கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்கும் தரிசு நிலத்தில் இருந்த குறிஞ்சி மர நிழலில் நண்பர்கள் அமர்ந்திருந்தனர். அருகில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை சீண்டிக்கொண்டும், பேசி சிரித்துக்கொண்டும் தலைவனுக்காகக் காத்திருந்தனர். தலைவன் தலைவியைக் காணச்சென்றிருந்தான். இதை அறிந்த நண்பர்கள் தலைவனின் தோழனிடம் ஏதேதோ கேலியாக பேசியவாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.
தோழன் அமைதியாக இருந்தான். தோழனுக்கு இந்த நண்பர்கள் செய்யும் கேலி பிடிக்கவில்லை. ‘தலைவன் தலைவியைத் தனியாக சந்திக்கிறான் என்றால் உடனே காமம் என்றுதான் எண்ணுவதா..என்ன நண்பர்கள்!’ என்று மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தான் தோழன்.
தலைவன் தூரத்தில் வருவது தெரிந்தது. நடையில் பரபரப்போ மகிழ்ச்சியோ இல்லை. நிதானமாக வந்தான். கறுத்திருந்த முகத்தில் தெரிந்தது கோபமா அல்லது சோகமா என்று சரியாகத் தெரியவில்லை. கிண்டலும் கேலியுமாக பேசிக்கொண்டிருந்தவர்களும் இப்போது அமைதியாயினர்.
தோழன்தான் ஆரம்பித்தான். "என்னவாயிற்று? தலைவியைப் பார்க்க முடியவில்லையா அல்லது வேறு ஏதாவது..?" என்று நிறுத்தினான். தலைவன் ‘ப்ச்’ என்று சத்தம் மட்டும் எழுப்பினான். தலைவனின் வருத்தம் தோழனை வெகுவாக பாதித்தது. எத்தனை நாட்கள் இவன் தலைவியின் சம்மதத்திற்காக தன்னைத்தானே வருத்திக்கொண்டிருக்கின்றான்! தலைவியின் தோழி சட்டென்று சம்மதித்து விடவில்லை. இவனைப் பலவாறு அலைக்கழித்து இறுதியாக தோழி மனம் மகிழ்ந்து தலைவியுடன் பேச வைத்தாள். தலைவியின் காதல் பார்வையைப் பெறுவதற்காக ஒரு பித்தனாகவே மாறி இருந்தான். இப்போதுதான் கொஞ்ச நாட்களாக மகிழ்ச்சியாக இருக்கிறான். அடிக்கடி தலைவியைச் சந்தித்து பேசி வருகிறான். இன்று என்ன ஆயிருக்கும்..? ஒரு வேளை…. என்று தோழனின் கற்பனை தாறுமாறாக ஓடியது. மற்ற நண்பர்கள் இருப்பதால் அந்தரங்கத்தைப் பேச தலைவன் வெட்கப்படுகிறான் என்பதை அறிந்துக் கொண்ட தோழன் "தலைவனே உன் வருகைக்காகத்தான் நான் இங்கே காத்திருந்தேன்..வா நாம் காலாற நடந்து அந்தக் குளக்கரைக்குச் செல்வோம்" என்று கூறியவன் நண்பர்களைப் பார்த்து, "சரி! நாங்கள் செல்கிறோம் ..நாளை காண்போம்" என்று கூறி விட்டு தலைவனை இழுத்துச் சென்றான்.
முதுகுக்குப் பின்னால் அந்த நண்பர்கள் ஏதோ பேசி சிரித்தனர். அறிவில்லாதவர்கள் என மனதிற்குள் திட்டியவாறு வந்தான் தோழன்.
"தோழனே! உன் பண்பட்ட நெஞ்சைக் கண்டு என் மனம் மிகவும் நெகிழ்கின்றது..நன்றி" என்றான் தலைவன்.
"தலைவனே! என்ன இதெல்லாம்! சரி என்ன நடந்தது என்று சொல்! தலைவி நலம்தானே?"
"தோழனே! தலைவியைக் கண்ட மாத்திரத்தில் என் மனதில் எழுந்த காமநோயினால் வரம்பு மீறி விட்டேன்.." என்று பீடிகையோடு ஆரம்பித்தான். தோழனுக்கு குழப்பமாக இருந்தது ‘தலைவன் எப்போதும் நிதானமிழக்காதவனாயிற்றே..!’
"தலைவியின் கூந்தலுக்கு நான் வாங்கிச்சென்ற மலரை சூட்டியபோது மல்லிகை மலரின் மணமும், தலைவியின் அருகாமையும் என்னை நிலை குலைக்க.. நான் தலைவியை ஆரத்தழுவி முத்தமிட்டேன்… இதை எதிர்பார்க்காத தலைவி கோபித்துக் கொண்டாள்.." என்று நிறுத்தினான்.
தோழனுக்கு இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. எல்லா அந்தரங்கங்களையும் பரிமாறிக்கொள்ளும் தலைவன் இதற்கு முன் ஓரிரு தருணங்களில் இது போன்ற சம்பவம் நடந்ததைக் கூறியிருக்கிறான்.
"ம்..பிறகு" என்றான் தோழன்.
"தலைவி என்னிடமிருந்து விலகி என்னைக் கடிந்தவாறு தோழியை நோக்கிச் சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் தோழி என்னிடம் வந்தாள். "’தலைவி மலரினும் மென்மையானவள்’ என்று கூறி எனக்கு அறிவுரை கூறலானாள். அதையெல்லாம் மறந்து விட்டேன் தோழனே.. இறுதியாக தோழி கூறியதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.." என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினான்.
"தலைவனே என்னிடம் கூறினால் உன் பாரம் குறையும்..சொல்.." என்று தூண்டினான் தோழன்.
"ஆண்கள் எல்லோரும் இதற்காகத்தான் காதலிக்கிறீர்கள்..உங்கள் காதலில் பாசமோ, நட்போ, நேசமோ இல்லை. வெறும் காமம்தான் உள்ளது என்று கூறினாள். அவள் பேசிய பேச்சு என் குற்றவுணர்ச்சியைத் தூண்டி விட்டது. என் தவறுக்கு என் காமநோய்தான் காரணம்.. இதற்கு முன் எதுவும் சொல்லாத தலைவி இன்று ஏன்.. இப்படி.. என்றும் புரியவில்லை. நான் தவறு செய்து விட்டேன்.." என்று கண்கள் கலங்க பேசினான் தலைவன்.
"தலைவனே! காதலிப்பவர்கள் இவ்வாறு உணர்ச்சிவசப்படுவது இயல்புதானே! காமம் காமம் என்று ஏன் இழிவாக எண்ணுகிறாய்? காதலில் காமமும், காமத்தில் காதலும் கலந்துதான் இருக்கும். ஏன் நீ வெட்கப்படுகிறாய்? குற்றவுணர்ச்சியில் மருங்குகிறாய்?" என்று ஆறுதல் கூறினான் தோழன்.
"இல்லை தோழனே..! தலைவியும்..தோழியும் அப்படித்தான் எண்ணுகிறார்கள்.." என்று தயக்கத்துடன் பேசினான் தலைவன்.
"அவர்கள் பெண்கள் அப்படித்தான் பேசுவார்கள்! சமுதாயத்தின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி விடுவோம் என்ற அச்சம் கருதிதான் அவர்கள் அப்படி பேசிகிறார்கள்.. நீ வருந்தாதே..காமம் என்பது நம்மை தாக்கித் துன்புறுத்தும் ஆயுதம் அல்ல; நீ நினைப்பதுபோல நமக்குள் ஏற்பட்டிருக்கும் தீர்க்க முடியாத நோயுமல்ல. அல்லது அந்த நண்பர்கள் கேலி செய்வது போல கீழ்த்தரமானதும் அல்ல."
"என்ன சொல்கிறாய் தோழனே! அப்படியென்றால் நான் தவறு ஏதும் செய்யவில்லையா? அப்படி என்றால் காமம் என்பது என்ன ? என்று கேட்டான் தலைவன்.
"ஆம் தலைவனே! அதோ அந்த மாடு அந்த மேட்டு நிலத்தில் விளைந்திருக்கும் அந்த இளம்புல்லைத் தன் நாவால் தடவி தடவி தின்பதைப் பார். அந்த மாட்டினால் அந்தப் புல்லை.. மண்ணில் புதிதாக முளைத்திருக்கும் அந்த இளம் புல்லைச் சுவைக்க முடியுமா.. ஆனாலும் அந்தப்பசு அப்புல்லை நாவினால் தடவுகிறதைப் பார்.."என்று காட்சியைக் காண்பித்தான் தோழன். "ஆமாம் பார்த்திருக்கிறேன்" என்று கூறினான் தலைவன்..
"வெறும் நாவால் தடவித் தடவியே புல்லினை உண்ட இன்பத்தை அடைகின்றது அந்தப் பசு. காமமும் அது போன்றதுதான். அன்றன்றைக்கு நினைக்கும்போது புதுப்புது இன்பத்தைத் தரக்கூடியது. நினைத்து நினைத்து மனதிற்குள் சுவைத்து ரசிக்கக் கூடியது. அதுபற்றி நீ குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. நான் தோழியிடம் பேசுகிறேன். வருந்தாமல் இன்பத்தில் திளைத்திரு" என்று சமாதனப்படுத்தினான் தோழன்.
குறுந்தொகையில் இக்காட்சி அமைந்துள்ளது
திணை – குறிஞ்சி பாங்கன் கூற்று
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே: நினைப்பின்,
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே:
-மிளைப்பெருங் கந்தன்
காமம் காமம் என்பர்
காமம் வருத்தம் தரும் ஒன்றல்ல;
பிணியுமல்ல! நினைத்தால்
பழைய மேட்டு நிலத்தில்
தழைத்த முற்றாத இளம் புல்லை
முதிய பசு நாவால் தடவுதல் போல்
புதுப்புது இன்பமே காமம் தலைவா!
“
பாடலும் விளக்கமும் வெகுநன்று. அந்தக் காலத்தில் எத்தனை அழகாக எடுத்துரைத்திருக்கின்றனர் புலவர்கள். சங்க கால இலக்கியத்தை பாமரரும் அறிந்துகொள்ளும் வகையில் விளக்கும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.
குறுந்தொகை பாடலின் அருமையான விளக்கம் படித்தேன். மிகவும் நன்று. தொடருங்கள் உங்களது இந்த அரிய முயற்சியினை!