்டி வைக்கறதைப் பத்தியும், நீங்க வாயே திறக்காம பணிஞ்சு போறதைப் பத்தியும், மத்தவா சொல்லிக் கேட்டபோது நான் நம்பல்லே. ஆனா நான் நேரில் பல தடவை பார்த்தப்புறம், எல்லார் எதிரிலேயும் உங்களைக் கொசுவை நசுக்கற மாதிரி வார்த்தையாலே நசுக்கறதைப் பார்த்ததும் ஆச்சிரியம் மட்டும் இல்லே, துக்கமும் ஏற்பட்டது. அதுவும் நீங்க வாயைத் திறக்காம இருக்கிறது அபத்தமாகப்பட்டது…"
"அவருக்கு நான் ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்கேன். சீனிவாஸன்! எப்படியோ சகதியிலே வாழ்ந்துண்டிருந்தவளை, கௌரவமான சமூகத்தில் என்னையும் கௌரவமா வாழ வெச்சிருக்கார். நான் அதற்கு நன்றியோட இருக்க வேண்டாமா?"
ஸ்ரீனிவாஸனின் முகம் உணர்ச்சி வேகத்தில் பளபளத்தது.
"சுத்த ஹம்பக்! அந்த வார்த்தைகளைச் சொல்லி உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்கோ. இப்ப உங்களுக்கு இருக்கிற புகழ் எல்லாம் உங்களுக்கிருக்கிற சரஸ்வதி கடாட்சத்தினால்.
"ஆதாயமில்லாம அவர் உங்களை வெச்சிண்டிருப்பார்னு நினைக்கிறீங்களா?"சட்டென்று அவள் உடைந்து போனாள். ஜன்னல் மேல் தலையைக் கவிழ்த்தபடி இனியும் தாங்க முடியாது என்கிற மாதிரி விசித்து விசித்து அழுதாள். ஓட்டையாகி விட்ட சட்டி மாதிரி, அதிலிருந்து வெளியேறும் பிரவாகத்தைத் தடுக்க முடியாது மாதிரி பலஹீனமாக அந்த தருணத்தில் கண்ணீர்ப் பிரவாகத்தைத் தடுக்க முடியாமல் போயிற்று.
வஜ்ரம் மாதிரி இரண்டு கரங்கள் அவளுடைய தோளில் அமர்ந்தன.
"அனுசுயா…!"மிக மிருதுவாக வந்தன வார்த்தைகள். வருடுகிற மாதிரி. அவள் ஆகர்ஷிக்கப்பட்டு தன்னையைறியாமல் திரும்பிப் பார்த்தாள்.
"நீங்க கண்ணீர் விடறது ரொம்ப அபத்தம் அனுசுயா. கர்நாடக சங்கீதத்தில் சக்ரவர்த்தனி நீங்க. உங்க பாட்டுக்கு அடிமையா லட்சக் கணக்கா ஜனங்க இருக்கறப்ப நீங்க இன்னொருத்தருக்கு அடிமையாட்டம் இருந்துண்டு அவர் சொல்கிறபடியெல்லாம் ஆடறது ரொம்பக் கேவலமான விஷயம்…"
அவளுள் மெல்ல ஒரு கலவரம் பரவிற்று. அவள் வெளியே தெரிந்த வயல் வெளியைப் பார்த்தபடி சொன்னாள்,"என்னை குழப்பாதீங்க ஸ்ரீனிவாஸன். நான் இருக்கறபடி இருந்து விட்டுப் போறேன். எதிர்த்துக் கொண்டு போறது எனக்குப் பழக்கமில்லே. என் சுபாவமுமில்லே எதிர்த்தால் இன்னும் பிரச்னைகள் வரும். அதையெல்லாம் சந்திக்க எனக்குத் தென்பில்லே. என் மனசை நான் எப்பவோ சமாதானப்படுத்திண்டாச்சு. பிறந்ததிலிருந்து நான் வெறும் பகடைக்காய். எனக்காக எந்த சுதந்திரமும் கிடையாது…"அவர் சிரித்தார்.
"இது ரொம்ப வருத்தப்பட வேண்டிய விஷயம் அனுசுயா. இப்பல்லாம் பெண்கள் சுதந்திரம்னு ஏக கோஷமாடறாங்க. உங்களுக்கானா இஷ்டப்பட்ட புடவையைக் கட்டிக்க முடியாது. நினைச்ச அளவுக்கு ஒரு ராகத்தைப் பாட முடியாது. உங்களுக்கேன் இந்தத் தண்டனை?"
"நான் அதை தண்டனையா நினைக்கல்லே."
"நான் அதை நம்பல்லே. உங்களுக்கு பயம், சமூகத்தைக் கண்டு பயம். அடச்சீ போய்யா’ன்னு அவரை உதறிட்டுக் கிளம்ப பயம்…"
"உங்களுடைய இளமை இன்னும் போகல்லே. பார்க்க இருபத்து அஞ்சு வயசுப் பொண்ணு மாதிரி இருக்கீங்க. இன்னும் முப்பது வருஷத்துக்கு மேடையேறி பாடக் கூடிய குரல் வளம் இருக்கு. ஒருத்தனுக்கு மனைவிங்கற ஸ்தானம் ஒண்ணுதான் கிடைக்க முடியாத பாக்கியம்னு பசலித்தனமா நினைக்கிறேள்…"
அவளுக்குத் திகைப்பாக இருந்தது. இவர் பேச்சைக் கேட்கக் கேட்க வார்த்தைகள் அவளைக் குழப்பின. கூடவே போதையேற்றின. மூர்த்தி இந்த மாதிரி விஷயங்களைப் பேசினதில்லை. அவளையறியாமல் அவரிடம் ஒரு ஆகர்ஷிப்பு ஏற்பட்டது. மரியாதை ஏற்பட்டது. அவருடைய ஹாஸ்யத்துக்கெல்லாம் வாய்விட்டுச் சிரிக்க முடிந்தது. அன்றிரவு அவர்கள் தனித்திருந்த ரயில் பெட்டியில், அவளருகில் நெருக்கமாக அமர்ந்து அவர் மெல்லிய குரலில் பாரதியின் கண்ணம்மா பாட்டு ஒன்று பாடிய போது அவள் கிறங்கிப் போனாள்.
"ஓ எத்தனை நன்றாகப் பாடுகிறீர்கள்!" என்று ஆச்சரியத்துடன் கையைக் கொட்டி சிரித்தாள். சின்னப் பெண் மாதிரி.
அவர் மிக இயல்பாக இவளை அணைத்தபடி சொன்னார்.
"இதுதான் ஆனந்தம் அனுசுயா. இரண்டு மனசு சங்கமிக்கும்போது அங்கே பிறக்கிற உணர்வு இருக்கே அதுக்கு ஈடு எதுவுமே இல்லே."
அவளுள் திடீரென்று ஒரு தாபம் எழுந்தது. அவர் கை பட்ட மாத்திரத்தில், உறங்கிக் கொண்டிருந்த வீணையின் ஸப்தஸ்வரங்களை எழுப்பினாற் போல் நரம்புகள் சிலிர்த்து எழுந்தின.
அவர் மிக மெதுவாகப் பேசினார்.
"இந்த சரீரம் ஒரு சட்டை மாதிரி அனுசுயா. அதுக்கு அதீதமான முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்ததாலதான் நீ வேண்டாத பிரமையிலே இருக்கே. கறைபட இருந்த வாழ்வைத் துணிஞ்சு ஒருத்தன் கரையேத்திட்டான்னு நன்றி விசுவாசம்னு உக்காத்திருக்கே. இந்த உடம்புக்கும் நமக்கும் சம்பந்தமேயில்லே அனுசுயா."
அவள் உருகினாள். கரைந்தாள். ஓ இதுதான் ஆனந்தம். நான் நானாக இருக்கும் ஆனந்தம்… ஒவ்வொரு இரத்த நாளமும் மீட்டப் பட்ட நாதமாய் இழைந்தது. இந்த என் செய்கை மிக இயல்பானது என்றது…
(அடுத்த இதழில் முடியும்)
“