பாண்டியனும் பரசுராமனும்
தமிழ்ச் சங்கத்தை அழித்த கடற்கோளுக்குப் பாண்டியனின் செயல்தான் காரணம் என்று பாடல் கூறுகிறது. (சிலப்பதிகாரம் XI – 11 – 17). வடிம்பலம்ப நின்ற பாண்டியன் தனது பாதச்சுவடுகள் போலச் செய்து அதைக் கடல் கழுவும்படி கடற்கரையில் செய்து வைத்தாலும் கடல் பொங்கியபோது ‘வேலை எறிந்து’ அதை அடக்கியதாலும் கடலுக்குக் கோபம் ஏற்பட்டதாகச் சிலப்பதிகாரமும் திருவிளையாடல் புராணமும் கூறுகின்றன. இவை பழைய காலச் சடங்குகளையும், நம்பிக்கையும் காட்டுகின்றன. ஆனால் கடல் பொங்கி நாட்டை அழித்தது உண்மை. இக்கதைகளைப் ‘புராணக் கதைகள்’ என்று சொல்லி ஒதுக்கிவிடாமல் அதன் பின்னுள்ள அறிவியல் உண்மைகளை உய்த்தறிவது நம் கடமை. தென்கிழக்கு ஆசியாவில் கூடக் கடற்கரையில் மன்னர்களின் பாதங்களைச் (அடிச்சுவடு) செய்து வைக்கும் பழக்கம் இருந்தது. காளிதாசன் பாதச்சுவடுகளைக் குறிப்பிடுவான். இன்றும் கூட இலங்கையில் புத்தரின் – சிவனின் பாதச்சுவடுகள் உள்ளன.
பரசுராமன் (விஷ்ணுவின் பத்து அவதாரங்ககளில் ஒன்று) கேரளத்துக்கு வந்த போது கடலும், மலையும் ஒட்டியிருந்ததாகவும் பரசுராமனின் வேண்டுகோளுக்கிணங்கிக் கடல் பின்னோக்கிச் சென்று கேரள மாநிலத்தை அவருக்கு வழங்கியதாகவும் புராணங்களும் கேரள மகாத்மியங்களும் கூறுகின்றன. இதிலுள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் "கடல் சுவற வேல்விட்ட" பாண்டியன் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாட்டிலும் பரசுராமன் வந்தபோது கேரளத்திலும் கடல் பின்வாங்கிச் சென்றது என்பதுதான். கடல் எல்லை மாறி நிலம் வெளிப்பட்ட புவியியல் மாற்றம்தான் (Geological Change) இப்படிப் புராணக் கதைகளாக மாறிவிட்டன.
(அகத்திய முனிவர் விந்திய மலையைக் கர்வபங்கம் செய்தார், ‘கடலைக் குடித்தார்’ என்பதெல்லாம் அவர் மலை வழியாகத் தென் இந்தியாவுக்கு வந்து தென்கிழக்கு ஆசியா வரை சென்று நாகரீகத்தை நிலைநாட்டினார் என்பதையே கூறுகிறது.)
இராவணன் மலையைத் தூக்கியதாகவும் சிவபெருமான் கோபங் கொண்டு அவன் கைகளையும் தலையையும் நசுக்கிய பின்னர், அவன் மன்னிப்புக் கேட்டு ஓடியதாகவும் ஒரு கதை (தேவாரப் பாடல்களிலும், சங்கபுராணத்திலும்) உள்ளது. ராமனின் தண்டனையைப் பொறுக்காமல் சீதையை பூமா தேவி நிலத்தைப் பிளந்து அழைத்துச் சென்றதாக இராமாயணம் கூறுகிறது. இவை எல்லாம் அந்தந்த காலங்களில் நடந்த பூகம்பங்கள்தான். காலப்போக்கில் ஏதாவது இரண்டு நிகழ்ச்சிகளைத் தொடர்புபடுத்தி மக்கள் ‘கதை’ கட்டிவிடுகின்றனர்.
தற்காலத்தில் கூட ஒருவர் தேர்தலில் படுதோல்வி அடைந்தால், "மண்ணைக் கவ்வினார், மூக்குடைபட்டார். முகத்தில் கரி பூசிக் கொண்டார், பலத்த அடி வாங்கினார்" என்று எல்லாம் பத்திரிக்கைகள் எழுதும். ஆனால் இவைகளின் உண்மைப் பொருள் என்ன என்று எல்லோருக்கும் விளங்கும்.
கடலுள் மாய்த்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனின் பாடல் புறநானூற்றில் உள்ளது. இந்தப் பாண்டிய மன்னர் ‘சுனாமியில்’ இறந்தானா அல்லது கடற்படை படையெடுப்பில் இறந்தானா என்பது ஆராய்ச்சிக்குரிய செய்தி.
ஊழிக்காலத்தில் கடல் பொங்கி எழுவதைத் தயங்கண்ணனார் (புறம் 397) இப்படிப் பாடுகிறார்:-
"அறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்"
பரிபாடல், நான்கு வகையான ஊழிகள் குறித்துப் (பரி 3-0) பாடுகிறது.
ஊழிக்காலத்தில் உலகம் அழிந்துவிடும் என்று மற்றொரு புலவர் பாடுகிறார்.
பசும்பொன் நுலகமும் மண்ணும் பாழ்பட
விரும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல
பரிபாடல் 2-1/4
ஊழியின் இறுதியில் உலகம் முழுதும் இருள் பரவிக் கடல் பொங்கி எழுந்து நிலப்பகுதிகளை எல்லாம் மூழ்கடிக்கும் என்று பின்னரி பன்னிரு சூரியர்களும், வடவைத் தீயும் தோன்றி நீரை வற்றச் செய்யும் என்றும் அரிசில் கிழார் எழுதிய பாடலுக்கான (பதிற்றுப் பத்து 72-8/16) உரை கூறுகிறது. மற்றொரு பாடல் (62.5/)மடங்கல் பற்றி விரிவாகக் கூறுகிறது.
இறைவனிட்ட சாபத்தால் கடற்கோள் தோன்றும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது:-
"வானவன் விழாக் கோண்மா நகரொழிந்தது
மணிமேகலா த்ய்வ மற்றது பொறாஅள்
அணிநகர்தன்னை பலைகடல் கொள்கென
விட்டனர் சாமப் பட்டதிதுவால்".
இந்திர விழாவை மன்னன் கொண்டாடாவிட்டால் மன்னனது நாட்டைக் கடல் அழிக்கும் என்பது இதன் பொருள்.
வராகவதாரத்தில், விஷ்ணு பன்றி வடிவங் கொண்டு பூமியைக் கடலிலிருந்து மீட்டதாகக் கூறுவதும் புவியியல் மாற்றத்தையே. கடல்நீரால் மூடியிருந்த உலகில் நீர் வடிந்து நிலப்பகுதி வெளியானது என்ற உண்மையைத்தான் புராணக் கதை வழியாகத் தருகிறார்கள். இதுபோன்ற பல உண்மைகள் சங்க இலக்கியத்தில் மறைபொருளாகக் கூறப்பட்டுள்ளன. அவைகளைப் பகுத்தறிவது நம் கடமை.”